வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, ஜூலை 06, 2019

காலையில் விண்மீன் (Morning star)

காலையில் விண்மீன்

இறங்கு முக போக்கிலேயே தோன்றும் மூவுலக்கை ஒழுங்கான இது ஏறு முக போக்கின் (காளை) தொடக்கம் ஆகும். இது மூன்று உலக்கைகளை வைத்து கட்டமைக்கப்படும் ஒழுங்காகும்.


  1. காலையில் விண்மீனில் முதல் உடல் நீண்ட கருப்பாகும். 
  2. இரண்டாவது உடல் முதல் உடலிருந்து  நன்கு இடைவெளி விட்டு கீழாக தோன்றும். இது சிறியதாகவும் முதல் நாள் உடலை தொடாமல் விண்மீன் போல் இருக்கும். இச்சிறிய உடல் முதலீட்டாளர்கள் வாங்குவதா விற்பதா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளதை உணர்த்துகிறது. 
  3. மூன்றாவது நாள் உடல் வெள்ளை நிறத்துடன் முதல் நாளின் முடிவை விட சற்று அதிகமாக முடிந்திருக்கும். 


மூன்றாவது நாள் உடல் முதல் நாள் உடலின் பாதியை தொடும் அளவு இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம், பாதிக்கும் மேல் எந்தளவு நீளமானதாக உள்ளதோ அது ஏற்படப்போகும் போக்கு மாற்றத்தின் வலிமையை குறிக்கும்.

Image result for Morning star pattern

முதல் நாள் உடலும் மூன்றாம் நாள் உடலும் நீளமானதாக இருந்தாலோ விண்மீனின் (இரண்டாம் நாள்) உடல் சிறிதாக குழப்பமான மனநிலையை எதிரொளித்தாலோ இரண்டாம் நாள் உடல் முதல் & மூன்றாம் நாளை தொடாமல் இடைவெளியுடன் இருந்தாலோ போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.

இரண்டாவது நாள் தோன்றும் உடலின் நிறம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் வெள்ளையாக இருப்பது சிறப்பு.

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

  • தெளிவான இறங்கு முகத்தில் காலையில் விண்மீன் தோன்ற வேண்டும்.
  • முதல் நாள் கருப்பு உடலும் மூன்றாம் நாளின் வெள்ளை உடலும் நீளமாக இருப்பது சாலச்சிறந்தது.
  • முதல் நாளுக்கும்  இரண்டாம் நாளுக்குமான இடைவெளி  அதிகமாக இருப்பது சிறப்பு.
  • முதல் நாள் கருப்பு உடலின்  நீளத்திற்கு   அருகிலோ அல்லது அதை விட நீளமாக மூன்றாம் நாளின் வெள்ளை உடலின் நீளம் இருந்தால் போக்கு  மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
  • முதல்  நாளும் மூன்றாம்  நாளும் அதிக வாங்கல் விற்றல் நடுந்திருக்க வேண்டும்.



போக்கு மாற்றம் நடைபெறும்  என நினைக்க  காரணம்.

தெளிவான இறங்கு  முக போக்கில் பெரும் விற்றல் நடந்த நாளின் இறுதி கட்டத்தில் காளைகள் உள்நுழையும். முதல் நாளின் முடிவை விட அதிக இடைவெளிவிட்டு கீழ் தொடங்கும் இரண்டாம் நாளின் சிறிய உடல் முதலீட்டாளர்களின் குழப்பமான மனநிலையை காட்டும். மூன்றாம் நாள் கரடிகள் நம்பிக்கையிழந்து காளைகள் செல்வாக்கு பெற்று இரண்டாம் நாளின் தொடக்கம்\முடிவை விட அதிக மேல் இடைவெளியில் தொடங்கி ஓடும்.




வெள்ளி, ஜூலை 05, 2019

கரடி புள்ளத்தாச்சி Bearish Harami

கரடி புள்ளத்தாச்சி
இரட்டை உலக்கை ஒழுங்கான இது ஏறுமுக போக்கிலேயே ஏற்படும்.

  • முதல் நாள் பெரிய வெள்ளை உடலும் அடுத்த நாள் சிறிய கருப்பு உடலும் தோன்றும். 
  • இந்த சிறிய கருப்பு உடல் வெள்ளை உடலுக்குள்  முற்றிலும் அடங்குவதாக இருக்கும். 
  • முதல் நாளுக்கு முந்தைய நாளும் வெள்ளை உடல் தோன்றி ஏறு முக போக்கை காட்டும். இந்த ஒழுங்கு உடனடியாக ஏறு முக போக்கு முடிவுக்கு வருவதை குறிக்கும்.



முதல் நாள் இருக்கும் வெள்ளை உடல் ஏறு முக போக்கு தொடர்வதை காட்டுகிறது. அடுத்த நாள் உடல் முதல் நாள் உடலில் இருந்து வெளிவருவது போல் இருக்கும். பொதுவாக இதன் நிறம் கருப்பாக இருக்கும் ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெழுகுவர்த்தியின் அளவு & அதன் இடத்தை பொருத்து போக்கு மாற்றத்தின் வீரியம் இருக்கும்.  பெரிய வெள்ளை உடலும் அதற்கு அடுத்த நாள் கருப்பு உடலும் தோன்றுவது ஏறு முக போக்கு முடிவுக்கு வருவதன் அறிகுறியாகும். மேற்கத்திய “உள் நாள்” என்பது உடலும் அதன் குச்சிகளும் முந்தைய நாளின் உடலுக்குள் அடங்குவதாகும் ஆனால் இதில் உடல் மட்டுமே முந்தைய நாளின் உடலுக்குள் அடங்கும்.


சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

  • கருப்பு மற்றும் வெள்ளை உடல்கள் பெரிதாக இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
  • கருப்பு உடல் அளவு, வெள்ளை உடல் அளவுக்கு மிக அருகில் இருந்தால் அதாவது முந்தைய நாள் தொடக்கத்துக்கு அருகில் அடுத்த நாளின் முடிவு இருந்தால் கருப்பு உடலின் அளவு எவ்வளவாக இருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.


போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கவைக்கும் காரணி

ஏறுமுக போக்கிற்கு பின் தோன்றும் பெரிய வெள்ளை உடலுக்கு பின் கரடி (கருப்பு உடல்) தோன்றி முந்தைய நாள் முடிவை விட குறைவான விலையில் அன்றைய நாளின் தொடக்கத்தை ஆரம்பிக்கும். இதனால் நெடுக்கர்கள் கவலை கொண்டு பங்குகளை விற்று லாபத்தை எடுக்க முயல்வார்கள். இதனால் அன்றைய நாளின் பங்கின் முடிவு விலை தொடக்கத்தை விட குறைந்து காணப்படும். முடிவு விலை குறைந்து காணப்படுவதால் காளைகள் கவலை கொள்ளும். போக்கு பாதிப்படைந்துள்ளது நன்கு தெரிகிறது. சிறிய கருப்பு உடல் போக்கு மாறுகிறது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது. குறுக்கர்களின் விற்பனையாலும்  நெடுக்கர்கள் லாபத்தை எடுக்க பங்கை விற்பதாலும் வர்த்தக அளவு அதிகரித்து காணப்படும்.


காளை புள்ளத்தாச்சி (Bullish Harami)

காளை புள்ளத்தாச்சி
இரட்டைத்தடி ஒழுங்கான இது போக்கு மாற்றத்தை குறிப்பிடும் ஒழுங்காகும். முதல் நாள் பெரிய கருப்பு உடலும் அடுத்த நாள் சிறிய வெள்ளை  உடலும் தோன்றும். இந்த சிறிய வெள்ளை  உடல் கருப்பு உடலுக்குள்  முற்றிலும் அடங்குவதாக இருக்கும். இந்த ஒழுங்கு உடனடியாக இறங்கு முக போக்கு முடிவுக்கு வருவதை குறிக்கும்.

முதல் நாள் இருக்கும் கருப்பு உடல் இறங்கு முக போக்கு தொடர்வதை காட்டுகிறது. அடுத்த நாள் உடல் முதல் நாள் உடலில் இருந்து வெளிவருவது போல் இருக்கும். பொதுவாக இதன் நிறம் வெள்ளையாக இருக்கும் ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெழுகுவர்த்தியின் அளவு & அதன் இடத்தை பொருத்து போக்கு மாற்றத்தின் வீரியம் இருக்கும்.  பெரிய கருப்பு உடலும் அதற்கு அடுத்த நாள் வெள்ளை உடலும் தோன்றுவது இறங்கு முக போக்கு முடிவுக்கு வருவதன் அறிகுறியாகும். மேற்கத்திய “உள் நாள்” என்பது உடலும் அதன் குச்சிகளும் முந்தைய நாளின் உடலுக்குள் அடங்குவதாகும் ஆனால் இதில் உடல் மட்டுமே முந்தைய நாளின் உடலுக்குள் அடங்கும்.

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
* கருப்பு மற்றும் வெள்ளை உடல்கள் பெரிதாக இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
* வெள்ளை உடல் அளவு கருப்பு உடல் அளவுக்கு மிக அருகில் இருந்தால் அதாவது முந்தைய நாள் தொடக்கத்துக்கு அருகில் அடுத்த நாளின் முடிவு இருந்தால் வெள்ளை உடலின் அளவு எவ்வளவாக இருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.


ஏன் போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கறாங்க?

விற்பவர்கள் அதிகம் சந்தையில் உள்ளதால் இறங்கு முக போக்கு தொடர்கிறது இதன் பின் காளை உள்நுழைந்து அடுத்த நாள் தொடக்க விலையை முந்தைய நாளின் முடிவை விட அதிகமாக வைக்கும். இதனால் குறுக்கர்கள் கவலையடைந்து நட்டத்தை குறைப்பதற்காக பங்குகளை வாங்கத்தொடங்குவர். இதனால் பங்கின் விலை அதிகரித்து அன்றைய நாளில் அதிகமாக முடியும் (வெள்ளை உடல்). இது குறு விற்பனையாளர்களுக்கு போக்கு மாறுகிறது என்பதை உணர்த்தும். குறுக்கர்கள் (short sellers) நிறைய விற்பதால் வழக்கத்தை விட பங்கின் வாங்கல் விற்றல் அதிகமாக இருக்கும். இரண்டாம்  நாள் டோஜி தோன்றினால் அது “புள்ளத்தாச்சி குறியீடு” எனப்படும். அது போக்கு மாற்றம் ஏற்படுமா என்ற ஐயத்தை ஏற்படுத்தும்.

காளை புள்ளத்தாச்சிக்கும் காளை விழுங்கிக்கும் உள்ள வேறுபாட்டை அறிக. இவை இரண்டும் இது அதுவா, அது இதுவா என குழப்பிடும்.