வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், செப்டம்பர் 19, 2006

கோவை ஆத்துப்பாலம்.

கோவை ஆத்துப்பாலம் பிரசித்தி பெற்ற இடம் எதனால் என்று தெரியுமா உங்களுக்கு?
நொய்யல் ஆறு செல்வதாலா? பொள்ளாச்சி, கேரளா செல்லும் வண்டிகள் இதை கடந்து செல்வதாலா? உக்கடம் அருகில் உள்ளதாலா? சில பேர் கிண்டலாக இதை வாய்க்காப்பாலம் என்பதாலா? கோவைகாரர்களுக்கு நன்றாக தெரியும்.

கோவை மாநகரானது ஆத்துபாலத்துக்கு இந்தப்பக்கமும் நன்றாக வளர்ந்துள்ளது. குனியமுத்தூர் நகராட்சி பாலத்துக்கு இப்பக்கம் உள்ளது. நிறைய மக்கள் வேலைக்கு செல்ல, துணிமணி வாங்க, பெரிய கடை வீதிக்கு செல்ல இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். சுருக்கமா சொன்னா காலையில் டீ குடிக்க, பல் துலக்க, முகம் கழுவ கூட நிறைய பேர் ஆத்துப்பாலத்தை கடப்பார்கள்.

இது ஒரு சிறிய பாலம் ஆனா முக்கியமான இடத்தில் உள்ளது. இதுல என்ன பிரச்சனைன்னா இதை கடப்பதற்கு சுங்கம் (Toll) கட்ட வேண்டும். அதில் என்ன தப்பு என்று கேட்பவர்களுக்கு, தினமும் பயன் படுத்தும் உள்ளூர் மக்களும் இதற்கு சுங்கம் கட்ட வேண்டும். ஊரின் நடுவில் உள்ள இச்சிறு பாலத்தை அரசு கையகப்படுத்தி சுங்கம் வசுலிப்பதை நிறுத்த வேண்டும். ஆனா என்ன காரணத்தாலோ மாநகராட்சி / அரசு இதை செய்ய மறுக்கிறது. இப்பாலத்தில் சுங்கம் வசுலிப்பதனால் இங்கு போக்குவரத்து நெரிச்சலும் ஏற்படுகிறது. ஊருக்கு நடுவில் அவசியமற்ற நெரிச்சல்.

என்னை பொருத்தவரை இப்பாலம் கட்ட அதிகபட்சம் ரூபாய் 2 கோடி ஆகியிருக்கலாம். இந்த வாய்க்காப்பாலத்தை (ஆத்துப்பாலம்) கட்ட சென்னை நேரு அரங்க புகழ் "L&T" பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது குறிப்பிடதக்கது.

கிட்டத்தட்ட இதை கட்டி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது, போட்ட காசுக்கு மேல பல பல மடங்கு லாபம் பார்த்திருப்பார்கள் ஆனால் இன்னும் சுங்கம் வசுலிக்கிறார்கள். இப்போ இது அதிகாரபூர்வமான ஒரு பகல் கொள்ளை. சுங்கம் கட்டி பழகி விட்டதால் இதைப்பற்றி இப்ப யாரும் கண்டுக்கறதில்லையா?

வெள்ளி, செப்டம்பர் 15, 2006

திகிரி காபியாகுமா? - 1

சொல் ஒரு சொல்லில் இராகவன் திகிரி என்ற தமிழ் சொல்லுக்கு பொருள் சக்கரம் என்று கூறியிருந்தார். திகிரி என்றால் சக்கரம். அப்ப சக்கரத்தாழ்வார் திகிரியாழ்வாராக திரிகிறார். திகிரி டிகிரியாக மறுவும். ஆதலால் திகிரியாழ்வார் டிகிரியாழ்வாராக அறியப்படுவார். டிகிரி காபியின் சுவை சிறந்தது அதனால் மக்கள் டிகிரியையும் காபியையும் பிரித்து பார்ப்பதில்லை. ஆகையால் டிகிரியாழ்வார் காபியாழ்வாராக அறியப்படுவார்.

காபியாழ்வார் என்ற பெயர் இருப்பதால் பால் அபிசேகம் கூடாது அவருக்கு காபி அபிசேகம் தான் செய்யவேண்டும் என நியதி உருவானது.

பிள்ளையார் பால் குடித்த போது காபியாழ்வாருக்கும் பால் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் அதை குடிக்கவில்லை என்றும் காபி கொடுத்ததும் குடித்தார் என்றும் செய்தி பலமாக பரவியதால் காபியாழ்வாரின் புகழ் வெளிநாடுகளுக்கும் எட்டியது.

பக்தர்கள் இன்ஸ்டென்ட் காப்பி & பில்டர் காப்பி போன்ற காபிகளை அபிசேகத்துக்கு கொண்டுவந்தனர். அபிசேக காப்பியை குடித்தால் வந்த பிணி ஓடும், எந்த பிணியும் அண்டாது என்ற செய்தி பரவியதால் காப்பியாழ்வாரின் புகழ் உச்சத்தை அடைந்தது.

எல்லா மதத்தவரும் அபிசேக காப்பியை குடித்து மத நல்லினக்கம் பேணினர். அரபு நாடுகளுக்கும் அபிசேக காபி சென்றது. அரபு அரசாங்கங்கள் இது இந்து மத சாமியின் காபி என்பதால் இக்காபிக்கு தடை விதித்தன. அங்கிருந்த நம்மூர் ஆளுகளுக்கு இது பெரிய சோதனையா போயிடுச்சு. அப்புறம் கள்ள சந்தையில வாங்கி தான் அபிசேக காபியை அவங்க குடிச்சாங்க. அரபுகாரர்களும் கள்ள சந்தையில் வாங்கி அபிசேக காபியை குடிச்சாங்க என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

அரபு அரசாங்கங்கள் மத சம்பதப்பட்ட சங்கதியில் ரொம்ப கெடுபிடின்னு தெரியும் இல்லையா, கள்ள காபி சந்தை பற்றி தெரிந்து ஒட்டு மொத்த காபிக்கே அங்க தடை விதிக்கப்பட்டது. பாவம் காபி பிரியர்கள். ஆனா துபாய்ல மட்டும் விதிவிலக்கா காபியை விற்றாங்க ஏன்னா அது பன்னாட்டு சந்தை பல வெளிநாட்டு காரங்க காபிக்கு அடிமை காபி குடிக்கலைன்னா அவங்களுக்கு வேலை ஓடாது. துபாய் காரன் வெளிநாட்டை பகைச்சுக்க முடியுமா ( வெளிநாடுன்னா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுன்னு பொருள்). ஆனா அமெரிக்காவின் StarBucks துபாயில் இருந்ததால் தான் துபாய் அரசு காபியை தடை பண்ணவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். எப்படியோ நமக்கு துபாயிலயாச்சும் காபி கிடைச்சா சரி.

காபி கிடைக்காத கோவத்துல அரபு நாட்டுல மனித உரிமையே கிடையாது அப்படின்னு ஒருத்தர் தன் அனுபவத்தை பதிவா போட்டார். அதுக்கு ஆதராவாகவும் எதிர்ப்பாகவும் வலைப்பூவில் பலர் எழுதினர். காபி குடிக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கறப்போ அதை மதித்து நடக்கனும் என்று ஒருவரும் அமெரிக்காவில் காபி குடிக்ககூடாதுன்னு சொன்னா கேப்பிங்க அரபு நாட்டுல் சொன்னா மட்டும் மனித உரிமை அப்படின்னு பேசுவிங்கன்னு காட்டமா எழுதினார். இன்னொருத்தர் காபி குடிப்பது இஸ்லாத்துக்கு விரோதமானது அதை முஸ்லிம்கள் குடிக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்று சொல்லி குரானில் இருந்து பல வாசகங்களை எடுத்து பதித்தார். அதுக்கு பதிலளித்த இன்னொறுவர் ஏதோ அந்த காலத்துல அரபுக்களுக்கு காபி குடிச்சா ஒத்துக்காம போயிறுக்கும் அதனால காபி குடிப்பது தப்புன்னு சொல்லிருப்பாங்க இப்ப குடிக்கிறதில் தவறு இல்லைன்னார் அதுக்கு இன்னொருவர் குரான் சொல்வது எக்காலத்துக்கும் பொருந்தும் அதை பல பல அறிஞர்கள் ஒத்துக்கொண்டுள்ளார்கள் என்று சொல்லி காபி குடிப்பது தவறே ஒரு உண்மையான முஸ்லிம் அதை செய்ய மாட்டான் என்றார். உடனே காபி குடிக்கும் & குடிக்காத மற்ற மதத்தவர்கள் இதற்கு எதிர் பதிவு போட்டனர்.

உடனே ஒரு நல்லவர் இஸ்லாம் காபிக்கு என்றும் எதிரியல்ல முஸ்லிம் அல்லாதவர்கள் காபி குடிக்கலாம் அதை குரான் தடுக்கவில்லை, குரானில் வரும் அரபிச் சொல்லான காபியை அது எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டுள்ளது என்று தெரியாமல் இஸ்லாம் மேல் அவதூறு சொல்வதற்காக காபி என்ற சொல்லை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள் என்று சாடினார். அரபியில் அது "காஃபி" , எல்லோரும் தவறாக உச்சரிக்கிறோம் என்று சொன்னார். அல் உஸ் காஃபி சலாம், அல் தீம் காஃபி இஸ்மில்லா, அல் காஃபி, அல் அக்பர் காஃபி யிலாகி, லேடன் மதினா காஃபி பின் ஸேக் , ரஸல் காஃபி குஸ் என்பதற்கு விரிவான விளக்கம் கொடுத்தார்.
அவருடைய காஃபி விளக்கம் காபியை கொண்டு இஸ்லாமை தாக்குகிறவர்களுக்கு ஒரு சாட்டையடி என்று பலர் பின்னூட்டி பாராட்டு தெரிவித்தனர்.

இந்திய அரசு காபியை தேசிய பானமாக அறிவித்தது, சாப்பிட்டு முடித்த பின் அல்லது காலையில் அல்லது மாலையில் காபி குடிப்பது நல்லது என்று அரசு உத்தரவு போட்டது. உடனே டெல்லி இமாம் எதிர் குரல் கொடுத்தார் காபி குடிப்பது இஸ்லாமுக்கு எதிரானது மற்றும் இந்து கடவுளுக்கு இது அபிசேக பொருள் ஆதலால் முஸ்லிம்கள் காபி குடிக்ககூடாது என்று ஒரு பாத்வா போட்டார்.

ஒரு தேசிய பானத்தை எப்படி அவமதிக்கலாம் என்று சர்ச்சை கிளம்பியது. இமாம், இஸ்லாம் "டீ" குடிப்பதை தடுக்கவில்லை, காபியை தடுக்கிறது எனவே எங்களால் காபி குடிக்க முடியாது என்றார். இது வலையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒருவர் தேசிய பானத்தை விட முஸ்லிம்களுக்கு மதம் பெரிதாகிவிட்டது வருத்தமளிக்கிறது என்றார். டிகிரி காபியா குடிக்க சொல்றாங்க இன்ஸ்டன்ட் காபி தானே குடிக்க சொல்றாங்க என்று கூறினார்.

வட்டி வாங்குவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளதால் வங்கியில் இருந்து வட்டி வாங்கக்கூடாது, வைப்பு நிதியில் பணம் போட கூடாது, முஸ்லிம் யாரும் வங்கியில் வேலை செய்யக்கூடாது என்று இமாம் ஏன் பாத்வா போட வேண்டியது தானே என்றார் ஒருவர். இன்னொருவர் நக்கலாக அப்படி போட்டால் அவருக்கு வர வேண்டிய வட்டி பணம் கிடைக்காமல் போயிடும் எப்படி போடுவாறு? என்றார்.

ஒரு Tee Totaller அரசு உத்தரவால் கடுப்பாகி காபியோ டீயோ மக்கள் விரும்பி குடிக்கனும் இதை குடி அதை குடிக்காத என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றார்.

சனி, செப்டம்பர் 02, 2006

உலகில் இந்திரா நூயி 4வது சக்திமிக்க பெண்

போர்ப்ஸ் இதழ் உலகின் 100 சக்தி மிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்களான காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பெப்ஸி நிறுவன தலைவி இந்திரா நூயி , ICICI வங்கி தலைவிகள் லலிதா குப்தா & கல்பனா மொர்பரியா, ஜம்போ குழும தலைவி வித்யா சாப்ரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜெர்மனி அதிபர் ஆஞ்சல மெர்க்கெல் உலகிலேயே அதிகாரமிக்க பெண்ணாகவும், அமெரிக்க வெளியுறவு செயலாளர் கான்டலினா ரைஸ் 2வது அதிகாரமிக்க பெண்ணாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திரா நூயிக்கு 4வது இடம், சோனியா காந்திக்கு 13வது இடம், லலிதா குப்தா & கல்பனா மொர்பரியா க்கு 93 வது இடம், வித்யா சாப்ரியா க்கு 95 வது இடம்.


இதிலிருந்து என்ன தெரிகிறது?

எக்காலத்திலும் 'சோனியா' 'இந்திராவை' விட அதிகாரம் / சக்தி உள்ள பெண்ணாக முடியாதுங்கிறது தெரிகிறது.

http://www.forbes.com/lists/2006/11/06women_The-100-Most-Powerful-Women_Rank_1.html


இந்திரா நூயி தமிழ்நாட்டுப்பெண். இவர் சென்னையில் 1955 ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிருத்துவ கல்லூரியில் இளங்கலை பட்டமும், கல்கத்தா "Indian Institute of Management" -ல் முதுநிலைப்பட்டமும் பெற்றார்.

இந்தியன் என்ற முறையிலும் தமிழ் நாட்டுக்காரன் என்ற முறையிலும் இந்திரா நூயி க்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
http://en.wikipedia.org/wiki/Indra_Nooyi



புரச்சித்தலைவி , இரும்புமங்கை போன்ற பல பட்டங்களை பெற்ற அ.தி.மு.க வினரால் அன்புடனும் பயத்துடனும் 'அம்மா' என்று அழைக்கப்படும் ஜெயலலிதா இந்த பட்டியலில் இடம்பெறாதது ஒன்றே போதும் போர்ப்ஸ் இதழ் காங்கிரஸ் & தி.மு.க விடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இப்பட்டியலை தயாரித்தது என்பதற்கு என்று 'வை.கோ', 'காளிமுத்து', 'பன்னீர்செல்வம்' & பல அதிமுக பிரமுகர்கள் தனி தனியாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.


டெல்லியிலில் நடக்க இருக்கும் டீ பார்ட்டிக்கு ஜெயலலிதாவை அழைக்க வந்த "சுப்பிரமணிசாமி" இதற்கான ஆதாரம் உள்ளதாகவும் சி.ஐ.எ மூலம் இதை தான் பெற்றதாகவும் கூறியுள்ளார். பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் இதழை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதினன்றத்தில் வழக்கு போடபோவதாக சொன்னார்.

"சோ" துக்ளக்கில் கேலிச்சித்திரம் வரைந்தும் கேள்வி பதிலில் நையாண்டியாக பதில் கூறியும் அவருக்கே உரிய முறையில் போர்ப்ஸ் பட்டியலை விமர்சித்துள்ளார்.