வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், நவம்பர் 19, 2020

ஏன் எந்தக் கட்சியும் எதனுடைய பீ டீமும் அல்ல & பீகார் தேர்தல் அலசல்

2020 அக்டோபர் நவம்பரில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய சனநாயக கூட்டணி (தேசகூ) வாங்கியது 125, மாகாகாத்பந்தன் வாங்கியது 110 . ஓவைசியின் முசல்மீன் வாங்கியது 5, மாயாவதியின் பகுசனும் பாசுவானின் லோக் சன சக்தியும் வாங்கியது தலா 1, கட்சி சார்பற்றவர் 1. 

சதவீத கணக்கில் முசல்மீன் 1.24% வாக்குகளும், பகுசன் 1.49% வாக்குகளும், சன சக்தி 5.66% வாக்குகளும் பெற்றன.  லோக் சன சக்தி 134 தொகுதிகளிலும் முசல்மீன் 20 தொகுதிகளிலும் பகுசன் 80 தொகுதிகளிலும் போட்டியிட்டன.  

மகாகாத்பந்தன் தோற்றதிற்கு ஓவைசியின் முசல்மீன்கட்சி முசுலிம் வாக்குகளை பிரித்ததும் பகுசன் சமாச் பட்டியல் இனத்தவரின் வாக்குகளை பிரித்ததும் தான் காரணமென்றும் அவை பாசகவின் பீ டீமென்றும் இங்கு பாசகவை எதிர்ப்பவர்களும் திமுக அல்லக்கைகளும் அலறுவது தவறு. 

நமக்கும் சிறிது அரசியல் தெரியுமென்பதால் அது ஏன் தவறு எனப் பார்ப்போம்.

சாகையில் போன முறை இராட்ரிய சனதாதள சாவித்திரி தேவி சுனில் குமாரை 12,113 வேறுபாட்டில் வென்றார். இம்முறை அதற்கு பழிவாங்கும் விதமாக கட்சி சார்பற்ற சுனில் குமார் சிங் சாவித்திரி தேவியை 625 வாக்கு வேறுபாட்டில் வென்றுள்ளார்.  நோட்டா 6,520. இது பழங்குடிகளும் பட்டியல் இன மக்களும் மிக அதிகமாக உள்ள தொகுதி சுனில் குமார் ராசுபுத்.  இவர் கட்சியில் பல ஆண்டுகள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் போட்டியிட்ட போட்டி வேட்பாளர் இல்லை. இது அலசலுக்கு தேவையில்லை ஆனால் கட்சி சார்பற்றவர் வெற்றி என்பதால் ஈர்க்கப்பட்டு படித்ததை பகிர்கிறேன்.

இரு கூட்டணியிலும் மோசமான வெற்றி தோல்வி விகிதத்தை பெற்ற காங்கிரசே மாகாகாத்பந்தனை கவிழ்த்தது எனலாம். லாலு பிரசாத்தின் மகன் நாற்காலி கனவை கலைத்ததில் முழுமையான பங்கு காங்கிரசுக்கே உண்டு. 70 தொகுதிகளை வாங்கி அதில் 19இல் மட்டுமே வெற்றி, 30% கூட இல்லை. காங்கிரசு தலைவர் சுற்றுலாவுக்கு போவது போல் சில முறை தான் பரப்புரைக்கு வந்தார் என்கிறார்கள். அரசியலில் கடும் உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்குமா? கோவிட்டை கையாண்டது, வேலைவாய்ப்பு இல்லாதது, ஆட்சியாளர்களுக்கு என்ற எதிரான மனநிலை இருந்ததால் தாம்பாழத்தட்டில் வெற்றலை பாக்கோட வெற்றியை வைத்து மக்கள் கொடுப்பார்கள், நோகாமல் வாங்கிக்கலாம் என்று காங்கி தலைமை எண்ணிவிட்டது போலும். வெற்றியை ருசிக்க நல்ல உழைப்பு வேண்டாமா? லட்டு மாதிரியான வாய்ப்பை தவற விட்டுட்டாங்க. கூட்டணியில் ஒருத்தர் இருவர் மட்டும் உழைத்தால் போதுமா? கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி என்ற முறையில் காங்கிரசின் பரப்புரை பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஆனா பல மாநிலங்களில் கடந்த 6 ஆண்டுகளாக பல தோல்விகள் பெற்றிருந்தும், அப்படி ஏதும் நடக்கவில்லை, தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. காங்கி ஆட்சியை பிடிக்க சிறந்த அரசியல் உத்தி வகுப்பாளரும் அதை செயல்படுத்தும் தலைவராக ராகுல் இருக்க வேண்டும். இங்கு ஏதாவது ஒன்று தவறுகிறதா அல்ல இரண்டுமா என்பது தெரியவில்லை. முருகனை நம்பியோர் கை விடப்படார் என்பது போல் காங்கை நம்பியோர் கை விடப்படுவோர் என்பது புதிய வாசகம்.

பாசக வளர்வதற்கு ஓவைசி மாதிரியான ஆட்கள் தேவை, ஓவைசி வளர்வதற்கு பாசக தேவை. ஓவைசியின் வாக்கு வங்கியை ஆட்டைய போடும் வாய்ப்பு காங்கிரசுக்கு தான் உள்ளது, பாசகவுக்கு இல்லை.  ஓவைசி குடும்பம் சில கல்விக்கூடங்களை ஐதரபாத்தில் நடத்துகிறது. ஆனால் இது வரை அதன் மேல் வருமான வரித்துறை, சிபிஐ, அமுலாக்கத்துறை என்று  எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை வைத்தே பாசகவுக்கும் ஓவைசிக்கும் உள்ள நட்பு இல்லைன்னா நல்ல புரிதல் இருந்திருக்குமென நாம் ஊகிக்கலாம். அரசியல் ஆட்டத்தில் கில்லாடியான அமித், ஓர் உத்தியாக ஓவைசி மகாகாத்பந்தனில் சேருவதை தடுத்திருக்கலாம். மறுக்க முடியாது.

பகுசனுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு பீகாரில் இல்லை,

இப்ப தேசிய சனநாயக கூட்டணிக்கு வாங்க.

லோக் சன சக்தி பட்டியல் இன மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ள கட்சி. அது வரை தேசகியிலிருந்த  லோக் சன சக்தி இத்தேர்தலில் தேசகூயை எதிர்த்து போட்டியிட்டது. ஆனால் டெல்லியில் பாடம் போட்டதுக்குப்பின் பாசகவை எதிர்த்து போட்டியில்லை ஆனால் ஐக்கிய சனதா தளத்தை  எதிர்த்து மட்டும் போட்டி என்றது. அதுக்கு காரணம் நாளுக்கு நாள் அழிந்து  கொண்டிருந்த சன சக்தியானது ஐக்கிய சனதா தளத்தை எதிர்த்தால் மட்டுமே புத்துயர் பெற முடியும் என்ற நிலை. ஏனென்றால் சன சக்தியின் வாக்கு வங்கியில் கை வைப்பது ஐக்கிய சனதா தளம். மேலும் ஐ.சனதா தளத்லிருந்தே சன சக்தி பிரிந்து வந்து உருவாகியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதனால தான் ஐக்கிய சனதா தளமானது பாசகவை விட  அதிக தொகுதிகளில் போட்டியிட்டாலும் பாசகவை விட குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. ஐக்கிய சனதா தளம்  115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களிலும், பாசக 110 இடங்களில் போட்டியிட்டு  74 இடங்களிலும் வென்றது. இராச்டிரிய சனதா தளம் 144 இடங்களில் போட்டியிட்டு  75 இடங்களிலும் வென்றது. 

தேர்தலில் ஆளும் கூட்டணியும் வலுவான எதிர் கட்சி கூட்டணியும் பல கணக்குகளைப் போடும் உத்திகளை வகுக்கும். இரு கூட்டமணியும் மோசம் தான். அது அப்ப எந்த அளவு மோசம் என்ற அளவு மட்டுமே நம்மளவில் மாறுபடும்.  அதே போல் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் சில பல கணக்குகளைப் போடும். மதிமுகவை உடைத்து திமுக கொத்து கொத்தாக மதிமுகவினரை தன்னில் சேர்த்துக்கொண்டதும் தேர்தலின் போது சில தொகுதிகளில் மட்டும் 200-2000 வாக்குகளை கொண்ட பல காளான் கட்சிகளை தன் கூட்டணியில் இணைத்துக்கொளவதும் ஓர் உத்தி தான். அதனால ஒரு கட்சியை எதிர் கட்சியின் பி டீம் என்பது வெல்ல முடியாதவர்களின் ஆதங்கம் அங்கலாய்ப்பு மட்டுமல்லாமல் அந்த சிறு கட்சியின் செல்வாக்கை நம்பகத்தன்மையை குழைக்கும் உதவும் ஓர் உத்தி என மட்டுமே பார்க்கலாம். 

இதிலிருந்து தெரிவது தேசகூயே அதிக பாதிப்பை அடைந்தது காரணம் லோக் சன சக்தி தனித்து போட்டியிட்டதால். ஒப்பீட்டளவில் மகாகாத்பந்தனுக்கு  ஓவைசி, பகுசனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவு, காங்கியாலயே மாகாகாத்பந்தன் வீழ்ந்தது.