தமிழக பெண்களுக்கு குஷ்புவின் வழி காட்டுதலும் அதை ஒத்து ஊதுவோரும்...
இராமதாசும் திருமாவளவனும் எதிர்ப்பதால் குஷ்பு சொன்னதில் துளியும் தவறில்லை என்று நியாயப்படுத்துவது சரியான வாதமாக தெரியவில்லை.
குஷ்பு சொன்னதில் என்ன தவறு இருக்கு என்று கேட்பவர்களுக்கு சில கேள்விகள்.
1. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது சரியான செயலா? தவறில்லையா?
2. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டது தெரிந்தாலும் அட இந்த காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா.. என்று எல்லா படித்த / கற்ற / கல்விமான்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்களா? . அப்படி ஒத்துக்கொள்ளாவிடில் அவர்கள் கல்வி கற்றும் மூடர்களாக உள்ளவர்கள் என்று சொல்லலாமா?
3. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்ட பெண்ணை எத்தனை படித்த ஆண்கள் திருமணம் செய்ய முன் வருவார்கள்?
4. உங்கள் வயதுக்கு வந்த பையனோ (அ) பெண்ணோ அல்லது அக்காவோ / தங்கையோ / அண்ணணோ / தம்பியோ திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது தெரிந்தால் நீங்கள் கண்டிப்பீர்களா? ( அது தவறு என்று எடுத்துரைப்பீர்களா? )அல்லது உடலுறவு தப்பில்லை ஆனா பாதுகாப்பாக இருங்க என்று பாதுகாப்பு முறைகளை சொல்லி கொடுப்பீர்களா?
- பிரச்சனைக்குரியது குஷ்புவின் கருத்துக்கள், ஆனால் அதை எந்த கட்டுரையாளர்களும் கண்டித்ததாக தெரியவில்லை. ஆங்கில ஊடகத்தில் எழுதுபவர்கள் அதை ஆதரிப்பதுபோல் எழுதுகிறார்கள். ஆங்கிலதில் எழுதினால் தமிழை ஆதரிப்பவர்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கனும் என்பது சம்பிரதாயமோ?
பொது மக்களில் யாரோ ஒருவர் இவ்வாறு கருத்து கூறியிருந்தால் அது பெரிய விசயமல்ல. ஆனால் கூறியது தமிழகம் கோயில் கட்டி கும்பிட்ட குஷ்பு. அவருடைய கருத்தின் நச்சு கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்டவரை பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பருவமடைந்த காலத்தில் காம வேட்கையை கட்டுப்படுத்துவதில் பலர் மதில் மேல் பூனையாக இருப்பர், நல்ல வழி காட்டி ( புத்தகங்கள், சான்றோர் பேச்சு, ...) அவர்களை பாதை மாறாமல் செய்யும். ஆனால் ஊடகத்தில் பிரபலமடைந்தோரின் இது போன்ற கருத்துக்கள் கெடுதலையே சமூகத்திற்கு தரும்.
அவர் கூறியதில் "திருமணத்திற்கு முன்பு செகஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்" என்பது தான் உருப்படியான கருத்து ஏனெனில் இந்த கருத்து பாதுகாப்பை பற்றி அறிவுறுத்துகிறது. ஆனால் மற்ற வாக்கியங்கள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளுங்கள் அது தவறில்லை " உலகம் மாறிப்போச்சப்பா இன்னும் பத்தாம் பசலிகளாட்டம் இருக்கிறீங்களே " என்று முறையற்ற உடலுறவை ஆதரிக்கிறது. இது ஆட்சேபனைக்குறியது என்பது பெரும்பான்மையோரின் கருத்து. தறுதலையா போறவன/வள திருத்தப்பாருங்க... ஒத்து ஊதி கெடுக்காதிங்க.
இராமதாசும், திருமாவளவனும் எதிர்க்கும் முறைகளில் ஆட்சேபனை இருந்தால் எதிர்க்க வேண்டியது தான், ஆனால் குஷ்பு சொன்னதில் என்ன தவறு இருக்கு என்று சப்பை கட்டுவது தவறு. எழுத தெரிந்த மாலன் போன்றோர் சப்பை கட்டுவது எனக்கு வியப்பளிக்கிறது.
சர்ச்சைக்குறிய குஷ்பு கருத்து..... திசைகளில் இருந்து ....
"பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செகஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்".
குறிப்பு:- ( மாலன் கூடவா ?? ) மாலனின் வலைப்பதிவு மற்றும் திசைகளில் அவரது கட்டுரையை கண்டதன் விளைவாக உருவானது இப்பதிவு...