வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, மார்ச் 11, 2022

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராளி ஈகி தாளமுத்து

தமிழ் இந்துவில் வந்த கட்டுரை. இணைப்பு கீழே

 https://www.hindutamil.in/news/opinion/columns/775824-thiyakiyanar-thalamuthu.html

படியெடுத்து பதிர்ந்துள்ளேன். *****

பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் (1937-39) முதல் களப்பலியான ல.நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தாளமுத்து என்ற இளைஞரும் தியாகியானார். மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாகப் பெற்றிருந்த தாளமுத்து, சிறைபட்ட மூன்று வாரங்களுக்குள் காலமானார். நடராசன் – தாளமுத்து என்ற இரட்டைப் பெயர்கள் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்றவை. ஆனால், அவர்களைப் பற்றி அதிக விவரங்கள் தெரியாத நிலையே இருந்தது. ‘இந்து தமிழ் திசை’யில் (‘நடராசன் புகழுடம்பு எய்திய கதை’, ஜனவரி 31, 2022) நடராசன் பற்றிய கட்டுரை வெளிவந்ததைத் தொடர்ந்து, தாளமுத்து பற்றிய புதிய செய்திகளுடன் இக்கட்டுரை அமைகின்றது.

சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் பக்தவத்சல நாயுடு என்பாரும் சட்ட மேலவையில் என்.ஆர்.சாமியப்ப முதலியாரும் தாளமுத்துவின் மறைவைப் பற்றிக் கேள்வி எழுப்பினர். சென்னை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் லெப்டினெண்ட் கர்னல் எம்.எம்.கான், சென்னை பொது மருத்துவமனையின் மதிப்புறு மருத்துவர் கே.நாராயணமூர்த்தி ஆகியோரிடமிருந்து அரசாங்கம் பெற்ற அறிக்கைகளிலிருந்து பல செய்திகளை அறிய முடிகிறது.

சென்னை மத்திய சிறையிலிருந்த தாளமுத்துவின் கைதி எண் 6477. ‘சி’ வகுப்பு. வயது 19. எடை 43 கிலோ. உயரம் 5 அடி 4 அங்குலம். கல்வித் தகுதி, வேலை ஆகியன பற்றித் தகவல் இல்லை. இருப்பிடம் கும்பகோணம் கும்பேசுவரர் தெற்குத் தெரு.

  1939 பிப்ரவரி 13-ல் சிறைபட்ட தாளமுத்துவுக்குப் பதினெட்டு நாட்கள் கழித்துக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 6-ம் தேதிதான் அவர் மருத்துவ உதவியை நாடினார் என்று சிறை அதிகாரிகள் கூறினர். அவருக்கு வந்த நோய் அமீபாவினால் (Entamoeba histolytica) உண்டாகும் சீதபேதி என்று சிறை மருத்துவர்கள் முடிவுசெய்தனர். அடுத்த நாள் சளியும் குருதியும் கலந்து பதின்மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

காய்ச்சல் இல்லை என்றாலும் நிமிடத்துக்கு நாடித் துடிப்பு 88 உடன் மூச்சிரைப்பும் இருந்தது. அதற்கடுத்த நாள் வயிற்றுப்போக்கு மட்டுப்பட்டதில் கழிப்பறைக்குத் தாமே நடந்து செல்லத் தாளமுத்து விரும்பியிருக்கிறார். ஆனால், அதற்கு மருத்துவர்கள் இணங்கவில்லை. தேறிவருகிறார் என்று நினைத்த வேளையில், மார்ச் 10-ம் தேதி அவருடைய நிலை மோசமடைந்தது. இரவில் பத்து முறையும் காலையில் பத்து முறையுமாகப் பன்னிரண்டு மணி நேரத்தில் இருபது முறை சளியும் ரத்தமும் கலந்து பச்சை நிறத்தில் கழிந்தது. ஒவ்வொரு முறையும் கழியும் முன் வயிற்றுப்பிசைவுடன் கடும் வலியில் தாளமுத்து துடித்தார்.

உடனே, சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மதியம் 1:35-க்கு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் தாளமுத்து. நீர்ச்சத்து இழந்தும், களைத்துச் சோர்ந்தும், கண்கள் உள்ளொடுங்கியும், படபடவென நாடியும் துடித்துக்கொண்டிருந்த தாளமுத்துவுக்கு குளுக்கோஸ், பிராந்தி கலவை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறையும், தொடர்ந்து குளுக்கோஸ் நீரும் ஊட்டப்பட்டன. கைகால்களின் விரல்நுனிகள் மெல்லச் சில்லிட்டுவந்ததால் கம்பளியும் சுடுநீர் பாட்டிலும் அணைப்புக்குக் கொடுத்தனர். நிலைமை சீரடையாததால் இரவு பத்து மணிக்கு நாளங்களின் வழியாக குளுக்கோஸ்- உப்புநீர் உட்செலுத்தப்பட்டது. மறுநாள், 11-ம் தேதி காலை குதத்தின் வழியாகச் சூடான காபி கொடுத்தார்கள். அப்போதும் நிலைகொள்ளாமல் அனத்திக்கொண்டிருந்தார் தாளமுத்து. 10:30 மணிக்கு அட்ரீனலின் (adrenalin), ஸ்ட்ரிக்னீன் (strychnine) ஆகிய ஊக்கிகள் செலுத்தப்பட்டன. பிற்பகல் 1:45 மணிக்குக் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் தாளமுத்துவின் உயிர் பிரிந்தது.

தாளமுத்து எப்படிக் காலமானார், அவருடைய குடும்பத்தினருக்கு உரிய நேரத்தில் தகவல் சென்றதா, எப்போது பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்ன மருத்துவம் பார்க்கப்பட்டது, சிறையில் சுகாதார நிலைமை என்ன முதலான கேள்விகள் சட்டமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ஆனால், நடராசன் இறந்தபோது நிகழ்ந்ததைப் போன்ற காரசாரமான விவாதங்கள் நிகழவில்லை. முதல் களப்பலிக்குக் கிடைத்த கெளவரம் என்றே அதைக் கொள்ளலாம். நீதிக்கட்சியின் பெருந்தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், பழம்பெரும் இதழாளர் டி.எஸ்.சொக்கலிங்கம், அப்துல் ஹமீது கான், டி.வி.ராமசாமி, கே.வி.ஆர்.சாமி, மெஹ்பூப் அலி பேக் ஆகியோர் துணைக் கேள்விகள் கேட்டனர்.

அரசாங்கம் மேலதிக விவரங்களைக் கேட்ட நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் தம் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்பதை நிறுவும்வகையில் விளக்கம் அளித்தார். சீதபேதித் தொற்று ஏற்படுவதற்கும் அதன் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். எனவே, சிறைபடுவதற்கு முன்பே தாளமுத்து தொற்றுக்கு ஆளாகிவிட்டார் என்றார்.

நான்கு மாதங்களாகச் சிறையில் எவருக்கும் இந்நோய் நேரவில்லை என்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டினார். சிறையின் சுகாதார நிலைமையைப் பற்றி எந்தப் புகாரும் வரவில்லை என்றதோடு நில்லாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டக் கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்காமல் முரண்டுபிடிக்கின்றனர் என்று அவர்கள் மீதே புகார் கூறினார். உடல் மெலிவும் ரத்த சோகையும் உடல்வாகுக்கு உரியதைவிட ஏழெட்டு கிலோ குறைவான எடையும் கொண்டவரான தாளமுத்துவுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவு என்று இறந்துபோன தாளமுத்து மீதே பழி சுமத்தினார். 

மருத்துவ அறிக்கைகளை வழிமொழிந்து முதல்வர் ராஜாஜி கொடுத்த பதில்களில் ஏளனம் இழையோடியது. தாளமுத்து நோய்வாய்ப்பட்டதற்குப் போராட்டத் தலைவர்கள் அக்கறை கொண்டார்களா என ஓர் உறுப்பினர் வினவியதற்கு, இல்லை என்ற பதில் கேள்வியிலேயே தொக்கி நிற்கவில்லையா என்று பதிலளித்தார் ராஜாஜி. தாளமுத்துவின் மறைவு வெளியுலகில் ஏற்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு முற்றிலும் மாறான உணர்வுநிலையே சட்டமன்றத்தில் வெளிப்பட்டது.

மாலை ஆறு மணிக்குப் பொது மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தாளமுத்துவின் முதிய பெற்றோரும் இளம் மனைவியும் அழுது புரண்ட காட்சி அனைவரையும் கலங்கவைத்தது. மறியல் களமான இந்து தியலாஜிக்கல் பள்ளியைத் தாண்டி ஊர்வலம் சென்றபோது, பேராரவாரம் ஏற்பட்டது. மூலக்கொத்தளம் இடுகாட்டில் நடராசனின் சமாதிக்கு அடுத்து தாளமுத்து புதைக்கப்பட்டார். அண்ணா, என்.வி.நடராசன், பாசுதேவ் ஆகியோர் உணர்ச்சிமிகு இரங்கல் உரையாற்றினர். ‘தோழர்கள் நடராஜன், தாளமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் என்றே கருதுகிறேன்’ என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார் அண்ணா.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஆவணபூர்வமான முழு வரலாறு 80 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் எழுதப்படவில்லை. அந்த வரலாற்றை எழுதுவது நடராசன் – தாளமுத்து தியாகத்துக்குச் சிறந்த அஞ்சலியாக அமையும்

.

- ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்று ஆய்வாளர். ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: chalapathy@mids.ac.in

மார்ச் 11 தாளமுத்துவின் 83-ம் நினைவு நாள்.