தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றதும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். பாசகவின் தடையற்ற பல சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு கிடைத்த பெரும் தடை மக்களாட்சிக்கு நல்லது. மற்ற எதிர்கட்சிகள் பாசகவை பார்த்து இதன் ஓட்டத்தை எப்படி தடுப்பது என்று செய்வதறியாமல் திகைத்த நேரத்தில் தில்லியில் பாசகவுக்கு பெரும் அடி. இது பாசகவுக்கும் நல்லது என்று தான் கூற வேண்டும்.
இன்னும் சொன்னால் 2014ஆம் ஆண்டின் பாசகவின் வெற்றிப்பயணம் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
குல்லா |
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி பெருவெற்றி பெற்றதும், யோகேந்திர யாதவும் பிரசாந் பூசணும் கட்சியை சில கேள்விகள் கேட்டார்கள். தேர்தலுக்கு முன்னமே கேட்டுள்ளார்கள் ஆனால் தேர்தலுக்கு பின் தான் அதற்கு மதிப்பு கூடியுள்ளது. கேட்ட கேள்விகளும் மிகச்சரியானது, ஆனால் அதற்கு ஆம் ஆத்மியின் தில்லி பொறுப்பாளர்கள் அவர்கள் இருவரையும் துரோகிகள் என்றதும் மற்ற நடவடிக்கைகளும் ஆம் ஆத்மியும் மற்ற கட்சிகள் போல் தான் என்று காட்டியது. 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது, இது அக்கட்சியின் பலருக்கு செருக்கை (மமதை) தரும். இப்போது நடக்கும் சண்டையைப் பார்த்தால் பலருக்கு செருக்கு வந்தது போல் தான் தெரிகிறது. மேலும் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல் வெற்றி பெற்றவர்கள் அடுத்தவர்களை ஈர்ப்பர் புதிதாக வருபவர்களில் சிலரோ பலரோ மோசமான பேர்வழிகளாக இருப்பர். கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது அதனால் நாளாக ஆக கட்சி தன் கொள்கைகளிலிருந்து நழுவாமல் இருக்க கேள்விகள் மூலம் அதை ஒழுங்கு செய்வதே முறை. வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். தவறுகள் ஏற்படலாம் கட்சியினர் கேள்வி கேட்டால் தான் தவறுகளை களைய முடியும். உட்கட்சி குரல் கேட்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டும். இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். இந்தி கட்சி என்று நினைக்க வைக்கக் கூடாது.
கேள்விகள் கேட்காவிட்டால் தவறு நடக்க வாய்ப்பு அதிகம், எண்ணம் தூய்மையாக இருந்தாலும் கேள்விகள் தேவை. பல ஆண்டுகள் கழித்தும் எண்ணம் மாசு படாமல் இருக்க வேண்டும். தலைவருக்கும் கட்சியின் மற்ற முதன்மையானவர்களுக்கும்
இடுப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
என்று வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பலர் மற்ற கட்சிகள் போல் இயங்க ஆசைப்படுகின்றனர் அது மாபெரும் தவறு. இவர்களின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையால் அது டெல்லி கட்சியாகவே இருக்கும். மற்ற மாநிலங்களில் வளர முடியாது. பஞ்சாபில் நாலு மக்களவை உறுப்பினர்களை பெற்றதால் அங்கு பெரிய கட்சியாகலாம். மற்ற மாநிலங்கள்? மாநில தலைமை வலுப்பெற்றால் மட்டுமே அந்தந்த மாநிலங்களில் வளரமுடியும்.
இங்கு இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் தில்லி மாநிலம் என்று சொன்னாலும் அது பெரிய மாநகரம் மட்டுமே. ஆம் ஆத்மிக்கு தில்லி, பஞ்சாப் தவிர மற்ற இடங்களில் பெருநகரங்களில் மட்டுமே சிறிய ஆதரவு உள்ளது.
- ஆம் ஆத்மி கட்சி எல்லா மாநிலங்களிலும் வளருவது கடினம். ஆம் ஆத்மி என்பது கருத்தாக்கமே இத்கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல மாநிலங்களில் கட்சி உருவாகலாம், ஆம் ஆத்மி கட்சி அவற்றுடன் கூட்டணி வைக்கலாம். அதாவது கூட்டாட்சி முறையே நல்லது. இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
- கட்சியின் மேல் மட்டத்தலைவர்கள் அனைவரும் இந்திக்காரர்களே. இந்தி பேசாத பெருவாரியான மாநிலங்களில் வளர அம்மாநில மொழி பேசும் ஆளுமைகள் தேவை. அனைவருக்கும் குறிப்பிட்ட மாநிலத்தின் நிலைமையோ அது எதிர்கொள்ளும் சிக்கல்களோ புரிவது கடினம். ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு என்று சொன்னால் மிகையல்ல. உறுதியான மாநில தலைமை இங்கு தான் தேவைப்படுகிறது.
- கட்சி இப்போது பெருநகரங்களில் ஆதரவை கொண்டுள்ளது. ஊரகப்பகுதியில் கட்சி வளருவது அந்த மாநில கட்சியினரின் செயல்பாட்டை பொருத்தே உள்ளது. பஞ்சாபில் வளர்ந்து வருவதும் அங்கு பெறப்போகும் வெற்றியும் மற்ற மாநிலத்தவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். (என்னைப் பொருத்த அளவில் தில்லி வெற்றியை விட பஞ்சாபில் பெறப்போகும் வெற்றியே, அளவில் பெரிய ஊரகங்களை உடைய மாநிலங்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும்)
- கட்சியின் மேல்மட்டக்குழுவில் மாநிலங்களுக்கு சிறப்பு தரப்பட வேண்டும். அவர்கள் சொல்வது கேட்கப்பட்டு முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- மாநில கட்சி நிலவரங்களை மேல் மட்டம் தீர்மானிக்கக்கூடாது (மற்ற தேசிய கட்சிகளைப்போல).
- கட்சி செயற்குழு பொதுக்குழு கூட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். (இதைத்தான் பிரசாந்தும் யோகேந்திராவும் சொன்னார்கள்)
- மாநில அளவு கட்சிக்கு தேசிய கட்சி உதவ வேண்டும் அவர்கள் செல்லுவது தவறு என்றால் அறிவுறுத்தவேண்டும்.
ஆம் ஆத்மியிடம் எனக்கு பிடிக்காதது குல்லா தான். குல்லாவை கண்டாலே ஒவ்வாமை வருகிறது. வடமாநிலங்களில் குல்லா சரி. தமிழ்நாட்டுக்கு?? குல்லா, தில்லி கட்சி இங்கே ஆதிக்கம் செலுத்த வருகிறதோ என்ற அச்சத்தை தரும். தமிழ்நாட்டுக்கு குல்லா பயன்படுத்தினால் கட்சி மக்களிடம் நெருக்கமாக முடியாது. தமிழகத்தில் குல்லா செயற்கையாக இருக்கும்.\ இருக்கிறது. குல்லாவிற்கு பதில் துண்டு பயன்படுத்தலாம்.