இவர்கள் மேல் கடும் விமர்சனம், மன நிறைவின்மை இருந்தாலும் ஆட்சியின் குறைகளை தட்டி கேட்க இவர்கள் தேவை என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் மட்டுமே ஓரளவு எதிர்கட்சிக்குரிய பணிகளை செய்து வந்தனர். பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டாலும் அதை அவ்வப்போது எதிர்ப்பவர்கள் இவர்கள் தான். தற்போது 10 உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ள இவர்கள் திறமையாக செயல்படுவது கடினம் . இவர்களைப்பற்றிய விமர்சனத்தை தனி இடுகையாக தான் போட வேண்டும் அவ்வளவு இருக்கு, இங்க எழுதினால் இவ்விடுகையின் நோக்கம் மாறி விடும்.
இவர்கள் பலமாக உள்ளது மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் பார்த்து பிழைத்துப்போ என்று போடும் பிச்சை மட்டுமே.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆண்டவர்களுக்கு மரண அடி. காங்கிரசு கூட அங்கு 4 தொகுதிகளில் வென்றுள்ளது. இவர்கள் கூட்டணி வென்ற தொகுதிகள் 2 (மார்க்சிய பொதுவுடைமைவாதிகள் இதை பெற்றனர்). பாரதிய சனதாவும் அங்கு 2 தொகுதிகளில் வென்றுள்ளது.
கேரளத்தில் மார்க்சிய பொதுவுடமைவாதிகள் வென்றது 5 தொகுதிகள், இந்திய பொதுவுடமைவாதிகள் வென்றது 1 தொகுதி. இவர்கள் ஆதரவுடன் இரு கட்சி சாரா வேட்பாளர்கள். இவர்கள் அணியில் இருந்து பிரிந்து சென்ற புரட்சிகர சோசலிசுட்டு 1 தொகுதியில் வென்றுள்ளது. மார்க்சிய கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பேபியையும் கொல்லத்தில் போட்டியிட்டு தோற்றுள்ளார்
திரிபுராவில் 2 தொகுதிகளையும் மார்க்சிய பொதுவுடமை வென்றுள்ளது .
மாநிலவாரியாக கட்சிகள் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை.
ஆறுதல் இந்திய அளவில் இரண்டே கால் கோடிக்கு அருகில் இக்கூட்டணி பெற்ற வாக்குகளே.
இவர்கள் பெற்ற படுதோல்வி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் குண்டர்கள் ஆதிக்கம் செலுத்தியதும் இவர்கள் மேல் அம்மக்களுக்கு வெறுப்பு வர காரணம். ஆட்சிக்கு வரும் வரை தான் இவர்களும் ஓரளவு நல்லவர்களாக இருப்பார்கள் போல் உள்ளது.
2004ங்கில் நல்ல வெற்றியை பெற்றாலும் பின் இக்கட்சி (கூட்டணி) தேயத் தொடங்கியது. 2009லிலேயே இதன் வெற்றி வெகுவாக குறைந்தது. கட்சி தோல்விக்கான காரணத்தை ஆய்ந்து திருத்த தவறியதின் பலன் 2014ல் படு தோல்வி.
இதில் கொடுமை என்னவென்றால் இன்னமும் தோல்விக்கான காரணத்தை ஆராய தவறுவது தான். படுதோல்விக்கு பொறுப்பேற்று பொலிட் பீரோ உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியிருக்க வேண்டும். பொதுச்செயலாளர் உடனடியாக பதவி விலகியிருக்க வேண்டும். பழைய பொலிட்பீரோ உறுப்பினர்களை கொண்டு எவ்வாறு கட்சியை வளர்ப்பது? அவர்கள் சிந்தனை பழையதாகவே இருக்குமே.
காங்கிரசு அழிவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை இவர்கள் அழிவு நீக்கி விடுகின்றது.
இடதுசாரிகளின் கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் அவற்றில் வலுவானதான இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசுடு) பெற்ற வாக்குகளையை இக்கூட்டணி பெற்றதாக கொள்ளலாம். இவர்களே கூட்டணிக்கு எல்லாம் மற்றவர்கள் சிறு உதவி அவ்வளவே. அதனால் அவர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டையே இங்கு குறித்துள்ளேன்.
மேற்கு வங்காளம்
கட்சி | பெற்ற வாக்குகள் % |
---|---|
திரிணாமுல் | 39.3 |
மார்க்சியம் | 22.7 |
பாசக | 16.8 |
இ. காங்கிரசு | 9.6 |
கேரளம்
கட்சி | பெற்ற வாக்குகள் % |
---|---|
இ. காங்கிரசு | 31.6 |
மார்க்சியம் | 21.6 |
பாசக | 10.3 |
திரிபுரா
கட்சி | பெற்ற வாக்குகள் % |
---|---|
மார்க்சியம் | 64.0 |
இ. காங்கிரசு | 15.2 |
திரிணாமுல் | 9.6 |
பாசக | 5.7 |