வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



உட்கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உட்கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 25, 2015

ஆம் ஆத்மி கட்சியும் உட்கட்சி பூசலும்


தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றதும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். பாசகவின் தடையற்ற பல சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு கிடைத்த பெரும் தடை மக்களாட்சிக்கு நல்லது. மற்ற எதிர்கட்சிகள் பாசகவை பார்த்து இதன் ஓட்டத்தை எப்படி தடுப்பது என்று செய்வதறியாமல் திகைத்த நேரத்தில் தில்லியில் பாசகவுக்கு பெரும் அடி. இது பாசகவுக்கும் நல்லது என்று தான் கூற வேண்டும்.

இன்னும் சொன்னால் 2014ஆம் ஆண்டின் பாசகவின் வெற்றிப்பயணம் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
குல்லா

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி பெருவெற்றி பெற்றதும், யோகேந்திர யாதவும் பிரசாந் பூசணும் கட்சியை சில கேள்விகள் கேட்டார்கள். தேர்தலுக்கு முன்னமே கேட்டுள்ளார்கள் ஆனால் தேர்தலுக்கு பின் தான் அதற்கு மதிப்பு கூடியுள்ளது.  கேட்ட கேள்விகளும் மிகச்சரியானது, ஆனால் அதற்கு ஆம் ஆத்மியின் தில்லி பொறுப்பாளர்கள் அவர்கள் இருவரையும் துரோகிகள் என்றதும் மற்ற நடவடிக்கைகளும் ஆம் ஆத்மியும் மற்ற கட்சிகள் போல் தான் என்று காட்டியது. 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது, இது அக்கட்சியின் பலருக்கு செருக்கை (மமதை) தரும். இப்போது நடக்கும் சண்டையைப் பார்த்தால் பலருக்கு செருக்கு வந்தது போல் தான் தெரிகிறது. மேலும் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல் வெற்றி பெற்றவர்கள் அடுத்தவர்களை ஈர்ப்பர் புதிதாக வருபவர்களில் சிலரோ பலரோ மோசமான பேர்வழிகளாக இருப்பர். கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது அதனால் நாளாக ஆக கட்சி தன் கொள்கைகளிலிருந்து நழுவாமல் இருக்க கேள்விகள் மூலம் அதை ஒழுங்கு செய்வதே முறை. வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். தவறுகள் ஏற்படலாம் கட்சியினர் கேள்வி கேட்டால் தான் தவறுகளை களைய முடியும். உட்கட்சி குரல் கேட்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டும். இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். இந்தி கட்சி என்று நினைக்க வைக்கக் கூடாது.

கேள்விகள் கேட்காவிட்டால் தவறு நடக்க வாய்ப்பு அதிகம், எண்ணம் தூய்மையாக இருந்தாலும் கேள்விகள் தேவை. பல ஆண்டுகள் கழித்தும் எண்ணம் மாசு படாமல் இருக்க வேண்டும். தலைவருக்கும் கட்சியின் மற்ற முதன்மையானவர்களுக்கும்

இடுப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

என்று வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பலர் மற்ற கட்சிகள் போல் இயங்க ஆசைப்படுகின்றனர் அது மாபெரும் தவறு. இவர்களின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையால் அது டெல்லி கட்சியாகவே இருக்கும். மற்ற மாநிலங்களில் வளர முடியாது. பஞ்சாபில் நாலு மக்களவை உறுப்பினர்களை பெற்றதால் அங்கு பெரிய கட்சியாகலாம். மற்ற மாநிலங்கள்?  மாநில தலைமை வலுப்பெற்றால் மட்டுமே அந்தந்த மாநிலங்களில் வளரமுடியும்.

இங்கு இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் தில்லி மாநிலம் என்று சொன்னாலும் அது பெரிய மாநகரம் மட்டுமே.  ஆம் ஆத்மிக்கு தில்லி, பஞ்சாப் தவிர மற்ற இடங்களில் பெருநகரங்களில் மட்டுமே சிறிய ஆதரவு உள்ளது.

  • ஆம் ஆத்மி கட்சி எல்லா மாநிலங்களிலும் வளருவது கடினம். ஆம் ஆத்மி என்பது கருத்தாக்கமே இத்கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல மாநிலங்களில் கட்சி உருவாகலாம், ஆம் ஆத்மி கட்சி அவற்றுடன் கூட்டணி வைக்கலாம். அதாவது கூட்டாட்சி முறையே நல்லது. இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
  • கட்சியின் மேல் மட்டத்தலைவர்கள் அனைவரும் இந்திக்காரர்களே. இந்தி பேசாத பெருவாரியான மாநிலங்களில் வளர அம்மாநில மொழி பேசும் ஆளுமைகள் தேவை. அனைவருக்கும் குறிப்பிட்ட மாநிலத்தின் நிலைமையோ அது எதிர்கொள்ளும் சிக்கல்களோ புரிவது கடினம். ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு என்று சொன்னால் மிகையல்ல. உறுதியான மாநில தலைமை இங்கு தான் தேவைப்படுகிறது. 
  • கட்சி இப்போது பெருநகரங்களில் ஆதரவை கொண்டுள்ளது. ஊரகப்பகுதியில் கட்சி வளருவது அந்த மாநில கட்சியினரின் செயல்பாட்டை பொருத்தே உள்ளது. பஞ்சாபில் வளர்ந்து வருவதும் அங்கு பெறப்போகும் வெற்றியும் மற்ற மாநிலத்தவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். (என்னைப் பொருத்த அளவில் தில்லி வெற்றியை விட பஞ்சாபில் பெறப்போகும் வெற்றியே, அளவில் பெரிய ஊரகங்களை உடைய மாநிலங்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும்)
  • கட்சியின் மேல்மட்டக்குழுவில் மாநிலங்களுக்கு சிறப்பு தரப்பட வேண்டும். அவர்கள் சொல்வது கேட்கப்பட்டு முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
  • மாநில கட்சி நிலவரங்களை மேல் மட்டம் தீர்மானிக்கக்கூடாது (மற்ற தேசிய கட்சிகளைப்போல). 
  • கட்சி செயற்குழு பொதுக்குழு கூட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். (இதைத்தான் பிரசாந்தும் யோகேந்திராவும் சொன்னார்கள்)
  • மாநில அளவு கட்சிக்கு தேசிய கட்சி உதவ வேண்டும் அவர்கள் செல்லுவது தவறு என்றால் அறிவுறுத்தவேண்டும்.

ஆம் ஆத்மியிடம் எனக்கு பிடிக்காதது குல்லா தான். குல்லாவை கண்டாலே ஒவ்வாமை வருகிறது. வடமாநிலங்களில் குல்லா சரி. தமிழ்நாட்டுக்கு?? குல்லா, தில்லி கட்சி இங்கே ஆதிக்கம் செலுத்த வருகிறதோ என்ற அச்சத்தை தரும். தமிழ்நாட்டுக்கு குல்லா பயன்படுத்தினால் கட்சி மக்களிடம் நெருக்கமாக முடியாது.  தமிழகத்தில் குல்லா செயற்கையாக இருக்கும்.\ இருக்கிறது. குல்லாவிற்கு பதில் துண்டு பயன்படுத்தலாம்.



திங்கள், ஜனவரி 09, 2012

அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு

நவம்பர் 2012ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் சனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுவார் /போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து நிற்க ஆளை தேர்ந்தெடுக்கும் பணியில்(உட்கட்சி தேர்தல்) குடியரசு கட்சி உள்ளது.

உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று யார் ஒபாமாவை எதிர்க்க போகிறார் அப்படிங்கிற எதிர்பார்ப்பு தினமும் கூடிக்கிட்டே இருக்கு. நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. இவர் தான் முன்னனியில் இருக்காருன்னு யாரையும் சொல்லமுடியலை. ஆனா சீரா எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  மிட் ராம்னி முன்னனியில் இருக்கார் ஆனா அவர் ஆதரவு பெரிய அளவில் இல்லை அதனால அவர் தான் வெற்றி பெறுவார் அப்படின்னு யாராலும் சொல்ல முடியலை. "Anybody but Romney" - ராம்னிய தவிர யாரு வேண்டுமானாலும் சரி- அப்படின்னு பலம் வாய்ந்த கிருத்துவ பழமைவாதிகள் குழு குடியரசு கட்சியில் இருக்கு. ராம்னிக்கு மாற்றா வேற ஆள அவங்க தேடறாங்க, அவங்க யாராவது ஒருத்தரை ஆதரிக்க முடிவு எடுத்தா ராம்னி காலி.

ராம்னியும் கிருத்துவர் தான் ஆனா அவர் மொர்மன் என்ற பிரிவை சார்ந்தவர். அது தான் அவருக்கு சிக்கலே. பெரும்பாலான குடியரசு கட்சிகாரர்கள் சீர்திருத்த சபையை(புரட்டதசுட்டன்\ Protestant) சார்த்த கிருத்துவர்கள். எவங்கலிசம் , பாப்டிசம், பெத்தகொசுத்தே,  மற்ற பிரிவுகள் எல்லாம் இதுல வருது. இவங்களுக்கு மொர்மன் பிரிவை சுத்தமா பிடிக்காது. சில பேர் அவங்க கிருத்துவர்களே அல்ல அப்படிப்பாங்க.

டீ பார்ட்டி
டீ பார்ட்டி குழு என்று திடீர்ன்னு ஒன்று 2009 வாக்குல குடியரசு கட்சியில் முளைத்தது. இவர்களை ஆரம்பத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட குடியரசு கட்சிக்காரங்க கண்டுக்கலை. ஆனா இவங்களை மீறி கொட்டை போட்ட ஆட்களால் பிரைமரி எனப்படும் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. இவங்க பலம் 2010 காங்கிரசு மற்றும் செனட் தேர்தலில் நன்கு வெளிப்பட்டது. இப்ப குடியரசு கட்சி கீழவையான காங்கிரசில் பெரும்பான்மை பெற்று இருக்குன்னா அதுக்கு டீ பார்ட்டி குழு தான் காரணம்.

ஆரம்பத்தில் இருந்த நிலை

டீ பார்ட்டி முதலில் மிச்சால் பாக்மன் அவர்களை ஆதரித்தது. அவர் முன்னனியில் இருந்தார், ரிக் பெர்ரி வந்தவுடன் எல்லாரும் அவரை ஆதரித்ததால் மிச்சால் பாக்மன் முன்னிலை தகர்ந்தது. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட குடியரசு கட்சி போட்டியாளர்க்கிடையேயான தருக்கத்தில் மோசமாக செயல் பட்டதால் (பலமுறை) இவரின் முன்னனி தகர்ந்தது. தருக்கத்தில் 9-9-9 என்று வரி விதிப்பு பற்றி எளிமையாக விளக்கியதால் கெர்மன் கெய்னுக்கு ஆதரவு பெருகியது. இதை அவரே எதிர்பார்க்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இவரின் ஆதரவு குறைந்தது. ராம்னிக்கு எதிரா உறுதியான வேட்பாளர் வேண்டும் என்பதால் நியுட் கிங்ரிச்க்கு ஆதரவு கூடியது. ஆரம்பத்தில் இவரின் போக்கு பிடிக்காமல் இவரின் குழுவில் பலர் விலகியதும் நடந்தது. இவரு போட்டி போடறது தண்டம் என்று பலர் நினைத்திருக்க திடீர் என்று இவருக்கு ஆதரவு பெருகியது.  பிரடி மே என்ற வீட்டு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு ஆலோசனை சொன்னதற்கு கூலியாக 1.5 மில்லியன் டாலருக்கு மேல் பெற்றது வெளியில் வந்ததால் இவரின் ஆதரவு குறைந்தது (அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டதில் இவ்வகையான வீட்டுக்கடன் கொடுத்த நிறுவனங்களும் காரணம், சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் கடன் கொடுத்தா கொடுத்த காசு திரும்பி வருமா), ராம்னிக்கு மாற்றாக யாரை ஆதரிக்கலாம் என்று பழமைவாதிகள் தடுமாறிக்கிட்டு இருந்தாங்க. ரான் பவுல் என்பவரை ஆதரிப்பது கடினம். ரான் பவுல் சுதந்திரவாதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவர். தாராண்மியவாத கொள்கையை கடைபிடிப்போர் அவரின் ஆதரவாளர்கள், இவர்கள் பெரும்பான்மையாக இல்லாவிடிலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். திடீர்ன்னு பென்சில்வேனியா மாநிலத்தின் சார்பாக அமெரிக்க மேலவையில்  செனட்டராக இருந்த ரிக் சாண்ட்ரமுக்கு ஆதரவு பெருகியது.

அயோவா
இந்நிலையில் உட்கட்சி தேர்தல் முதலில் நடைபெறும் அயோவா மாநிலத்தின் caucus நெருங்கி வந்தது.  caucus என்றால்  வேட்பாளரை தீர்மானிக்க சந்திக்கும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் என சொல்லலாம். அயோவா மாநிலத்தில் நடந்த வாக்கெடுப்பில் ராம்னி முதல் இடத்தையும் ரிக் சாண்ட்ரம் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள். வேறுபாடு 8 வாக்குகள் மட்டுமே. ரான் பவுல் மூன்றாவது இடத்தை பிடித்தார். ராம்னி 30,015 சாண்ட்ரம்  30,007, ரான் பவுல் 26,219 வாக்குகளும் பெற்றனர். 4வது இடம் பிடித்த கிங்ரிச் ராம்னிக்கு எதிராகவும் ரான் பவுலுக்கு எதிராகவும் தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளார். 5வது இடம் பிடித்த ரிக் பெர்ரி வாங்கடா தென் கரோனிலாவுக்கு (இது பழமைவாதிகள் நிறைந்த மாநிலம்) அங்க பார்க்கலாமுன்னு சொல்லிட்டார். 6வது இடம் பிடித்த மிச்சால் பாக்மன் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

 அயோவுக்கு அடுத்து
இந்நிலையில் அயோவாவில் கலந்துக்காத ஜோ ஹண்ட்சுமேன்  நியு ஹாம்சுபியர் மாநில உட்கட்சி தேர்தலில் கலந்துக்கறார். இவரும் மோர்மன் பிரிவை சார்ந்த கிருத்துவர். பழமைவாதிகளின் வாக்குகள் பல்வேறு வேட்பாளர்களுக்கு சிதறியதால் தான் ராம்னி அயோவாவில் வெற்றி பெற்றார் என்பதால் பழமைவாதிகள் அனைவரும் ஒரே வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என சில பழமைவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் சாண்ரோமை ஆதரிப்பது சிறந்தது எனவும் மற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளனர்.  நியு ஹாம்சுபியர் தேர்தலில் ராம்னி வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இவர் பக்கத்து மாநிலமான மாசசூட்ச்சசின் ஆளுனராக இருந்தவர் அதனால் இப்பகுதியில் இவருக்கு மற்றவர்களை விட செல்வாக்கு அதிகம். ஆனால் அவரின் உண்மையான சோதனைக்கட்டம் அதற்கடுத்த தேர்தல்களில் தான் இருக்கிறது.

வர்ஜீனியா கூத்து
வர்ஜீனியா மாநில தேர்தலில் கலந்துக்க மிட் ராம்னி, ரான்  பவுல் ஆகிய இருவர் மட்டுமே தகுதிபெற்று இருக்காங்க, மற்றவங்க எல்லாம் ஆட்டத்துக்கு சேர்த்துக்கப்படலை. கிங்ரிச் இப்ப வாசிங்டன் டிசி பெருநகரத்தின் எல்லையில் வர்ஜீனியாவில் மெக்லீன் என்ற இடத்தில் 1999 ல் இருந்து வசிக்கிறார்.வர்ஜீனியா குடியரசு கட்சி சட்டப்படி 10,000 வர்ஜீனியா வாக்காளர்களின் கையெழுத்தை பெற்று குடுத்திருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் கலந்துக்கமுடியும். இதை உரிய காலத்திற்குள் செய்தவர்கள் இருவர் மட்டுமே. செய்யாத மற்றவங்க இப்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காங்க.

குடியரசு கட்சி ஆதரவாளரான என் நண்பனிடம் யாருடா வருவாங்க அப்படின்னு கேட்டேன். மிட் ராம்னி தான் கடைசியில் வெற்றிபெறுவார் பாரேன் அப்படின்னான். பார்க்கலாம். எனக்கென்னமோ நம்பிக்கையில்லை, 2008 குடியரசு கட்சி உட்கட்சி தேர்லை மறக்கமுடியுமா?