வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஜூலை 31, 2019

வழுக்கைகள் SHAVED CANDLESTICK


மேல் வழுக்கை
ஓருலக்கை  ஒழுங்கான மேல் வழுக்கைக்கு மேல் குச்சி இருக்காது. பார்க்க சுத்தியல் மாதிரி தெரியும் ஆனால் இது  சுத்தியல் அல்ல. இதன் உடல் எந்த நிறத்திலும் இருக்கும். வரைபடத்தில் அடிக்கடி தென்படும். நம்பி செயலாற்றக்கூடிய ஒழுங்கு அல்ல. சுத்தியலுக்கான எல்லாம் இதற்கு பொருந்தும்.

இது சுத்தியல் அல்ல என்று எப்படி அறிவது? 

சுத்தியலுக்கு சிறிய உடலும் நீளமான கீழ் குச்சி இருக்கும். இதற்கு பெரிய உடல் இருக்கும். இந்த உடலை விட இரு மடங்கு நீளமுள்ள கீழ் குச்சி இருக்காது.

கீழ் வழுக்கை
ஓருலக்கை  ஒழுங்கான கீழ் வழுக்கைக்கு கீழ்குச்சி இருக்காது. பார்க்க தலைகீழ் சுத்தியல் மாதிரி தெரியும் ஆனால் இது  தலைகீழ் சுத்தியல் அல்ல. இதன் உடல் எந்த நிறத்திலும் இருக்கும். வரைபடத்தில் அடிக்கடி தென்படும். நம்பி செயலாற்றக்கூடிய ஒழுங்கு அல்ல. தலைகீழ் சுத்தியலுக்கான எல்லாம் இதற்கு பொருந்தும்.
இது தலைகீழ் சுத்தியல் அல்ல என்று எப்படி அறிவது? 

தலைகீழ் சுத்தியலுக்கு சிறிய உடலும் நீளமான மேல் குச்சியும் இருக்கும். இதற்கு பெரிய உடல் இருக்கும். இந்த உடலை விட இரு மடங்கு நீளமுள்ள மேல் குச்சி இருக்காது.

இழுத்துபிடிக்கும் பட்டை - Belt Hold

ஓருலக்கை ஒழுங்கான இது போக்கு மாற்றம் ஏற்படும் என்பதை உணர்த்தும்   ஒழுங்காகும். ஓருலக்கை ஒழுங்கு நம்பகமானது அல்ல, அதிலும் இது நம்பத்தகுந்தது அல்ல என்பது என் கருத்து.

இழுத்து பிடிக்கும்  பட்டை - காளை
இதை எப்படி அறிவது?



  1. முதலில் இறங்கு முகம் தொடரனும்
  2. பெரிய வெள்ளை உடல் தோன்றனும். இதன் தொடக்கம் முந்தைய உடலுக்கு கீழே இடைவெளியுடன் இருக்கனும். 
  3. இந்த வெள்ளை உடலுக்கு கீழ் குச்சி இருக்கவே கூடாது.
  4. இதற்கு  மேல் குச்சி இல்லாமலோ மிகச்சிறியதாகவோ இருக்கலாம். அதனால பார்க்க மருபோசு போல தோன்றும்.
அதிக கீழ் இடைவெளியுடன் நீளமான வெள்ளை உடல் தொடங்கினால் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு.

இழுத்து பிடிக்கும்  பட்டை - கரடி
இதை எப்படி அறிவது?


  1. முதலில் ஏறு முகம் தொடரனும்
  2. அடுத்து பெரிய கருப்பு உடல் தோன்றனும். இதன் தொடக்கம் முந்தைய உடலுக்கு மேல் இடைவெளியுடன் இருக்கனும். 
  3. இந்த கருப்பு உடலுக்கு மேல் குச்சி இருக்கவே கூடாது.
  4. இதற்கு  கீழ் குச்சி இல்லாமலோ மிகச்சிறியதாகவோ இருக்கலாம். அதனால பார்க்க மருபோசு போல தோன்றும்.
அதிக மேல் இடைவெளியுடன் நீளமான கருப்பு உடல் தொடங்கினால் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு அதிகம்.

உறுதியான பாய் Mat Hold


மூன்று வழிமுறை  ஒழுங்கு போல இந்த ஒழுங்கில் ஐந்து உலக்கைகள் பங்கு  பெறும். பார்க்க இரண்டும் ஒன்று போல தோன்றும் , இவ்விரண்டுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.

உறுதியான பாய்  - காளை
இது அரிதாக தோன்றும் சிக்கலான ஆனால் நம்பிக்கையுள்ள  ஒழுங்கு. இதை எப்படி அறிவது?


  1. முதலில் ஏறுமுக போக்கு இருக்க வேண்டும்.
  2. அடுத்ததாக  நீளமான வெள்ளை நிறமுடைய உடல் தோன்றவேண்டும்
  3. வெள்ளை உடலுக்கு மேல் இடைவெளி விட்டு சிறிய கருப்பு உடல் தோன்ற வேண்டும்
  4. அக்கருப்பு உடலைத்தொடர்ந்து இரு கருப்பு உடல்கள்  தோன்றனும். கருப்பு உடலின் தொடக்கமும் முடிவும் அதற்கு முந்தைய கருப்பு உடலின்  தொடக்கம், முடிவுக்கு கீழ் இருக்க வேண்டும்.
  5. மூன்று கருப்பு உடல்களுக்கு அடுத்து நீளமான வெள்ளை உடல்  தோன்ற   வேண்டும்.
  6.  இந்த வெள்ளை உடலின் தொடக்கம் முதலில் தோன்றிய வெள்ளை உடலின் தொடக்கம் மற்றும் முடிவை விட அதிகமாக இருக்க வேண்டும். இது மூன்று கருப்பு உடல்களையும் விழுங்குவதாக இருக்க வேண்டும். (படம் பார்க்க)
ஏன் இந்த ஒழுங்கு காளை ஓட்டத்தை தொடரும் என்று நினைக்கறாங்க?

காளைகள் கட்டுப்பாட்டில் சந்தை இருப்பதை நீளமான வெள்ளை உடல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்த நாள் காளை விலையை உயர்த்தி இடைவெளியுடன் தொடங்கும் ஆனால் காளையை கரடி அமுக்கிவிட்டு,   மெதுவாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக கரடிகள் விலையை குறைக்கும். மூன்று நாள்கள் முயன்றும் வெள்ளை உடலின் தொடக்கத்தை எட்ட முடியாதது கரடியின் வலிமையின்மையை காட்டுகிறது.  பின்பு காளை  சீற்றம் கொண்டு மூன்று நாள்கள் உருவான கருப்பு உடல்களை விழுங்கும்  அளவுக்கு பெரிதாக எழும். இது கரடிகள் போக்கு மாற்றம் ஏற்பட செய்த முயற்சி தோல்வியடைந்ததை காட்டுகிறது.


உறுதியான பாய்  - கரடி
இது அரிதாக தோன்றும் சிக்கலான ஆனால் நம்பிக்கையுள்ள  ஒழுங்கு. இதை எப்படி அறிவது?




  1. முதலில் இறங்கு முக போக்கு இருக்க வேண்டும்.
  2. அடுத்ததாக  நீளமான கருப்பு நிறமுடைய உடல் தோன்றவேண்டும்.
  3. கருப்பு உடலுக்கு இடைவெளி  விட்டு கீழே சிறிய வெள்ளை உடல் தொடங்க வேண்டும்.
  4. மேலும் இரு சிறிய வெள்ளை உடல்கள் தோன்ற வேண்டும். இவற்றின் முடிவு முந்தைய நாள் உடலின் முடிவை விட அதிகமாக இருக்கவேண்டும். 
  5. இந்த வெள்ளை உடல்களின் முடிவு முதல் நாள் கருப்பு உடலின் தொடக்கத்தை எட்டாமல்  இருக்க வேண்டும்.
  6. வெள்ளை உடல்களுக்கு பின் தோன்றும் நீளமான கருப்பு உடல் முதலில் தோன்றிய கருப்பு உடலின் முடிவுக்கு கீழாக  முடியும். 


ஏன் இந்த ஒழுங்கு கரடி ஓட்டத்தை தொடரும் என்று நினைக்கறாங்க?

கரடிகள் கட்டுப்பாட்டில் சந்தை இருப்பதை நீளமான கருப்பு உடல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்த நாள் கரடி விலையை மேலும் குறைத்து கீழ்  இடைவெளியுடன் தொடங்கும் ஆனால் கரடியை காளை அமுக்கிவிட்டு,  காளைகள் மெதுவாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக  விலையை அதிகரிக்கும். மூன்று நாள்கள் முயன்றும் கருப்பு உடலின் தொடக்கத்தை எட்ட முடியாதது காளையின் வலிமையின்மையை காட்டுகிறது.  பின்பு கரடி  சீற்றம் கொண்டு  மூன்று நாள்கள் காளைகள் உருவாக்கிய விலை ஏற்றத்தை முறியடித்து இதற்கு முன் தோன்றிய கரடியின் முடிவை விட கீழாக  முடியும்.  இது காளைகள் போக்கு மாற்றம் ஏற்பட செய்த முயற்சி தோல்வியடைந்ததை காட்டுகிறது.