வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஜூலை 31, 2019

உறுதியான பாய் Mat Hold


மூன்று வழிமுறை  ஒழுங்கு போல இந்த ஒழுங்கில் ஐந்து உலக்கைகள் பங்கு  பெறும். பார்க்க இரண்டும் ஒன்று போல தோன்றும் , இவ்விரண்டுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.

உறுதியான பாய்  - காளை
இது அரிதாக தோன்றும் சிக்கலான ஆனால் நம்பிக்கையுள்ள  ஒழுங்கு. இதை எப்படி அறிவது?


  1. முதலில் ஏறுமுக போக்கு இருக்க வேண்டும்.
  2. அடுத்ததாக  நீளமான வெள்ளை நிறமுடைய உடல் தோன்றவேண்டும்
  3. வெள்ளை உடலுக்கு மேல் இடைவெளி விட்டு சிறிய கருப்பு உடல் தோன்ற வேண்டும்
  4. அக்கருப்பு உடலைத்தொடர்ந்து இரு கருப்பு உடல்கள்  தோன்றனும். கருப்பு உடலின் தொடக்கமும் முடிவும் அதற்கு முந்தைய கருப்பு உடலின்  தொடக்கம், முடிவுக்கு கீழ் இருக்க வேண்டும்.
  5. மூன்று கருப்பு உடல்களுக்கு அடுத்து நீளமான வெள்ளை உடல்  தோன்ற   வேண்டும்.
  6.  இந்த வெள்ளை உடலின் தொடக்கம் முதலில் தோன்றிய வெள்ளை உடலின் தொடக்கம் மற்றும் முடிவை விட அதிகமாக இருக்க வேண்டும். இது மூன்று கருப்பு உடல்களையும் விழுங்குவதாக இருக்க வேண்டும். (படம் பார்க்க)
ஏன் இந்த ஒழுங்கு காளை ஓட்டத்தை தொடரும் என்று நினைக்கறாங்க?

காளைகள் கட்டுப்பாட்டில் சந்தை இருப்பதை நீளமான வெள்ளை உடல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்த நாள் காளை விலையை உயர்த்தி இடைவெளியுடன் தொடங்கும் ஆனால் காளையை கரடி அமுக்கிவிட்டு,   மெதுவாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக கரடிகள் விலையை குறைக்கும். மூன்று நாள்கள் முயன்றும் வெள்ளை உடலின் தொடக்கத்தை எட்ட முடியாதது கரடியின் வலிமையின்மையை காட்டுகிறது.  பின்பு காளை  சீற்றம் கொண்டு மூன்று நாள்கள் உருவான கருப்பு உடல்களை விழுங்கும்  அளவுக்கு பெரிதாக எழும். இது கரடிகள் போக்கு மாற்றம் ஏற்பட செய்த முயற்சி தோல்வியடைந்ததை காட்டுகிறது.


உறுதியான பாய்  - கரடி
இது அரிதாக தோன்றும் சிக்கலான ஆனால் நம்பிக்கையுள்ள  ஒழுங்கு. இதை எப்படி அறிவது?




  1. முதலில் இறங்கு முக போக்கு இருக்க வேண்டும்.
  2. அடுத்ததாக  நீளமான கருப்பு நிறமுடைய உடல் தோன்றவேண்டும்.
  3. கருப்பு உடலுக்கு இடைவெளி  விட்டு கீழே சிறிய வெள்ளை உடல் தொடங்க வேண்டும்.
  4. மேலும் இரு சிறிய வெள்ளை உடல்கள் தோன்ற வேண்டும். இவற்றின் முடிவு முந்தைய நாள் உடலின் முடிவை விட அதிகமாக இருக்கவேண்டும். 
  5. இந்த வெள்ளை உடல்களின் முடிவு முதல் நாள் கருப்பு உடலின் தொடக்கத்தை எட்டாமல்  இருக்க வேண்டும்.
  6. வெள்ளை உடல்களுக்கு பின் தோன்றும் நீளமான கருப்பு உடல் முதலில் தோன்றிய கருப்பு உடலின் முடிவுக்கு கீழாக  முடியும். 


ஏன் இந்த ஒழுங்கு கரடி ஓட்டத்தை தொடரும் என்று நினைக்கறாங்க?

கரடிகள் கட்டுப்பாட்டில் சந்தை இருப்பதை நீளமான கருப்பு உடல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்த நாள் கரடி விலையை மேலும் குறைத்து கீழ்  இடைவெளியுடன் தொடங்கும் ஆனால் கரடியை காளை அமுக்கிவிட்டு,  காளைகள் மெதுவாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக  விலையை அதிகரிக்கும். மூன்று நாள்கள் முயன்றும் கருப்பு உடலின் தொடக்கத்தை எட்ட முடியாதது காளையின் வலிமையின்மையை காட்டுகிறது.  பின்பு கரடி  சீற்றம் கொண்டு  மூன்று நாள்கள் காளைகள் உருவாக்கிய விலை ஏற்றத்தை முறியடித்து இதற்கு முன் தோன்றிய கரடியின் முடிவை விட கீழாக  முடியும்.  இது காளைகள் போக்கு மாற்றம் ஏற்பட செய்த முயற்சி தோல்வியடைந்ததை காட்டுகிறது.

செவ்வாய், ஜூலை 30, 2019

மூன்று இடைவெளி Three Gap Pattern


மூன்று இடைவெளி என்ற இது உருவாக நான்கு உலக்கைகள் தேவை. காளைன்னா  மேல மேல மேல  கரடின்னா கீழ கீழ கீழ .

மூன்று இடைவெளி - கரடி
இடைவெளியுள்ள படி மாதிரி இது இருக்கும்.  இதை எப்படி அறிவது?



  1. முதலில் ஏறுமுக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவதாக வெள்ளை உடல் தோன்றனும். 
  3. மூன்றாவதாக முன்பு தோன்றிய வெள்ளை உடலுக்கு மேல் இடைவெளி விட்டு வெள்ளை உடல் தொடங்கனும்.
  4. நான்காவதாக  மேல் உள்ளது போல் மேலும் இரு உலக்கைகளின் வெள்ளை நிற உடல்கள் அதற்கு முந்தைய உடலுக்கு மேல் இடைவெளி விட்டு தொடங்கனும். (படத்தை பாருங்க புரியும்)
சிலர் தொடர்ச்சியா  மூன்று இடைவெளி இருக்கனும் என்று அவசியமில்லை ஏறு முகத்தில் இருந்தால் போதும் என்கிறார்கள்.

இது புகழ்பெற்ற ஒழுங்கு அல்ல என்றாலும் இவ்வொழுங்கு ஏற்பட்டால் அதை  புறக்கணிக்கக்கூடாது.


இதை எப்படி வணிகர்கள் பார்க்கறாங்க?

ஏறுமுகம் காளையின் கட்டுப்பாட்டில் சந்தை உள்ளதை தெரிவிக்கிறது. உலக்கைகள் மூன்று நாள்கள் மேல் இடைவெளியில் செல்வது காளை தறி கெட்டு ஓடுவதை குறிக்கிறது. தறிகெட்டு ஓடியதால் காளை களைப்படைந்து வலிமை இழந்து  கரடி கட்டுப்பாட்டை எடுக்க வழிவிடுகிறது. இதனால் போக்கு மாற்றம் ஏற்படுகிறது.

மூன்று இடைவெளி - காளை

இடைவெளியுள்ள படி மாதிரி இது இருக்கும்.  இதை எப்படி அறிவது?



  1. முதலில் இறங்குமுக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவதாக கருப்பு உடல் தோன்றனும். முதல் இரு உடல்களுக்கு நிறம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கருப்பா  இருந்தா சிறப்பு.
  3. மூன்றாவதாக முன்பு தோன்றிய கருப்பு  உடலுக்கு கீழ் இடைவெளி விட்டு அடுத்த கருப்பு  உடல் தொடங்கனும்.
  4. நான்காவதாக  மேல் உள்ளது போல் மேலும் இரு உலக்கைகளின் கருப்பு நிற உடல்கள் அதற்கு முந்தைய உடலுக்கு கீழ் இடைவெளி விட்டு தொடங்கனும். (படத்தை பாருங்க புரியும்)
சிலர் தொடர்ச்சியா  மூன்று இடைவெளி இருக்கனும் என்று அவசியமில்லை ஏறு முகத்தில் இருந்தால் போதும் என்கிறார்கள்.

இது புகழ்பெற்ற ஒழுங்கு அல்ல என்றாலும் இவ்வொழுங்கு ஏற்பட்டால் அதை  புறக்கணிக்கக்கூடாது.

மூன்றாவதா ஏற்பட்ட இடைவெளி நிரப்பப்பட்டால் போக்கு மாற்றம் நடைபெறுகிறது என கணிக்கலாம்.

இதை எப்படி வணிகர்கள் பார்க்கறாங்க?

இறங்கு முகம் கரடியின் கட்டுப்பாட்டில் சந்தை உள்ளதை தெரிவிக்கிறது. உலக்கைகள் மூன்று நாள்கள் கீழ் இடைவெளியில் இறங்குவது கரடி அதலபாதாளத்தை நோக்கி விரைவாக செல்வதை குறிக்கிறது. அவ்ளோ பெருத்த உடம்ப வச்சிக்கிட்டு விரைவா போனதால் கரடி களைப்படைந்து வலிமை இழந்து  காளை கட்டுப்பாட்டை எடுக்க வழிவிடுகிறது. இதனால் போக்கு மாற்றம் ஏற்படுகிறது.

திங்கள், ஜூலை 29, 2019

மூவுலக்கை தாக்குதல் Three Line Strike


மூவுலக்கை   தாக்குதல் அப்படின்னு சொன்னாலும் நாலு  உலக்கைகளை இவ்வொழுங்கை அமைக்கின்றன. மூன்று உலக்கைகள் படி மாதிரி செல்லும். நான்காவது உலக்கை மூன்று  உலக்கைகளையும் விழுங்கி விடும். அந்த அளவு நீளத்தில் இருக்கும்.

மூவுலக்கை தாக்குதல்- காளை
இதை எப்படி அறிவது?



  1. முதலில் ஏறுமுகம் இருக்கனும்
  2. இரண்டாவது  வெள்ளை உடல் நிறம் தோன்றனும்
  3. மூன்றாவதும் வெள்ளை உடல் நிறம் தோன்றனும். அதன் முடிவு இதற்கு முன் நாள் தோன்றிய வெள்ளை உடலை விட மேல இருக்கனும்.
  4. நான்காவதாகவும் வெள்ளை உடல் நிறம் தோன்றனும்  ஆனா அதன் முடிவு இதற்கு முன் நாள் தோன்றிய வெள்ளை உடலை விட மேல இருக்கனும்.
  5. ஐந்தாவதா பெரிய கருப்பு நிற உடல் மூன்று வெள்ளை உடல்களும் அடங்க அளவு நீளமா தோன்றனும் அதாவது மூன்றாவது வெள்ளை உடலின் முடிவுக்கு அதிகமாவும் முதல் வெள்ளை உடலின் தொடக்கத்துக்கு குறைவாகவும் இருக்கும் (உடலின் நீளம் விலை அல்ல)

ஏறுமுகத்தில் தோன்றும் மூன்று வெள்ளை உடல்களும் ஏறுமுகம் தொடர்வதை காட்டுகிறது. நீளமான கருப்பு உடல் மூன்று வெள்ளை உடல்களால் கிடைத்த லாபத்தை விழுங்கி விடும் ஆனால் ஒரே நாளில் மூன்று  நாள் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுப்பதால் அது இறங்கு முகம் ஏற்படுவதை தடுத்து விடும் பின் மீண்டும் ஏறு முகம் தொடரும் என்று எண்ணுகிறார்கள்.  இது   நம்பத்தகுந்தது அல்ல.

மூவுலக்கை தாக்குதல் - கரடி
இதை எப்படி அறிவது?



  1. முதலில் இறங்கு முக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவது கருப்பு உடல்  தோன்றனும்
  3. மூன்றாவதும்  கருப்பு உடல் தான். அதன் தொடக்கமும் முடிவும் இதற்கு முன் நாள் தோன்றிய கருப்பு உடலை விட கீழ  இருக்கனும்.
  4. நான்காவதும் கருப்பு உடல் தான். அதன் தொடக்கமும் முடிவும் இதற்கு முன் நாள் தோன்றிய கருப்பு உடலை விட கீழ  இருக்கனும்.
  5. ஐந்தாவததாக பெரிய வெள்ளை உடல் மூன்று கருப்பு உடல்களை தன்னுல் அடக்கும் அளவுக்கு தோன்றனும் அதாவது மூன்றாவது கருப்பு உடலின் தொடக்கத்துக்கு அதிகமாவும் முதல் கருப்பு உடலின் முடிவுக்கு குறைவாகவும் இருக்கும்
இறங்கு முகத்தில் தோன்றும் மூன்று வெள்ளை உடல்களும் இறங்கு முகம் தொடர்வதை காட்டுகிறது. நீளமான வெள்ளை உடல் மூன்று கருப்பு உடல்கள் விலையை கீழே கொண்டு போனதை  ஒரே நாளில் இல்லாமல் ஆக்கி மேலே விலையை கொண்டு வந்துவிடும் அது ஏறு முகம் ஏற்படுவதை தடுத்து விடும் பின் மீண்டும் இறங்கு முகம் தொடரும் என்று எண்ணுகிறார்கள்.  இது   நம்பத்தகுந்தது அல்ல.