வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஜூலை 10, 2012

கண்ணதாசன் கவிஞன் அல்ல

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என முத்தமிழும் அறிந்த வித்தகர் (யாருங்க அந்தாளு?) ஒருவர் கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

புதன், பிப்ரவரி 01, 2012

தமிழ் விக்கிப்பீடியா போட்டி

நீங்க Digital camera வைத்திருப்பவரா? நீங்க தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க அருமையான வாய்ப்பு. நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை தமிழ் விக்கிப்பீடியா ஊடகப்போட்டி ஒன்றை அறிவிச்சிருக்காங்க. இதில் தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் போன்றவற்றை பதிவேற்றலாம். போட்டின்னா காசு இல்லாமலா?
  • முதல் பரிசுக்கு 200 அமெரிக்க டாலர். 
  • இரண்டாம் பரிசுக்கு 100 அமெரிக்க டாலர்.
  • மூன்றாம் பரிசுக்கு 50 அமெரிக்க டாலர்
  • ஆறுதல் பரிசுகள் இரண்டு,  அவற்றிற்கு தலா 25 அமெரிக்க டாலர்
  • மூன்று பேருக்கு தொடர் பங்காளிப்பாளர் பரிசு,  அவற்றிற்கு தலா 100 அமெரிக்க டாலர்
  • சிறப்புப் பரிசு ஒன்றிற்கு 150 அமெரிக்க டாலர்
மொத்தம் 850 அமெரிக்க டாலருக்கு பரிசுகள்.
உங்களிடம் இருக்கும் பழைய புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் போன்றவற்றை பதிவேற்றலாம். உங்களிடம்  Digital camera இல்லையா? கவலையை விடுங்க ஒலிக்கோப்புகளாகவும் பங்களிக்கலாம். உதாரணத்துக்கு சென்னை என்பதை சென்னை, ஷென்னை, க்ஷென்னை  இப்படி பலவிதமா உச்சரிப்பாங்க (பலுக்க). சிலருக்கு சரியான உச்சரிப்பு தெரியாது. அப்படிபட்டவர்களுக்கு ஒலிக்கோப்பு உதவும். மாம்பழம் என்பதன் உச்சரிப்பு நிறைய பேருக்கு சரியா வராது. ஒலிக்கோப்பு இதை சரிசெய்யும். இது தற்காலத்து மட்டும் அல்ல, உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் விக்கிப்பீடியாவை பார்க்கறாங்க. இந்த ஒலிக்கோப்புகள் குறிப்பா அயல் மாநில, நாட்டில் உள்ள தமிழருக்கு நிறைய பயன்படும். ஏதாவது சந்தேகமா இந்த சுட்டியில் கேக்கலாம்.

போட்டி முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு. என்ன கோதாவில் இறங்கிட்டிங்களா? பரிசு உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்.

புதன், ஜனவரி 25, 2012

சிறு குறிப்புகள் - 01 25 2012

எனக்கும் சமையல் கட்டுக்கும் காத தூரம். சில குறிப்புகள் எனக்கு தெரிஞ்சிடுச்சி, அதை யார்கிட்டயாவது சொல்லலைன்னா என் மண்டை வெடிச்சிடும், அதான் இங்க இஃகி இஃகி.

வீட்டுல சூடம் வாங்கி வைத்திருப்போம். கொஞ்ச நாள் ஆனா அது கரைய தொடங்கும்.  குப்பியில் போட்டு மூடி வைத்திருந்தாலும் கரைவதை தடுக்க முடியாது. சூடம் கரைவதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. குப்பியில் சில மிளகுகளை போட்டு மூடி வைத்தால் சூடம் கரையாது.

காய்கறிகளை வாங்கி அதை குளிர்சாதன பெட்டியில்  வைத்தாலும் விரைவில் அது கெட்டு விடும். இதை தவிர்க்க காய்கறிகளில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துவிட்டு (தாளில் காய்கறிகளை ஒற்றி எடுத்தால் ஈரப்பதம் நீங்கிவிடும்) தாளில் சுற்றி வைத்தால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.


சிலர் ஆனா ஊன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பார்கள்.  நிறைய தேங்காய்கள் (உடைந்த தேங்காய் மூடி தான்) சேர்ந்து விடும். அந்த தேங்காயை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். சமையலுக்கும் எவ்வளவு தான் பயன்படுத்தறது, மீதியை என்ன செய்வது? தேங்காய் மூடியை நன்றாக துருவி தேங்காய் துருவல்களை எடுத்து அதை நெகிழி பையில்(plastic bag) போட்டு நன்றாக மூடி குளிர்சாதன பெட்டியின் உறையவை (freezer - குளிர்சாதன பெட்டியின் மேல் கதவுடன் பனிக்கட்டி செய்யக்கூடிய ஒரு பகுதி இருக்குமே அதான்) இல் வைத்துவிடவும். தேவையான போது பையில் உள்ள தேங்காய் துருவலில் தேவையான அளவு எடுத்து அதை நுண்ணலை சூடாக்கல் கருவியில் (microwave) வைத்து சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம், நுண்ணலை சூடாக்கல் கருவி இல்லாதவர்கள் அல்லது அதை பயன்படுத்துவதை விரும்பாதவர்கள் வாணலியில் சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம். சூடாக்காமலும் தேங்காய் துருவலை பயன்படுத்தலாம் ஆனால் அப்படி பயன்படுத்தினால் திரி திரியாக (திப்பி திப்பியாக) தேங்காய் இருக்கும் சுவையே இருக்காது, சூடாக்கி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.