வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஜூலை 04, 2019

துளை (piercing)

துளை

இரட்டை உலக்கை ஒழுங்கான இது  காளை ஒழுங்காகும். இது தெளிவான இறங்கு முக போக்கிலேயே ஏற்படும். முதல் நாள் கருப்பு\சிவப்பு உடலும் அடுத்த நாள் வெள்ளை\பச்சை உடலும் ஏற்படும். ஆறு முதல் பதினைந்து நாட்கள் தொடர்ந்து கருப்பு\சிவப்பு உடல் தென்பட்டு பின் துளை ஒழுங்கு ஏற்பட்டால் சிறியளவிலான இறங்கு முக போக்கு முடிவுக்கு வருவதாக கொள்ளலாம். துளை ஒழுங்கு அதாவது வெள்ளை உடல் தோன்றுவதற்கு முந்தைய உடல் பெரிய கருப்பாக இருக்கும். கருப்பு உடலுக்கு இடைவெளி விட்டு கீழே அடுத்த நாள் விலை தொடங்கும். ஆனால் முந்தைய நாள் கருப்பு உடலுக்கு பாதிக்கு (50%) மேல் வந்து விலை முடியும் அதாவது முந்தைய நாளின் தொடக்கத்துக்கு அருகில் என கொள்ளலாம் ஆனால் முந்தைய நாளின் தொடக்கத்தை அடுத்த நாளின் முடிவு தொடாது.

இக்கட்டுரையில் கருப்பும் சிவப்பும் மாறி மாறி பயன்படுத்தப்படும் அதே போல் வெள்ளையும் பச்சையும் மாறி மாறி பயன்படுத்தப்படும்




சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

* முந்தைய நாள் (கருப்பு உடல்) விட அதிக இடைவெளி விட்டு அடுத்த நாள் (வெள்ளை உடல்) விலை தொடக்கம் இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
* கருப்பு & வெள்ளை உடலின்  நீளம் மிக அதிகமாக இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
*கருப்பு உடலின் முழு உயரத்துக்கு அருகில்  வெள்ளை உடலின் உடல் இருந்தால்  போக்கு மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
* கடைசி இரு நாள்களிலும் அதிக வாங்கல் விற்றல் நடந்திருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.



ஏன் போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கறாங்க?

முதல் நாள் விற்பவர்கள் அதிகரித்து கரடியின் செல்வாக்கு மிகுந்து காணப்படும். இதன் தொடர்ச்சி அடுத்த நாளும் தொடரும் விலை மேலும் கீழே போகும். ஆனால் நாளின் பிற்பகுதியில் வாங்குபவர்கள் அதிகரித்து காளையின் செல்வாக்கு மிகும். காளை முந்தைய நாள் கரடியின் செல்வாக்கை குறைத்து விலையை அதிகப்படுத்தும். இப்போது விற்பவர்கள் அதாவது கரடி கவலை கொள்ளும். அடுத்த நாள் வாங்குபவர்கள் அதிகரித்தால் போக்கு  மாற்றம் உறுதிபடுத்தப்படும்.


கரடி விழுங்கி (Bearish Engulfing)

கரடி விழுங்கி

இரட்டை உலக்கை ஒழுங்கான கரடி விழுங்கி ஒழுங்கில் வாங்குபவர்களை விட விற்பவர்கள் மிக அதிகரித்து காணப்படுவர். இந்த ஒழுங்கில் முதல் நாள் சிறிய வெள்ளை\பச்சை நிற உடலும் அடுத்த நாள் கருப்பு\சிவப்பு நிற உடல் அதை மறைப்பது (விழுங்குவது) போல் இருக்கும். இது ஏறுமுக போக்கிலேயே ஏற்படும். முதல் நாளின் தொடக்கத்தை விட அடுத்த நாளின் தொடக்கம் மிக அதிகமாக இருக்கும் ஆனால் முதல் நாளின் முடிவை விட அடுத்த நாளின் முடிவு மிக கீழாக இருக்கும்.

Image result for bearish engulfing


சமிக்கையை அதிகப்படுத்தும் சில காரணிகள்


  • நிறைய இடத்தில் கரடி விழுங்கி தோன்றினாலும் தெளிவான ஏறு முகத்தில் தோன்றினால் போக்கு மாற்ற வாய்ப்பு அதிகம்.
  • இரு சிறு உடல்கள் கூட கரடி விழுங்கியை உருவாக்கும் ஆனால் உடல்களின் நீளம் அதிகமிருப்பது சிறப்பு
  • இரண்டாவது தோன்றும்  கருப்பு\சிகப்பு நிற உடலின் நீளம் முன்னதை விட மிகப்பெரிதாக இருப்பது சிறப்பு.
  • கரடி விழுங்கியின் கருப்பு\சிவப்பு நிற உடல் நாளில் அதிகளவு வாங்கல் விற்றல் நடந்திருந்தால் போக்கு மாற்ற வாய்ப்பு அதிகம்.
  • பங்கு சந்தை நிலையான போக்கில் இல்லாமல் மேலும் கீழும் போவதுமாக இருந்தால் கரடி விழுங்கியை அவ்வளவாக நம்பமுடியாது.



கீழுள்ள மாதிரி மூன்று உலக்கையை வைத்தும் சிலர் கரடி விழுங்கியை சொல்கின்றனர்.  இதில் எனக்கு உடன்பாடில்லை. கரடி விழுங்கி என்பது ஈர் உலக்கை தான் மூவுலக்கை அல்ல,


ஏன்னா சிறிய பச்சை உலக்கையை அடுத்து வரும் இரு சிவப்பு உலக்கைகளும் சேர்ந்து விழுங்கி விட்டதாம்.

இறங்கு முகத்தில் தோன்றும் கரடி விழுங்கி சிறப்பானது விலை மேலும் கீழே போகும் என்பதை உணர்த்துவது.

வெறும் ஒழுங்கை மட்டும் வைத்து பங்கின் போக்கை கணிக்காமல் ஆதரவு- தடை,  ஃபிபனாச்சி மற்றும் சில காட்டிகள் உடன் பயன்படுத்தனும். இவற்றை விளக்கமா ஒழுக்குகளுக்கு  அப்புறம் சொல்கிறேன்.

எது தெரியுமா மிக சக்தி வாய்ந்த கரடி விழுங்கி ?  இறங்கு முகத்தில் விலை திருத்தம் ஏற்பட்டு விலை சிறிது ஏறுகிறது.  தடை கோட்டை தாண்டாமல் அங்கு கரடி விழுங்கி ஏற்படுவது ஆகும். அது ஆதரவு கோட்டை உடைத்து கீழே செல்லும். 10%  மட்டும் விலை ஏறினால்\குறைந்தால் அதை திருத்தம் எனலாம்.



மேலுள்ள படத்தை பார்த்தால் இறங்கு முகம் சிறிய திருத்தை சந்நித்து பின் கரடி விழுங்கி ஏற்பட்டு மீண்டும் இறங்கு முகத்தை தொடருவதை காணலாம்.

புதன், ஜூலை 03, 2019

காளை விழுங்கி (Bullish Engulfing )

விழுங்கி
போக்கு மாறுவதை காட்டும் விழுங்கி ஒழுங்கு இரு மாறுபட்ட நிற உடல்களை கொண்டிருக்கும். இது இரு உலக்கைகளால் ஆன  ஒழுங்காகும். முந்தின நாள் நிற உடலை (மேல் & கீழ் குச்சியையும் சேர்த்து) அடுத்த நாள் உடல் முழுவதுமாக மறைத்து இருக்கும்.


காளை விழுங்கி

காளை ஓட்டம் இறங்கு முக போக்கிலேயே தொடங்கும். இரட்டை உலக்கை ஒழுங்கான காளை விழுங்கியில்


  1. முதல் நாள் கருப்பு\சிவப்பு  நிற மெழுகுவர்த்தி இருக்கும் 
  2. அடுத்த நாள் பெரிய வெள்ளை\பச்சை நிற மெழுகுவர்த்தியை கொண்டிருக்கும் அது கருப்பு\சிவப்பு நிற மெழுகுவர்த்தியை விட பெரிதாகவும் அதை முழுவதும் மறைப்பது(விழுங்குவது) போல் இருக்கும். இது விற்பவர்களை விட வாங்குபவர்கள் அதிகரித்ததை காட்டுகிறது. 
  3. அடுத்த நாள் தோன்றும் பெரிய உடல் முதல் நாள் முடிவை விட தொடக்கம் குறைவாகவும் முதல் நாள் தொடக்கத்தை விட முடிவு அதிகமாகவும் இருக்கும்.

Image result for bullish engulfing

  விதிகள் –

  • முதல் நாள் உடலை விட அடுத்த நாள் உடலின் நீளம் பெரிதாக, முழுவதும் விழுங்குவது போல் இருக்கும்.
  • சில நாழிகையாவது விலை முதல் நாள் முடிவை விட குறைந்து இருக்கும்.
  • முதல் நாள் உடலின் நிறமும் அதற்கு முந்தைய நாள் உடலின் நிறமும் ஒன்றாக இருக்கும். இரண்டாம் நாள் உடலின் நிறம் அதற்கு முந்தைய இரு நாட்களின் நிறத்துக்கு மாற்றாக இருக்கும். (டோஜி மட்டுமே இதற்கு விதிவிலக்கு).


Image result for bullish engulfing

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.


  • முதல் நாள் சின்ன உடல் இருந்தால் அடுத்த நாள் மிகப்பெரிய உடல் இருக்கும். (இரு உடல்களின் நிறமும் வேறு வேறாய் இருக்கும்)
  • பெரிய உடல் தோன்றும் நாளில் வாங்கல் விற்றல் அதிகம் நடந்திருக்கும்.
  • பெரிய உடலானது சின்ன உடலையும் அதன் மேல் கீழ் குச்சிகளையும் விழுங்கி இருக்கும்.
  • முதல் நாளுக்கும் அடுத்த நாளுக்குமான இடைவெளி அதிகரித்து காணப்பட்டால் இறங்கு முகம் மாறி ஏறுமுகமாக மாற்றம் நடக்க வாய்ப்பு அதிகம்.


ஏன் போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கறாங்க?

விலை கீழே விழுவது நடந்தவுடன் விலை முந்தின நாள் முடிவைவிட குறைவாக தொடங்கும், பின் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து முந்தின நாள் தொடக்கத்தை விட விலை முடிவு அதிகரித்து காணப்படும். இவ்விடத்தில்  முதலீட்டாளர்களின் உணர்ச்சிபூர்வ உளவியல் பங்கின் போக்கை மாற்றிவிடுகிறது..


காளை விழுங்கி ஒழுங்கை சரியான பயிற்சியுடன் சரியான இடத்தில் பயன்படுத்தினால் இலாபத்தை பெறும் வாய்ப்பு அதிகம். இந்த ஒழுங்கு லாபகரமாக தங்கள் வணிகத்தை சரிசெய்து கொள்ளும் வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. முதலீட்டாளர்கள் சந்தையை படிக்கும் போது கடந்த காலங்களில் இந்த ஒழுங்கு குறிப்பிட்ட செய்திகளுக்கு எப்படி வினையாற்றியது என்று அறிவது அதிக லாபத்தை பெற வாய்ப்பளிக்கும்.