வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஜூலை 19, 2019

மூன்று வெள்ளை படை வீரர்கள் ( three white soldiers )

இது மூவுலக்கை காளை ஒழுங்காகும். வரிசையா மூன்று  நாள்கள் வெள்ளை உடல் தோன்றும். எல்லா காளை ஒழுங்கைப்போலவே இது இறங்கு முக போக்கில் தோன்றும். இது அரிதாகவே தோன்றும் ஒழுங்கு. 

ஏன் வெள்ளை படை வீரன்  என்றால் விலை ஏற்றத்தை காட்டும் வெள்ளை நிறத்துக்காக வெள்ளைக்காரன உசத்தி பேசனும் என்பதற்காக அல்ல.

எப்படி இவ்வொழுங்கு அமையும்?

  1. இறங்க முக போக்கு இருக்கனும் அதன்  கடைசி உலக்கையின் உடலின் நிறம் வெள்ளையாக இருக்கும் இதை முதல் உடல் என்போம்.. 
  2. அடுத்த நாளின் உடலும் வெள்ளையாக இருக்க வேண்டும். இந்த உடலின் விலை தொடக்கமும்   முடிவும் முந்தைய நாள் உடலின் விலை தொடக்கம் & முடிவை விட அதிகமாக இருக்க வேண்டும். 
  3. அதேபோல் மூன்றாம் நாளின் (மூன்றாவது வெள்ளை உடல்) உடலின் விலை தொடக்கமும்  முடிவும் முந்தைய நாள் உடலின் விலை தொடக்கம் & முடிவை விட அதிகமாக இருக்க வேண்டும். 
  4. பொதுவாக  இரண்டாம் மூன்றாம் நாள்களின் உடல்கள் முந்தை உடலின் மையப்பகுதியில் இருந்து தொடங்கும்.

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்


  •  முதல் நாள் உடலை விட பெரிதாக (நீளமாக) இரண்டாம் நாள் உடல் இருக்க வேண்டும்
  • இரண்டாம் நாள் உடலும் மூன்றாம் நாள் உடலும் கிட்டத்தட்ட ஒரே நீளத்தில் இருக்க வேண்டும்.
  • குச்சிகள் மிக சிறிதாகவோ இல்லாமலோ இருக்க வேண்டும்
  • தெளிவான இறங்கு முக போக்கில் இந்த ஒழுங்கு தோன்ற வேண்டும்.
  • உடல்களின் நீளம் அதிகமாக இருப்பது இதன் வீரியத்தை காட்டும்   அறிகுறி.
  • வாங்கல் விற்றல் அதிகமாக நடந்திருக்க  வேண்டும்.


ஒழுங்கைப்பற்றிய சில குறிப்புகள்

**  மூன்றாம் நாள் உடலின் நீளம் மற்ற இரு நாள்களை விட சிறிதாக இருந்தால் தவிர்ப்பது நலம்.
** இறங்கு முகத்தில் வெள்ளை உடலுக்கு பதிலாக கருப்பு உடல் (மூன்று காகங்கள்) தோன்றினால் விலை மேலும் அதல பாதாளத்திற்கு போகும் என்பதற்கான அறிகுறியாகும்.
 **  நெடிய இறங்கு முக போக்கின் பின்  மூன்று  வெள்ளை படை வீரர்கள் தோன்றுவது சில மாதங்கள் பங்கை வைத்திருந்து விற்பவர்களுக்கு ஏற்றது.

ஏன் இந்த ஒழுங்கு  வேலைசெய்யுமென்று   நினைக்கிறார்கள்?
நெடிய இறங்கு முக போக்கின் போது கரடிகள் சோர்வடைந்து காளைகள் வீரியத்துடன் விலையை முன்னேற்றும். தொடர்ந்து மூன்று நாள்கள் விலை ஏறுவது சந்தையின் போக்கு மாற்றம் அடைகிறது  என்பதை உணர்த்தும் அறிகுறி. 

திங்கள், ஜூலை 08, 2019

டோஜி

டோஜி
தொடக்க விலையும் முடிவு விலையும் ஒன்றாக இருந்தால் அது டோஜி எனப்படும். போக்கு மாற்றத்தை குறிக்கும் குறிப்பிடத்தக்க ஒழுங்காகும்.


தொடக்க விலையும் முடிவு விலையும் ஒன்றாக இல்லாமல் மிக நெருக்கமாக இருந்தாலும் அது டோஜி எனப்படும் அதை நெருங்கிய டோஜி என்பர். எது நெருங்கிய டோஜி என்பது அவரவர் பார்க்கும் பார்வையை பொருத்தது இதை வரையறுக்க கடுமையான விதிகள் இல்லை. ஆனால் சமீபத்திய சந்தையின் செயல்பாட்டை வைத்து இதை அறிய முற்படுவது ஒரு வழிமுறை. தொடர்ச்சியாக நிறைய சிறிய உடல்கள் இருந்தால் நெருங்கிய டோஜி குறிப்பிடத்தக்கதாக பார்க்கப் படாது. சந்தையானது முக்கியமான திருப்புமுனை புள்ளியில் இருந்தாலோ காளை அல்லது கரடியின் ஓட்டம் முற்றிய கட்டத்தில் இருந்தாலோ மற்ற நுட்ப காட்டிகள் எச்சரிக்கை சமிக்கை கொடுத்தாலோ நெருங்கிய டோஜியை டோஜி எனக்கொள்ளலாம்.
டோஜி போக்கு மாற்றம் நடைபெறப்போவதை குறிக்கும் சமிக்கையாகும். டோஜி குறிக்கும் போக்கு மாற்றம் நடைபெறாமல் போனாலும் தவறான சமிக்கை படி நடப்பது உண்மையான சமிக்கை படி நடக்காமல் இருப்பதை விட மேலானதாகும்.

போக்கு மாற்றம் நடைபெறுவதும் அதன் வலிமையும் அடுத்த நாள் உடலின் நிறத்தையும் நீளத்தையும் பொருத்தே உறுதிபடுத்தப்படும். சந்தையில் நிறைய டோஜிக்கள் உருவாகாவிட்டால் மட்டுமே புதிதாக உருவாகும் டோஜி சிறப்பானதாக கருதப்படும். ஒரு நாளின் 30 நிமிட வரைபடத்தை பார்த்தால் அதில் நிறைய டோஜிக்களும் நெருங்கிய டோஜிக்களும் தென்படும் அதனாலேயே மெழுகுவர்த்தி அலசல் ஒரு நாளின் 30 நிமிட வரைபடத்தை பார்த்து வர்த்தகம் புரிபவர்களுக்கு ஏற்றதல்ல.

*தெளிவான  இறங்கு முக போக்கிலோ ஏறு முக போக்கிலோ டோஜி  ஏற்பட்டால் போக்கு மாற்றம் நடைபெற வாய்ப்பு.
*டோஜிக்கு முன் நீளமான உடல் தோன்றினால் அந்த நிற உடல் முடிவுக்கு வருது என்று பொருள்.
*ஏறு முக போக்கில் டோஜிக்கு பின் நீளமான கருப்பு உடல் தோன்றினால் ஏறுமுக போக்கு முடிவுக்கு வந்ததை அறியலாம். இதே போல் இறங்கு முக போக்கில் டோஜிக்கு பின் நீளமான வெள்ளை உடல் தோன்றினால் இறங்கு முக போக்கு முடிவுக்கு வந்ததை அறியலாம்.

உச்சியில் டோஜி

டோஜி ஏறுமுகத்தின் உச்சியில் இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படப்போவதை அறிவிக்கும்  எச்சரிக்கை மணியாக விளங்கும். பொதுவாக ஏறுமுக போக்கில் நீளமான வெள்ளை  உடல் உலக்கைக்கு பின் டோஜி தோன்றினால் போக்கு மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம். டோஜி முதலீட்டாளர்களின் குழப்பமான மனநிலையை காட்டுவதால் அது ஏறுமுக போக்கில் மாற்றத்தை உருவாக்கும் என நம்பப்படுகிறது.  காளைகளின்  மனக்குழப்பம் ஏறுமுக போக்கை கட்டுக்குள் வைத்திருக்க உதவாது,  திட நம்பிக்கை அதற்கு வேண்டும். ஏறுமுக போக்கு தொடர்ந்தாலோ அதிக வாங்கல் நிகழ்ந்தாலோ டோஜி காளைகள் பக்கம் சாய்ந்து விட்டத்தை அறியலாம்.

இதே போல் டோஜி இறங்கு முகத்திலும் போக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்  வலிமை  உடையது.  டோஜிக்களில் காளைகளுடைய வலுவும் கரடிகளின் வலுவும் சமநிலையில் இருக்கும் இதுவும் காரணமாக இருக்கலாம். ஆனால் உச்சியில் ஏற்படும் ஏறுமுக போக்கு மாற்றத்தை விட இறக்கு முக போக்கு மாற்றத்தை உறுதிபடுத்த அதிக சமிக்கைகள் வேண்டும். சமிக்கைகள் என்றால் பல காட்டிகள் என்று பொருள்.

ஞாயிறு, ஜூலை 07, 2019

புகழ்பெற்ற மெழுவர்த்தி ஒழுங்குகள்

இதுவரை எழுதிய மெழுவர்த்தி ஒழுங்குகளே புகழ்பெற்றவை. மேலும் சில மெழுவர்த்தி ஒழுங்குகள் இருக்கு அதை இனி எழுதுகிறேன்.

எழுத்தில் குறையிருந்தாலோ,  கலைச்சொல்லில் மாற்று கருத்து இருந்தாலோ  தெரிவிக்கவும்.  ஓர்மையாக, எங்கும் கலைச்சொல்லை ஒரே மாதிரி பயன்படுத்துவது சிறப்பு, மக்களிடம் பரவ எளிதாகும்.

காளை ஒழுங்குகள்
1. சுத்தியல் (Hammer) 
2. தலைகீழ் சுத்தியல் (inverted hammer)
3. காளை விழுங்கி (Bullish Engulfing)
4. காளை புள்ளத்தாச்சி(Bullish Harami)
5. துளை (Piercing)
6. காலையில் விண்மீன் (Morning star)

கரடி ஒழுங்குகள்
1. தொங்கும் மனிதன் (Hanging man)
2. விழும் விண்மீன் (Shooting star)
3. கரடி விழுங்கி (Bearish Engulfing)
4. கரடி புள்ளத்தாச்சி (Bearish Harami)
5. கார்முகில் (Black cloud)
6. மாலையில் விண்மீன் (evening star)

இது தவிர டோஜி என்று ஒன்று உள்ளது அடுத்து அதை எழுதுகிறேன்.  மெழுவர்த்தி ஒழுங்கு  என்றாலே சிலருக்கு டோஜி தான் நினைவுக்கு வரும்.