வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, ஜூன் 30, 2019

சுத்தியல் Hammer (பங்கு வணிகம்)



நுட்ப அலசலில் மெழுகுவர்த்தி வரைபடத்தை கொண்டு சுத்தியல் ஒழுங்கும்  மற்ற ஒழுங்குகளும் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.  ஒழுங்கை மட்டும் வைத்துக்கொண்டு கோதாவில் இறங்குவது முட்டாள்தனம். கூட சில காட்டிகளை வைத்து ஒழுங்கு சரியான பாதையில் கணிப்பின் படி போகுதான்னு பார்க்கனும். ஏகப்பட்ட காட்டிகள் இருக்கு, அவரவருக்கு உகந்த நாலு அல்லது ஐந்து காட்டிகளோடு ஒப்பிடுவது சிறப்பு. அப்படி பார்த்தாலும் வெற்றி உறுதியில்லை ஆனா வாய்ப்பு அதிகம். ஒன்றும் பார்க்காமல் பங்கை வாங்கி\விற்பதை விட பார்த்து வாங்கி\விற்பது நல்லது, பலன் அதிமிருக்கும்,

சுத்தியல் 

ஒற்றை உலக்கை ஒழுங்கான சுத்தியல்  இறங்கு முக போக்கிலேயே தோன்றும். இது பங்கு காளை ஓட்டத்தை ஓட ஆரம்பிக்கும் தொடக்கம் ஆகும். சுத்தியலின் கீழ் குச்சி உடலின் நீளத்தைப் போல்  குறைந்தது இரு மடங்காவது இருக்க வேண்டும். சுத்தியலின் மேல் குச்சி இருக்கக்கூடாது அல்லது மிகச்சிறிதாக மட்டும் இருக்கலாம். இதன் நிறம் முக்கியமில்லை என்றாலும் கருப்பு மெழுவர்த்தியை \உடலை விட வெள்ளை மெழுவர்த்தி\உடல் இருந்தால் காளை ஓட்டத்திற்கு அதிக வாய்ப்பு. அடுத்த நாள் வெள்ளை மெழுவர்த்தி\உடல் இருப்பது சுத்தியலின் சமிக்கையை உறுதிபடுத்தும்.

Related image 
கருப்பும் சிகப்பும் ஒன்று (மாறி மாறி பயன்படுத்தப்படும்) 
வெள்ளையும் பச்சையும் ஒன்று (மாறி மாறி பயன்படுத்தப்படும்) 

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

* உடலின் கீழுள்ள குச்சியின் நீளம் மிக அதிகமாக இருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* சுத்தியல் அன்று அதிக வர்தகம் நடந்திருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* முதல் நாளின் விலை முடிவை விட அதிக கீழ்நோக்கிய இடைவெளியில் அந்நாள் பங்கின் விலை தொடக்கம் இருந்து அடுத்த நாள் பங்கின் விலை தொடக்கம் உயர்ந்து இருந்தால் விலை மாறுபாடு உறுதியாக நடப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
* தெளிவான இறங்கு முகத்தில் தோன்றினால்  மாற்றம் நடக்க வாய்ப்பு அதிகம்.







ஏன் மாற்றம் நடக்கும் என எண்ணுகிறோம்?

சந்தையானது கீழ் உந்தந்தில் இருந்தால் கரடி செல்வாக்கு உள்ளதாக பொருள். அப்போது பங்கானது அதிக விலையில் (முந்தைய நாள் முடிவை விட) தொடங்கி குறைவான விலையில் வர்த்தகம் நடக்கும். எனினும் பங்கை விற்பது நின்று பின் காளையின் செல்வாக்கு மிகுந்து அதிக விலைக்கு வாங்குவது நடக்கும். இந்த விலையானது வணிகவீச்சின் மேல் பகுதியை உருவாக்கும். இதனால் சிறிய உடலும் நீண்ட கீழ் குச்சியும் உருவாகும். இது கரடியின் கட்டுப்பாடு தளர்வதை குறிக்கிறது. நீண்ட கீழ் குச்சி கரடியின் செல்வாக்கு இன்னும் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. போக்கு மாறுவதை  குறிக்கும் உறுதிபடுத்தும் செயல் அடுத்த நாள் பங்கு அதிகவிலைக்கு தொடங்கி அதிக விலையில் முடிவதாகும். 

கலைச்சொற்கள் :-

உலக்கை Candle stick 
உந்தம் Momentum 
ஒழுங்கு Pattern 
போக்கு Trend 
குச்சி Shadow or tick
உடல் Body 
வீச்சு Range