வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், அக்டோபர் 29, 2013

வலிமிகுதல் 4


பெயரெச்சம் என்றால் என்னவென்று அறிவீர்களா ? முற்றுப்பெறாமல் முடிவுறாமல் எச்சமாகித் தொக்கி நிற்கும் ஒரு சொல் தன்னை அடுத்து ஒரு பெயரை வரவழைக்கும். அப்படி ஒரு பெயர்ச்சொல் வருவதால் மட்டுமே அது முற்றுப் பெறும். அத்தகைய சொற்கள் பெயரெச்சங்கள் எனப்படும்.

அடித்த கைகள், வெடித்த துப்பாக்கி, பணிந்த காவலன்.

மேலுள்ள இரண்டு சொற்களில் முதலில் உள்ள செயலைச் சொல்லும் சொல் தன்னை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தால் மட்டுமே நிறைவுறுவதைக் காண்கிறீர்கள் (அடித்த, வெடித்த, பணிந்த). இல்லையேல் பூர்த்தியடையாமல் எச்சமாகி அத்துவானத்தில் நிற்கும். அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்து முழுமையடைவது பெயரெச்சம்.

வினைச்சொல்லாக இருக்கையில் காலங்காட்டும்.

கடித்த பழம் - இறந்தகாலப் பெயரெச்சம்
கடிக்கின்ற பழம் - நிகழ்காலப் பெயரெச்சம்
கடிக்கும் பழம் - எதிர்காலப் பெயரெச்சம்

மேலுள்ள மூன்றும் வினையையும் காலத்தையும் காட்டுவதால் இவை தெரிநிலைப் பெயரெச்சங்கள் என்றும் வகைப்படும். இதில் கடித்த பழம் உடன்பாட்டுப் பெயரெச்சம். கடிக்காத பழம் என்று வந்தால் எதிர்மறைப் பெயரெச்சம்.

வினையையும் காலத்தையும் காட்டாமல் வெறுமனே பண்பை மட்டும் காட்டுகின்ற எச்சச்சொற்கள் உள்ளன. அவையும் தம்மை அடுத்துப் பெயர்ச்சொற்கள் வந்தால் மட்டுமே முழுமை பெறுவன. அவற்றைக் குறிப்புப் பெயரெச்சங்கள் என்று வகைப்படுத்துவர்.

சின்ன தம்பி
நல்ல குடும்பம்
அழகிய தமிழ்மகன்
புதிய பார்வை
இளைய தலைமுறை

மேலே காண்பவை பண்பை மட்டுமே சொல்லி அடுத்து ஒரு பெயர் வருவதால் மட்டுமே பூர்த்தியாகக் கூடிய குறிப்புப் பெயரெச்சங்கள்.

இப்பொழுது வலிமிகும் இடத்துக்கு வருகிறேன். மேலே விவரித்தபடியுள்ள பெயரெச்சங்கள் எவற்றுக்கும் - வினைச்சொல்லை அடுத்து வரும் பெயரெச்சங்கள் என்றாலும், அது மூன்று காலத்தைக் காட்டினாலும், உடன்பாடாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, வெறும் பண்பை மட்டுமே குறிக்கின்ற குறிப்புப் பெயரெச்சமாக இருந்தாலும் சரி - எங்கும் வலி மிகாது. எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள் - பெயரெச்சத்தை அடுத்து வலி மிகாது.

பாடாத தேனீ, ஓடாத குதிரை - போன்ற எதிர்மறைப் பெயரெச்சங்களில் கடைசி எழுத்து கெட்டு மறைவதும் உண்டு. பாடாத் தேனீ, ஓடாக் குதிரை - என. எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசி எழுத்து, ஈறு கெடுவதால் அது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று அழைக்கப்படும். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஆக பெயரெச்சங்களில் வலி மிகாது. உதாரணங்களின்படி - படித்த, அடித்த, நடக்கின்ற, ஓடுகின்ற, முடிக்கும், வெடிக்கும், உண்கின்ற, உண்ணாத, செய்த, செய்யாத, நல்ல, கெட்ட, தீய, சிறிய, பெரிய, பழைய, புதிய - எவ்வகைப் பெயரெச்சங்களிலும் வலி மிகா.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஒட்டுமொத்தமாக வகுத்துப் பகுத்துத் தொகுத்து கிளிப் பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

  • இலக்கணம் சொல்லித் தருபவர்கள் பெயரெச்சத்தின் பின் வலி மிகாது என்று உதாரணத்தைச் சொல்லிச் சென்றுவிடுவார்கள். வலி மிகுதல் என்ற தலைப்புக் குடையின்கீழ் பெயரெச்சத்தை விளங்கிக்கொண்டு அதன் வகைப்பாடுகளில் தெளிவுபெற்று வலிமிகுமா மிகாதா என்பதை அறியப் புகுந்தால் இரண்டும் தெள்ளத் தெளிவாக விளங்கிவிடும்.

  • கனிந்த பழம் இறந்தகால வினை எச்சமா? நிகழ்கால வினை எச்சமா? குனித்த புருவம் எக்கால வினை எச்சம்? எச்சம் என்பது எஞ்சி நிற்பதைக் குறிக்கும். நீங்கள் குறிப்பிட்ட - கனிந்த என்ற சொல்லைத் தனியே பார்த்தால், அது எஞ்சி நிற்பது தெரிகிறது. கனிந்த என்கிற சொல் அர்த்தம் தரக்கூடிய சொற்றொடராக மாற்றம் பெறவேண்டுமெனில், அதன்பின்பு ஒருசொல் வரவேண்டும். கனிந்த என்கிற சொல்லின் பின்னால் வருகிற சொல் பெயர்ச்சொல்லாயின் கனிந்த, பெயரெச்சம் ஆகும், பின்னால் வருகிற சொல் வினைச்சொல்லாயின் கனிந்த வினையெச்சமாகும். இங்கு பழம் என்கிற பெயர்ச்சொல் வருவதால், கனிந்த, பெயரெச்சமாகும். குனித்த என்கிற சொல்லின் பின் வருகிற புருவம் பெயர்ச்சொல் என்கிறபடியால், குனித்த, பெயரெச்சமாகும். ஓடி வந்தான். இங்கு ஓடி என்கிற சொல்லின் பின்பு வருகிற வந்தான், வினைச்சொல் என்கிறபடியால், ஓடி, வினைஎச்சமாகும். பொதுவாக பெயரெச்சம் அ என்கிற ஒலியுடனும், (பெரிய, அழகிய, சிறிய) வினைஎச்சம் இ, உ,அ என்கிற ஒலியுடனும் (ஆடி, ஓடி, கருகி, விழுந்து, சரிந்து, அழகாக) முற்றுப்பெறும்

  • வினையெச்சத்திற்குத் தனியாக எழுதுவேன். பொறுமை காக்கவும். இந்தத் தொடர் 15 பகுதிகள் வரை நீளக்கூடும். அதில் தமிழ் இலக்கணத்தின் முக்கியக் கூறுகள் அனைத்தும் தொட்டுத் துலக்கப்படும்.

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1

சனி, அக்டோபர் 26, 2013

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 3
-------------------

இந்தத் தொடரின் அடுத்த இப்பதிவு சற்றே தாமதமானதற்குப் பொறுத்தருள்க. இந்த விளக்கங்களை எழுதியபின் பின்னூட்டங்களில்/உள்பெட்டியில் பதில் எழுதிக் கைவலி மிகுந்ததால் தள்ளிப் போட்டுவிட்டேன். பின்னூட்டங்களில் அவசியம் நான் விடையிறுத்தாக வேண்டிய இடங்களில் எப்போதும் தயங்காமல் எழுதியே வந்திருக்கிறேன். முடிந்தவரை அவ்வாறே செயல்படுவேன்.

குற்றியலுகரம் என்றால் என்னவென்று அறிவீர்கள்தாமே ? ஒரு சொல்லின் கடைசி எழுத்தாக வரும் கு,சு,டு,து.பு,று ஆகிய ஆறு உ’கர வல்லின உயிர்மெய்களும் உச்சரிப்பில் அரை மாத்திரையளவு தணிந்து ஒலிக்கும்.

க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று - என்று முடிகின்ற சொற்கள் யாவும் வல்லின மெய்யெழுத்தை அடுத்து வரும் குற்றியலுகரங்கள் என்பதால் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள் எனப்படும்.

இந்த வன் தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து க,ச,த,ப-கர வரிசையில் உயிர்மெய் எழுத்துகள் வந்தால் வலி மிகும்.

எடுத்துச் செல்.
முடித்துக் கொடு.
கற்றுக் கொள்.

படித்துப் பார்த்தான்’ என்பதில் வலி மிகுந்ததற்கும் - எழுந்து பார்த்தான்’ என்பதில் வலி மிகாததற்கும் இப்போது
உங்களுக்குக் காரணம் புரிந்திருக்கும்.

ன்று, ந்து, ண்டு - என முடிபவை மெல்லின மெய்யெழுத்துகளை அடுத்துவரும் வல்லின உகர உயிர்மெய்கள். இவற்றுக்கு மென் தொடர்க் குற்றியலுகரங்கள் என்று பெயர். மென் தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து வலி மிகாது.

உதாரணங்கள் :-

என்று சொன்னான்.
வந்து போனார்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வியாழன், அக்டோபர் 24, 2013

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 2 :
---------------------
இரண்டு பெயர்ச் சொற்களுக்கிடையே எளிதில் வலி மிகும் என்று பார்த்தோம். அடுத்து, சொற்கூட்டங்களின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள சொல்லை அடுத்து வருவது வல்லினமாக இருந்தால் கட்டாயம் வலிமிகும். இந்த விதியைக் கேள்வியே இல்லாமல் பின்பற்றலாம். வலிமிகுதலில் எல்லாருமே தவறவிடும் இடம் இதுதான். அந்தச் சொற்களின் பட்டியல் இதோ :-

அ, இ, எ
அந்த, இந்த , எந்த
அங்கு, இங்கு, எங்கு
ஆங்கு, ஈங்கு, யாங்கு
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு, ஈண்டு, யாண்டு
அவ்வகை, இவ்வகை, எவ்வகை
அத்துணை, இத்துணை, எத்துணை
இனி, தனி
அன்றி, இன்றி
மற்ற, மற்றை
நடு, பொது, அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து, முன்னர், பின்னர்

இவற்றை அடுத்து வல்லினம் வந்தால் கட்டாயம் வலி மிக வேண்டும். நாம் இவற்றில் வலி மிகுதலைப் பெரும்பாலும் அனுசரிப்பதில்லை.

பாரதியார் ‘அங்கு சென்றான்’ என்றே எழுதுவாராம். அங்குச் சென்றான்’ என்று வலி மிகுவித்து எழுதுவதே சரி. நண்பர்கள் பாரதியிடம் ‘அங்கு சென்றான் என்றெழுதுவது தவறாயிற்றே... நீரே இப்படிச் செய்யலாமா ?’ என்று வினவுவார்களாம். ‘தவறுதான் ஓய்... அங்குச் சென்றான் என்றெழுதினால் நன்றாகவே இல்லை... அதனால்தான் அங்கு சென்றான் என்றே எழுதுகிறேன்...’ என்பாராம் பாரதியார்.

இவ்விடங்களில் வலி மிகுவித்து எழுதுவதே பிழையற்றிருக்கும். மிகவும் பல் கூச்சமெடுக்கும் பயன்பாடாக இருக்கிறதே என்று கருதினால் எழுதும் ஆசிரியரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல், அணுகுண்டு என்று பிழையாக எழுதுகிறோம். அணுக்குண்டு என்பதுதான் சரி.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 1