நன்கு அறியப்பட்ட பதிவர்களும் பல புதிய (எனக்கு) பதிவர்களும் தங்களது இடுகைகளில் "ற்க்" பிழை செய்வதை காண முடிந்தது. நான் பிழையின்றி தமிழ் எழுதுபவன் இல்லை, எழுதவேண்டும் என்று முயற்சிப்பவன். ஆனால் எனக்கு நன்கு தெரிந்த தமிழ் இலக்கண விதி இது. அதாவது "ற்" என்ற எழுத்திற்கு அப்புறம் மெய்யெழுத்து வராது. சந்திப்பிழையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
வல்லினப் புள்ளி எழுத்து ஆறின் (க், ச், ட், த், ப், ற்) பின்னும் மெய்யெழுத்து வராது என்பது பதிவர் சவுக்கடியால் அறிந்துகொண்ட புது விதி.
அதற்க்கு, இதற்க்கு (தவறு) ---> அதற்கு, இதற்கு (சரி)
முயற்ச்சி, அயற்ச்சி (தவறு) ---> முயற்சி, அயற்சி (சரி)
என்பதற்க்காக (தவறு) ---> என்பதற்காக (சரி)
தற்ப்போது (தவறு) ---> தற்போது (சரி)
இன்னுமொரு விதி , எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் (புள்ளி வைத்தயெழுத்தில்) தொடங்காது. இந்த விதியை மீற கிரந்த எழுத்தை பயன்படுத்துறாங்க. கிரந்தம் தமிழ் எழுத்து இல்லை எனவே தமிழ் இலக்கண விதி இதற்கு பொருந்தாது என்று நினைக்கிறார்கள் போலும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்டாலின் என்ற பெயரை காட்டுவார்கள். இதை இசுடாலின் என்று எழுதலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் இசுடாலின் கருணாநிதியின் மகன், தற்போதய துணை முதல்வர், எனவே இந்த பெயரை காட்டுக்கு அழைப்பவர்கள் ஏராளம். ருசுய அல்லது ஜார்ஜிய மொழியில் இசுடாலினை எப்படி பலுக்குவார்கள்\உச்சரிப்பார்கள் என்று தெரியாது. இதைக்காட்டி பலரும் புள்ளிவைத்த கிரந்தம் எழுத்தில் தமிழ் சொற்களை தொடங்கி எழுதுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் தமிழ் மெய்யெழுத்திலேயே தமிழ் சொற்களை தொடங்கி எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இது மிக மிக தவறான போக்கு....
விதி என்பதே அதை மீறுவதற்கு தான் என்று சப்பை கட்டு கட்டாமல் இருந்தால் சரி. :-((