வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், மே 11, 2011

திமுக நம்பும் வெற்றிக்கான வாய்ப்பாடு.

2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. யார் வெற்றியாளர் என்று தெரிய மே 13 வரை காத்திருக்கனும்.  இந்த இடைக்காலத்தில் பல கருத்து கணிப்புகள் வரும். மக்கள் பெருவாரியாக வந்து வாக்களித்ததே திமுக ஆட்சியை பிடிக்காததால் தான் என்று செயலலிதா கூறுகிறார். நல்லா கவனிங்க அதிமுக ஆட்சிக்கு வரணும் என்ற காரணத்திற்காக அதிக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். தேமுதிகவுடன் கூட்டு வைத்ததினால் அதிமுகவுக்கு லாபம் தான், தேமுதிக தனித்து நின்றிருந்தால் அதிமுக பாடு திண்டாட்டாமக இருந்திருக்கும். அதிமுக வெற்றி பெற்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கமுடியும் அது திமுக மீது உள்ள வெறுப்பு. உருப்படியாக அதிமுக எந்த போராட்டத்தையும் இந்த 5 ஆண்டுகளில் நடத்தவில்லை. எதிர்க்கட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அதிமுக தான் உதாரணம்.

திமுகவின் இலவச திட்டங்களால் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர். அவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். வாக்குபதிவு அதிகமானதற்கு இது தான் காரணம். மக்கள் 2G ஊழல் பற்றி கவலைப்படவில்லை எனவே நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று திமுகவினர் கூறுகின்றனர்.  திமுகவால் ஏராளமான மகளிர் சுய நிதி குழுக்கள் பயன்பெற்றுள்ளன அவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என திமுகவினர் சொல்கின்றனர். விலைவாசி ஏற்றம், மின்சார தட்டுப்பாடு போன்றவை திமுகவிற்கு பாதிப்பை உண்டாக்கும்.

மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவிற்கு சாதகமாக இருக்குமா? யாருக்கு தெரியும்?. மே 13 அன்று தெளிவாக தெரியும் :)) .

திமுகவின் நட்சித்திரப் பேச்சாளராக நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நிறைய பேர் சொல்கின்றனர். அவர் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள இத்தேர்தலை நன்றாக பயன்படுத்தினார். அவர் திமுகவின் முதன்மை எதிரியான அதிமுகவை சாடவில்லை திமுகவும் அதிமுகவும் தான் அதிக இடங்களில் நேரிடையாக மோதுகின்றன. அவர் விஜயகாந்தை தாக்கி நிறைய பேசினார் அது திமுக குடும்ப தொலைக்காட்சிகளில் திமுக தலைவர்களின் தேர்தல் கால பேச்சை விட அதிகம் காண்பிக்கப்பட்டது.  விஜயகாந்தை மட்டும் தாக்கி பேசும் ஒருவர் எப்படி திமுகவின் நட்சத்திரப்பேச்சாளராவார் என்பது எனக்கு புரியவில்லை. அவர் முன்னனி நகைச்சுவை நடிகர் எனவே அவரை பார்ப்பதற்கே நிறைய கூட்டம் கூடி இருக்கும். இவர் பேச்சால் தேமுதிக பாதிக்கப்பட்டிருக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்.

திமுக பல வியூகங்களை போட்டது என்று சிலர் சொல்லலாம்.  எத்தனை வியூகம் போட்டாலும் அவர்கள் நம்புவது இரண்டை தான்.

1. திருமங்கலம் வாய்ப்பாடு
2. சிவகங்கை வாய்ப்பாடு



திருமங்கலம் வாய்ப்பாடு என்பது அழகிரியால் வெற்றிகரமாக இடைத்தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. அது பொதுத்தேர்தலில் பலன் தருமா என்று தெரியவில்லை ஆனால் இதனால் மக்களை கேலிக்குள்ளாக்கினது தான் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் பணம் வெளிப்படையாக வாக்காளர் கைக்கு செல்வது தடைபட்டது ஆனால் பணம் பட்டுவாடா நடந்தது. பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்கு போடுவார்களா? நிறைய வாக்கு வேறு பதிவாகியுள்ளது இது திருப்பம் ஏற்படுத்தும். எந்த மாதிரியான திருப்பம் என்பதை காண மே 13 வரை பொறுத்திருங்கள். (எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டேனா? )

திருமங்கலம் வாய்ப்பாடு பலனளிக்காவிட்டால் சிவகங்கை வாய்ப்பாட்டை பயன்படுத்தி வெற்றி பெறுவது அடுத்த வியூகம்.  இந்த வியூகத்தை பயன்படுத்தினால் வெற்றி உறுதி. சிவகங்கை வாய்ப்பாடு என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்காக. 2009 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த சிதம்பரம் திடீர் என்று 3354 வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்றதன் காரணமாக அந்த  வியூகத்திற்கு சிவகங்கை வாய்ப்பாடு என்று பெயர் வைக்கப்பட்டது.

திருமங்கலம் வாய்பாடு பற்றியும் சிவகங்கை வாய்ப்பாடு பற்றியும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். திருமங்கலம் வாய்பாடு தடையில்லாமல் செயல்படுவதை தடுப்பதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து கெடுபிடியாக நடந்து பணப்புழக்கம் வெளிப்படையாக நடப்பதை ஓரளவு குறைத்தார்கள்.

வாக்கு பதிவு முடிந்ததிற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 1 மாதம் இடைவெளி. சிவகங்கை வாய்ப்பாட்டை பயன்படுத்த அருமையான வாய்ப்பு. இதை கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையம் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது. காற்று போக முடியாத இடத்திலும் போவார்கள் நம்ம அரசியல் வாதிகள். அதனால் 4 அடுக்கு பாதுகாப்பை நாம் நம்ப முடியாது. வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் போதையில் தூங்கிக்கிட்டு இருந்ததை செய்தியில் படித்திருப்பீர்கள். அறை சாளரங்களின் கதவு உடைந்து இருந்ததாம் இதையும் செய்தியில் படித்திருப்பீர்கள். தேர்தல் ஆணையம் சிவகங்கை வாய்ப்பாட்டை தடுப்பதற்காக பெரும் சிரமப்பட்டுக்கொண்டுள்ளது.

திருமங்கலம் வாய்ப்பாடு பெருமளவில் ஊடகங்களால் பேசப்பட்டது போல் சிவகங்கை வாய்ப்பாடு பேசப்படவில்லை.  தேர்தல் எப்படியிருக்கும் என மே 13 வரை பேசுவோம். அப்புறம் ஏன் தேர்தல் முடிவு இப்படி வந்துச்சு என பேசுவோம்.