வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஜூன் 22, 2006

குறும்பாறு

தமிழ்மணத்தில் இப்போ "ஆறு" கரைபுரண்டு ஓடிக்கிட்டுருக்கு. அதுல சிறிய துணை ஆறா இந்த குறும்பாறு கலக்குது, இதுல தண்ணி குறைச்சல்ன்னு சொல்லாதிங்க தண்ணி வரதே பெரிய சங்கதி.

(1) எந்த ஊர் நீங்க?
பொறையாறு.


(2) எந்த சாமி புடிக்கும்?
ஆறுமுக சாமி.


(3) உங்க ஊர்ல எந்த சாமிக்கு கோயில் இருக்கு?
அய்யன்னாறுக்கு


(4) யாரை உங்களுக்கு பிடிக்காது?
சாமியாறை
(எழுத்துப் பிழை காணாதீர்கள் 'ர' வை அழுத்தி சொல்லுவது வழக்கம் :-)) )

(5) பெரும்பான்மையான தமிழகத்தின் தண்ணி தேவையை தீர்ப்பது?
காவேரி ஆறு.

(கொசுறு) பெரும்பான்மையான தமிழக குடி மக்களின் தண்ணி தேவையை தீர்ப்பது விஜய் மல்லய்யாவின் United Breweries தண்ணி கம்பெனி.

(6) ஆறுகளை பெண்ணாக பாவிப்பவர்கள் நாம் , காவிரி தாய் அப்படி. ஆனா ஒரு ஆறு பெயரை பெண்கள் வைத்துக்கொள்ள முடியாது அது என்ன தெரியுமா?
அது "கிருஷ்ணா" ஆறு.


(7) 'ஆறா' அப்படின்னு யாரைக்கூப்பிடலாம்?
நதியா வை.


(8) பிடித்த சிரிப்பு நடிகர்?
"வைகை" புயல்.


(9) டாவடிச்ச பொண்ணு பேர்?
சிந்து.

புதன், ஜூன் 14, 2006

இதை கொஞ்சம் படிங்க சார்!

தமிழனோடு ஒன்றி கலந்துவிட்ட ஒரு சொல் என்னவென்றால் அது "சார்" தான். மூச்சுக்கு முன்னூறு தரம் தமிழன் உச்சரிக்கும் சொல் "சார்". என்ன சார் நான் சொல்றது சரி தானே?. அதுவும் திரைப்பட கலைஞர்களின் பேச்சில் இது மூச்சுக்கு மூவாயிரம் முறை வரும். ஒரு திரைப்பட கலைஞரின் தொலைக்காட்சிப் பேட்டியை நண்பர்களுடன் பார்த்த பொழுது தான் "சாரின்" மேன்மையை கண்டுகொண்டோம், சாரைப்பற்றி பேச ஆரம்பித்தோம். அன்னைக்கு அடிச்ச கிண்டலும் கேலியும் நக்கலும் தான் எங்களின் "சார்" பயன்பாட்டை குறைத்தது. எவனாவது ( என் நண்பர்கள் தான்) சார்ன்னு பேசுவதை கேட்டோம் அவன் தொலைஞ்சான், சாரு சாருன்னு சொல்லி அவன நோக அடிச்சிடுவோம்.

ஒருத்தரை மரியாதையாக அழைக்கனும்னா "சார்" போடாம அழைக்க முடியாதா? தமிழில் ஐயா என்ற அழகான சொல் உள்ளதே. ஆனா பாருங்க இந்த சொல்லை பயன்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளது. கொஞ்சம் மாற்றி பயன்படுத்தினா பொருள் மாறிவிடுகிறது அதாவது மரியாதைக்கு பதில் அவமரியாதை வந்துவிடுகிறது.

சொல்லுங்க ஐயா , சொல்லுய்யா, என்னங்கய்யா?, என்னய்யா? அதனால் நாம் மரியாதையோடு ஐயாவை பயன்படுத்தவேண்டும். இதுக்கு பேர் தான் மரியாதைக்கு மரியாதை :-))

இன்னொரு சிக்கல் "ஐயா" என்ற சொல்லை பயன்படுத்தினால் வயதில் மூத்தவர், பெரியவர், பெருசு (கிண்டல்) என்ற எண்ணம் வருகிறது. 3, 4 வயது மூத்தவர்களை ஐயா போட்டா நல்லாவா இருக்கு? அதுக்கு என்ன தீர்வு? பேர் சொல்லி அழைப்பதே உத்தமம் என்பது என் எண்ணம். மரியாதைக்கு "ங்க" போட்டுக்குங்க. "சரிங்க குமரன்", "என்னங்க வசந்தன்" என்பது மாதிரி. (என்னை விட வயதில் மூத்தவர்கள் என்னை "சார்" என்று கூப்பிட்டால் எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கும்.)

பழக பழக "சார்" பயன்பாடு குறைந்துவிடும், எனவே முடிந்த அளவு "சார்" போடாம பேச முயலுங்களேன். "ஆபீசரை" "சார்" போடாம அழைத்தீர்கள் என்றால் அது மிகப் பெரிய செயல், முயன்று பாருங்க. வாழ்த்துக்கள்!


ஒரு தமிழரிடம் பேசினால் ஒரு முறையாவது "சார்" என்ற சொல்லை பயன்படுத்திவிடுவேன். சார்... அட சொல்லுங்க சார், சார் நீங்க பெரிய ஆளு சார், வசந்தன் சார் என்ன சொன்னாருன்னா , ஆமா சார், இல்ல சார், போங்க சார், கிண்டல் பண்ணாதிங்க சார், குமரன் சார், ... இந்த மாதிரியாக.

"சார்" போட்டு பேச கூடாது என்று உறுதி எடுத்து "சார்" போடாமல் பேச பழகிக்கொண்டேன். ஒரு முறை நியூயார்க் பாரத ஸ்டேட் வங்கிக்கு சில ஐயங்களை தீர்க்க தொலைபேசியில் தொடர்புகொண்டபோது என்னுடைய ஐயத்தை தீர்க்கவேண்டியவர் அப்போது இருக்கையில் இல்லாததால் என் அழைப்பை இன்னொருவருக்கு மாற்றினார்கள். எடுத்தவர் பாண்டியராஜன் எனக்கு ஒரு தமிழ் பெயரை பாரத ஸ்டேட் வங்கியில் கேட்டதும் மகிழ்ச்சி, உடனே நான் "சார்" I ..... என்று பேசினேன். ஒரு வாக்கியம் பேசி முடித்ததும் ச்ச தமிழ்ன்னு தெரிந்தவுடனே "சார்" போட்டு பேசிட்டோமேன்னு ஒரே விசனமாயிடுச்சி. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்ன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க. :-(
பள்ளிக்கூடத்தில் (தமிழ் வழி) ஆசிரியரை ( தமிழ் ஆசிரியரையும்) "சார்" என்று கூப்பிட்டபய தானே நான். எப்படி சுலபமா "சாரை" விட முடியும்.


நம்ம வலைப்பதிவு நண்பர்களும் "சாரை" தவிர்க்க முடியாமல் இருப்பவர்கள் தான் .. இவர்களும் தமிழர்கள் தானே. ;-)