வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், நவம்பர் 27, 2019

சிறுகதை தொகுப்பு - கதை 01


சில ஓட்டு வீடுகளே எட்டிப்பார்த்திருந்த செல்லாச்சிபட்டி என்ற சிற்றூரில் தென்னம்பிள்ளை கவுண்டருக்கு பெரிய மச்சு வீடு இருந்தது. பெரும் செல்வந்தரான அவருக்கு 50 ஏக்கர் நஞ்சை புஞ்சையும் இருந்தது.  தென்னம்பிள்ளை கவுண்டரின் உண்மையான பெயர் தெரியாது அந்தப்பெயரை சொன்னால் தான் ஊரில் அனைவருக்கும் தெரியும். ஆனா பாருங்க செல்வத்தையும் நில புலன்களை கொடுத்த ஆண்டவன் அதை அனுபவிக்க பிள்ளைகளை கொடுக்கலை. கவுண்டரு சளைச்சுடுவாரா? பிள்ளை வரம் வேண்டி அவரும் அவர் மனைவி காத்தாயியும் கோவில் கோவிலா ஏறி வேண்டினாங்க. ஆண்டவன் உருவம் கல்லில் இருந்தாலும் உள்ளம் அப்படியில்லை. பெரியகாண்டி மற்றும் பழனியாண்டி அருளால நான்கு மணியான ஆண் பிள்ளைகளை பெற்றார்கள். பசங்களை நன்கு படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தார்கள். திருமணம் முடிந்ததும்  நால்வரையும் தனி வீடு பார்த்து  தனிக்குடித்தனம்  வைத்துவிட்டார்கள்.  நால்வரும் பலவகை வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியதோடு அந்த வியாபாரங்களில் பெரும் செல்வாக்கு உடையவர்களாவும் மாறினார்கள்.  நால்வருக்கும் குழந்தை குட்டிகள்  பிறந்தது. நால்வரின் குழந்தைகளுக்கு திருமணமும் நல்லபடியா நடந்தது. அனைத்து பேரக்குழந்தைகளின் திருமணத்தை பார்த்த பின்பு ஒரு நாள் தீடீரென்று தென்னம்பிள்ளை கவுண்டர் கண்ணை மூடிட்டார். யாருக்கும் எத்தொந்தரவும் தரமால் சீப்பட்டு சின்னாபின்னபட்டு போகாமல் கண்ணை மூடியதால் கொடுத்து வைத்த மனுசன் என்று ஊரெல்லாம் பேச்சு.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு நல்ல உடல்நலத்தோட இருந்த காத்தாயியின் உடல் குன்றியது நாம நினைபது போல் மோசம் இல்லை, அவரால் அவரது எல்லா வேலைகளையும் செய்ய முடியும். வயதானதால் எதிர்ப்பு சக்தி, வலு, பார்வைதிறன் குறைந்து விட்டது   அவ்வளவு தான்.  இந்த சமயத்தில் கை  எழும்பு உடைந்து எந்த  வேலையும் செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்.  பெரிய  மருத்துவமனையில் சிகிச்சை   பெற்றார் பெரிய  மருத்துவமனை என்றால் எந்த மருத்துவமனை ஊரிலேயே அதிக பணம் வாங்குகிறதோ அது.  பசங்க பெரும் பணக்காரங்க என்பதால் பெரிய மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தா தான கௌரவம்.  கை உடைந்ததால் காத்தாயியால் எவ்வேலையும் செய்ய முடியாது. அதனால் பசங்க கூடி காத்தாயியை அவரவர்கள் வீட்டில் முறை வைத்து பார்ப்பது என்று முடிவெடுத்தார்கள். அதாவது ஒவ்வொரு திங்களும்  ஒருவர் வீடு என்று முடிவானது.

மச்சு வீட்டில் இருந்த காத்தாயியின்  துணிகள்  தட்டு வாளி என்று அவர் அன்றாடம் புழங்கும் பொருட்கள் பெரியவன் வீட்டுக்கு போனது. மருத்துவமனையில் இருந்து காத்தாயி பெரியவன் வீட்டுக்கு கொண்டு போகப்பட்டார். திங்கள் ஆனதும் முதல் தேதிக்கு ஆட்டோவை பிடித்து அதில் காத்தாயியையும் அவரது உடமைகள் அனைத்தையும் ஏற்றி அடுத்து எவன் முறையோ அவன் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. பெரியவன் தான் இப்படி மற்ற மூவரும் இருக்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு. மூவரும் அப்படித்தான். என்ன பண்றது வாங்கி வந்த விதி வேற எதை சொல்ல.  திங்கள் என்றால் சில மாதம் நாள்கள் குறைவா இருக்கும் என அவர்கள் மனைவிகள் கூறியதால்  30 நாள்களுக்கு ஒருவர் என்று முறை வைத்துவிட்டார்கள். 31வது நாள் பெட்டி படிக்கையோட காத்தாயி மூட்டை கட்டி அனுப்பப்படுவார். காத்தாயி மூட்டையோட போனா 30 நாள் முடிந்து விட்டது என்று நாம் கணக்கு போடலாம். கிழவியை தூக்கி மனையில் வை என்பது மாதிரி 30 நாள் ஆனதும் இவங்க கிழவிய தூக்கி ஆட்டோவில் வை என்று செயல்படுவார்கள்.

அவங்களை பற்றி நன்கு அறியாத ஊர்க்காரர்  ஒருவர்கிழவி படுத்த படுக்கையாவா இருக்கு, மாசா மாசம் கிழவிய அலக்களிப்பதற்கு  பதிலா பேசாம துணி துவைக்க ஒரு வேலையாள் வைத்தால் போதுமே நாலு பேரும் பங்கு போட்டுக்கிட்டா வேலையாள் சம்பளமும் குறைவா தான் இருக்கும் இதை அவங்களிடம்  சொல்ல வேண்டியது தான என அவர்களின் நெருங்கிய உறவுக்காரரிடம் கூறினார். இது அவனுங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறயா? இங்கயே இருந்துக்கிட்டு தன் வீட்டில் வைத்து பார்த்துக்காம மச்சு வீட்டுலயே வேலையாளை போட்டு கவனிக்கறாங்கன்னு  ஊர்காரங்க சொல்லிடுவாங்க அப்படினுட்டு இவனுங்க கௌரவத்துக்கு இழக்குன்னு கிழவிய 30 நாளைக்கு ஒரு முறை பந்தாடுறானுங்க என்றார். இங்கேயே இருந்தா கிழவி ராணி மாதிரி இருக்கும், பார்த்துக்கிறேன்னு இப்ப அவனுங்க அதை பாடாய் படுத்தறாங்க என்றார்.  கிழவியோட விதி என்ன பண்றது என்றார்!