வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
திங்கள், மே 29, 2017
நவீன சாவித்திரி - 1
வேலன் சிறந்த முறையில் மின் & மின்னனு கருவிகளின் பழுது பார்ப்பவன். தனியாக தொழில் செய்கிறான். ஏமாற்றுக்காரன் அல்ல. காசும் அதிகம் வாங்கமாட்டான், சரியான தொகையை தான் வாங்குவான். பழுது பார்ப்பது வீண் என்றால் அதை கூறிவிடுவான் அதற்கு எத்தொகையையும் பெற்றுக்கொள்ளமாட்டான். வெளியூர் என்றால் மட்டும் வந்து பார்த்தற்கான கூலியை வாங்கிக்கொள்வான். இதனாலேயே இவனை பல பேர் நம்பி அழைப்பார்கள். நம்பிக்கையான வேலையாள் கிடைப்பது இக்காலத்தில் அரிது அல்லவா?. பக்கத்து ஊரிலிருந்தும் அழைப்பார்கள். அதாவது 6~8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களிலிருந்து. ஓட்ட டிவிஎசு 50 தான் வைத்துள்ளான் மாற்ற சொன்னால் அது ராசியானது என்று அதை விடமறுக்கிறான்.நல்லவன், மது மாது புகை பழங்கங்கள் இல்லை, அதிகமாக தேநீர் குடிப்பான், வாய்ப்பு கிடைத்தால் வெத்தலை போடுவான். இது இரண்டும் தான் அவனின் கெட்ட பழக்கம் எனலாம். வெத்தலை பழக்கம் எப்படி வந்ததுன்னு தான் தெரியலை.
திருமணம் ஆகாதவன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன் எப்படியோ வெளியூரில் வேலை பார்க்க செல்லும் போது காதல் வலையில் விழுந்து விட்டான். அடிக்கடி வெளியூரில் வேலை இருக்குன்னு கிளம்பிடுவான் அப்ப எங்களுக்கு தெரியலை. ஒரு முறை அந்த பொண்ணு குழலி வீட்டுக்கு வந்ததும் தான் எங்களுக்கு விளக்கு எரிந்தது. அந்த பெண்ணும் அவனும் ஒரே சாதி என்பதால் பிரச்சனை இருக்காது என்று நம்பினோம். நம் நம்பைக்கு மாறாகவே எல்லாம் நடந்தது. இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. அவனின் அப்பா ஒத்துக்கலை, திருமணத்திற்கு கடும் தடையை ஏற்படுத்தினார். பெண்ணின் வீட்டிலும் திருமணத்திற்கு தடை. ஆனா பெண் மிகவும் உறுதியாக இருந்ததால் பெரியவர்களின் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் திருமணம் இரு வீட்டாரின் உள்ளன்பு இல்லாமலே நடந்தது. (வேலன் கட்டுனா குழலி தான் என்றான் ஆனால் இவ்விடயத்தில் குழலியின் திடம் மிக அதிகம்) முருகன் கோவிலில் நடந்த திருமணத்தில் கடனுக்கேன்னு இருவீட்டாரின் பெற்றோரும் கலந்துகிட்டாங்க.
திருமணத்திற்கு பின்பு மூன்று ஆண்டுகளில் குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்திலேயே நிலம் வாங்கி விட்டான். அடுத்த ஆண்டு அதில் இரண்டு அறை பைஞ்சுதை (கான்கரீட்), முற்றம் அதாவது வரபேற்பு அறை ஓடு உள்ள வீடு கட்டிவிட்டான். அவனின் பெற்றோர் அவனுக்கு திருமணமானதும் ஊர்பக்கம் வேற வீட்டுக்கு குடிபோயிட்டாங்க. புது பொண்டாட்டி ராசியனவ, அதான் வந்ததும் வேலன் தார்சு வீடு கட்டிட்டான் மாமனா மாமியா நங்கியா என்று யார் தொந்தரவும் இல்லாதது குழலியின் புண்ணியம் என்று அக்கம் பக்கத்தில் பேசினார்கள். அவ நல்லவ தான், எல்லோரிடமும் நன்றாக தான் பழகுவாள், வேலனுக்கு விட்டவ இல்லை. புது வீட்டுக்கு வந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றார்கள். இப்ப மாமனார் மாமியார் எல்லாம் இவக்கூட ராசியாயிட்டாங்க. அடிக்கடி இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பலகாரம் வரும். வேலனைவிட இவதான் இப்ப அவங்களுக்கு நெருக்கம், குழலியின் பெற்றோரும் ராசியாகி விட்டார்கள்,
இவன் வேலையைப் பார்த்து அவனை நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு கூப்பிட்டதும் நல்ல சம்பளம் என்பதாலும் வார விடுமுறையில் தனியாக சிறு சிறு வேலைகளை செய்யலாம் என்பதாலும் மாத சம்பளத்திற்கு போக உடன் பட்டான். அதுவும் நல்லபடியாக போய் கொண்டிருந்தது. யார் கண்ணு பட்டதோ தெரியலை இப்ப வேலன் வீட்டில் புருசன் பொண்டாட்டி தகராறு. அடிக்கடி நல்லா அடி போட்டுடுவான். அவ கத்தலை கேட்டு அடிக்கறான்னு தெரிந்து நாங்க தான் விலக்கி விடுவோம். அவங்களுக்குள்ள இப்ப பேச்சு வார்த்தை இல்லை. அதாவது இவ பேசுவா அவன் பேசமாட்டான்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஊர்ல பொருளாதாரம் படுத்து விட்டது எந்த தொழிலும் சரியாப்போகலை, நிறைய வீடுகள் காலியாக உள்ளது, முதன்மை சாலையில் உள்ள கடைகள் பலது கூட பல மாதங்களாக காலியாக உள்ளது. இந்த வீடுகள், கடைகள் எல்லாம் காலியாக இருப்பதே ஊர் நிலவரத்தின் அறிகுறி. என் வாழ்நாளில் இவைகளை ஒரு நாளும் காலியாக பார்த்ததே இல்லை, இவை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும். காலியாவது அரிது அப்படி ஆனதை வேண்டும் என்பதற்காக சிபாரிசு எல்லாம் பிடிப்பார்கள்.
ஊரின் பொருளாதாரம் கடுமையாக படுத்து விட்டதால் பல முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை. வேலனுக்கோ அதிக சம்பளம் கொடுத்து அவங்க முதலாளி வைத்துள்ளார். பொருளாதார தாக்கம் இல்லாம அவரு மட்டும் தப்ப முடியுமா? அவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.. இந்தா சரியாகிடும் அந்தா சரியாகிடும் என்று கை காசை செலவு செய்து சமாளித்தார், நிலமை இப்போதைக்கு சரியாவது போல் தெரியலை, எத்தனை மாதங்கள் தான் சமாளிப்பார்? அதனால் தன் கடையில் இருந்து நிறைய பேரை தூக்கிவிட்டார். வேலனும் அதில் அடிபட்டு போனான். எப்படியோ சூதாட்ட பழக்கமும் இப்ப அவனிடம் சேர்ந்து விட்டது. யாராவது கூப்பிட்டாலும் சரியாக வேலை செய்ய போவதில்லை, வீட்டில் குழலிக்கு அடி விழுவது அதிகமாகிவிட்டது அதாவது இரவு மட்டும் என்பது போய், பகலிலும் சேர்த்து விழ ஆரம்பித்து விட்டது. உச்சமாக இரண்டு மாதம் கழித்து குழலியை வீட்டை விட்டு துரத்திவிட்டான். யார் சொன்னாலும் கேக்கமாட்டிக்கிறான் வேலை போனதற்கு அவ வந்த நேரம் சரியில்லை என்பான் இல்லைன்னா வேற ஏதாவது காரணங்கள் கூறுவான். நம்மால் அவனை திருத்த முடியாது என்று விட்டு விட்டோம். ஆனா இப்பவும், குழலிக்கு மட்டும் தான் அவன் கெட்டவன், மற்றவர்களிடம் நல்லா தான் பழகுகிறான்.
குழலியின் அப்பா தங்களோடு வந்து விடுமாறு கூறியதை மறுத்து இந்த ஊர்ல தான் இருப்பேன் என்று அவங்க கூட வர முடியாது என்று கூறிவிட்டாள். வேலனின் பெற்றோரும் தங்கள் வீட்டுக்கு வருமாறு கூறியதையும் மறுத்து விட்டாள். ஏன்னா அது அவ வீட்டுக்காரனுக்கு பிடிக்காதாம். தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தாள். தினமும் இங்க வருவதும் வேலன் திட்டி அடித்து விரட்டுவதுமாகவே இருந்தது. குழந்தைக்காகவாவது மனம் இறங்குவான்னு பாத்தா பழைய மாதிரியே இருக்கான். இப்பவும் பாருங்களேன் புருசனை இம்மி அளவும் விட்டு கொடுக்காமல் தான் பேசுவா. இவளைப் போய் துரட்டிட்டானே இவளை மாதிரி யார் கிடைப்பார்கள் என்று பேசிக்குவோம். எல்லாம் இவனின் கெட்ட நேரம் தான் என்று பேசிக்கிட்டோம்.ஒரு முறை தூக்கு மாட்டிக்கிட்டான் அவன் நல்ல நேரம் நான் ஏதோ கேட்க அங்க போனதால் அவனை காப்பாற்ற முடிந்தது, கொஞ்சம் தாமதமா நான் போய் இருந்தாலும் அவனுக்கு பால் ஊற்றும் படி ஆகிவிட்டிருக்கும். இந்த விடயம் குழலிக்கு தெரிந்து அழுது ஆர்பாட்டம் பண்ணிவிட்டாள், பிறகு எங்களிடம் அடிக்கடி அவன் வீட்டுக்கு போயி பார்க்க கெஞ்சி கேட்டுக்கொண்டாள். அடிக்கடி நான் அவன் வீட்டுக்கு போவதும் அவன் எங்க வீட்டுக்கும் வருதும் நடக்கும், எங்களுக்கு பையன் மாதிரி தான் அவன்.
தினம் வேலன் வீட்டுக்கு தினம் வந்து கொண்டிருந்தாள். இப்படி ஒரு ஆண்டு கழிந்தது. இப்போதெல்லாம் தினமும் வருவதில்லை அவன் மனசு மாறுவது போல் தெரியவில்லை, அதனால் தினம் வருவதில்லை. ஆனாலும் இப்போது வாரம் ஒரு முறையாவது வந்துவிடுவாள்.
இப்ப சிறிதளவு மனசு மாறிவிட்டதால் குழலிக்கு அடி விழுவதில்லை, வரும் போது இருக்கும் வேலனின் அனைத்து அழுக்கு துணிகளை துவைத்து வைத்து விட்டு சென்று விடுவாள். அப்ப அவன் இருக்க மாட்டான் ஏன்னா மூஞ்சில முழிக்க கூடாது என்ற வைராக்கியம் மேலும் பாத்தா கோவம் வந்து அடிச்சிடுவானே. இப்படியே எட்டு மாதம் போனது. ஒரு நாள் இரவு எட்டு அல்லது ஒன்பதரை மணி இருக்கும் வேலன் வீட்டுக்கு திடீர்ன்னு போனேன். அறையில் யாரோ இருப்பது போல் இருந்தது, அதைப்பற்றி ஏதும் கேட்டுக்கலை. இரண்டு வாரம் இருக்கும் காலையில் ஐந்து மணிவாக்குல ஒரு உருவம் அவங்க வீட்டை விட்டு போனது. பையனுக்கு பொம்பளை தொடர்பு வந்திருச்சோன்னு ஐயம் ஆகிடுச்சு. சரி யார் அதுன்னு கண்டுபிடிப்போமுன்னு அடுத்த நாள் ஐந்து மணிக்கு எழுந்து கவனிச்சேன். யாரும் அங்கிருந்து போகலை, விடமுடியுமா? அதனால அடுத்த நாள் நாலரை மணிக்கு எழுந்து கவனிக்க தொடங்கினேன். ஐந்து மணி வாக்குல ஒரு உருவம் அவங்க வீட்டிலிருந்து போனது. நான் சத்தம் போட்டுவிட்டு வேகமாக போய் யார் அதுன்னு பார்த்தேன்.
பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளானேன்
(தொடரும்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)