தேர்தல் வந்தாலும் வந்தது அரசியல் கட்சிகளின் பரபரப்பை தூக்கி சாப்பிடற மாதிரி நம் வலைபதிவர்கள் தூள் கிளப்பிட்டாங்க. வலைப்பதிவு மக்களோட சிறப்பு எல்லோரும் பட்டதாரிகள். திமுக, அதிமுக, தேதிமுக, மதிமுக, பாமக, வி.சிறுத்தைகள், பாசக என்று எல்லோரையும் ஆதரித்தும் எதிர்த்தும் காரசாரமான பதிவுகள். பினாத்தல் சுரேஷ் அடுத்த முறை "கொள்கை டிராக்கரில்" வலைப்பதிவில் எப்படி எழுதுவார்கள் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
                மே 8 உடன் இதற்கு முடிவு வரப்போகிறது. ( அப்படின்னு நீ சொல்லலாம் நாங்க சொல்லலையே என்று சிலர் சொல்வது கேட்குது. ;-))
               இப்படி விலாவாரியா காரசாரமா சமூக, சாதி, மத, இன, கட்சி அக்கறையுடன் தேர்தலை அலசுன எத்தனை பேர் இந்த தேர்தலில் வாக்கு போட போறாங்க?
               படிச்சவன் வாக்கு போட போகமாட்டான். அரசியல்வாதிகளே நாட்டின் சீர்கேட்டுக்கு காரணம் இந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாடு உருப்படாது என்று வாய் கிழிய வெட்டி வியாக்கானம் பேசுபவன் வாக்கு போட போகமாட்டான். பணத்துக்காக வாக்கு போடுபவர்கள் இருப்பதால் தான் நாடு உருப்படாமல் இருக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும் என்று வியாக்கானம் பேசுபவன் வாக்கு போட போகமாட்டான். அரசியல்வாதிகள் படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டார்கள் படிக்காத மக்கள் நிறைய இருந்தாதான் அவங்க பொழப்பு ஓடும்ன்னு சொல்ற படித்தவன் வாக்கு போட போகமாட்டான்.
               இந்த மாதிரி படித்தவர்களை பற்றிய உண்மை குற்றச்சாட்டுகள் பல உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால் வலைபதிவர்களே நீங்கள் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகிவிடாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.
               வாய்ப்பு இருந்தும் வாக்கு போடாமல் இருப்பது மாபெரும் தவறு என்பதை குறைந்தபச்சம் வலைப்பதிவர்களாவது உணர்ந்து வாக்கு போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
               வாக்கு பதிவு நிறைய இருந்தால் தான் மாற்றம் வரும், ஆட்சியில் இருக்கும் அரசுக்கும் பயம் (கொஞ்சமாவது) வந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும்.
               நான் வெளிநாட்டில் வசிப்பதால் என்னால் வாக்கு போடமுடியாது ஆனா என் பெற்றோர்களை வாக்கு போடசொல்லுவேன். ( என் வாக்கையல்ல அவங்க வாக்கை ;-) ) என் வாக்கையும் யாராவது போட்டு விடுவார்கள் என்பது வேற கதை.
               வாக்கு போடமுடியாத சூழலில் நீங்கள் இருந்தால் உங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகளை வாக்கு போட சொல்லுங்கள். நம்மால் முடிந்த சனநாயக கடமை.