வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, ஏப்ரல் 08, 2017

வாடகை வீடு

கிலிங் கிலிங் அழைப்பு மணி அடித்தது. விசாலி தூக்க கலக்கத்தில் இன்னேரம் அவர் வரமாட்டாரே என்று மனதில் நினைத்துக் கொண்டு கதவை கிரீச் என்ற சத்தத்தோடு திறந்தார். வெளியே பக்கத்து வீட்டு சிறுவன் நின்று கொண்டிருந்தான். விசாலி தன் முடியை கொண்டை போட்டுக்கொண்டே என்ன என்று கேட்டார். அண்ணனை வீட்டுக்கார அம்மா கூட்டியாரச் சொன்னாங்க என்றான். வெளிய போயிருக்காங்க வந்ததும் வரச்சொல்றேன் என்று விசாலி கூறினார்.

வீட்டுக்காரம்மா முன்வாசல் பெரியதாக இருப்பதால் பக்கத்து வீட்டு பையன் இங்கதான் விளையாடுவான். அவங்க அம்மாவும் இங்க உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க என்பது கூடுதல்.

தன் கணவன் செந்தில் வந்ததும் வீட்டுக்கார அம்மா வரச்சொன்ன செய்தியை விசாலி கூறினார். கைலிக்கு மாறிவிட்டு  எதுக்காக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இவர் பார்க்க சென்றார். இவர் போய் என்னக்கா என்று கேட்டதும் சங்கடமாதான் இருக்கு  தம்பி நீங்க இன்னும் ஒரு மாதத்தில் வேற வீடு பார்த்தா நல்லது, பெரியவன அங்க தனி குடித்தனம் வைக்கலாமுன்னு இருக்கோம் என்றார். என்னக்கா இப்படி சொல்லறிங்க நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டமா அவ ஏதாவது ஏடாகூடமா பேசிட்டாளா என்றார். அதெல்லாம் இல்லை தம்பி, உனக்கு தெரியும் ராங்கிப்பட்டி போய் பெரியவன் நேரம் எப்படி இருக்குன்னு திருக்கணிதம் பார்த்தது. அவரு தான் இவனுக்கு இன்னும் 3 ஆண்டு நேரம் சரியில்லை, ஆய் அப்பனுக்கு கூட பாதிப்பு வர வாய்ப்பிருக்கு என்றும் தனிகுடித்தனம் போனா கடும் பாதிப்புகளை குறைக்கலாம் என்றார்.  சொந்த வீடா இருந்தாலும் உங்ககூட இல்லாம தனியா ஆக்கி தின்னா நல்லது என்றார். அதான் உங்களை காலி செய்யச்சொல்றோம் என்றார் வீட்டு உரிமையாளர் அம்மா. சரிக்கா 3 மாதம் கொடுங்க அதுக்குல்ல வேற வீடு கிடைத்ததும் காலி செய்யறோம் என்றார்.

விசாலியிடம் வீட்டை காலி பண்ணவேண்டும் என்ற செய்தியை கூறியவுடன் எல்லோரையும் விட அதிகம் கவலைப்பட்டது விசாலி தான். பொல பொலன்னு கண்ணீரே வந்துவிட்டது. ஐந்து ஆண்டா இந்த வீட்டில் குடியிருக்கிறார். இத்தெருவிலேயே 15 ஆண்டுகளாக குடியிறுக்கிறார். திருமணமான தினத்திலிருந்து இங்கேயே இத்தெருவிலேயே குடியிருக்கிறார்.  விசாலிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் நல்ல பழக்கம் எல்லோரும் சொந்தங்கள் போல நெருக்கம். இவர்களை பிரிய வேண்டும் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  இத்தெருவில் வேற வீடு எதுவும் இப்ப காலி இல்லை, யாரும் காலி செய்வதாகவும் சொல்லவில்லை. காலி செய்வதாக இருந்தாலும் மூன்று மாதத்தில் காலி செய்ய போறதில்லை..

இரண்டு வீடு தள்ளி இருந்த வீட்டுக்கு போன மாதம் தான் புதுசா குடிவந்தாங்க,.  அந்த வீட்டில் கொஞ்சம் வசதி குறைவு தான், சமாளிச்சுக்கலாம் என்றாலும் இனி அதற்கு வாய்ப்பு இல்லை. இங்க தண்ணி தொல்லை இல்லை. தனி வீடு. பத்து அடி தள்ளி தான் அடுத்த வீடு.  செந்திலின் வேலை செய்யும் இடமும் இதற்கு பக்கம். பேருந்து நிறுத்தமும் மிக அருகில் உள்ளது. நிறைய கடைகளும் அருகில் உள்ளது. சொந்தக்காரங்க வந்து ஒரு மாதம் டேரா போட்டாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அதை விட வீட்டு உரிமையாளர் தங்கமானவர் எந்த பிரச்சனை என்றாலும் உதவ முதல் ஆளாக இருப்பார். பக்கத்தில் உள்ளவர்களுடன் செந்திலுக்கும் நெருங்கிய பழக்கம்.   இவ்வளவு வசதியுடன் வேற வீடு கிடைக்குமா?

தேடுதல் தொடங்கியது. எதுவும் ஓரளவு வசதியுடன் சிக்கவில்லை.  அதனால் எதிர்பார்ப்பை சிறிது குறைத்து தேட தொடங்கினோம். ஐந்து வீடுகளை இப்பகுதியில் பார்த்தோம். எதுவும் ஒத்து வரவில்லை.  வீடு நல்லா இருந்தா வீட்டு உரிமையாளர் முசடா இருந்து ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பார் அதில் பாதி கூட நம்மாள் கடைபிடிக்க இயலாது. அப்படியில்லைன்னா வீடு நல்லா இருக்காது. இப்ப தான் வீட்டு உரிமையாளரின் நல்ல குணமும் வீட்டின் மதிப்பும் புரியுது அதற்கு வீடு பார்க்கும் படலத்துக்கு தான் நன்றி  சொல்லனும்.

சரி இந்த பகுதியில் தான் கிடைக்கலை என்று வேறு வழியில்லாமல் மற்ற பகுதிகளிலும் தேடினோம். ஒரு முப்பது வீட்டை பார்த்து இருப்போம். அதில் மூன்றை வடிகட்டி அதில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுத்தோம். எங்களின் முதல் தேர்வு வீட்டு உரிமையாளருக்கு தான், அடுத்தது தண்ணி, பாம்பே கழிப்பிடம் (மூட்டு செத்தவங்கள் நிறைய வீட்டில் அப்ப அப்ப தங்குவாங்க) அந்த பகுதியின் சுற்றம் சில பகுதிகளில் திருட்டு அதிகம் இருக்கும், அதிக பேருந்துகள் நிற்கும் பேருந்து நிறுத்தம், அருகில் கடைகள், வீடு தேடும் போது நான் எது சிறந்த வீடு என்று கண்டறிய பயன்படுத்திய முதன்மை பட்டியல் இது தான்.
புதிய வீடு 

இதன்படி முதல் நான்கும் தேர்ந்தெடுத்த மூன்று வீடுகளுக்கும் இருந்தது. நான் வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைவு என்றாலும் (ஒப்பீட்டளவில் மற்ற இரு வீடுகளின் இருப்பிடத்தை விட) வாடகை குறைவாக இருந்ததும் வீடு பெரிதாக இருந்ததும் இந்த வீட்டை தேர்ந்தெடுக்க காரணமாகியது. பக்கத்தில் அதிக கடைகள் இல்லாதது என் பணத்திற்கு நல்லதாக பட்டது. பக்கத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாதது நிறைய பேர் அடிக்கடி வீட்டிற்கு வருவதை குறைக்கும் என்ற நம்பிக்கையை தந்தது.

என்னிடம் மகிழுந்து எதுவும் இல்லைங்க. அந்த நிழற்படம் முன்னாடி அங்க இருந்தவங்களோடது, பெரிய வீடு கட்டி அவங்க போயிட்டாங்க. என்னிடம் இருப்பது பைக் தான். என்ன இருந்தாலும் பழைய வீட்டு நினைவு போகவில்லை, இந்த இடம் பழகிப்போகலாம் ஆனால் பழைய இடத்து நினைவு போகாது. அப்பகுதியில் நல்ல வீடு கிடைத்தால் அங்கு குடியேறுவது உறுதி.

4 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

குறும்பன் சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி

Yaathoramani.blogspot.com சொன்னது…

பல வருடங்களுக்கு முன்பு இந்த அவஸ்தைகளை
அனுபவித்தவன் என்பதால் ஈடுபாட்டுடன்
படித்தேன்.சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

குறும்பன் சொன்னது…

நன்றி ரமணி உங்கள் பின்னூட்டம் என்னை சிறப்பாக நிறைய கதைகளை எழுத தூண்டுகிறது.