வினையொன்றே உயிராகப்
பண்பு காத்திருந்தேன்.
என்மொழிக்குள் உன்மொழி
அன்றிலின் அன்மொழியானது.
வேற்றுமை தீர்ந்து
உவமையாய் முன் நின்றாய்.
‘உம்மைப் பிடிக்கும்’
என்றாய்.
‘உம்மைத் தொகை பிடிக்குமா ?’
என்றேன்.
‘உம்’ என்றாள்.
‘ஏன் ?’ என்றேன்.
‘உன்னையும் என்னையும்
அதுவே சேர்க்கிறது.
நீயும் நானும்
அதனால் இணைகிறோம்’ என்றாள்.
‘உம்’ என்னும்
உன் சம்மதச் சொல் கொண்டிருப்பதால்
எனக்கும் அதுவே பிடிக்கும்’ என்றேன்.
‘எனக்குப் பிடித்ததற்கு
இன்னொரு காரணமும் உண்டு’ என்றாள்.
‘என்ன ?’ என்றேன்.
‘இணைப்பில் வலி தோன்றாது.
உணர்த்த விரும்பும் பொருள் மட்டுமே
தோன்றும் ’ என்று கண் தாழ்ந்தாள்.
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
வெள்ளி, நவம்பர் 08, 2013
புதன், நவம்பர் 06, 2013
வலிமிகுதல் 8
முந்திய பகுதியில் ‘தொடர்’களின் வகைகளையும் அவற்றில் வலி மிகும் மிகா இடங்களையும் பார்த்தோம். இனி ‘தொகை’களின் வகைகளையும் அவற்றில் வலிமிகும் மிகா இடங்களையும் பார்ப்போம்.
தொகை என்பது இரண்டு சொற்களுக்கு இடையே தொகையுருபு மறைந்திருப்பதால் நாம் விரித்துப் பொருள் கொள்வதற்கு இடம் தருவது. அது ஆறு வகைப்படும்.
1. வேற்றுமைத் தொகை
2. வினைத் தொகை
3. உவமைத் தொகை
4. பண்புத் தொகை
5. உம்மைத் தொகை
6. அன்மொழித் தொகை
சென்ற பதிவில் ‘தொடர்’ வகைகளில் வேற்றுமைத் தொடரை விளக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். அத்துடன் இந்தப் பதிவிலும் முதல் வகையான வேற்றுமைத் தொகையையும் நிறுத்தி வைக்கிறேன். வேற்றுமைத் தொடரையும் வேற்றுமைத் தொகையையும் சேர்த்துத் தனியாகக் கற்க உள்ளோம். மீதமுள்ளவற்றைப் பார்ப்போம்.
வினைத்தொகை -
ஊறுகாய், சுடுசோறு, ஆடுகளம் - இரண்டு சொல்லில் முதற்சொல் ஏவல் பொருள் தந்து முக்காலத்திற்கும் விரித்துப் பொருள் காணும்படி அமைவது. வலி மிகாது என்பதைத் தெளிவாக அறிவீர்கள்.
உவமைத் தொகை -
தாமரைக்கண், மலைத்தோள், பனிப்பார்வை - முதற்சொல் இரண்டாம் சொல்லுக்கு உவமையாக வந்து இடையில் போன்ற என்ற உவம உருபை இட்டுத் தொகுத்துப் பொருள் காண்பது. வலி மிகும்.
பண்புத் தொகை -
பொய்ப்பேச்சு, மெய்க்கருத்து, கறுப்புக்குதிரை - முதற்சொல் இரண்டாம் சொல்லின் பண்பை விளக்குவதாய் அமைந்து ‘ஆன, ஆகிய’ போன்ற பண்புருவுகளை இட்டுத் தொகுத்துப் பொருள் காணும்படி இருப்பது. வலி மிகும்.
உம்மைத் தொகை -
காடுகரை, குழந்தைகுட்டி, தாய்தந்தை - இரண்டு பெயர்ச்சொற்களோடும் உம் விகுதியைச் சேர்த்துத் தொகுத்துப் பொருள் கொள்வது. வலி மிகாது.
அன்மொழித் தொகை -
துடியிடை தோன்றினாள், எழுகதிர் கிளம்பிற்று - மேற்காணும் எவ்வகைக்குள்ளும் அடங்காமல் தொகுத்துப் பொருள் காண வேண்டியிருப்பது. துடிபோன்ற இடையை உடைய பெண் தோன்றினாள். எழுந்த கதிர் கிழக்கிலிருந்து கிளம்புகிறது. இதில் வலி மிகுவதற்கும் மிகாமைக்கும் இதுவரை கற்ற விதிகளின்படி உரிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளும்படி இருக்கும்.
தொகைகளின் தனித்த குணம் - இரண்டும் வினைச்சொற்கள் என்றால் அவற்றுக்கு இடையே தொகை தோன்றாது.
அடுத்த பகுதியில் இந்தத் தொடரின் க்ளைமாக்ஸ் !
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1
திங்கள், நவம்பர் 04, 2013
வலிமிகுதல் 7
இரண்டு சொற்கள் சேர்ந்தால் அது சொற்றொடராகிறது. அது எளிமையாய் வெளிப்படையாய் இருந்தால் தொகாநிலைத்தொடர் (தொடர்) என்றும், விரித்துப் பொருள் காண இடமிருக்குமானால் அது தொகைநிலைத்தொடர் (தொகை) என்றும் சென்ற பதிவில் புரிந்துகொண்டோம்.
முதலில் தொடரின் வகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
எழுவாய்த் தொடர்
விளித் தொடர்
வினைமுற்றுத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
வேற்றுமைத் தொடர்
இடைச்சொற்றொடர்
உரிச்சொற்றொடர்
அடுக்குத் தொடர்
எழுவாய்த் தொடர் -
கிளி பேசியது, புலி பாய்ந்தது - கிளி, புலி என எழுவாய் தொடங்கி நகரும் எளிமையான சொற்றொடர்கள். வலி மிகாது.
விளித் தொடர் -
தம்பி பார் - முதற்சொல் அழைக்கிறது அதாவது விளிக்கிறது. வலி மிகாது.
வினைமுற்றுத் தொடர் -
பாடியது பறவை - முதல் சொல் வினைமுற்றாக இருந்தும் மேலும் தொடர்வது. வலி மிகாது. (கண்டேன் சீதையை - புகழ்பெற்ற உதாரணம். வலிமிகும் தேவை இதற்கு இல்லை என்பதால் நமக்கு உதவவில்லை).
பெயரெச்சத் தொடர் -
வாடிய பயிர் - முதற்சொல்லாய் அமைந்த வினை, தன்னை அடுத்து பெயர் வந்து பூர்த்தியடையும்படி எச்சமாக இருப்பது. வலி மிகாது.
வினையெச்சத் தொடர் -
வரச் சொன்னான், பாடித் திரிந்தான் - முதற்சொல் வினையின் எச்சமாக நின்று அடுத்து ஒரு வினைச்சொல் வந்து பூர்த்தியடையும்படி இருப்பது. வலி மிகும்.
வேற்றுமைத் தொடர் -
இதைத் தனிப்பதிவில் விளக்குகிறேன்.
இடைச்சொற்றொடர் -
மற்றொன்று - மன், மற்று, கொல், போன்ற சொற்கள் பெயர் அல்லது வினைச்சொல்லுக்கு முன் வரும். மற்று+ஒன்று = மற்றொன்று. இதில் மற்று இடைச்சொல். ஒன்று என்னும் பெயருக்கு முன் வந்தது. செய்யுள்களில் அதிகம் பயன்பட்டது. வலி மிகாது. இப்போது தற்கால எழுத்து வழக்கில் இல்லை.
உரிச்சொற்றொடர் -
நனி பேதை, கடிகமழ் மலர், உறுபுகழ் - பெயருக்கோ வினைக்கோ உரியதாய் வரும் சொற்கள். வலிமிகாது. இதுவும் தற்கால வழக்கில் இல்லை.
அடுக்குத் தொடர் -
பாடு பாடு, போ போ, சிறு சிறு, சின்ன சின்ன - பொருள்தருகின்ற சொற்கள் அடுக்கி வருவது - வலி மிகாது.
சுருக்கம் : வினையெச்சத் தொடர் தவிர்த்த வேறெந்தத் தொடர்களுக்கும் வலிமிகாது. (வேற்றுமைத் தொடரை நாம் கடைசியில் பார்க்கவிருக்கிறோம்).
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.
- உரிச்சொற்றொடர்: சால, உறு , தவ, கழி , நனி,கூர், ஆகிய சொற்கள் மிகுதி எனும் பொருளை உணர்த்தும் சொற்கள் உரிச்சொற்தொடர் ஆகும். அடுக்குத் தொடர் - முன் வரும் சொல்லெ பின்னும் வரும். சொற்களைப் பிரித்தாலும் பொருளில் மாற்றமிருக்காது.
- இலக்கணப்படி உரிச்சொற்றொடருக்கு வலி மிகாது. வலி மிகுந்தது என்றால் இசையின்பம் கருதிச் செய்யப்பட்டது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் திரு’ என்பதையும் உரிச்சொல்லாகக் கருதலாமா ? பொதுவாக இத்தொடரின் பயன்பாடு அபூர்வமானது என்பதால் விவாதம் எதுவும் எழுந்ததாகத் தெரியவில்லை. சின்ன சின்ன - என்பதுதான் சரி. அடுக்குத் தொடர் என்றாலும் வலிமிகாது. குறிப்புப் பெயரெச்சம் என்றாலும் வலிமிகாது. (வலிமிகுதல் 4 - பகுதியில் இதை விரிவாக எழுதிவிட்டேன்).
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)