கருணாநிதி முத்தமிழ் அறிஞர் அல்ல. அவர் தமிழறிஞர் மட்டுமே. தற்போதைய வெற்று அரசியலுக்காக திமுகவினர் அப்படிக்கூறுவது அவருக்கு பெருமை சேர்க்காது மாறாக இழுக்கைத் தரும்.
திமுக தொண்டர்கள் அல்லாத பலரும் இந்த கோயபல்சு பரப்புரைக்கு இரையாகி கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்கிறார்கள்.
இயற்றமிழ், நாடகத்தமிழ், இசைத்தமிழ் ஆகிய மூன்று தமிழ்களிலும் அறிஞராக உள்ளவரையே முத்தமிழ் அறிஞர் என்போம். அந்த வகையில் வெகு சிலர் தான் இருப்பர் இப்போது எவர் உளர் என அறியேன். இயற்தமிழில் அதிகமாகவும் அதைவிடக் குறைவாக இசைத்தமிழிலும் அதைவிடக் குறைவாக நாடகத்தமிழிலும் இருப்பார்கள்.
முத்தமிழும் அறிந்திருப்பது வேறு முத்தமிழிலும் அறிஞராய் விளங்குவது என்பது வேறு, இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டால் சிக்கலில்லை. காட்டாக வான்கோழியை மயில் என்று திரும்ப திரும்ப கூறினாலும் அது மயில் ஆகாது என்பதை அறிக.
திரைப்படத்தை விட நாடகம் சிறப்புடையது என்றாலும் நாடகங்கள் குறைந்து திரைப்படம் அதிகமாகிவிட்ட படியால் இக்காலத்தில் திரைப்படத்தையும் நாடகத்தமிழில் சேர்க்கலாமென்று நினைக்கிறேன், உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால் திரைப்படமானாலும் நாடகமானாலும் நாடகத்தமிழுக்கான இலக்கணம் ஒன்று தான் அது இன்னும் மாறவில்லை.
தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் அடிகளாசிரியர் முத்தமிழின் இலக்கணத்தை பாட்டாகவே வடித்து தந்துள்ளார்.
ஆசிரியம் முதலா நான்கு பாவினுள்
அறமுதற் பொருளை அமையப் பாவி
மோனை முதலாம் தொடையழகு தோன்ற
அணிபெறப் பாடுதல் இயற்றமிழ் ஆகும்
பாவினம் என்றும் பண்ணத்தி என்றும்
செந்துறை என்றும் செப்பும் பாட்டில்
அறமுதற் பொருளை அமையப் பொருத்திப்
பண்களை அமைத்துப் பாடுதல் தானே
இசைத்தமிழ் என்னும் இன்தமிழ் ஆகும்
நடித்தலுக் கேற்ற வெண்துறைப் பாட்டில்
அறமுத லாகிய பொருள்வகை அமைவரப்
பாடி ஆடுதல் நாடகத் தமிழாம்
பாடி ஆடி நடிப்பது தான் நாடகத் தமிழ் வரையறைக்குள் வரும் என்று தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது.
தமிழில் பா எழுதுபவர்கள் எல்லாம் தமிழறிஞர்கள் அல்ல, இசை கோர்ப்பவர்கள் எல்லாம் இசை அறிஞர்கள் அல்ல, பாடி ஆடுபவர்கள் எல்லாம் நாடக அறிஞர்கள் அல்ல.
இதனால் நாடகத்திற்கோ திரைப்படத்திற்கோ கதை, திரைக்கதை , வசனம் மட்டும் எழுதுபவர்களையோ இயக்குபவர்களையோ, பாட்டெழுதுபவர்களையோ இசை கோர்ப்பவர்களையோ அதில் சேர்க்க முடியாது இவை இயற்றமிழிலும் இசைத்தமிழிலும் மட்டுமே சேரும் என்பதை அறியலாம். இதனால் கருணாநிதி நாடகத் தமிழ் அறிஞர் இல்லை என்பதையும் முத்தமிழ் அறிஞர் என்பது தவறு என்பதையும் அறியலாம்.
கருணாநிதி தமிழில் புலமை மிக்கவர். சில காரணங்களால் அவர் தமிழறிஞர் அல்ல என்றும் சிலர் அவர் மறைந்த 5 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே வாதிடுகிறார்கள். சிலர் இப்படி வாதிடுவார்கள் என்பதை முன்கூட்டி அறிந்ததாலும், பின் வரும் காலங்களில் தமிழ் அறிஞர்கள் எவரும், தான் தமிழறிஞர் என்பதை மறுகக்கூடாது என்பதாலுமே இவர் முன்பே சங்கத்தமிழ் எழுதி இருந்தாலும் கூடுதலாக குறலோவியம், தொல்காப்பியப் பூங்காவை முன்னெச்சரிக்கையாக இயற்றினார் எனக் கருதலாம். தொல்காப்பியப் பூங்கா நூலை நான் படித்ததில்லை தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது எளிய செயல் அல்ல என்பதால் அதையே நான் கருணாநிதியை தமிழறிஞர் என்று நிருபிக்கும் சிறந்த படைப்பாக இருக்குமென்று கருதுகிறேன்.
ஆனால் எழுதியபோது பலர் தொல்காப்பிய பூங்கா நூல் எழுதும் முயற்சியை வியந்து கூறியதை கேட்டதுடன் சரி , அதன்பின் தமிழறிஞர்கள் மட்டுமல்ல திமுகவினர் உட்பட எவரும் அந்த நூலைப்பற்றி பேசிக்கேட்டதில்லை.