வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், செப்டம்பர் 07, 2017

அஸ்வின்களும் அனிதாக்களும்!- சு. வெங்கடேசன்

இன்றைய தீக்கதிரில், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள " அஸ்வின்களும் அனிதாக்களும்" கட்டுரை, மிகவும் முக்கியமானது. அவசியம் படிக்கவேண்டியது.
ஒடுக்கப்படுபவர்களின் தொடர் சங்கிலியில். அனிதா ஒரு கண்ணி.....
அஸ்வின்களும் அனிதாக்களும்!- சு. வெங்கடேசன்
அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதாவை நாம் அறிவோம். அனிதாவின் மரணத்தை புரிந்து கொள்ள அஸ்வினை நாம் அறிந்து கொள்வது அவசியம். மருத்துவம் என்ற அறிவுத்துறை சார்ந்த செயல்பாட்டுக்காகத்தான் அஸ்வின்களும் அனிதாக்களும் பலியாக்கப்பட்டார்கள்.
அஸ்வின் அனிதாவைப்போல சுமைப்பணியாளர் வீட்டிலே பிறந்தவன் அல்ல, இன்னும் சொல்லப்போனால் அஸ்வின் மனிதனே அல்ல, அவன் கடவுள். அப்படித்தான் அழைக்கப்படுகிறான். தெய்வத்தோடு தெய்வமாக வைத்து போற்றப்பட்ட ஒருவனுக்கும், ஏழை மாணவி அனிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருவரும் மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். அதன் பொருட்டே பலியாக்கப்பட்டவர்கள். ரிக்வேதத்தைப் பாடிய ஆதிக்கவிஞர்கள் அஸ்வினை பெரிதும் போற்றுகிறார்கள். காரணம் அவனது மருத்துவ ஆற்றல். அவன் மருத்துவம் பார்ப்பதால் மனிதனின் அன்பைப்பெற்றவனாக இருக்கிறான். அதனால் தேவர்களுக்கும் மருத்துவம் பார்ப்பவனாக போற்றப்படுகிறான். பின்னர் தேவர்களின் மருத்துவராகவும் வர்ணிக்கப்படுகிறான்.
இந்த ரிக்வேத கதையின் தொடர்ச்சி தான் மகாபாரதத்தில் மருத்துவ ஞானம் பெற்றவர்களான நகுலனும், சகாதேவனும் அஸ்வினி புத்திரர்கள் என்று அழைக்கப்படுவது.ஆனால் அஸ்வினுக்கு இந்த நல்ல பெயர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. நால்வர்ண கோட்பாடு வலிமை பெற்றதும் அதன் தாக்குதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களும் தப்பவில்லை.
வேதத்தில் மிகப்பிந்தியதான யஜூர்வேதம் சொல்கிறது. ”பிராமணர்கள் மருத்துவத்தில் ஈடுபடலாகாது”. ஏனென்றால் மருத்துவன் புனிதமற்றவன், யாகத்துக்கு தகுதியற்றவன். எனவே பிராமணன் அத்தொழிலினை செய்யக் கூடாது எனச்சொல்லுகிறது.
மருத்துவன் ஏன் புனிதமற்றவன்? என்று கேட்டால் அதற்கும் யஜூர்வேதம் சொல்லுகிறது, மருத்துவத் தொழில் எல்லோருடனும் பழகுகிற, எல்லோரையும் சிகிச்சையின் பொருட்டு தொட்டுப்புழங்குகிற தொழில். அது வர்ணக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதால் மருத்துவனை தனது கோட்பாட்டின் படி புனிதமற்றவன் என்று முடிவு கட்டுகிறது.
இங்கு தான் புதிய பிரச்சனையை அது சந்திக்கிறது. அப்படியென்றால் தம் முன்னோர்கள் தேவர்களிலே மருத்துவ ஆற்றல் கொண்ட தேவராக அஸ்வினை சொல்லியுள்ளனரே. அவரை என்ன செய்வது? மருத்துவத் தொழிலே கேவலமானது, தீட்டானது என்ற முடிவுக்கு வந்த பின் அத்தொழிலை தேவர்களில் ஒருவன் எப்படி பார்க்க முடியும்? இந்த கேள்விகளோடு அஸ்வினை அணுகுகிற யஜூர்வேதம் வெளிப்படையாக அஸ்வின் மீது தாக்குதல் தொடுக்கிறது. அத்தாக்குதலின் உச்சமாக அது அறிவிக்கிறது “தனது மருத்துவத் தொழில் காரணமாக அஸ்வின் தேவர்களில் ஒருவன் என்ற தகுதியை இழக்கிறான்”. அதன்பின் அஸ்வின் அழித்தொழிக்கப்பட்டு விடுகிறான்.மருத்துவம் பார்க்கும் மனிதனின் மீதும், தெய்வத்தின் மீதும் இவ்வளவு கடுமையான தாக்குதலை தொடுப்பதற்கான காரணத்தை யஜூர் வேதம் சொல்லுகிறது. “எல்லாவகையான மனிதர்களும் மருத்துவர்களை நோக்கி ஓடுகிறார்கள்”. அதுதான் இந்தக் கோபத்தின் அடிப்படை.
சரி. இதற்காக ஏன் யஜூர் வேதாந்திகள் மருத்துவர்களின் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என்று கேட்டால், மருத்துவன் உடலை மையப்படுத்தி தனது பகுத்தறிவால் வினை புரிகிறான். பாவ புண்ணியம், அதிர்ஷ்டம் துரதிஷ்டம், மாயாவாதம் என எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டு கண்ணுக்கு முன்னால் இரத்தம் வலியும் காயத்துக்கு மருந்துகட்டி சரிப்படுத்துகிறான்.
உலகம் நான், அண்டசராசரம் நான், நீயும் நான், அவனும் நான். புண்ணும் நான் மருந்தும் நான் என்று வியாக்கியானம் பேசுவோருக்கும் எதிராகத்தான் மருத்துவ அறிவியலின் ஒவ்வொரு செயலும் இருந்தது. எனவே அவ் அறிவியலை ஒழிப்பதே அடுத்து வந்த மதவாதிகளின் தலையாய கடமையாக இருந்தது.
இந்திய வரலாற்றில் மருத்துவர்களின் மீதும், மருத்துவ அறிவின் மீதும் கொடூரமான தாக்குதல் அதன் பின் அரங்கேறத்துவங்கின. தர்மச் சட்டங்கள் என்ற பெயரில் எழுதப்பட்ட எல்லா சட்டங்களும் மருத்துவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தையே கொண்டிருந்தது.
அபஸ்தாம்பர் எழுதிய சட்ட நூல் “மருத்துவன் அல்லது அறுவையாளன் தருகிற உணவு அருவருக்கத்தக்கது, அதனை உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் ஏற்கலாகாது” என்று கூறுகிறது. வசிஷ்டரின் சட்ட நூலோ “மருத்துவன் தரும் உணவை ஏற்பது விலைமகளீர் தரும் உணவைப் போல அசுத்தமானது” என்கிறார். இந்தப் போக்கின் உச்சத்தை மநுவின் சட்டநூலிலே பார்க்கலாம். மநு சொல்கிறான் “மருத்துவர்கள் தரும் உணவு புண்ணிலிருந்து வரும் சீழுக்குச் சமம்”.
இந்த தர்மச்சட்டங்களே இந்தியாவில் அதிகாரத்தில் இருந்தவர்களால் பெரும்பாலான காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான் ஆதியில் பெரும் அறிவுத்துறையாக வளர்ந்த இந்திய மருத்துவத் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனாலும் இதற்கு எதிரான தத்துவ மரபு கொண்டவர்களும் எளிதில் வீழ்ந்துவிடவில்லை.
ஏனென்றால் வலியால் துடிப்பவன் மருந்தைத் தேடித்தான் ஓடுவானே தவிர மந்திரத்தை தேடியல்ல. எனவே மருத்துவனை நோக்கி மக்கள் ஓடியபடியேதான் இருந்தனர். மருத்துவ அறிவு மதவாதிகளுக்கு எதிராக தன்னை தக்கவைக்கிற போராட்டத்தை நடத்தியபடியே இருந்தது.
இந்தியாவின் தென்புலத்தில் தமிழர்மரபு சுமார் அறுநூறு ஆண்டு பரப்பினைக் கொண்ட சங்ககாலம் முழுவதும் இயற்கையை புரிந்து கொள்ளவும், அதன் ஆற்றலை கற்றுக் கொள்ளவும், இயற்கைக்கும் மனித வாழ்வுக்குமான உயிரோட்டமான தொடர்பை விளங்கிக் கொள்ளவுமான தத்துவமரபை வளர்த்தெடுத்து வைத்திருந்தது.
அதனால்தான் நோய்நாடும் முன் நோயின் முதன்மை காரணத்தை கண்டறியும் பகுத்தறிவு இங்கு வளர்த்தெடுக்கப்பட்டது. மருந்தனெப்படுவது வேண்டாவாம் என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கத்துவங்கியது. தனக்கென்ற தனித்துவமான மருத்துவ முறையை அது உருவாக்கிக் கொண்டது. பல்லாயிரம் செடி கொடிகளின் பேரறிவை தனது இலக்கியம் எங்கும் அது பதிவு செய்துவைத்தது.
ஆனால் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் வைதீகக்கோட்பாடே தமிழக அரசியல் அதிகாரத்தில் கோலோச்சியது. அது பாரம்பரிய மருத்துவ அறிவின் மீதான தாக்குதல் தொடுத்தது. முளைவிடும் ஒவ்வொரு மூலிகை இலையும் மாயாவாதத்துக்கு எதிராகத்தான் தழைக்க வேண்டியிருந்தது. அதனால் தான் இந்த மண்ணில் மருத்துவத்தை இறுகப்பிடித்த சித்தமரபு வைதீகத்துக்கு எதிரான போர்க்குரலை தனது அடையாளமாகக் கொண்டது. மருத்துவ அறிவு தழைக்க வர்ணக்கோட்பாடும், வைதீக சிந்தனையும் ஒழிய வேண்டும் என்பதே சித்தர்கள் கண்ட அறிவியல் உண்மை. அதனால் தான் காய்ச்சலுக்கும் இருமலுக்கும் மருந்தை காய்ச்சிக் கொண்டிருக்கையிலே அவர்களின் வாய் “பறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா?” என முழங்கியது. “ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்” என நம்மை காறி உமிழ்ந்தவனைப் பார்த்து அவர்கள் காறி உமிழ்ந்தனர். தாவாரம் இல்லாதவனுக்கு தேவாரம் ஏதுக்கடா என நெற்றிப்பொட்டில் சொல்லால் அடித்தனர்.
தனக்கென்ற தனித்த அறிவியலையும், தத்துவத்தையும் இறுகப்பிடித்திருந்ததால் தான் சித்தர் மரபு எளிதில் வீழ்த்தமுடியாததாக நிலைபெற்றது. இந்திய மருத்துவ மரபில் வேறு எதிலும் இல்லாத அளவு கனிம, உலோக அறிவினைக் கொண்டு வளர்ந்த மருத்துவ முறையாக அது பரிணமித்தது.
இது நவீன அலோபதி மருத்துவத்தின் ஆரம்பக் கூறுகளுக்கு இணையான பயணவெளி. அதனால் தான் சரஸ்வதி மஹால் நூலகத்தின் மருத்துவம் சார் மூல ஏடுகளை 1869இல் அட்டவணைப்படுத்தி மூன்று தொகுதிகளாக லண்டனில் வெளியிடப்பட்ட போது பல மூல ஏட்டுச்சுவடிகள் ஜெர்மனுக்கு கொண்டுசெல்லப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. அதை மறுப்பதற்கு இல்லை, அதற்கான வாய்ப்பிருந்தது என்று பின்னால் வந்த அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளதைப் பார்க்கிறோம். காலனிய ஆட்சியின் ஆரம்ப நாட்களின் கண்மருத்துவத்துக்கு இங்கு இருந்த பாரம்பரிய வைத்தியமுறை மிகச்சிறப்பானது என்பதை ஏற்று ஆணைபிறப்பித்ததைப் பார்க்கிறோம்.
அதேபோலத்தான் மருத்துவம்சார் மரபு வலிமை கொண்டிருந்ததால் தான் நவீன மருத்துவம் பற்றி ஆசிய மொழியில் எழுதப்பட்ட முதல் நூலாக தமிழ் நூற்கள் திகழ்கின்றன. டாக்டர் சாமுவேல் கிறீன் இரண வைத்தியம், மருத்துவ வைத்தியம், கெமிஸ்தம் உள்ளிட்ட பல நூல்களை 1850 களிலே எழுதினார். அலோபதி மருத்துவத்தை தமிழ் வழியில் கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலைகளும் உருவாக்கப்பட்டன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு 24 மருத்துவக்கல்லூரியை அரசே நடத்தும் மாநிலமாக தமிழகம் இருப்பது தற்செயல் அல்ல, தனக்கென்ற தனித்த மருத்துவ மரபை, பகுத்தறிவுப் பார்வையை, தத்துவக்கண்ணோட்டத்தை, வைதீகத்துக்கு எதிரான போர்க்குணத்தைக் கொண்டதொரு மாநிலத்தின் அடையாளம் தான் இது.
13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோடி குஜராத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியைக் கூட உருவாக்காததும் தற்செயல் அல்ல, அதுவும் வர்ணக்கோட்பாட்டுக்கு மண்டியிட்ட ஒரு வரலாற்றின் அடையாளம்தான்.இப்பொழுதும் அதே வரலாறு தான் நீடிக்கிறது. மருத்துவர்களை நோக்கி மக்கள் பாய்ந்து போவதால் அவர்களின் மீது கடும் தாக்குதலை அன்று நடத்தியவர்கள், இன்று வேறுவிதத்தில் அத்தாக்குதலை நடத்துகின்றனர். சமூகத்தின் பெரும்பான்மையோரை மருத்துவத்தில் இருந்து வெளியேற்றும் உத்திகளுக்கு அவர்கள் மாறியுள்ளனர்.
இவர்களின் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் தேவனாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, அஸ்வினாக இருந்தாலும் சரி, அனிதாவாக இருந்தாலும் சரி அவர்கள் இரக்கமின்றி அப்புறப்படுத்தப்படுவார்கள்.
இம்மண்ணின் மருத்துவ அறிவினை காக்கும் போராட்டம் அன்றும் இன்றும் ஒரே எதிரியோடுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்துவதில் அன்றுபோல் இன்றும் முன்னணியில் தமிழகமே இருக்கிறது.

கருத்துகள் இல்லை: