செக் குடியரசின் தலைநகரான பிரேஃகில் (Prague) 2700 வானியலாளர்கள் (நம்ம ஊர் சோசியகாரங்க போனாங்கனான்னு தெரியலை) சேர்ந்து புளூட்டோன்னு இருந்த கிரகத்த அது கிரகமில்லைன்னு சொல்லிட்டாங்க , .
அதனால் இனிமேல் சூரியனுக்கு எட்டு கிரகங்கள் தான் ஒன்பதுன்னு நாம படிச்சத மாற்றிக்கொள்ளனும். ஆசிரியர்கள் இதை மாணவர்களுக்கு சொல்லி விளங்க வைக்கவேண்டும். அடுத்த ஆண்டு பாட புத்தகத்தில் மாற்றம் செய்வாங்களா? முதலமைச்சர் அல்லது பிரதமர் மாறினாலே 5 ஆண்டு கழித்து தான் மாற்றுவங்க இதை சீக்கிரம் மாற்றுவாங்களா? ;-) அதிகம் ஆசை படக்கூடாது.
1930 ஆம் ஆண்டு புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டு சூரிய குடும்பத்தில் ஒரு கிரகமாக சேர்க்கப்ப்பட்டது. அப்பவே சிலர் இதுக்கு கிரக தகுதி கொடுக்கக்கூடாதுன்னு தகராறு செய்திருக்காங்க. அப்ப அவங்க பேச்சு எடுபடலை. அதுக்கப்புறம் நம்ம தாத்தா, அப்பா, நாம, நம்ம புள்ளைங்க எல்லாம் சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் இருக்குன்னு படிச்சிக்கிட்டு வந்தோம், வர்றோம். நவகிரக நாயகின்னு பாட்டு எல்லாம் எழுதி கொண்டாடுனோம். 3 ஆண்டுக்கு முன் எடுத்த ஒரு புகைப்படம் இதுக்கு ஆப்பு வைத்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்த புகைப்படத்தைக் கொண்டு 2005-ல் மைக் பிரௌன் என்பவர் புதிய கோளை கண்டுபிடித்தார் அதை 2003 UB313 என்று தற்காலிகமாக பெயரிட்டார்கள். ஆனா அவரு செல்லமா ஜீனா(Xena)ன்னு பெயரை வைத்துக்கொண்டார். இந்த புது கோளானது புளூட்டோவை விட அளவில் சற்று பெரிதாக போனதன் விளைவுதான் புளூடோவுக்கு வினையாக அமைந்துவிட்டது. அதாவது குறுக்குவாட்டுல (விட்டம்) 240 கி.மீ பெருசு. அதனால இதையும் ஒரு கோளாக சூரிய குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. நியாயமான கோரிக்கை புளூட்டோவுக்கு கோள் என்ற தகுதி கொடுத்தால் நம்ம ஜீனாவுக்கும் கொடுக்கனும் அது தான் முறை. இந்த கோரிக்கையை பன்னாட்டு வானியலாளர் அமைப்பு (International Astronomical Union's) விவாதித்தது, ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஏனெனில் "கோள்" என்று வரையறுக்க இதுவரை தெளிவான விதிகள் இல்லை. சரி கோளுக்குன்னு சில விதிகளை வரையறுக்கலாம் என்றும் அதன் அடிப்படையில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்களை அது கோளா இல்லை கோலி குண்டான்னு முடிவு செய்ய முடிவெடுத்து விதிகளையும் வரையறுத்தார்கள்.
இந்த புதிய விதியின் படி புளூட்டோவின் கோள் என்ற தகுதிக்கு ஆபத்து வந்தது. கடும் விவாதம் நடந்தது புளூட்டோவை கோள் என்று சொல்லி பழகிவிட்டதால் அதன் தகுதியை குறைக்க கூடாது என்று சிலர் வாதாடினர், அப்படியென்றால் நம்ம ஜீனாவுக்கும் மேலும் 2 பொருட்களுக்கும் (புளூட்டோவின் நிலவு செரோன் "Charon", விண்கல் செரெஸ் "Ceres" ) கோள் என்ற தகுதியை கொடுக்க வேண்டும். சூரிய குடும்பத்தின் கோள் எண்ணிக்கை 12 ஆக உயரும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் பல புதிய பொருட்கள் (Objects)கண்டுபிடிக்கப்படும், புளூட்டோவுக்கு கோள் என்ற தகுதி இருந்தால் பின்னால் அது போல் நூறு கோள்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் என்னசெய்வதென்று வானியலாளர்கள் விவாதித்தனர்.
சிக்கலுக்கு ஒரே வழி புளூட்டோவுக்கு இருந்த கோள் என்ற தகுதியை நீக்குவது என்று முடிவு செய்து அறிவித்துவிட்டனர். இனி சூரிய குடும்பத்துக்கு 8 கோள்களே (Classical Planets), புளூட்டோ, ஜீனா, செரோன், செரெஸ் போன்றவை சிறு கோள்கள் ( Dwarf Planets) என்ற வகையில் அடங்கும்.
சரி கோள் (Classical Planets) என்பதற்கான புதிய வரையறை என்ன?
இயற்கைநேசி தெளிவாக தமிழ் படுத்தி தன் பதிவில் சொல்லி இருக்கிறார்.
1) கோள் சூரியனை மையமாக வைத்து சுற்றி வர வேண்டும்.
2) கோளின் அடர்வுத் தன்மையின் ஈர்ப்பு விசை அதன் வடிவத்தை வட்ட நிலைக்கு எடுத்து சென்றிருக்க வேண்டும்.
3) கோளின் அண்டைய வழியில் (சுற்றுபாதை/Orbit) மத்த பொருட்கள் இதன் இருப்பை பாதிக்காத வண்ணம் வலியாதாக இருக்கவேண்டும். (has cleared the neighbourhood around its orbit.)
புளூட்டோவின் நீள்வட்ட சுற்று பாதையானது நெப்டூயுனின் சுற்றுப்பாதையோடு மேற்பொருந்தி (Overlap)செல்வதால் புதிய வரையறையின் படி இது தானாக தகுதி இழந்துவிட்டது.
சிறு கோள்களுக்கான (Dwarf Planets) வரையறை.
1. சூரியனை சுற்றிவர வேண்டும்.
2. அடர்வுத் தன்மையின் ஈர்ப்பு விசை இதன் வடிவத்தை கிட்டத்தட்ட வட்ட வடிவில் எடுத்து சென்றிருக்க வேண்டும்.
3. தன் சுற்றுப்பாதையை தெளிவாக வைத்துக்கொள்ளாதது. பல பொருட்கள் பாதையை பயன்படுத்தலாம், ஊடாக செல்லலாம், மேற்பொருந்தலாம். (has not cleared the neighbourhood around its orbit.)
4. துணைக்கோளாக (satellite) இருக்கக்கூடாது. அதாவது அடுத்த மொருளை மையமாக கொண்டு சுற்றி வரக்கூடாது. உ.தா. நிலா (பெரிய துணைக்கோள்) இது பூமியை மையமாக கொண்டு சுற்றி வருவதால் இது சிறு கோள் என்ற வரையறைக்குள் வராது.
புளூட்டோ நீக்கத்தை சில வானியலாளர்கள் ஆதரிக்கவில்லை / ஒத்துக்கொள்ளவில்லை. புது வரையறை தெளிவில்லாதது என்று கூறுகிறார்கள். நெப்டியூன் தன் பாதையை சுத்தமா வைத்திருந்தா புளூட்டோ ஏன் மேற்பொருந்தி செல்லுகிறது என்று கேட்கிறார் ஆலன் ஸ்டெர்ன் (Dr. Alan Stern) அப்ப நெப்டியூனுக்கு கோள் என்ற தகுதி கிடையாது. அதுவும் இல்லாம நம் பூமியின் சுற்று பாதைக்கருகில் பல ஆயிரக்கணக்கான விண்கற்கள் சுற்றுகின்றன, வியாழனின் சுற்றுப்பாதையில் ஆயிரக்கணக்கான விண்கற்கள் சுற்றுகின்றன ஆகவே அவையும் கோள் என்ற தகுதியை இழக்கின்றன என்று ஆலன் ஸ்டெர்ன் கூறுகிறார்.
மழை விட்டும் தூவானம் விடலைங்கிற மாதிரி புளூட்டோவுக்கு கோள் தகுதியை தரவேண்டும் என்று ஒரு குழு போராட தொடங்கியுள்ளது.
புளூட்டோவை நினைத்தா ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி கதை தான் நினைவுக்கு வருது.
satellite - துணைக்கோள் , நிலா
asteroid - விண்கல்
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006
சனி, ஆகஸ்ட் 19, 2006
Thatstamil.com க்கு என்னவாயிற்று?
இரண்டு நாட்களாக "thatstamil.com / thatstamil.oneindia.in" தளம் தெரியவில்லை. "The page cannot be displayed" என்ற பக்கமே தெரிகிறது. இத் தளத்திற்கு என்னவாயிற்று என்று யாருக்காவது தெரியுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)