வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 01, 2013

முள்கரண்டி

பிறந்து வளர்ந்து படித்தது கொசப்பள்ளம் என்னும் சிற்றூர் ஒன்றில். கப்பி சாலையை ஒட்டி எங்க வீடு இருந்தது. 6 எக்டேர் கிணற்று பாசனமுடைய எங்க தோட்டத்தில் தான் வீடு கட்டியிருந்தோம். எங்கவூட்டுக்கு பெரியசாளை அப்படின்னு பெயர். பெரியசாளை வூட்டு பையன் அப்படின்னு தான் என்னை அடையாளம் சொல்லுவாங்க. ஊரிலிருந்து 2 தோட்டத்தை தாண்டுனா எங்க வீடு வந்துடும். எங்கவூரில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு சிற்றூரான தருமாபாளையத்தில் தான் நான் படிச்ச துவக்கப்பள்ளி இருந்தது. அது தான் பக்கத்தில் இருந்த ஐந்து சிற்றூர்களுக்கான ஒரே பள்ளிக்கூடம். அங்க பெட்டிக்கடை, பால் கூட்டுறவு சங்கம் எல்லாம் உண்டு. இப்ப பெட்டிக்கடைல டீயும் போடறாங்க. மளிகை கடை அங்க இல்லை.

உயர்நிலைப்பள்ளி இருந்த ஊரில் தான் மளிகை கடை இருக்குது. நான் 9 வது படித்த போது அது மேல்நிலைப்பள்ளியாக உயர்வடைந்த காரணத்தால் என் பன்னிரண்டாவதும் அங்கே தான். எனக்கு மிதிவண்டி கிடைத்தது இங்க படிக்க வந்த பிறகு தான். ஏழாவது படிக்கும் போது வாங்கி கொடுத்தாங்க. ஆறாவது படிக்கறப்ப நடை இல்லாட்டி யார் வண்டியிலயாவது தொத்திக்கிட்டு போவேன்.

பணக்காரர்கள் போகும் உணவகங்களில் அதாவது பெரிய உணவகங்களில்  திங்கறவங்க கரண்டி, முள் கரண்டி எல்லாம் வச்சு தான் தின்பார்கள். கையால உணவை தொடுவது அரிதாக இருக்கும், இதை திரைப்படத்தில் தான் பார்த்திருக்கேன். எங்கவூர் பக்கமும் நிறைய பணக்காரர்கள் உண்டு ஆனால் அவர்கள் விவசாயத்தால் பணக்காரர்கள் ஆனவர்கள். எங்கவூர் அதாவது பக்கத்து நகரத்திலுள்ள (அதை பெரிய சிற்றூர் என்பதே பொருத்தம்) உணவகம் எதிலும் முள் கரண்டியை நான் பார்த்ததில்லை.  அந்த ஊரில் சில உணவகங்கள், ஒரு திரையரங்கு எல்லாம் இருக்கு. எங்க ஊரில் மாரியம்மன் நோம்பி (திருவிழா) போடும் போது நான் திரையரங்கு செல்ல அனுமதி கிடைக்கும். பக்கத்து தோட்டத்தில் உள்ள அண்ணனுடன் திரைப்படத்துக்கு போவேன். அந்த திரையரங்குங்குக்கு சிவசக்தி டாக்கீசு என்று பெயர். அதில் எப்பவும் பழைய படங்கள் தான் போடுவார்கள். இப்ப அங்க இன்னொரு திரையரங்கம் வந்திடுச்சு அதில் புது படத்தையும் போடறாங்க.
திரைப்படங்களில் உள்ளது போல் நானும் முள் கரண்டியை வைத்து தின்று பார்க்கவேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆண்டுகள் ஆனது தான் மிச்சம் என் முள் கரண்டி ஆசை நிறைவேறவில்லை.  திங்கறத விடுங்க பார்க்க கூட எனக்கு கொடுப்பினை இல்லை. ஒரு முறை பெரிய நகருக்கு செல்லும் வாய்ப்பும் அங்கு உள்ள பெரிய உணவகத்துக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அங்கேயும் முள் கரண்டியை காணல.  இருந்தாலும் மனசில் முள்ளு மாதிரி முள்கரண்டிய பார்க்கனும் அதால திங்கனும் என்பது குத்திக்கிட்டே இருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஊரிலேயே படித்ததால் முள் கரண்டி ஆசை நிறைவேற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  பன்னிரெண்டாவதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் பெரிய நகரின் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தது. இதனால் வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி எனக்கு முள் கரண்டி ஆசை நிறைவேறும் என்று கூடுதல் மகிழ்ச்சி.

கல்லூரி இருந்தது நகரை விட்டு சற்று தொலைவில். நாங்கள் அறை எடுத்து தங்கியிருந்தது புறநகர் பகுதியில் அதனால் பேருந்தில் தான் கல்லூரிக்கு போகமுடியும். ஊர்ல இருந்தப்ப மரத்தில் இருந்து இறக்கியதும் கிடைக்கும்  கள்ளை குடிப்பேன், வெளியில் வாங்கி குடிக்கும் பழக்கம் இல்லை, மரத்திலிருந்து இறக்கியதும் குடிக்கற கள்ளுக்கு ருசியே தனி தான். வெளிநாட்டு மது பழக்கம் சுத்தமாக இல்லை. இப்ப மாதிரி குடிமக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாங்கம் அப்ப இல்லை. கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மது குடிக்கும் பழக்கம், சிகரெட்டு பழக்கம் வந்தது. நான் குடிகாரன்னு முடிவு கட்டாதிங்க, நண்பர்கள் பிறந்தநாளுக்கு அவர்களுடன் அதை கொண்டாட மது குடிப்பேன், சிகரெட்டும் அப்பதான் புகைப்பேன். மற்றபடி வேற எந்த கொண்டாடத்திலும் மது, புகையை தொடும் பழக்கம் இல்லை. கல்லூரிக்கு வந்துட்டு இதெல்லாம் இல்லைன்னா நாம கல்லூரியில் படிச்சோம்முன்னு சொல்றது கேவலம் இல்லையா அதுக்காக தான் நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மட்டும் . ஆனால் முள் கரண்டி ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது.

நிறைய வீடுகள், கடைகள் என்று நாங்க இருந்த பகுதி நல்ல வளர்ச்சி கண்டது.  கல்லூரியில் சேரும் போது இருந்த அப்பகுதிக்கும் கல்லூரி படிப்பு முடிந்த போது அப்பகுதிக்கும் உள்ள வேறுபாடு நினைக்க முடியாத அளவு இருந்தது.  வளர்ச்சின்னா இதுதாண்டா வளர்ச்சி என்று சொல்லற மாதிரி இருந்தது.
எங்க பேருந்து நிறுத்தத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் நல்ல உயர்தர உணவகமும் வந்தது.  பேருந்தில் போகும் அந்த உணவகத்தை தாண்டி தான் கல்லூரிக்கு போகனும். அதனால் அதை கவனிப்பதுண்டு.  அங்கு வருபவர்கள் கார்களிலும் மோட்டார் சைக்கிளிலும் வருவார்கள். முதல் ஓராண்டு நாங்கள் போகவில்லை.  மது புகை பழக்கம் இல்லாத நண்பனின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து அவனும் பங்கு கொள்ளும் விதத்தில் எங்கு கொண்டாடலாம் என்று யோசித்தப்ப  இந்த உணவகத்தில் மதிய உணவு உட்கொண்டு பின் திரைப்படத்திற்கு செல்வது என்று முடிவாகியது.

நான் வருவதற்கு சிறிது நேரமானதால் பசி பொறுக்காம (என்னை  விட்டுட்டு போயிட்டாங்கன்னு சொன்னா என் மரியாதைக்கு இழுக்கு ;) ) என் நண்பர்கள் அந்த உணவகத்திற்கு மதிய உணவுக்கு சென்று விட்டார்கள். நான் அங்கு போனபொழுது 2 பேர் தின்னுட்டு வெளியேவே வந்துட்டானுங்க.  வேகம் என்றால் இதுவல்லவோ வேகம். எனக்கு என்ன வாங்கி தின்பது என்று தெரியவில்லை (முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியும்) எனவே தின்னுட்டு நிக்கறவங்கிட்ட (உணவகத்துக்குள்ளயே) என்னடா திங்கறதுன்னு கேட்டேன். அறிவாளி அவன் தின்ன உணவையே எனக்கும் கொண்டுவர சொல்லிட்டு வெளிய போயிட்டான்.

முதலில் பீங்கான் தட்டு வந்தது அடுத்து அடுத்து அடுத்து என் கனவான சிறு வயது முதல் இருந்த ஆசையான 'முள்கரண்டி'  வந்தது.  அப்போது என் உணர்ச்சியை விவரிக்க சரியான சொற்களே இல்லை.  கரண்டி, கத்தி, முள்கரண்டி மூன்றையும் ஒன்றாக தான் கொண்டுவந்தது வைத்தார்கள். 5 நிமிடத்தில் சுடசுட கோழி பிரியாணியும் சிக்கன்-65ம் வந்தது.  கூடவே சிக்கலும். எனக்கு முள்கரண்டியை வைத்து திங்க தெரியலை. என் நிலைமை மாதிரி கொடுமை யாருக்கும் வரக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். பக்கத்து மேசையில் தின்பவர்களை பார்த்து நான் முயற்சி செய்தாலும் என்னால் சரியாக முள்கரண்டியை பயன்படுத்த முடியலை (தெரியவில்லை). 10 வயசு சின்னப்பசங்க எல்லாம் முள்கரண்டிய வைத்து அழகா எடுத்து திங்கறாங்க அது என் வேதனையை மேலும் அதிகமாக்கியது. 10 நிமிடம் நான் சிரமப்பட்டதை பார்த்து ஆண்டவன் என் (இவன் வெளியில் இருந்து வந்து சில பொருட்களை வாங்க வந்தவன் அதாவது என் பர்சு) நண்பனை நான் இருக்கும் பக்கம் அனுப்பினான். அவனிடம் முள்கரண்டியை வைத்து எப்படிடா தின்னைங்கன்னு கேட்டேன் (அவனுங்களும் முள் கரண்டியில் இதற்கு முன் தின்றிறுக்க மாட்டார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை) முள்கரண்டியை வைத்து யாரும் திங்கலை நமக்கு கைதான், முள்கரண்டியை தூக்கி போட்டுட்டு கையால தின்னு என்று சொல்லிட்டு போயிட்டான்.

அப்ப தான் என் மனம் அமைதியடைந்தது. முள்கரண்டியை தூக்கி போட்டுட்டு பிரியாணியையும் சிக்கன்-65ம் நல்லா கட்டிட்டு வெளியே வந்து பீடா போட்டுட்டு அறைக்கு போனோம்.

என் முள்கரண்டி ஆசை இப்படி சோகமா முடிஞ்சிருச்சுங்க.