வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், டிசம்பர் 13, 2017

சொற்களின் சேர்க்கை - பகுதி ஒன்று

இலக்கணத்தில் தொடர்ச்சியாய் எல்லார்க்கும் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது புணர்ச்சி இலக்கணம்தான்.
தமிழைத் தலைகீழாய்க் கற்று முடித்தாலும் புணர்ச்சி இலக்கணத்தில் தெளிந்த அறிவைப் பெற்றிராவிட்டால் தவறிழைத்துவிடுவீர்கள்.
தனியாக அமர்ந்து புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றுத் தேர்வது என்று முடிவெடுத்தாலும் மேற்செல்லும்போது நாமே நம்மைக் கைவிட வேண்டி வரும்.
முகநூல் பதிவுபோன்ற ஓர் உரையாடல் இழையில் புணர்ச்சி இலக்கணத்தைக் கற்பது மிகச் சிறப்பான கூட்டுப் படிப்பாக அமையும் என்று கருதுகிறேன்.
தமிழ் இலக்கணத்தை எப்படிக் கற்க வேண்டும், தெரியுமா ? ஐயத்திற்கிடமின்றி அடிப்படையிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
முதலில் ஒலிப்புகளைத் தெளிவாய் அறிய வேண்டும். அவ்வொலிப்புகள் எழுத்துகளாய் எவ்வாறு குறியிடப்படுகின்றன என்பதை அறிய வேண்டும்.
ஒலிப்பின்படி எழுத்துகள் என்னென்ன என்று அறிந்து, நம் மொழியின் ஒலிகளுக்கேற்ற எழுத்துகளை எழுதக் கற்றுக்கொள்கிறோம்.
இப்போது உங்களுக்கு ஒலிப்புகள் தெரியும். அதிலேயும் நணன – ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்தி ஒலிப்பது என்பதில் குழப்பம் வரும்.
எடுத்ததும் ந என்று சொல்லுங்கள். அதுதான் நகரத்தின் ஒலி.
ணன-கரங்கள் ஒருபோதும் ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாக மாட்டாதவை. அதனால் அவை ந என்று அதே ஒலிப்பில் தனக்கு முன்னால் வரும் எழுத்துக்கேற்பவும் தனக்குப் பின்னால் வரும் எழுத்துக்கேற்பவும் ஒலித்துக்கொள்ளும். அவ்வளவுதான்.
நகர எழுத்துகள் சொல்லுக்கு நடுவிலோ கடைசியிலே எங்கேயும் வரமாட்டாதவை. அப்படி வந்தாலும் செய்ந்நன்றி, தந்நலம், வெரிந் போன்று சிற்சில சொற்களே உள்ளன.
அந்நியன், அநாதை, அநியாயம் போன்றவை வடசொற்கள். நகரங்கள் மொழி நடுவில் வரமாட்டா என்ற கொள்கையுடையவர்கள் அன்னியன், அனாதை, அனியாயம் என்று எழுதுவார்கள்.
சொல்லுக்கு முதலாவது நகர ஒலிப்பு. சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் தோன்றுவது ணன-கர ஒலிப்பு. இப்படிப் பல நுண்மைகள் உள்ளன.
இப்போது நாம் இத்தொடரில் புணர்ச்சி இலக்கணத்தைத்தான் தொடப்போகிறோம்.
நமக்கு வழிகாட்டியாக நன்னூலை வைத்துக்கொள்ளலாம். அந்நூற்படி புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றுக்கொண்டாலே நாம் தமிழில் செழுமை அடைந்துவிட்டதாக இறுமாப்பு அடையலாம்.
நம் மொழிக்குத் தொன்மையான இலக்கண நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை தோன்றியிருக்கின்றன. அவை அனைத்தையும் நாம் வழிகாட்டியாகக் கொள்வதைவிடவும் தொல்காப்பியமோ நன்னூலோ சிறப்பாக இருக்கும்.
தொல்காப்பியத்தை அடைய நாம் இன்னும் பல கற்றல் படிகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதால் காலத்தால் சற்றே பிந்திய நன்னூலை எடுத்துக்கொண்டோம்.
எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதைத் தலைகீழாய் நின்று மனப்பாடம் செய்தாலும் புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றால் ஒழிய நமக்கு விடிவில்லை.
புகட்டும்போதே வாந்தியெடுக்கக்கூடியவாறு இருப்பது இலக்கணம் என்ற கற்பனையிலிருந்து வெளியே வாருங்கள்.
புணர்ச்சி இலக்கணம் கடினமே இல்லை.
பாலும் தண்ணீரும் சேர்ந்தால் என்னாகும், எண்ணெய்யும் தண்ணீரும் சேர்ந்தால் என்னாகும் என்பது நமக்குத் தெரியும்.
பாலும் தண்ணீரும் சேரும். எண்ணெய்யும் தண்ணீரும் சேராது.
மொழிச்சொற்களுக்கிடையிலும் இதைப் போன்றே சேர்க்கையும் சேராமையுமான இயற்கை காணப்படும். அதை இழையிழையாக விளக்குவதுதான் புணர்ச்சி இலக்கணம்.
ஓர் ஒலி தனித்து ஒலிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகள் நிரல்பட ஒலித்தால் அங்கே சொல் தோன்றுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்து நடந்தால் வாக்கியம் பிறக்கிறது. வாக்கியம் என்பதைத் தமிழில் சொற்றொடர் (சொற்களின் தொடர் வரிசை) என்பார்கள்.
ஓரெழுத்தோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ கூடி எவ்வாறு சொற்களைத் தோற்றுவிக்கின்றன என்பதைச் சொல் இலக்கணம் கற்றுத் தருகிறது.
இரண்டு சொற்கள் எவ்வாறெல்லாம் சேரலாம் சேரக்கூடாது என்பதைப் புணர்ச்சி இலக்கணம் கற்பிக்கிறது.
புணர்ச்சி என்றால் சேர்க்கை. தனித்துக் கிடப்பவற்றால் ஆனதில்லை மொழி. சேர்ந்து சேர்ந்து சேர்ந்து சேர்ந்து ஆவதுதான் மொழி.
சின்ன சின்ன ஒலிகளின் சேர்க்கை. சொற்களின் சேர்க்கை. சொற்றொடர்களின் சேர்க்கை. இதுதான் மொழியின் கட்டமைப்பு.
புணர்ச்சி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் எப்படிச் சேரும் என்பதை விளக்கும் இயல். அதைத்தான் அடிமுதல் நுனிவரை கற்றுத் தெளியப் போகிறோம்.
- தொடரும்
- கவிஞர் மகுடேசுவரன்
https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/1672296679475481

கருத்துகள் இல்லை: