வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஏப்ரல் 16, 2010

சமூக சேவை அமைப்புகள்

நம்ம நாட்டுல உண்மையா சேவை புரியும் பல சேவை அமைப்புகள் இருக்குது.
நான் இருக்குற இரண்டு அமைப்புகளை பற்றி உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கேன். இவை இரண்டும் இங்குள்ள தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது.

எயிம்ஸ் இந்தியா - aimsindia.net 

வாசிங்டன் பகுதியில் வசித்த சில நண்பர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. உருவாக்கிய பலர் அமெரிக்க வாழ்க்கை போதும் என்று  இப்ப இந்தியாவில்  வசிக்கிறாங்க.

மக்களை ஒன்று சேர்ப்போம் (மொழி பெயர்ப்பு சரியா?) (Bringing People Together) என்பது இந்த அமைப்பின் சூளுரை. இவங்க தனியாகவும் மற்ற அமைப்புகளுடன் இணைந்தும் செயலாற்றுகிறார்கள். பலதரப்பட்ட பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள். பள்ளிகளுக்கு உதவுதல் (கழிப்பறை கட்டுவது, சுற்றுச்சுவர் கட்டுவது, பற்றாக்குறையாக உள்ள ஆசியரை நியமிப்பது (சம்பளமும் இவங்கதான்), மேசைகள் தருவது போன்றவை), கிராமபுறத்தில் மருத்துவமனை கட்டுவது, ஏரியை தூர் எடுப்பது, கிராமபுற பெண்களுக்கு வருமானம் வருவதற்கு உதவுவது, சுனாமி விழிப்புணர்வு மற்றும் நலம் பற்றி மாணவர்களுக்கும் கிராம மக்களுக்கும் சொல்வது, கிராமபுற மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பது என்பது சில. இதுவல்லாமல் இவர்கள் பல சேவைகளை செய்து வருகிறார்கள். எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் வலைதளத்தில் விரிவாக அவற்றை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வாசிங்டன் பகுதியில் நிருவாக குழு கூடி அன்றைய மாதம் நடந்த திட்டங்களையும், நிதி நிலை அறிக்கையையும் அதை பொருத்து அடுத்து எந்த திட்டத்தை ஏற்பது என்பது பற்றியும் முடிவெடுக்கிறார்கள்.

ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடுவது, நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடத்துவது என்று நிதி சேகரித்தார்கள். அதில் வேலை அதிகம், தன்னார்வலர்கள் அதிகம் ஆனால் நிதி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

மாரத்தான் ஓட்டத்திற்கு மாறினார்கள். இதுவே இவர்களின் தற்போதய முதன்மையான நிதி வருமானம் ஆகும். அதாவது நீங்கள் இந்த அமைப்பு சார்பாக ஓடுகின்றீர்கள் என்றால் இவ்வளவு பணம் புரட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அதற்கு அவர்களும் உதவுவார்கள். காசு கொண்டாற வேண்டியது உன் பொறுப்பு என்று விட்டுவிட மாட்டார்கள். மாரத்தான் ஓட ஆசை, அதே சமயம் சமூக அமைப்புக்கும் பணம் கொடுக்க விருப்பம் அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு அல்லவா? மாரத்தான் ஓட பயிற்சியும் கொடுக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட இடத்தில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி நடைபெறும்.மே மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை இந்த பயிற்சி இருக்கும். அக்டோபர் மாத கடைசியில் வாசிங்டன் பகுதியில் பெரிய அளவில் நடைபெறும் மெரைன் கார்ப் மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். முழு மாரத்தான் ஓட முடியாதவங்க பால்டிமோர் பகுதியில் நடைபெறும் அரை மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். ஓடறது தான தேவை.

எந்த திட்டத்துக்கும் இவர்கள் முழு பணமும் தருவதில்லை. குறைந்தது 30% உள்ளூர் மக்களின் பணம், பற்றாக்குறைக்கு இவங்க உதவுவாங்க. இலவசம் என்றால் அதற்கு மதிப்பில்லை பாருங்க. நீங்க சமூக சேவை செய்துகொண்டிருந்தால் பணம் போதவில்லை என்றால் இந்த அமைப்பை அணுகலாம். 

இந்த அமைப்பு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வரிவிலக்கு பெற்றது. எனவே இந்த அமைப்புக்கு நன்கொடை அளித்தால் அதற்கு வரி விலக்கு பெற முடியும்.



 இந்தியா டீம் - indiateam.org 


இந்த அமைப்பு கலிபோர்னியா மாநிலத்தில் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு உதவுவது தான் இவர்களின் குறிக்கோள். பல குழுக்கள் உள்ளன. மாதம் பத்து டாலர் போடனும், மாதாமாதம் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 500 டாலர் கொடுக்கப்படும் அந்த பணத்தை கொண்டு அவர் தான் தேர்ந்தெடுக்கும் பள்ளிக்கு அதை செலவு செய்யலாம். இது அவர் பணம். முதல் மாதமே அவருக்கு பணம் கிடைத்தாலும் $490ஐயும் அவர் கொடுத்தாக வேண்டும். மாதம் $10 கொடுப்பதால் அவர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்பதே தெரியாது. 

நான் வேலை செய்யும் நிறுவனம் சமூக சேவைக்கு பணம் கொடுக்குது, பல நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் $1 போட்டா $1ஐ அவர்கள் கொடுப்பார்கள் , நான் கொஞ்சம் பணத்தை போட்டு செலவழிக்கலாம் (சமூக சேவைக்கு தான்) என்று இருக்கிறேன் அதற்கு ஏதாவது வழி உண்டா? அதற்காக FSA என்ற கணக்கு இருக்கிறது. இதில் நீங்கள் விருப்பப்படும் தொகையை போடலாம். அது உங்க கணக்கு, வேற யாரும் உங்க பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாது. நீங்கள் விருப்பப்பட்டால் அடுத்தவருக்கு பணம் கொடுக்கலாம். முதலில் நீங்க உங்க கை காச போட்டு செலவழிக்கனும் பின் எல்லா ரசீதுகளையும் கொடுத்து பணத்தை திரும்பபெறலாம்.  அமெரிக்க மக்களே உங்க கை காச போட்டு பள்ளிகளுக்கு செலவு செய்யனும் என்று நினைத்தால் டீமில் FSA கணக்கு தொடங்கி செலவழிக்கலாம். உங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.

இது அமெரிக்காவில் வரிவிலக்கு பெற்ற அமைப்பு.


வியாழன், ஏப்ரல் 15, 2010

விக்கிப்பீடியா போட்டி.

தமிழில் விக்கிப்பீடியா இருப்பது வலைப்பதிவர்கள் அனேகருக்கு தெரியும். கோவையில் நடக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடக்கிறது. தமிழ் இணைய மாநாட்டை சார்ந்தவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளார்கள். கட்டுரை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30. இதில் வெளிநாட்டிலுள்ள கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.  உங்களுக்கு தெரிந்த கல்லூரி மாணவர்களுக்கு இத்தகவலை சொல்லி அவர்களை போட்டியில் கலந்துக்க சொல்லுங்க. மேலும் விபரங்களுக்கு விரிவான தகவல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அனுகவும்.



மேல் இருக்கும் போட்டி கல்லூரி மாணவர்களுக்கு மற்றவர்களுக்கு? இப்போதைக்கு மற்றவர்களுக்கு போட்டியெல்லாம் இல்லை.  ஆனா நீங்க உதவலாம். நீங்க தான் உதவமுடியும். தமிழ் விக்கிப்பீடியா என்பது எனக்கோ உங்களுக்கோ உரிமையானது அல்ல. இது நம் அனைவருக்கும் உரிமையானது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தொடங்கினால் நீங்களும் அதன் அங்கம். ஏதாவது பிழைகள் தென்பட்டால் நீங்கள் திருத்தலாம். அடுத்தவங்க அதை சரி செய்யட்டும் என காத்திருக்க தேவையில்லை. அங்கு பங்களிக்கும் எல்லோரும் நம்மளைப்போன்றோரே. யார் என்ன மாற்றம் செய்தாலும் அது பதிவாகிவிடும். தவறுதலாக நீக்கிவிட்டால் அதை மீட்டுவிடலாம். கட்டுரையின் வரலாறு என்ற tabல் யார் எப்போ என்ன எழுதினார்கள் என்ற விபரம் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவர்கள் நிறைய பங்களிக்கலாம். ஏன்னா இவங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியும்.  நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் ஆனா பங்களித்திருக்கமாட்டார்கள். ஏதோ ஓர் சிறு தடை. என்னய்யா அது? அதான் புரியமாட்டிக்குது.

சில பேர் விக்கிப்பீடியாவில் பங்களித்தால் எனக்கு என்ன லாபம் என்று கேட்பார்கள். உங்களுக்கு பொருளாதார அளவில் லாபம் ஏதும்  இருக்காது ஆனால் நீங்க எழுதும் கட்டுரையை படிக்கும் வாசகருக்கு பயன் இருந்தால் அது தான் உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி.

நான் எழுதுனது வேற இப்ப இருக்கறது வேற கட்டுரை என்பது விக்கிப்பீடியா கொள்கை பற்றி அறியாததால் எழும் கேள்வி. விக்கிப்பீடியாவில் நீங்கள் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் உரிமை கோர முடியாது. அது எல்லோருக்கும் பொதுவானது. அடுத்தவர் எழுதிய கட்டுரையிலும் நீங்கள் திருத்தம் செய்யலாம். மேலதிக தகவல்களை சேர்க்கலாம். அக்கட்டுரையை வளர்த்தெடுக்கலாம். இது ஒரு கூட்டுழைப்பு.

வலைப்பதிவில் எழுதும் நடையில் எழுதக்கூடாது. எதையும் ஆதாரத்துடன் எழுதவேண்டும். அதற்கான சுட்டிகளை இணைக்கவும். இதை மற்றவர்கள் சரிபார்த்துக்கொள்ள உதவும்.

எழுத்துப்பிழையை திருத்தலாம், தகவல் தவறென்றால் அதை திருத்தலாம், ஆதாரங்களை சேர்க்கலாம், படங்களை இணைக்கலாம், தெரிந்த தகவல்களை சேர்க்கலாம் லாம் லாம் லாம் எவ்வளவோ செய்யலாம்.

வலைப்பதிவில் தலைவர்களை பற்றிய பல இடுகைகளை பார்த்துள்ளேன். அவற்றை நீங்கள் இணையத்திலோ, புத்தகத்திலோ படித்து தான் எழுதியிருப்பீர்கள். நீங்கள் அத்தலைவரை பற்றி விக்கிப்பீடியாவில் ஏன் எழுதக்கூடாது? மேற்கோள்களையும் கொடுத்தால் நீங்கள் எழுதிய கட்டுரையின் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும். இங்கு எழுதினால் பலரைச் சென்றடையும் அல்லவா?

உங்க ஊரைப்பற்றி மற்றவரை விட உங்களுக்கு தான் நல்லா தெரியும்.  உங்கள் ஊரைப்பற்றி எழுதலாம். எல்லா ஊர்களைப்பற்றிய தகவல்களும் விக்கிப்பீடியாவில் உண்டு ஆனால் விரிவான தகவல்கள் சில ஊர்களுக்கு தான் உள்ளது. உங்களுக்கு பிடித்தமான தலைப்பிலோ அல்லது துறை சார்ந்த கட்டுரைகளோ எழுதலாம். தமிழில் எழுதவேண்டிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

சிறுக சிறுக தகவல்களை சேர்க்கலாம். தவறில்லை. உங்களிடம் உள்ள சிறு தடையை உடைத்து மடை திறந்த வெள்ளமாக அல்லாவிடினும் வயலுக்கு பாயும் சிறிய வாய்காலாகவாவது அல்லது சென்னை குழாய் தண்ணி அளவாவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களியுங்கள். அது நாம் தமிழ் சமூகத்துக்கு செய்யும் பெரும் உதவி.


.
.

புதன், ஏப்ரல் 14, 2010

ஆண் குழந்தை வேண்டாம்

என் நண்பனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைதான் வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். என்ன பண்றது பிறக்கும் குழந்தை எந்த பால் அப்படிங்கிறத முடிவுபண்ற வசதி நம்ம கிட்ட இல்லையே (இருந்திருந்தா 100 பசங்களுக்கு 10 பிள்ளைங்க கூட தேறாது). நான்கு ஆண்டு கழித்து இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்ப அவன் மருத்துவமனையில் இல்லை. அவனுக்கு செய்தி சொல்லி விட்டாங்க. அவன் கேட்ட கேள்வி குழந்தை பையனா பிள்ளையா? பையன் பிறந்திருப்பதாக சொன்னதும் அவன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஏகப்பட்ட பேர் அவன்கிட்ட பேசி சமாதானம் செய்து குழந்தையை பார்க்கவைத்தார்கள். குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து தான் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு போனான் என்றால் அவனுக்கு ஆண் குழந்தை மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

ஊருக்கு போனப்ப ஏண்டா பிறந்த குழந்தையை பாக்க மாட்டேன்னு அடம்பிடிச்சன்னு கேட்டேன். நீ அமெரிக்காவுல இருக்கற இங்க இருக்குற நிலைமை உனக்கு தெரியாதுன்னு சொன்னான். துருவி கேட்டதும் பையனுக்கு திருமணம் பண்ண பொண்ணு கிடைப்பது கடினம் அதான் காரணம்ன்னு  சொன்னான். அடப்பாவி, அது பையன் பெரியவன் ஆனதும் கவலைப்படுறது அதுக்கு இப்பவே ஏண்டா கவலைப்படுற அப்படின்னேன்.

பெண் குழந்தை பிறந்தா நல்ல மாப்பிளை கிடைக்கனுமே நிறைய சீர்வரிசை செய்யனுமே அவ்வளவு வசதி நம்மகிட்ட இல்லையேன்னு மக்கள் கவலைப்படுவதை தான் பார்த்திருப்போம், பலர் முதிர் கன்னிகளாக இருப்பதும் இக்காரணத்தால் தான். பெண் கிடைக்கலை அப்படிங்கிறது புதிது இல்லையா. அவன் கவலைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அரியானா மாநிலத்தில் பெண் வேண்டாம் பையன் தான் வேண்டும் என்று பலர் நினைத்ததன் பலனை இப்போ அனுபவிக்கறாங்க.திருமணத்துக்கு பெண் கிடைக்காம நிறைய ஆண்கள் வேறு வழியில்லாம பிரமச்சாரிகளாக இருக்காங்களாம். அதாவது முதிர் காளைகள். பணம் இருக்கறவங்க அடுத்த மாநிலத்திலிருந்து பெண் எடுக்கறாங்க. பெண் வீட்டு காரங்க சீர் கொடுத்து மாப்பிள்ளை எடுத்ததுக்கு பதிலாக மாப்பிளை வீட்டுக்காரங்க சீர் கொடுத்து பெண் எடுக்கறாங்க.

ஏன் நாம அரியானாவுக்கு போகனும்.  தங்க தமிழகத்திலேயே அந்த கதை நடந்துகிட்டிருக்கு. என் நண்பனின் வீட்டில் மூன்று பேர். இரண்டு பசங்க, ஒரு பெண். பெண்ணுக்கு சுலபமா மாப்பிள்ளை கிடைத்து கட்டிகொடுத்து நல்லபடியா வாழுது. மாமன் பெண்ணையே இவன் கட்டிக்கிட்டான். இவன் தம்பிக்கு பெண் கிடைக்குங்குள்ள தவிடு தின்னுட்டாங்க. எத்தனை பெண் பார்க்கறது? அப்பப்பா...

இவன் தம்பிக்கு மட்டும் இந்த நிலையா என்றால் அது தான் இல்லை. இவன் நண்பர்கள் (எனக்கும் அவர்கள் நண்பர்கள் தான்) முக்கால்வாசி பேருக்கு இந்த நிலை தான்.  இரண்டு பேர் இங்க தேடுனா நமக்கு பெண்கிடைப்பது என்று கடினம் என்று கேரளா போய் பெண் எடுத்துக்கிட்டு வந்துட்டானுங்க. மாப்பிள்ளை தேடும் மலையாள பெண்களை தெரிந்த தரகருக்கு இப்ப எங்கூருல நல்ல கெராக்கியாம். 30 நாளில் மலையாளம் கற்பது எப்படி? அப்படிங்கிற புத்தகம் அதிகளவு விக்குதாம். எங்க பக்கம் இருக்கற தரகருங்க எல்லாம் இப்ப மலை நாட்டில் தான் இருக்கறதா கேள்வி.

ஏண்டா இந்த நிலைமைன்னா... இவனுங்க பள்ளி படிப்பே போதும் அப்படின்னு தொழிலில் இறங்கிட்டானுங்க. பட்டபடிப்பு படிச்சாலும் இதே தொழில் தான் பண்ணனும் அதுக்கு 3 ஆண்டு வீண் பண்ணறதுக்கு அந்த 3 ஆண்டை தொழிலில் பயன்படுத்தினால்  பணம் கிடைக்கும் என்பது இவனுங்க வாதம். அதுவும் சரிதான். ஆனா இப்ப என்னடான்னா பெண்கள் பட்டபடிப்பு படிச்சிட்டு படிக்காத பையனுங்களை கட்டிக்க மாட்டேங்குது. இப்படியெல்லாம் ஆகுமுன்னு யாருக்கு தெரியும்?

இவனுங்க பட்டபடிப்பு படிக்காதது தான் திருமணம் ஆகாம தள்ளிபோனதுக்கு காரணம் (படிக்காத பையனை எந்த படித்த பிள்ளையப்பா கட்டிக்கும்? ஒரு நியாயம் இருக்குள்ள). அதை புரிந்து கொள்ளாத என் நண்பன் ஆண் குழந்தையே வேண்டாம் என்று சொல்றான். இப்படியாவது பெண் குழந்தைக்கு ஆதரவு இருக்கேன்னு மகிழவேண்டியது தான்.