வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, செப்டம்பர் 20, 2024

மு. கருணாநிதி முத்தமிழ் அறிஞர் அல்ல

கருணாநிதி முத்தமிழ் அறிஞர் அல்ல. அவர் தமிழறிஞர் மட்டுமே.  தற்போதைய வெற்று அரசியலுக்காக திமுகவினர் அப்படிக்கூறுவது அவருக்கு பெருமை சேர்க்காது மாறாக இழுக்கைத் தரும்.

திமுக தொண்டர்கள்  அல்லாத பலரும்  இந்த கோயபல்சு பரப்புரைக்கு இரையாகி கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்கிறார்கள். 

இயற்றமிழ், நாடகத்தமிழ், இசைத்தமிழ் ஆகிய மூன்று தமிழ்களிலும் அறிஞராக உள்ளவரையே முத்தமிழ் அறிஞர் என்போம். அந்த வகையில் வெகு சிலர் தான் இருப்பர் இப்போது எவர் உளர் என அறியேன்.  இயற்தமிழில் அதிகமாகவும் அதைவிடக் குறைவாக  இசைத்தமிழிலும் அதைவிடக் குறைவாக நாடகத்தமிழிலும் இருப்பார்கள். 

முத்தமிழும் அறிந்திருப்பது வேறு முத்தமிழிலும் அறிஞராய் விளங்குவது என்பது வேறு, இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டால் சிக்கலில்லை.  காட்டாக வான்கோழியை மயில் என்று திரும்ப திரும்ப கூறினாலும் அது மயில் ஆகாது என்பதை அறிக. 



திரைப்படத்தை  விட நாடகம் சிறப்புடையது என்றாலும் நாடகங்கள் குறைந்து திரைப்படம் அதிகமாகிவிட்ட படியால் இக்காலத்தில் திரைப்படத்தையும் நாடகத்தமிழில் சேர்க்கலாமென்று நினைக்கிறேன், உங்களுக்கு மாறுபட்ட  கருத்து இருக்கலாம். ஆனால் திரைப்படமானாலும் நாடகமானாலும் நாடகத்தமிழுக்கான இலக்கணம்  ஒன்று தான் அது இன்னும் மாறவில்லை.

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் அடிகளாசிரியர் முத்தமிழின் இலக்கணத்தை பாட்டாகவே வடித்து தந்துள்ளார். 

ஆசிரியம் முதலா நான்கு பாவினுள்
அறமுதற் பொருளை அமையப் பாவி
மோனை முதலாம் தொடையழகு தோன்ற
அணிபெறப் பாடுதல் இயற்றமிழ் ஆகும்

பாவினம் என்றும் பண்ணத்தி என்றும்
செந்துறை என்றும் செப்பும் பாட்டில்
அறமுதற் பொருளை அமையப் பொருத்திப்
பண்களை அமைத்துப் பாடுதல் தானே
இசைத்தமிழ் என்னும் இன்தமிழ் ஆகும்

நடித்தலுக் கேற்ற வெண்துறைப் பாட்டில்
அறமுத லாகிய பொருள்வகை அமைவரப்
பாடி ஆடுதல் நாடகத் தமிழாம்

பாடி ஆடி நடிப்பது தான் நாடகத் தமிழ்  வரையறைக்குள் வரும் என்று  தெளிவாக  குறிபிடப்பட்டுள்ளது.  

தமிழில் பா எழுதுபவர்கள் எல்லாம் தமிழறிஞர்கள் அல்ல, இசை கோர்ப்பவர்கள் எல்லாம் இசை அறிஞர்கள் அல்ல, பாடி ஆடுபவர்கள் எல்லாம் நாடக அறிஞர்கள் அல்ல.

இதனால் நாடகத்திற்கோ திரைப்படத்திற்கோ கதை, திரைக்கதை , வசனம் மட்டும் எழுதுபவர்களையோ இயக்குபவர்களையோ, பாட்டெழுதுபவர்களையோ இசை கோர்ப்பவர்களையோ அதில் சேர்க்க முடியாது இவை இயற்றமிழிலும் இசைத்தமிழிலும் மட்டுமே  சேரும் என்பதை அறியலாம். இதனால் கருணாநிதி நாடகத் தமிழ் அறிஞர் இல்லை என்பதையும் முத்தமிழ் அறிஞர் என்பது தவறு என்பதையும் அறியலாம்.

கருணாநிதி தமிழில் புலமை மிக்கவர். சில காரணங்களால் அவர் தமிழறிஞர் அல்ல என்றும் சிலர் அவர் மறைந்த 5 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே வாதிடுகிறார்கள். சிலர் இப்படி வாதிடுவார்கள் என்பதை முன்கூட்டி  அறிந்ததாலும், பின் வரும் காலங்களில் தமிழ் அறிஞர்கள் எவரும், தான் தமிழறிஞர் என்பதை மறுகக்கூடாது என்பதாலுமே இவர் முன்பே சங்கத்தமிழ் எழுதி இருந்தாலும் கூடுதலாக  குறலோவியம், தொல்காப்பியப் பூங்காவை முன்னெச்சரிக்கையாக இயற்றினார் எனக் கருதலாம். தொல்காப்பியப் பூங்கா நூலை நான் படித்ததில்லை தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது எளிய செயல் அல்ல என்பதால் அதையே நான் கருணாநிதியை தமிழறிஞர் என்று நிருபிக்கும் சிறந்த படைப்பாக இருக்குமென்று கருதுகிறேன்.

ஆனால் எழுதியபோது பலர் தொல்காப்பிய பூங்கா நூல் எழுதும் முயற்சியை வியந்து கூறியதை கேட்டதுடன் சரி , அதன்பின் தமிழறிஞர்கள் மட்டுமல்ல திமுகவினர் உட்பட எவரும் அந்த நூலைப்பற்றி பேசிக்கேட்டதில்லை.


ஞாயிறு, ஜூலை 07, 2024

சூழ்நிலையால் எதிர் பிம்பத்துக்கு ஆளானேன் ஆனால் நான் அந்த எதிர் பிம்பம் அல்ல.

 தொலைக்காட்சி தொகுப்பாளினி பார்க்க அழகாக இருப்பார், வயது என்று பார்த்தால் பன்னிரண்டாவது -  முதலாண்டு கல்லூரி மாணவி வயதாக இருக்கும். (பெயரைக் கூறினால் தெரிந்து விடும், அவரின் பெயரைக்கூறுவது அறமாகாது என்பதால்  பலவற்றைக் கூறுகிறேன் இதை வைத்து முடிந்தால் கண்டுகொள்ளுங்கள்) ஆனால் அவரின் நிகழ்ச்சியில் தமிழை கொதறிவிடுவார். சன் மக்களே இப்படி கொதறினால் தான் மக்களுக்கு பிடிக்கும் என்றிருப்பார்களோ அல்லது இவர் அப்போது அப்படித்தான் இருந்தாரோ என அறியேன். அவரின் தமிங்கிலத்தாலும்  கோணங்கித்தனமான கேணத்தனமான செய்கைகளாலும் அந்நிகழ்ச்சி எனக்கு பிடிக்காது. பெப்சி உமாவும் அப்போது நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார் என நினைக்கிறேன்.

சில ஆண்டுகள் கழித்து காஞ்சி மடத்தை தொடர்பு படுத்தி அவரைப்பற்றி தவறான பிம்பம் வரும்படி நாளேடுகளில் செய்தி வந்தது, அதுவே நான் அவரைப்பற்றி அறிந்த கடைசி செய்தி.

’ஒரு நடிகையின் கதை’ தொடர் குமுதத்தில் வந்த போது வாரா வாரம் அடித்து பிடித்து கடைக்கு குமுதம் வந்ததும் முதல் ஆளாக வாங்கி இந்த வாரத்தில் கூறப்பட்டுள்ள நடிகர் யாராக இருக்கும் என்று  விவாதிப்போம் அப்படிப்பட்ட எங்களுக்கு (அதில் அடியேனும் அடக்கம்) கடைசியில் பார்த்த செய்தி தானே பசுமரத்தில்  அடித்த ஆணி போல் நிற்கும். இதில் என் தவறு ஏதும் உள்ளதா?

கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நெருங்கிய நண்பரொருவர் இவர் வந்துள்ளார் கூட்டத்தில்  பேசுகிறார் அருகில் தான் அந்த இடம் உள்ளது வா என்றார். நான் நாளேடுகளில் வந்தாரே அவரா என்றேன். ’ஆம்’ என்று விட்டு ஓரிரு படப்பெயர்களை கூறி அதில் நடித்துள்ளார் என்று விளக்கம் கொடுத்தார்.



என் நேரம் அவரும் அங்கு இருந்தார், மறைவாக இருந்ததால் நான் கவனிக்கவில்லை. தொகுப்பாளினி வெறுக்கும் செய்தியை நான் தொடர்பு படுத்தி அவரை நினைவுக்கு கொண்டுவந்ததால் அவருக்கும் தர்மசங்கடம், நம்மை இன்றும் இப்படி நினைத்து நினைவில் வைத்து உள்ளார்களே என. என்னைப்பற்றி ஓர் கரும்புள்ளி அவரிடம் விழுந்து விட்டது 😞  என்னை அழைத்த நண்பருக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கிவிட்டேன். அவர் நிலைமையை சமாளிக்க இவர் நடித்த ஓரிரு படங்களை கூறி, அதில் நடித்துள்ளார் இப்பொழுதெல்லாம் தொக்கா தொகுப்பாளினி என்பதை பெரும்பாலோர் மறந்துவிட்டனர், இந்தப்படத்தில் நடித்த நடிகை என்று கூறினால் தான் பலருக்கும் தெரியும் என்றார். அந்த தொகுப்பாளினி பின்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது அப்போது தான் எனக்குத்தெரிந்தது. 

உடனே அவர்களுடன் கூட்ட அறைக்கு கிளம்பி விட்டேன். அது கடுங்குளிர்காலம், ஆனால் உதட்டு பசையை ( lip balm ) எடுத்துக் கொண்டு போக மறந்துவிட்டேன். அது குளிர் காலம் என்பதால் உதடில் ஈரமில்லாவிட்டால் உதடு வெடித்துவிடும், உதட்டுப்பசையை எடுக்க மறந்ததால் எச்சிலால் உதட்டை ஈரப்படுத்திக்கொள்வது தான் தப்பிக்க ஒரே வழி. கூட்ட அறையில் இருக்கும் போது உதடு நன்கு உலர்ந்து விட்டது எச்சிலால் ஈரப்படுத்தாவிட்டால் உதட்டில் வெடிப்பு வந்துவிடும். அவர் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். அவர் இந்தப்புறமும் அந்தப்புறமும் தலையை  திருப்பி திருப்பி பேசிக்கொண்டிருந்ததால் அவர் நானிருக்கும் பக்கத்தை விட்டு மறுபுறம் தலையை திருப்பி பேசும் போது நாக்கை சுழற்றி எச்சிலால் மேல் கீழ் உதடுகளை  நனைக்கலாம் என்றிருந்தேன். அவர் அந்தப்பக்கம் திரும்பியதும் மெதுவாக நாக்கை சுழற்றி உதடுகளை ஈரப்படுத்த ஆரம்பித்தேன். 

பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்! என்பதற்கிணங்க கெரகம் நான் உதடுகளை நாக்கால் ஈரப்படுத்தும் பொழுது இந்தப்பக்கம் திரும்பி,   முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த நான் நாக்கை சுழற்றுவதை பார்த்துவிட்டார். அவரின் முகமாற்றத்தை கவனித்துவிட்டேன் அவர் என்ன நினைக்கிறார் என்பதை அது உணர்த்திவிட்டது. எனக்கு சங்கடமாக்கிவிட்டது. தவறான எண்ணத்துடன் அவரைப்பார்த்து நாக்கை சுழற்றி எச்சில் (ஜொல்) விடுவதாகவும் மற்ற எண்ணத்துடன் இருப்பதாகவும் நினைத்து விட்டார் (நினைத்து இருப்பார்). என்னைப்பற்றி  இருத்த கரும்புள்ளி இப்பொழுது கருங்கோளமாகவே மாறிவிட்டது. பின்பு கூட்டம் முடியும் வரை நான் இருந்த பக்கம் திரும்பாமல்  ஒரே பக்கமாக பார்த்து பேசினார், அது எனக்கு இன்னும் பெரும் சங்கடத்தை உருவாக்கி விட்டது.

என்னைப்பற்றி தவறான கருங்கோளம் அவரிடம் உருவானதை தவறு என்று கூற முடியுமா? முடியாது, அதுவே சரியானதும் ஆகும். அதேநேரம் நான் அந்த கருங்கோளத்துக்கு உரியவனா என்றால் அதுவும் இல்லை. சூழ்நிலை எப்படியெல்லாம் ஒருவரைப்பற்றிய பிம்பத்தை உருவாக்குகிறது என்பதற்கு இது ஒரு காட்டு.

இப்போது கூட ஒரு பிரச்சனையில்,  பிரச்சனை ஏன் அது போல் உருவாகிறது என்று தெளிவாக கூறியதுடன் அது அப்படி நடக்காமல் இருப்பதற்கான வழி ஒன்றையும் கூறியிருந்தார்.