வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

உலகின் மோசமான நிலநடுக்கங்கள் & சில விபரங்கள்

இப்ப நேபாளத்தில் ஏற்பட்ட 7.9   ரிக்டர் அளவு நிலநடுக்கம்  மோசமான நிலநடுக்க பட்டியலில் சேராதிருக்க வேண்டும்.

இதுவரை 2,200க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக சொல்கிறார்கள். இப்ப தான் தொலை தூரத்திலிருந்து இறந்தவர்கள் பற்றி செய்தி வர ஆரம்பித்துள்ளது அதனால் பலியானவர் எண்ணிக்கை 4,000க்கும் அதிகமாக தான் இருக்கும்.

நேபாளம் மலைப்பகுதி என்பதாலும் போக்குவரத்தும் தகவல் தொடர்பும் அதிகம் இல்லாததாலும் அதிக உயிர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சுகிறார்கள்.  இன்னொரு பயம் என்னன்னா நிலநடுக்கம் ஏற்பட்டது 10-15 கிமீ ஆழத்தில் தான் இது மேல்மட்டம் என்பதால் புவியின் மேற்பரப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆழிப்பேரலையால் நாம் பாதிக்கப்பட்டதும் இம்மாதிரி நிலநடுக்கம் 20-30 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் தான்.  80 கிமீக்கும் மேலான ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டா தான் நமக்கு பாதிப்பு குறைவாக இருக்கும்.


CCTVயில் நிலநடுக்கம் பதிவாகியதை பாருங்கள் .   நன்றி - Indian Express

மோசமான அப்பிடின்னா அதிக உயர்கள் பலியான நிலநடுக்கம் என்று கொள்ளவும். ரிக்டர் அளவில் இது கணிக்கப்படவில்லை.
  • 2003ஆம் ஆண்டு ஈரானின் பான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர்.
  • 2004ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அது உருவாக்கிய ஆழிப்பேரலையாலும் பலியானவர்கள் 230,000. பல (இந்தியா, இலங்கை, தாய்லாந்து...) நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையும் இதில் அடக்கம்.  நிலநடுக்கத்தின் அளவு 9.1 ரிக்டர். இதை நம்மாளும் மறக்க முடியாது. இந்தியா என்று சொன்னாலும் தமிழகத்திற்கு தான் பாதிப்பு அதிகம்.
  • 2005ஆம் ஆண்டு பாக்கித்தான் நிருவகிக்கும் காசுமீரின் தலைநகர்  முசபார்நகர் அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.6 ரிக்டர்.
  • 2008ஆம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.9 ரிக்டர்.
  • 2010ஆம் ஆண்டு எயிட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 220.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.0 ரிக்டர். இது கூபாவுக்கு அருகில் 80 கிமீ தொலைவில் உள்ளது. 

1934ஆம் ஆண்டு நேபாளம்-பீகார் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேபாளத்தில் 8,500 பேர் பலியானார்கள்,  பீகாரில் 10,000க்கும் அதிகமானவர்கள் இறந்தார்கள்.

உலகிலுள்ள அனைத்து நிலத்தட்டுகளின் வரைபடமும் பெயரும்
நன்றி - விக்கிப்பீடியா


இந்திய நிலத்தட்டு ஆனது ஐரோஆசிய (ஐரோப்பாவும் ஆசியாவும் சேர்ந்த நிலப்பகுதி) நிலத்தட்டுடன் பல்லாயிரம் ஆண்டுகள் மோதியதால் தான் இமய மலையே உருவாகி உள்ளது.  மோதல் இப்போதும் தொடர்கிறது, ஆண்டுக்கு 4-5 செமீ என்ற அளவில் நிலத்தட்டுக்கள் நெருங்குகிறது. அதாவது இந்திய நிலத்தட்டு தான் ஐரோஆசிய நிலத்தட்டுடன் மோதுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய "துணைக்கண்டம்" ஆசியாவில் ஒட்டியிருக்காமல் தனித்தீவாக தான் இருந்தது. ஆப்பிரிக்காவை ஒட்டி உள்ள மடகாசுக்கர் தீவு இந்திய துணைக்கண்டத்துடன் முன்பு ஒட்டியிருந்தது என்றும் கருதுகிறார்கள்.

7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்துக்கு அடுத்து வந்த பெரிய நிலநடுக்கத்தின் அளவு 6.9 ரிக்டர் என்று இந்தியாவும் 6.7 ரிக்டர்  என்று அமெரிக்கா காரனும் சொல்றாங்க.  இது இந்தியாவில் நிறைய இடங்களில் உணரப்பட்டுள்ளது. (மழைக்கு அப்பறம் வரும் தூவானம் -  கொழைஞர்) இது 7.9 வந்த இடத்துக்கு அருகில் தான் வந்தது. இதனால் உயிர் பலி குறைவாக தான் இருக்கும் ஏன்னா 7.9 வந்ததுக்கு அப்பறம் கட்டடங்களில் யாரும் தங்காமல் வெட்ட வெளியில் தான் தங்கியிருப்பாங்க.

எயிட்டி தான் அமெரிக்காக்களிலேயே மிக ஏழ்மையான நாடு.  லத்தீன் அமெரிக்காக்களில் முதலில் சுதந்திரம் பெற்றதும் இது தான். 1804 ஆண்டில் சுதந்திரம் பெற்றது  பிரான்சு, பிரித்தானியா, எசுப்பானியா ஆகிய மூன்று ஐரோப்பிய இராணுவபலம் உள்ள அரசுகளை இது தோற்கடித்துள்ளது. எயிட்டியின் வரலாறு படிக்க ஆர்வமூட்டுவது.

அமெரிகாக்களின் (வட, தென் அமெரிக்கா)  மேற்கு பகுதி, இமய மலை பகுதி, ஈரான், சப்பான், இந்தோனேசியா, இத்தாலி, எசுப்பானியா ஆகியவை நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் உள்ளவை.  நிலத்தட்டுகள் ஒரசினா நிலநடுக்கம் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

அதுக்காக மற்ற இடங்களில் நிலநடுக்கம் வராது என்று பொருளல்ல. வரும் வாய்ப்பு மிக குறைவு, வந்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது. கட்டடம் உறுதி இல்லைன்னா பாதிப்பு அதிகமாகிடும். சப்பானை நினைச்சு பாருங்க அவங்க நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் தான் கட்டடம் கட்டுவார்கள்.

கலிபோர்னியாவே குறிப்பாக சான் பிரான்சிசுகோ & லாசு ஏஞ்சலசு நகரங்கள் இருப்பது நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் தான்.  சான் பிரான்சிசுகோ  ஏற்கனவே 1906இல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கு அதனால அதுக்கு பயம் அதிகம். சான் ஆண்டிரியாசு பிளவு என்பது நீளமானது மட்டுமல்ல கலிபோர்னியாவின் மேற்கு கரை நகரங்களை பயமுறுத்தும் ஒன்று. அது பெரிய குறிப்பிடத்தகுந்த பிளவு அதை தவிர நிறைய பிளவுகளும் உள்ளன.  அதனை இதன் கிளைகள் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு 75 ஆண்டுக்குப் பிறகும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலோ அதற்கு அருகிலோ குறிப்பிடத்தகுந்த நிலநடுக்கம் வரும் என்கிறார்கள். அந்த கணக்குப்படி 2090 வரை நேபாளத்தில் பெரிய நிலநடுக்கம் வராது. 2090க்கு அப்பறம் பெரிய நிலநடுக்கம் வரும் வரை நேபாளம் பக்கம் தலைவச்சு படுக்காதிங்க.