வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, மார்ச் 11, 2022

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராளி ஈகி தாளமுத்து

தமிழ் இந்துவில் வந்த கட்டுரை. இணைப்பு கீழே

 https://www.hindutamil.in/news/opinion/columns/775824-thiyakiyanar-thalamuthu.html

படியெடுத்து பதிர்ந்துள்ளேன். *****

பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் (1937-39) முதல் களப்பலியான ல.நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தாளமுத்து என்ற இளைஞரும் தியாகியானார். மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாகப் பெற்றிருந்த தாளமுத்து, சிறைபட்ட மூன்று வாரங்களுக்குள் காலமானார். நடராசன் – தாளமுத்து என்ற இரட்டைப் பெயர்கள் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்றவை. ஆனால், அவர்களைப் பற்றி அதிக விவரங்கள் தெரியாத நிலையே இருந்தது. ‘இந்து தமிழ் திசை’யில் (‘நடராசன் புகழுடம்பு எய்திய கதை’, ஜனவரி 31, 2022) நடராசன் பற்றிய கட்டுரை வெளிவந்ததைத் தொடர்ந்து, தாளமுத்து பற்றிய புதிய செய்திகளுடன் இக்கட்டுரை அமைகின்றது.

சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் பக்தவத்சல நாயுடு என்பாரும் சட்ட மேலவையில் என்.ஆர்.சாமியப்ப முதலியாரும் தாளமுத்துவின் மறைவைப் பற்றிக் கேள்வி எழுப்பினர். சென்னை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் லெப்டினெண்ட் கர்னல் எம்.எம்.கான், சென்னை பொது மருத்துவமனையின் மதிப்புறு மருத்துவர் கே.நாராயணமூர்த்தி ஆகியோரிடமிருந்து அரசாங்கம் பெற்ற அறிக்கைகளிலிருந்து பல செய்திகளை அறிய முடிகிறது.

சென்னை மத்திய சிறையிலிருந்த தாளமுத்துவின் கைதி எண் 6477. ‘சி’ வகுப்பு. வயது 19. எடை 43 கிலோ. உயரம் 5 அடி 4 அங்குலம். கல்வித் தகுதி, வேலை ஆகியன பற்றித் தகவல் இல்லை. இருப்பிடம் கும்பகோணம் கும்பேசுவரர் தெற்குத் தெரு.

  1939 பிப்ரவரி 13-ல் சிறைபட்ட தாளமுத்துவுக்குப் பதினெட்டு நாட்கள் கழித்துக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 6-ம் தேதிதான் அவர் மருத்துவ உதவியை நாடினார் என்று சிறை அதிகாரிகள் கூறினர். அவருக்கு வந்த நோய் அமீபாவினால் (Entamoeba histolytica) உண்டாகும் சீதபேதி என்று சிறை மருத்துவர்கள் முடிவுசெய்தனர். அடுத்த நாள் சளியும் குருதியும் கலந்து பதின்மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

காய்ச்சல் இல்லை என்றாலும் நிமிடத்துக்கு நாடித் துடிப்பு 88 உடன் மூச்சிரைப்பும் இருந்தது. அதற்கடுத்த நாள் வயிற்றுப்போக்கு மட்டுப்பட்டதில் கழிப்பறைக்குத் தாமே நடந்து செல்லத் தாளமுத்து விரும்பியிருக்கிறார். ஆனால், அதற்கு மருத்துவர்கள் இணங்கவில்லை. தேறிவருகிறார் என்று நினைத்த வேளையில், மார்ச் 10-ம் தேதி அவருடைய நிலை மோசமடைந்தது. இரவில் பத்து முறையும் காலையில் பத்து முறையுமாகப் பன்னிரண்டு மணி நேரத்தில் இருபது முறை சளியும் ரத்தமும் கலந்து பச்சை நிறத்தில் கழிந்தது. ஒவ்வொரு முறையும் கழியும் முன் வயிற்றுப்பிசைவுடன் கடும் வலியில் தாளமுத்து துடித்தார்.

உடனே, சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மதியம் 1:35-க்கு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் தாளமுத்து. நீர்ச்சத்து இழந்தும், களைத்துச் சோர்ந்தும், கண்கள் உள்ளொடுங்கியும், படபடவென நாடியும் துடித்துக்கொண்டிருந்த தாளமுத்துவுக்கு குளுக்கோஸ், பிராந்தி கலவை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறையும், தொடர்ந்து குளுக்கோஸ் நீரும் ஊட்டப்பட்டன. கைகால்களின் விரல்நுனிகள் மெல்லச் சில்லிட்டுவந்ததால் கம்பளியும் சுடுநீர் பாட்டிலும் அணைப்புக்குக் கொடுத்தனர். நிலைமை சீரடையாததால் இரவு பத்து மணிக்கு நாளங்களின் வழியாக குளுக்கோஸ்- உப்புநீர் உட்செலுத்தப்பட்டது. மறுநாள், 11-ம் தேதி காலை குதத்தின் வழியாகச் சூடான காபி கொடுத்தார்கள். அப்போதும் நிலைகொள்ளாமல் அனத்திக்கொண்டிருந்தார் தாளமுத்து. 10:30 மணிக்கு அட்ரீனலின் (adrenalin), ஸ்ட்ரிக்னீன் (strychnine) ஆகிய ஊக்கிகள் செலுத்தப்பட்டன. பிற்பகல் 1:45 மணிக்குக் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் தாளமுத்துவின் உயிர் பிரிந்தது.

தாளமுத்து எப்படிக் காலமானார், அவருடைய குடும்பத்தினருக்கு உரிய நேரத்தில் தகவல் சென்றதா, எப்போது பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்ன மருத்துவம் பார்க்கப்பட்டது, சிறையில் சுகாதார நிலைமை என்ன முதலான கேள்விகள் சட்டமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ஆனால், நடராசன் இறந்தபோது நிகழ்ந்ததைப் போன்ற காரசாரமான விவாதங்கள் நிகழவில்லை. முதல் களப்பலிக்குக் கிடைத்த கெளவரம் என்றே அதைக் கொள்ளலாம். நீதிக்கட்சியின் பெருந்தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், பழம்பெரும் இதழாளர் டி.எஸ்.சொக்கலிங்கம், அப்துல் ஹமீது கான், டி.வி.ராமசாமி, கே.வி.ஆர்.சாமி, மெஹ்பூப் அலி பேக் ஆகியோர் துணைக் கேள்விகள் கேட்டனர்.

அரசாங்கம் மேலதிக விவரங்களைக் கேட்ட நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் தம் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்பதை நிறுவும்வகையில் விளக்கம் அளித்தார். சீதபேதித் தொற்று ஏற்படுவதற்கும் அதன் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். எனவே, சிறைபடுவதற்கு முன்பே தாளமுத்து தொற்றுக்கு ஆளாகிவிட்டார் என்றார்.

நான்கு மாதங்களாகச் சிறையில் எவருக்கும் இந்நோய் நேரவில்லை என்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டினார். சிறையின் சுகாதார நிலைமையைப் பற்றி எந்தப் புகாரும் வரவில்லை என்றதோடு நில்லாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டக் கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்காமல் முரண்டுபிடிக்கின்றனர் என்று அவர்கள் மீதே புகார் கூறினார். உடல் மெலிவும் ரத்த சோகையும் உடல்வாகுக்கு உரியதைவிட ஏழெட்டு கிலோ குறைவான எடையும் கொண்டவரான தாளமுத்துவுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவு என்று இறந்துபோன தாளமுத்து மீதே பழி சுமத்தினார். 

மருத்துவ அறிக்கைகளை வழிமொழிந்து முதல்வர் ராஜாஜி கொடுத்த பதில்களில் ஏளனம் இழையோடியது. தாளமுத்து நோய்வாய்ப்பட்டதற்குப் போராட்டத் தலைவர்கள் அக்கறை கொண்டார்களா என ஓர் உறுப்பினர் வினவியதற்கு, இல்லை என்ற பதில் கேள்வியிலேயே தொக்கி நிற்கவில்லையா என்று பதிலளித்தார் ராஜாஜி. தாளமுத்துவின் மறைவு வெளியுலகில் ஏற்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு முற்றிலும் மாறான உணர்வுநிலையே சட்டமன்றத்தில் வெளிப்பட்டது.

மாலை ஆறு மணிக்குப் பொது மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தாளமுத்துவின் முதிய பெற்றோரும் இளம் மனைவியும் அழுது புரண்ட காட்சி அனைவரையும் கலங்கவைத்தது. மறியல் களமான இந்து தியலாஜிக்கல் பள்ளியைத் தாண்டி ஊர்வலம் சென்றபோது, பேராரவாரம் ஏற்பட்டது. மூலக்கொத்தளம் இடுகாட்டில் நடராசனின் சமாதிக்கு அடுத்து தாளமுத்து புதைக்கப்பட்டார். அண்ணா, என்.வி.நடராசன், பாசுதேவ் ஆகியோர் உணர்ச்சிமிகு இரங்கல் உரையாற்றினர். ‘தோழர்கள் நடராஜன், தாளமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் என்றே கருதுகிறேன்’ என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார் அண்ணா.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஆவணபூர்வமான முழு வரலாறு 80 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் எழுதப்படவில்லை. அந்த வரலாற்றை எழுதுவது நடராசன் – தாளமுத்து தியாகத்துக்குச் சிறந்த அஞ்சலியாக அமையும்

.

- ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்று ஆய்வாளர். ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: chalapathy@mids.ac.in

மார்ச் 11 தாளமுத்துவின் 83-ம் நினைவு நாள்.

ஞாயிறு, அக்டோபர் 10, 2021

பெல்ச்சி நேரம் \ பெல்ச்சி காலம்

 இந்திரா காந்தியின் பெல்ச்சி காலம் போல "’இலாகிப்பூர்"’ பிரியங்கா வதேராவின் காலமாக மாறுமா என நிறைய வடநாட்டு ஆங்கில ஊடகங்கள் எழுதுவதை, கேட்பதை பார்த்தேன். (Can Priyanka do Indira’s comeback ‘Belchi’ moment of 44 years ago? what is belchi moment? ) இந்திரா காந்தி, பிரியங்கா வதேரா என்ற பெண்மணிகளை தொடர்பு படுத்தி இருந்ததால் பெல்ச்சி என்பது ’"பேட்டி"’ போன்ற பெண்கள் தொடர்புடைய இந்தி சொல் என நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது பெல்ச்சி என்பது பீகாரில் பாட்னாவுக்கு அருகில் உள்ள நாளந்தா (அக்காலத்தில் பீகார் செரிப்) மாவட்டத்தில் இருக்கும் போக்குவரத்து வசதிகளும் மற்ற வசதிகளும் அற்ற சிற்றூர் என்பது. இப்பவும் போக்குவரத்து வசதிகள் மோசம்.மற்ற வசதிகள் ஏதாவது மேப்பட்டு உள்ளதா எனத் தெரியவில்லை.

நெருக்கடி நிலையினால் வடநாட்டில் துடைத்து எறியப்பட்ட இந்திரா காந்தி 1980ஆம் ஆண்டு தேர்தலில் வடமாநிலங்களில் பெருவெற்றி பெற்றதற்கு அவரின் பெல்ச்சி பயணம் காரணம். அவரின் பெல்ச்சி பயணம் மலைக்க வைக்கக்கூட்டியது.

குர்மி சேனையால் பெல்ச்சியில் 1977இலில் பதினொன்று வெவ்வெறு சாதியை சேர்ந்த அரிசனங்கள் படுகொலை செய்யப்பட்டனர். கையை கட்டி நெருப்பில் போட்டு கொன்றார்கள். இதுவே பீகாரில் அரிசனங்கள் படுகொலை செய்யப்பட்ட முதல் நிகழ்வு.

இந்திரா காந்தி பெல்ச்சிக்கு போவதாக இருந்தது அவரைத்தவிர வேற யாருக்கும் தெரியாது. இந்திரா காந்தி பாட்னாவுக்கு போய் பின்னர் பீகார் செரிப்புக்கு சென்றார்.

கட்சியினரிடம் பெய்ச்சிக்கு போகனும் என்றார்.



அவர் போனது ஆகத்து மாதம் அப்ப பருவகாலம் உச்சத்தில் இருக்கும் காலம். இங்கிருந்து பெய்ச்சி தூரம், பாதை பயங்கபர மோசம் சேறும் சகதியுமா இருக்கும், மழை பெய்தால் வெள்ளம் வந்து சிக்கலில் மாட்டிக்கொள்வீர் என்றார்கள். அதனால இப்ப போவது நல்லதில்லை போக வேண்டாம் என்றனர். யார் சொல்லியும் கேட்காம போவேன் என பிடிவாதமாக இருந்தார். எனவே காரில் போனார், கார் சகதியில் மாட்டிக்கொண்டது. உடனை jeepஐ கொண்டு வரச் சொல்லி அதில் போனார். Jeepஇம் சிறிது தூரம் போனதும் மாட்டிக்கொண்டது. இனி வேண்டாம் திரும்பி போகலாம் என்றார்கள். அவர் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. சரின்னு உழவு எந்திரதை கொண்டு வரச்சொல்லி அதன் மூலம் jeepஐ இழுத்து பயணப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் உழவு எந்திரமும் மாட்டிக்கொண்டது. மறுபடியும் இனி வேண்டாம் திரும்பி போகலாம் என்றார்கள். அவர் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. அப்ப பாதையில் சேறும் சகதியும் எப்படி இருந்திருக்கும் ஊகித்துக்கொள்ளுங்கள்.


நான் பெய்ச்சிக்கு நடந்து போகிறேன், வரவில்லை என்பவர்கள் தாராளமாக திரும்பி போகலாம் என்றார். சிறிது தூரம் போனதும், கூட்டத்திலிருந்த ஒருவர் பக்கத்தில் உள்ள கோவிலில் யானை இருக்கு என்றார். சரி யானையை கொண்டு வாருங்கள் என்றனர். யானை வந்தது. யானைப்பாகன் அம்பாரி இல்லை யானையின் முதுகில் தான் உட்கார முடியும் கீழே விழாமல் இருக்க அம்பாரி இல்லாததால் எந்த துணையும் இல்லை என்றார். இந்த யானையின் பெயர் மோதி.(இது தான் விந்தையா ) 😉 சரின்னதும் பிரதீபா பாட்டில் (ஆம் குடியரசு தலைவரே, அப்போது அவர் பீகார் காங்கி தலைவர்) இந்திரா காந்திக்கு பின்னும் முன்னாடி பாகன் இருக்க யானையில் இந்திரா பயணப்பட்டார். யானைப் பயணம் மூன்றரை மணி நேரம். சிறிய ஆற்றை கடந்தும் யானை போயிருக்கிறது. அப்போ ஆற்றின் நீர் யானையின் வயிற்றில் பாதியை தொட்டிருக்கிறது. அந்திசாயும் நேரத்தில் பெல்ச்சியை அடைந்தனர். இந்திரா யானையை விட்டு இறங்கவில்லை. யானையை மண்டியிட வைத்து சிற்றூர் மக்கள் கூறுவதை கேட்டார். 

டெல்லிக்கு திரும்பும் முன் 1977இல் அவர் தோற்க காரணமான செயப்பிரகாசு நாராயணை மருத்துவமனையில் சந்தித்து அவர் விரைவில் நலமடைய வேண்டினார், அப்போது செயப்பிரகாசு நாராயண் இந்திராவின் தலையில் கைவைத்து ஆசி வழங்கினார். 1980இல் வென்றார்.

வியாழன், நவம்பர் 19, 2020

ஏன் எந்தக் கட்சியும் எதனுடைய பீ டீமும் அல்ல & பீகார் தேர்தல் அலசல்

2020 அக்டோபர் நவம்பரில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய சனநாயக கூட்டணி (தேசகூ) வாங்கியது 125, மாகாகாத்பந்தன் வாங்கியது 110 . ஓவைசியின் முசல்மீன் வாங்கியது 5, மாயாவதியின் பகுசனும் பாசுவானின் லோக் சன சக்தியும் வாங்கியது தலா 1, கட்சி சார்பற்றவர் 1. 

சதவீத கணக்கில் முசல்மீன் 1.24% வாக்குகளும், பகுசன் 1.49% வாக்குகளும், சன சக்தி 5.66% வாக்குகளும் பெற்றன.  லோக் சன சக்தி 134 தொகுதிகளிலும் முசல்மீன் 20 தொகுதிகளிலும் பகுசன் 80 தொகுதிகளிலும் போட்டியிட்டன.  

மகாகாத்பந்தன் தோற்றதிற்கு ஓவைசியின் முசல்மீன்கட்சி முசுலிம் வாக்குகளை பிரித்ததும் பகுசன் சமாச் பட்டியல் இனத்தவரின் வாக்குகளை பிரித்ததும் தான் காரணமென்றும் அவை பாசகவின் பீ டீமென்றும் இங்கு பாசகவை எதிர்ப்பவர்களும் திமுக அல்லக்கைகளும் அலறுவது தவறு. 

நமக்கும் சிறிது அரசியல் தெரியுமென்பதால் அது ஏன் தவறு எனப் பார்ப்போம்.

சாகையில் போன முறை இராட்ரிய சனதாதள சாவித்திரி தேவி சுனில் குமாரை 12,113 வேறுபாட்டில் வென்றார். இம்முறை அதற்கு பழிவாங்கும் விதமாக கட்சி சார்பற்ற சுனில் குமார் சிங் சாவித்திரி தேவியை 625 வாக்கு வேறுபாட்டில் வென்றுள்ளார்.  நோட்டா 6,520. இது பழங்குடிகளும் பட்டியல் இன மக்களும் மிக அதிகமாக உள்ள தொகுதி சுனில் குமார் ராசுபுத்.  இவர் கட்சியில் பல ஆண்டுகள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் போட்டியிட்ட போட்டி வேட்பாளர் இல்லை. இது அலசலுக்கு தேவையில்லை ஆனால் கட்சி சார்பற்றவர் வெற்றி என்பதால் ஈர்க்கப்பட்டு படித்ததை பகிர்கிறேன்.

இரு கூட்டணியிலும் மோசமான வெற்றி தோல்வி விகிதத்தை பெற்ற காங்கிரசே மாகாகாத்பந்தனை கவிழ்த்தது எனலாம். லாலு பிரசாத்தின் மகன் நாற்காலி கனவை கலைத்ததில் முழுமையான பங்கு காங்கிரசுக்கே உண்டு. 70 தொகுதிகளை வாங்கி அதில் 19இல் மட்டுமே வெற்றி, 30% கூட இல்லை. காங்கிரசு தலைவர் சுற்றுலாவுக்கு போவது போல் சில முறை தான் பரப்புரைக்கு வந்தார் என்கிறார்கள். அரசியலில் கடும் உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்குமா? கோவிட்டை கையாண்டது, வேலைவாய்ப்பு இல்லாதது, ஆட்சியாளர்களுக்கு என்ற எதிரான மனநிலை இருந்ததால் தாம்பாழத்தட்டில் வெற்றலை பாக்கோட வெற்றியை வைத்து மக்கள் கொடுப்பார்கள், நோகாமல் வாங்கிக்கலாம் என்று காங்கி தலைமை எண்ணிவிட்டது போலும். வெற்றியை ருசிக்க நல்ல உழைப்பு வேண்டாமா? லட்டு மாதிரியான வாய்ப்பை தவற விட்டுட்டாங்க. கூட்டணியில் ஒருத்தர் இருவர் மட்டும் உழைத்தால் போதுமா? கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி என்ற முறையில் காங்கிரசின் பரப்புரை பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஆனா பல மாநிலங்களில் கடந்த 6 ஆண்டுகளாக பல தோல்விகள் பெற்றிருந்தும், அப்படி ஏதும் நடக்கவில்லை, தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. காங்கி ஆட்சியை பிடிக்க சிறந்த அரசியல் உத்தி வகுப்பாளரும் அதை செயல்படுத்தும் தலைவராக ராகுல் இருக்க வேண்டும். இங்கு ஏதாவது ஒன்று தவறுகிறதா அல்ல இரண்டுமா என்பது தெரியவில்லை. முருகனை நம்பியோர் கை விடப்படார் என்பது போல் காங்கை நம்பியோர் கை விடப்படுவோர் என்பது புதிய வாசகம்.

பாசக வளர்வதற்கு ஓவைசி மாதிரியான ஆட்கள் தேவை, ஓவைசி வளர்வதற்கு பாசக தேவை. ஓவைசியின் வாக்கு வங்கியை ஆட்டைய போடும் வாய்ப்பு காங்கிரசுக்கு தான் உள்ளது, பாசகவுக்கு இல்லை.  ஓவைசி குடும்பம் சில கல்விக்கூடங்களை ஐதரபாத்தில் நடத்துகிறது. ஆனால் இது வரை அதன் மேல் வருமான வரித்துறை, சிபிஐ, அமுலாக்கத்துறை என்று  எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை வைத்தே பாசகவுக்கும் ஓவைசிக்கும் உள்ள நட்பு இல்லைன்னா நல்ல புரிதல் இருந்திருக்குமென நாம் ஊகிக்கலாம். அரசியல் ஆட்டத்தில் கில்லாடியான அமித், ஓர் உத்தியாக ஓவைசி மகாகாத்பந்தனில் சேருவதை தடுத்திருக்கலாம். மறுக்க முடியாது.

பகுசனுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு பீகாரில் இல்லை,

இப்ப தேசிய சனநாயக கூட்டணிக்கு வாங்க.

லோக் சன சக்தி பட்டியல் இன மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ள கட்சி. அது வரை தேசகியிலிருந்த  லோக் சன சக்தி இத்தேர்தலில் தேசகூயை எதிர்த்து போட்டியிட்டது. ஆனால் டெல்லியில் பாடம் போட்டதுக்குப்பின் பாசகவை எதிர்த்து போட்டியில்லை ஆனால் ஐக்கிய சனதா தளத்தை  எதிர்த்து மட்டும் போட்டி என்றது. அதுக்கு காரணம் நாளுக்கு நாள் அழிந்து  கொண்டிருந்த சன சக்தியானது ஐக்கிய சனதா தளத்தை எதிர்த்தால் மட்டுமே புத்துயர் பெற முடியும் என்ற நிலை. ஏனென்றால் சன சக்தியின் வாக்கு வங்கியில் கை வைப்பது ஐக்கிய சனதா தளம். மேலும் ஐ.சனதா தளத்லிருந்தே சன சக்தி பிரிந்து வந்து உருவாகியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதனால தான் ஐக்கிய சனதா தளமானது பாசகவை விட  அதிக தொகுதிகளில் போட்டியிட்டாலும் பாசகவை விட குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. ஐக்கிய சனதா தளம்  115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களிலும், பாசக 110 இடங்களில் போட்டியிட்டு  74 இடங்களிலும் வென்றது. இராச்டிரிய சனதா தளம் 144 இடங்களில் போட்டியிட்டு  75 இடங்களிலும் வென்றது. 

தேர்தலில் ஆளும் கூட்டணியும் வலுவான எதிர் கட்சி கூட்டணியும் பல கணக்குகளைப் போடும் உத்திகளை வகுக்கும். இரு கூட்டமணியும் மோசம் தான். அது அப்ப எந்த அளவு மோசம் என்ற அளவு மட்டுமே நம்மளவில் மாறுபடும்.  அதே போல் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் சில பல கணக்குகளைப் போடும். மதிமுகவை உடைத்து திமுக கொத்து கொத்தாக மதிமுகவினரை தன்னில் சேர்த்துக்கொண்டதும் தேர்தலின் போது சில தொகுதிகளில் மட்டும் 200-2000 வாக்குகளை கொண்ட பல காளான் கட்சிகளை தன் கூட்டணியில் இணைத்துக்கொளவதும் ஓர் உத்தி தான். அதனால ஒரு கட்சியை எதிர் கட்சியின் பி டீம் என்பது வெல்ல முடியாதவர்களின் ஆதங்கம் அங்கலாய்ப்பு மட்டுமல்லாமல் அந்த சிறு கட்சியின் செல்வாக்கை நம்பகத்தன்மையை குழைக்கும் உதவும் ஓர் உத்தி என மட்டுமே பார்க்கலாம். 

இதிலிருந்து தெரிவது தேசகூயே அதிக பாதிப்பை அடைந்தது காரணம் லோக் சன சக்தி தனித்து போட்டியிட்டதால். ஒப்பீட்டளவில் மகாகாத்பந்தனுக்கு  ஓவைசி, பகுசனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவு, காங்கியாலயே மாகாகாத்பந்தன் வீழ்ந்தது.