வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, அக்டோபர் 08, 2017

இளமை திரும்பி வர இஞ்சி சுக்கு கடுக்காய்

குடு குடுத்த கிழவனுக்கும் இளமை ஆடி வர ... இஞ்சி  சுக்கு  கடுக்காய்  ஒரு மண்டலம் தின்னவும் 
கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய் மண்டலம் 
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 
நடப்பவனும் கோலை வீசி குலாவி 

நடப்பானே ...

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு-
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு - -------- சுக்கு 
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி 
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -------- கடுக்காய் 

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை  நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் 

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்

நன்றி !

அரவின் தீபன்...

http://siththamaruththuvavilakkam.blogspot.in/2012/08/blog-post.html

ஞாயிறு, அக்டோபர் 01, 2017

MRI -ஸ்கேன் என்னும் மின்காந்த ஒத்ததிர்வுப் படமாக்கி

அறிவியலின் வழியாக அளப்பரிய பயன்களை மட்டும் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், அதன் அடிப்படைகளைப் பற்றி என்றேனும் அறிந்துகொள்ள முயன்றிருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லைதான். அறிவியற்கண்டுபிடிப்புகள் யாவையும் அறிவியலாளர்களின் நோக்கற்கரிய நோக்கால், நுண்ணறிவால் விளைபயனை உலகிற்கு கொடுக்கப்பட்ட கொடைகள். அதுவும் இதுபோன்ற நோயுணர்த்தும் கருவிகளைக் (diagnostic tools) கண்டுபிடித்தவர்களைத் தெய்வங்கள் என்று சொன்னாலும் மிகையாக இருக்காது. இந்தக் கண்டுபிடிப்புகள், கோபுரத்தையும், குடிசையையும் ஒன்றெனக் கருதும் மழையைப்போல, கோடிகளில் புரள்பவரையு ம், அடுத்தவேளை உணவுக்காகப் போராடும் ஏழையையும் ஒன்றெனக்கருதிப் பயனளிக்க வல்லவை. சரி MRI (Magnetic Resonance Imaging) என்றால் என்ன? அதன் அடிப்படைகள், பயன்கள், வேதியியலின் பங்கு என்ன என்பது பற்றியும் தமிழ்கூறும் நல்லுலகத்துக்குப் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். தமிழ் இளநிலை -முதுநிலை அறிவியலாளர்களுக்கும், அறிவியல் விரும்பிகளுக்கும், பயனுள்ளதாக இருக்குமென்றும் நம்புகிறேன்.
நோயுணர்த்திகள் (Diagnostic Tools)
1895 களுக்கு முன்னம், உடலில் உள்ளுறுப்புகளில் ஏதேனும் பழுது என்றால், உடலை அறுத்துத்தான் கண்டறியமுடியும். வெறும் அனுமானத்தில், அவதானிப்பில், பட்டறிவில் தான் மருத்துவம் செய்தார்களேயொழிய, உடலின் உள்ளே, இன்ன இடத்தில், இன்னது ஏற்பட்டிருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லும் முறையெல்லாம் சாத்தியமாகி இருக்கவில்லை. 1895 களில் இராயின்டஜன் என்பவர், அதிவேக மின்காந்த அலைகளை, கடினமான உலோகப்பரப்பில் மோதவிட்டபோது, ஒருவகையான அதிக ஆற்றலுடைய, அதேசமயம் அதன் பண்புகள் இன்னதுதான் என்று முழுமையாக அறுதியிட முடியாத, ஒருவகைக் கதிர்கள் வெளியாவதைக் கண்டுபிடித்தார். அவ்வாறு, முழுமையாக கண்டுணரமுடியாத, அவ்வகைக் கதிர்வீச்சுக்கு "X" வகை, அதாவது unknown (X) rays என்று பெயரிட்டார். இந்த X-Ray கதிர்வீச்சானது, சதையை ஊடுருவிச் செல்லும். ஆனால் எலும்பை ஊடுருவமுடியாமல் எதிரொளித்துத் திரும்பிவந்துவிடும். அந்த எதிரொளிப்பைத்தான் நாம் X-Ray படமாக மாற்றிக் கொள்கிறோம். ஆகவே X-Ray தான் முதன்முதலாக மனித உடலுக்குள் நடந்திருக்கும் சீர்கேட்டை அல்லது எலும்பு முறிவை, கத்தியின்றி இரத்தமின்றி தெளிவாகக்காட்டிய கருவி ஆகும். இதன்பின்னர்தான், அதே மின்காந்த அலைகளை மூலமாகக் கொண்ட Computer Tomography (CT-Scan), நுண்ஒலியலைகளை (அதாவது நுண்ணிய சத்தத்தை) உடலுக்குள் அனுப்பி உள்ளுறுப்புகளில் மோதவிட்டு, எதிரொலியாகத் திரும்புவதைக் கணினியில் படமாக்கிக் காட்டும் கருவியான Ultrasound Scan, அணுக்கரு கதிர்வீச்சைக் (Nuclear Energy) கொண்டு உருவாக்கப்படும் Positran Emission Tomography (PET) என்று படிப்படியாக நோயுணர்த்தும் நுட்பங்கள் பெருவுருவாக வளர்ந்து நிற்கின்றன. அந்தவரிசையில் காந்தஅலைகளை, ரேடியோ அலைகளுடன் சேர்த்து உடலுக்குள் அனுப்பி உள்ளுறுப்புகளைத் தெள்ளறப் படமாக்குவதுதான் MRI-Scanning முறை ஆகும். இதைக் கண்டுபிடித்தவர்கள் Paul Lauterbur மற்றும் Sir Peter Mansfield (நோபல் பரிசும் பெற்றனர்)
தண்ணீர் தண்ணீர்!!
உண்மையிலேயே MRI கருவியின் முதன்மையான வேலை என்னவென்றால் நம் உடலுக்குள் இருக்கும் தண்ணீரைப் படமெடுப்பதுதான். தண்ணீரைப் படமெடுப்பதென்றால்?? இவ்வுலகம் நீராலானது என்பதைப்போல, நம் உடலும் 70% தண்ணீரால் ஆனதுதான். தண்ணீரென்பது இரண்டு ஹைட்ரஜன்கள், ஒரு ஆக்சிஜன் பிணைந்துதான் H2O உருவாகிறது. MRI க்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஏனென்றால் ஆக்சிஜன் காந்தவிசைக்குக் கட்டுப்படுவதில்லை. ஆனால் ஹைட்ரஜன் அணுவானது மந்திரவாதிக்குக் கட்டுப்படும் குட்டிச்சாத்தானைப்போல, காந்தவிசைக்குக் கட்டுப்பட்டு தானும் ஒரு காந்தமாக மாறிவிடுகிறது.
ஹைட்ரஜன் காந்தமாகுமா?
உலகிலிதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 118 தனிமங்களுக்கெல்லாம் முதன்மையானதாகவும், மிகமிகமிகச் சிறிய அணுவாகவும் இருப்பதுதான் இந்த ஹைட்ரஜன். ஹைட்ரஜன் அணுவில் ஒரு எலக்ட்ரானும் (எதிர்மின்துகள்-Negatively charged), ஒரேயொரு புரோட்டானும் (நேர்மின்துகள்-Positively charged) இருக்கின்றன. "வார்டன் ன்னா அடிப்போம்" ங்கற வடிவேலு காமெடி யைப்போல, எந்தவொரு மின்னேற்றம் பெற்ற (Charged species) துகளை காந்தப்புலத்தில் வைத்தாலும் அது தன்னைத்தானே காந்தவிசையின் அச்சை மையமாகக் கொண்டு சுழலும். அதாவது நேர்மின்னேற்றம் (Positively charged) பெற்ற புரோட்டானையோ அல்லது எதிமின்னேற்றம் (Negatively charged) பெற்ற எலக்ட்ரானையோ காந்தப்புலத்தில் வைத்தால் அது தன்னைத்தானே சுழலத் தொடங்கும். அப்படியானால், மேற்சொன்ன இரண்டு வகையான துகள்களையும் பெற்றிருக்கிற ஹைட்ரஜனும் சுழலுமல்லவா? ஆம்!! காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு ஹைட்ரஜனும் தன்னைத்தானேச் சுழலும். அவ்வாறு சுழலும்போது தன்னைச்சுற்றி ஒரு காந்தப்புலத்தையும் உருவாக்கிக் கொள்கிறது. ஹைட்ரஜன் அணுவானது, ஒரே ஒரு நொடிக்குள் 63,000,000 முறைகள் தன்னைத்தானேச் சுழன்று விடுகிறது.
மனிதவுடலுக்குள் எண்ணிலடங்காக் காந்தங்கள்
மனித உடலுக்குள் 70% தண்ணீர் இருக்கிறதென்பதால் கோடானுகோடி நீர் மூலக்கூறுகள் இருக்குமல்லவா? அப்படியென்றால்
மனித உடலை காந்தப்புலத்துக்குள் கொண்டுசெல்லும்போது, ஒரு நீர் மூலக்கூறுக்கு இரண்டு ஹைட்ரஜன் காந்தங்கள் என்ற கணக்கில், உடலில் இருக்கும் கோடானுகோடி நீர் மூலக்கூறுகளின் இருமடங்கு ஹைட்ரஜன் காந்தங்கள் உடலுக்குள் உருவாகின்றன. அத்தனை ஹைட்ரஜன் காந்தங்களும், நம் உடலுக்குள் காந்தவிசை செலுத்தப்படும் திசையையே அச்சாகக் கொண்டுத் தன்னைத்தானேச் சுழல்கின்றன. அண்டத்தின் விசையில், நாமிருக்கும் இந்தப் புவிப்பந்தும் இப்படித்தான் சுழல்கிறது, புவிகாந்தப்புலமும் உருவாகிறது.
உடலென்பது ஒன்றானாலும், பல்வேறுபட்ட உள்ளுறுப்புகளால் யாக்கப்பட்டது அல்லவா? அதுபோல நீர் மூலக்கூறின் வடிவம் (H2O) ஒன்றானாலும், அதன் வேகம், அடர்த்தி, சுற்றுப்புறம் போன்றவை உறுப்புக்கு உறுப்பு மாறுபடும். ஆகவே அதன் சுழலும் வேகமும், அதனால் உருவாகும் காந்தப்புலத்தின் தன்மையும் மாறுபடுகின்றன. இதயத்திற்குச் செல்லும் இரத்தக்குழாய் ஒன்றை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், புரதங்கள், நுண்தாதுக்கள், இன்னபிற என்று யாவும் தண்ணீரில் கலந்துதான் இரத்தம் உருவாகிறது. இரத்தக் குழாயில் எந்தவொரு தடையுமில்லாமல் இருந்தால் ஹைட்ரஜன் அணுக்களின் சுழற்சியிலோ, உருவாகும் காந்தப்புலத்திலோ எவ்வித மாறுதலும் இருக்காது. ஆனால் அதன் வழியில் ஏதேனுமொரு அடைப்போ, துளையோ அல்லது வேறு ஏதேனுமொரு தடையோ இருந்தால் அவ்விடத்தில் (நீர்மூலக்கூறில் இருக்கும்) ஹைட்ரஜனின்
சுழற்சியில், காந்தப்புலத்தில் மாற்றமிருக்கும். அந்த மாற்றத்தைப் படமாக்கி உணர்த்துகின்ற கருவிதான் MRI.
MRI செயல்படும் முறை
வட்டவடிவமாக இருக்கும் MRI கருவிக்குள் நம்மைக் கொண்டுசென்று உடலின் எல்லாப்பகுதிக்கும் சரிசமானமாகக் காந்தவிசையைச் செலுத்துவார்கள். அப்போது நம் உடலிலுள்ள அத்தனை நீர் மூலக்கூறுகளின் ஹைட்ரஜன்களும் காந்தமாகிச் சுழலத் தொடங்குகின்றன. பெரும்பாலும் MRI கருவிகளில் 1.5 முதல் 3.0 Tesla அளவிலான காந்தவிசை மனித உடலுக்கு கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட புவியின் காந்தப்புலத்தின் விசையைவிட 50000 மடங்கு அதிகம். ஒரு ஹைட்ரஜன் அணுவை நொடிக்கு சராசரியாக 63,000,000 முறைகள் சுழல வைக்கவே இவ்வளவு மிகையான காந்தப்புலவிசை கொடுக்கப்படுகிறது. கூடவே ரேடியோ அலைகளையும் 63.9 MHz நம் உடலுக்குள்ளே செலுத்தப்படுகிறது. எதற்காக என்று தெரிந்துகொள்ள ஒரு சுழல்கின்ற பம்பரத்தைக் கற்பனை செய்துகொள்வோம். சாட்டையில் சுழற்றிவிட்ட பம்பரம் மிகவேகமாகச் சுழலும்போது, தன்னைத்தானே சுழன்றுகொண்டே பம்பரத்தின் தலைப்பகுதியும் சற்று வெளிப்பக்கமாகச் சாய்ந்து சுற்றுவதைப் பார்க்கலாம். அதையேதான் ஹைட்ரஜனும் அதிவேகத்தில் சுழலும்போது பம்பரத்தைப்போலவே காந்தவிசை அச்சுக்கு வெளிப்பக்கமாகச் சாய்ந்து சுற்றுகிறது. சாட்டையிலிருந்து கொடுக்கப்படும் ஆற்றலால் பம்பரம் சுழன்றுகொண்டே சுற்றுவதைப்போல, ஹைட்ரஜன் சுழன்றுகொண்டே வெளிப்பக்கம் சாய்ந்து சுற்றுவதற்கு ரேடியோ அலை ஆற்றல் (63,000,000 rotations per second = 63.9 MegaHertz) தேவைப்படுகிறது. அதாவது நிலையான காந்தப்புலத்தில் மனித உடலை வைத்துவிட்டு, படிப்படியாக ரேடியோ அலைகளின் செறிவைக் கூட்டிக்கொண்டே சென்று ஹைட்ரஜன்களின் சுழற்சியை, சுற்றும் ஆற்றலை, காந்தப்புலத்தைக் கணக்கிடுவதன் மூலம் உடலில் மாறுபாடு அடைந்த பகுதியை படமாக்கிக் காண்பிப்பதைத்தான் காந்தவிசை ஒத்ததிர்வு படமாக்கி ஒருசில நிமிடங்களில் கத்தியின்றி, இரத்தமின்றிச் செய்துவிடுகிறது.
MRI தொழில்நுட்பத்தில் வேதியியலின் பங்கு
இயற்பியல், பொறியியல், உயிரியல், மருந்தியல் என்று எல்லாத் துறைகளும் சேர்ந்து உருவாக்கிய படைப்புதான் இந்த MRI கருவி ஆகும். ஆயினும் வேதியியல் துணைசெய்யவில்லை என்றால் நான் மேலே விளக்கியதைப்போல உடல் உள்ளுறுப்புகளைப் படமாக்கினாலும் அவ்வளவு தெள்ளத்தெளிவாக இருக்காது. காரணம் மற்ற அணுக்களைவிட ஹைட்ரஜனின் காந்தமாகும் பண்பு சற்று குறைவு என்பதால்தான். அதற்காக அதிக காந்தமாகும் திறமுள்ள கடோலினியம் என்னும் உலோகத்தாலான சேர்மத்தை MRI படமெடுப்பதற்கு முன்னால் நம் உடலுக்குள் செலுத்தப்படும். காரணம் கடோலினியம் சிறந்த காந்தமாக்கியாகச் செயல்படுவதால் உடலிலுள்ள எல்லாப் பகுதியிலிருக்கும் (நீர்) ஹைட்ரஜன்களை மிகவேகமாக காந்தமாக்கிவிடும். தடையுள்ள பகுதியிலிருக்கும் தண்ணீர் ஹைட்ரஜனும் காந்தமாகிவிடுவதால் எளிதில் அவற்றின் சுழற்சி, ஆற்றல், காந்தப்புல வேறுபாடுகளைக் கொண்டு கணினி நமக்குப் படமாக மாற்றிக் காட்டிவிடுகிறது. ஆகவே தான் இதுபோன்ற காந்தமாக்கும் மற்ற உலோகங்களான தாமிரம், இரும்பு, மாங்கனீசு போன்றவைகளாலான சேர்மங்களை MRI Contrasting Agents (MRI படத்தெளிவாக்கி) ஆகப் பயன்படுத்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன (என்னுடையது உட்பட).
முனைவர் செ. அன்புச்செல்வன் .
01/10/2017 (4.00 am)
https://www.facebook.com/sanbu.selvan.7/posts/1593441640714654 

வியாழன், செப்டம்பர் 07, 2017

அஸ்வின்களும் அனிதாக்களும்!- சு. வெங்கடேசன்

இன்றைய தீக்கதிரில், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள " அஸ்வின்களும் அனிதாக்களும்" கட்டுரை, மிகவும் முக்கியமானது. அவசியம் படிக்கவேண்டியது.
ஒடுக்கப்படுபவர்களின் தொடர் சங்கிலியில். அனிதா ஒரு கண்ணி.....
அஸ்வின்களும் அனிதாக்களும்!- சு. வெங்கடேசன்
அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதாவை நாம் அறிவோம். அனிதாவின் மரணத்தை புரிந்து கொள்ள அஸ்வினை நாம் அறிந்து கொள்வது அவசியம். மருத்துவம் என்ற அறிவுத்துறை சார்ந்த செயல்பாட்டுக்காகத்தான் அஸ்வின்களும் அனிதாக்களும் பலியாக்கப்பட்டார்கள்.
அஸ்வின் அனிதாவைப்போல சுமைப்பணியாளர் வீட்டிலே பிறந்தவன் அல்ல, இன்னும் சொல்லப்போனால் அஸ்வின் மனிதனே அல்ல, அவன் கடவுள். அப்படித்தான் அழைக்கப்படுகிறான். தெய்வத்தோடு தெய்வமாக வைத்து போற்றப்பட்ட ஒருவனுக்கும், ஏழை மாணவி அனிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருவரும் மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். அதன் பொருட்டே பலியாக்கப்பட்டவர்கள். ரிக்வேதத்தைப் பாடிய ஆதிக்கவிஞர்கள் அஸ்வினை பெரிதும் போற்றுகிறார்கள். காரணம் அவனது மருத்துவ ஆற்றல். அவன் மருத்துவம் பார்ப்பதால் மனிதனின் அன்பைப்பெற்றவனாக இருக்கிறான். அதனால் தேவர்களுக்கும் மருத்துவம் பார்ப்பவனாக போற்றப்படுகிறான். பின்னர் தேவர்களின் மருத்துவராகவும் வர்ணிக்கப்படுகிறான்.
இந்த ரிக்வேத கதையின் தொடர்ச்சி தான் மகாபாரதத்தில் மருத்துவ ஞானம் பெற்றவர்களான நகுலனும், சகாதேவனும் அஸ்வினி புத்திரர்கள் என்று அழைக்கப்படுவது.ஆனால் அஸ்வினுக்கு இந்த நல்ல பெயர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. நால்வர்ண கோட்பாடு வலிமை பெற்றதும் அதன் தாக்குதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களும் தப்பவில்லை.
வேதத்தில் மிகப்பிந்தியதான யஜூர்வேதம் சொல்கிறது. ”பிராமணர்கள் மருத்துவத்தில் ஈடுபடலாகாது”. ஏனென்றால் மருத்துவன் புனிதமற்றவன், யாகத்துக்கு தகுதியற்றவன். எனவே பிராமணன் அத்தொழிலினை செய்யக் கூடாது எனச்சொல்லுகிறது.
மருத்துவன் ஏன் புனிதமற்றவன்? என்று கேட்டால் அதற்கும் யஜூர்வேதம் சொல்லுகிறது, மருத்துவத் தொழில் எல்லோருடனும் பழகுகிற, எல்லோரையும் சிகிச்சையின் பொருட்டு தொட்டுப்புழங்குகிற தொழில். அது வர்ணக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதால் மருத்துவனை தனது கோட்பாட்டின் படி புனிதமற்றவன் என்று முடிவு கட்டுகிறது.
இங்கு தான் புதிய பிரச்சனையை அது சந்திக்கிறது. அப்படியென்றால் தம் முன்னோர்கள் தேவர்களிலே மருத்துவ ஆற்றல் கொண்ட தேவராக அஸ்வினை சொல்லியுள்ளனரே. அவரை என்ன செய்வது? மருத்துவத் தொழிலே கேவலமானது, தீட்டானது என்ற முடிவுக்கு வந்த பின் அத்தொழிலை தேவர்களில் ஒருவன் எப்படி பார்க்க முடியும்? இந்த கேள்விகளோடு அஸ்வினை அணுகுகிற யஜூர்வேதம் வெளிப்படையாக அஸ்வின் மீது தாக்குதல் தொடுக்கிறது. அத்தாக்குதலின் உச்சமாக அது அறிவிக்கிறது “தனது மருத்துவத் தொழில் காரணமாக அஸ்வின் தேவர்களில் ஒருவன் என்ற தகுதியை இழக்கிறான்”. அதன்பின் அஸ்வின் அழித்தொழிக்கப்பட்டு விடுகிறான்.மருத்துவம் பார்க்கும் மனிதனின் மீதும், தெய்வத்தின் மீதும் இவ்வளவு கடுமையான தாக்குதலை தொடுப்பதற்கான காரணத்தை யஜூர் வேதம் சொல்லுகிறது. “எல்லாவகையான மனிதர்களும் மருத்துவர்களை நோக்கி ஓடுகிறார்கள்”. அதுதான் இந்தக் கோபத்தின் அடிப்படை.
சரி. இதற்காக ஏன் யஜூர் வேதாந்திகள் மருத்துவர்களின் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என்று கேட்டால், மருத்துவன் உடலை மையப்படுத்தி தனது பகுத்தறிவால் வினை புரிகிறான். பாவ புண்ணியம், அதிர்ஷ்டம் துரதிஷ்டம், மாயாவாதம் என எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டு கண்ணுக்கு முன்னால் இரத்தம் வலியும் காயத்துக்கு மருந்துகட்டி சரிப்படுத்துகிறான்.
உலகம் நான், அண்டசராசரம் நான், நீயும் நான், அவனும் நான். புண்ணும் நான் மருந்தும் நான் என்று வியாக்கியானம் பேசுவோருக்கும் எதிராகத்தான் மருத்துவ அறிவியலின் ஒவ்வொரு செயலும் இருந்தது. எனவே அவ் அறிவியலை ஒழிப்பதே அடுத்து வந்த மதவாதிகளின் தலையாய கடமையாக இருந்தது.
இந்திய வரலாற்றில் மருத்துவர்களின் மீதும், மருத்துவ அறிவின் மீதும் கொடூரமான தாக்குதல் அதன் பின் அரங்கேறத்துவங்கின. தர்மச் சட்டங்கள் என்ற பெயரில் எழுதப்பட்ட எல்லா சட்டங்களும் மருத்துவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தையே கொண்டிருந்தது.
அபஸ்தாம்பர் எழுதிய சட்ட நூல் “மருத்துவன் அல்லது அறுவையாளன் தருகிற உணவு அருவருக்கத்தக்கது, அதனை உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் ஏற்கலாகாது” என்று கூறுகிறது. வசிஷ்டரின் சட்ட நூலோ “மருத்துவன் தரும் உணவை ஏற்பது விலைமகளீர் தரும் உணவைப் போல அசுத்தமானது” என்கிறார். இந்தப் போக்கின் உச்சத்தை மநுவின் சட்டநூலிலே பார்க்கலாம். மநு சொல்கிறான் “மருத்துவர்கள் தரும் உணவு புண்ணிலிருந்து வரும் சீழுக்குச் சமம்”.
இந்த தர்மச்சட்டங்களே இந்தியாவில் அதிகாரத்தில் இருந்தவர்களால் பெரும்பாலான காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான் ஆதியில் பெரும் அறிவுத்துறையாக வளர்ந்த இந்திய மருத்துவத் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனாலும் இதற்கு எதிரான தத்துவ மரபு கொண்டவர்களும் எளிதில் வீழ்ந்துவிடவில்லை.
ஏனென்றால் வலியால் துடிப்பவன் மருந்தைத் தேடித்தான் ஓடுவானே தவிர மந்திரத்தை தேடியல்ல. எனவே மருத்துவனை நோக்கி மக்கள் ஓடியபடியேதான் இருந்தனர். மருத்துவ அறிவு மதவாதிகளுக்கு எதிராக தன்னை தக்கவைக்கிற போராட்டத்தை நடத்தியபடியே இருந்தது.
இந்தியாவின் தென்புலத்தில் தமிழர்மரபு சுமார் அறுநூறு ஆண்டு பரப்பினைக் கொண்ட சங்ககாலம் முழுவதும் இயற்கையை புரிந்து கொள்ளவும், அதன் ஆற்றலை கற்றுக் கொள்ளவும், இயற்கைக்கும் மனித வாழ்வுக்குமான உயிரோட்டமான தொடர்பை விளங்கிக் கொள்ளவுமான தத்துவமரபை வளர்த்தெடுத்து வைத்திருந்தது.
அதனால்தான் நோய்நாடும் முன் நோயின் முதன்மை காரணத்தை கண்டறியும் பகுத்தறிவு இங்கு வளர்த்தெடுக்கப்பட்டது. மருந்தனெப்படுவது வேண்டாவாம் என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கத்துவங்கியது. தனக்கென்ற தனித்துவமான மருத்துவ முறையை அது உருவாக்கிக் கொண்டது. பல்லாயிரம் செடி கொடிகளின் பேரறிவை தனது இலக்கியம் எங்கும் அது பதிவு செய்துவைத்தது.
ஆனால் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் வைதீகக்கோட்பாடே தமிழக அரசியல் அதிகாரத்தில் கோலோச்சியது. அது பாரம்பரிய மருத்துவ அறிவின் மீதான தாக்குதல் தொடுத்தது. முளைவிடும் ஒவ்வொரு மூலிகை இலையும் மாயாவாதத்துக்கு எதிராகத்தான் தழைக்க வேண்டியிருந்தது. அதனால் தான் இந்த மண்ணில் மருத்துவத்தை இறுகப்பிடித்த சித்தமரபு வைதீகத்துக்கு எதிரான போர்க்குரலை தனது அடையாளமாகக் கொண்டது. மருத்துவ அறிவு தழைக்க வர்ணக்கோட்பாடும், வைதீக சிந்தனையும் ஒழிய வேண்டும் என்பதே சித்தர்கள் கண்ட அறிவியல் உண்மை. அதனால் தான் காய்ச்சலுக்கும் இருமலுக்கும் மருந்தை காய்ச்சிக் கொண்டிருக்கையிலே அவர்களின் வாய் “பறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா?” என முழங்கியது. “ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்” என நம்மை காறி உமிழ்ந்தவனைப் பார்த்து அவர்கள் காறி உமிழ்ந்தனர். தாவாரம் இல்லாதவனுக்கு தேவாரம் ஏதுக்கடா என நெற்றிப்பொட்டில் சொல்லால் அடித்தனர்.
தனக்கென்ற தனித்த அறிவியலையும், தத்துவத்தையும் இறுகப்பிடித்திருந்ததால் தான் சித்தர் மரபு எளிதில் வீழ்த்தமுடியாததாக நிலைபெற்றது. இந்திய மருத்துவ மரபில் வேறு எதிலும் இல்லாத அளவு கனிம, உலோக அறிவினைக் கொண்டு வளர்ந்த மருத்துவ முறையாக அது பரிணமித்தது.
இது நவீன அலோபதி மருத்துவத்தின் ஆரம்பக் கூறுகளுக்கு இணையான பயணவெளி. அதனால் தான் சரஸ்வதி மஹால் நூலகத்தின் மருத்துவம் சார் மூல ஏடுகளை 1869இல் அட்டவணைப்படுத்தி மூன்று தொகுதிகளாக லண்டனில் வெளியிடப்பட்ட போது பல மூல ஏட்டுச்சுவடிகள் ஜெர்மனுக்கு கொண்டுசெல்லப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. அதை மறுப்பதற்கு இல்லை, அதற்கான வாய்ப்பிருந்தது என்று பின்னால் வந்த அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளதைப் பார்க்கிறோம். காலனிய ஆட்சியின் ஆரம்ப நாட்களின் கண்மருத்துவத்துக்கு இங்கு இருந்த பாரம்பரிய வைத்தியமுறை மிகச்சிறப்பானது என்பதை ஏற்று ஆணைபிறப்பித்ததைப் பார்க்கிறோம்.
அதேபோலத்தான் மருத்துவம்சார் மரபு வலிமை கொண்டிருந்ததால் தான் நவீன மருத்துவம் பற்றி ஆசிய மொழியில் எழுதப்பட்ட முதல் நூலாக தமிழ் நூற்கள் திகழ்கின்றன. டாக்டர் சாமுவேல் கிறீன் இரண வைத்தியம், மருத்துவ வைத்தியம், கெமிஸ்தம் உள்ளிட்ட பல நூல்களை 1850 களிலே எழுதினார். அலோபதி மருத்துவத்தை தமிழ் வழியில் கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலைகளும் உருவாக்கப்பட்டன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு 24 மருத்துவக்கல்லூரியை அரசே நடத்தும் மாநிலமாக தமிழகம் இருப்பது தற்செயல் அல்ல, தனக்கென்ற தனித்த மருத்துவ மரபை, பகுத்தறிவுப் பார்வையை, தத்துவக்கண்ணோட்டத்தை, வைதீகத்துக்கு எதிரான போர்க்குணத்தைக் கொண்டதொரு மாநிலத்தின் அடையாளம் தான் இது.
13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோடி குஜராத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியைக் கூட உருவாக்காததும் தற்செயல் அல்ல, அதுவும் வர்ணக்கோட்பாட்டுக்கு மண்டியிட்ட ஒரு வரலாற்றின் அடையாளம்தான்.இப்பொழுதும் அதே வரலாறு தான் நீடிக்கிறது. மருத்துவர்களை நோக்கி மக்கள் பாய்ந்து போவதால் அவர்களின் மீது கடும் தாக்குதலை அன்று நடத்தியவர்கள், இன்று வேறுவிதத்தில் அத்தாக்குதலை நடத்துகின்றனர். சமூகத்தின் பெரும்பான்மையோரை மருத்துவத்தில் இருந்து வெளியேற்றும் உத்திகளுக்கு அவர்கள் மாறியுள்ளனர்.
இவர்களின் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் தேவனாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, அஸ்வினாக இருந்தாலும் சரி, அனிதாவாக இருந்தாலும் சரி அவர்கள் இரக்கமின்றி அப்புறப்படுத்தப்படுவார்கள்.
இம்மண்ணின் மருத்துவ அறிவினை காக்கும் போராட்டம் அன்றும் இன்றும் ஒரே எதிரியோடுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்துவதில் அன்றுபோல் இன்றும் முன்னணியில் தமிழகமே இருக்கிறது.