வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஜூலை 05, 2019

கரடி புள்ளத்தாச்சி Bearish Harami

கரடி புள்ளத்தாச்சி
இரட்டை உலக்கை ஒழுங்கான இது ஏறுமுக போக்கிலேயே ஏற்படும்.

  • முதல் நாள் பெரிய வெள்ளை உடலும் அடுத்த நாள் சிறிய கருப்பு உடலும் தோன்றும். 
  • இந்த சிறிய கருப்பு உடல் வெள்ளை உடலுக்குள்  முற்றிலும் அடங்குவதாக இருக்கும். 
  • முதல் நாளுக்கு முந்தைய நாளும் வெள்ளை உடல் தோன்றி ஏறு முக போக்கை காட்டும். இந்த ஒழுங்கு உடனடியாக ஏறு முக போக்கு முடிவுக்கு வருவதை குறிக்கும்.



முதல் நாள் இருக்கும் வெள்ளை உடல் ஏறு முக போக்கு தொடர்வதை காட்டுகிறது. அடுத்த நாள் உடல் முதல் நாள் உடலில் இருந்து வெளிவருவது போல் இருக்கும். பொதுவாக இதன் நிறம் கருப்பாக இருக்கும் ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெழுகுவர்த்தியின் அளவு & அதன் இடத்தை பொருத்து போக்கு மாற்றத்தின் வீரியம் இருக்கும்.  பெரிய வெள்ளை உடலும் அதற்கு அடுத்த நாள் கருப்பு உடலும் தோன்றுவது ஏறு முக போக்கு முடிவுக்கு வருவதன் அறிகுறியாகும். மேற்கத்திய “உள் நாள்” என்பது உடலும் அதன் குச்சிகளும் முந்தைய நாளின் உடலுக்குள் அடங்குவதாகும் ஆனால் இதில் உடல் மட்டுமே முந்தைய நாளின் உடலுக்குள் அடங்கும்.


சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

  • கருப்பு மற்றும் வெள்ளை உடல்கள் பெரிதாக இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
  • கருப்பு உடல் அளவு, வெள்ளை உடல் அளவுக்கு மிக அருகில் இருந்தால் அதாவது முந்தைய நாள் தொடக்கத்துக்கு அருகில் அடுத்த நாளின் முடிவு இருந்தால் கருப்பு உடலின் அளவு எவ்வளவாக இருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.


போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கவைக்கும் காரணி

ஏறுமுக போக்கிற்கு பின் தோன்றும் பெரிய வெள்ளை உடலுக்கு பின் கரடி (கருப்பு உடல்) தோன்றி முந்தைய நாள் முடிவை விட குறைவான விலையில் அன்றைய நாளின் தொடக்கத்தை ஆரம்பிக்கும். இதனால் நெடுக்கர்கள் கவலை கொண்டு பங்குகளை விற்று லாபத்தை எடுக்க முயல்வார்கள். இதனால் அன்றைய நாளின் பங்கின் முடிவு விலை தொடக்கத்தை விட குறைந்து காணப்படும். முடிவு விலை குறைந்து காணப்படுவதால் காளைகள் கவலை கொள்ளும். போக்கு பாதிப்படைந்துள்ளது நன்கு தெரிகிறது. சிறிய கருப்பு உடல் போக்கு மாறுகிறது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது. குறுக்கர்களின் விற்பனையாலும்  நெடுக்கர்கள் லாபத்தை எடுக்க பங்கை விற்பதாலும் வர்த்தக அளவு அதிகரித்து காணப்படும்.


காளை புள்ளத்தாச்சி (Bullish Harami)

காளை புள்ளத்தாச்சி
இரட்டைத்தடி ஒழுங்கான இது போக்கு மாற்றத்தை குறிப்பிடும் ஒழுங்காகும். முதல் நாள் பெரிய கருப்பு உடலும் அடுத்த நாள் சிறிய வெள்ளை  உடலும் தோன்றும். இந்த சிறிய வெள்ளை  உடல் கருப்பு உடலுக்குள்  முற்றிலும் அடங்குவதாக இருக்கும். இந்த ஒழுங்கு உடனடியாக இறங்கு முக போக்கு முடிவுக்கு வருவதை குறிக்கும்.

முதல் நாள் இருக்கும் கருப்பு உடல் இறங்கு முக போக்கு தொடர்வதை காட்டுகிறது. அடுத்த நாள் உடல் முதல் நாள் உடலில் இருந்து வெளிவருவது போல் இருக்கும். பொதுவாக இதன் நிறம் வெள்ளையாக இருக்கும் ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெழுகுவர்த்தியின் அளவு & அதன் இடத்தை பொருத்து போக்கு மாற்றத்தின் வீரியம் இருக்கும்.  பெரிய கருப்பு உடலும் அதற்கு அடுத்த நாள் வெள்ளை உடலும் தோன்றுவது இறங்கு முக போக்கு முடிவுக்கு வருவதன் அறிகுறியாகும். மேற்கத்திய “உள் நாள்” என்பது உடலும் அதன் குச்சிகளும் முந்தைய நாளின் உடலுக்குள் அடங்குவதாகும் ஆனால் இதில் உடல் மட்டுமே முந்தைய நாளின் உடலுக்குள் அடங்கும்.

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
* கருப்பு மற்றும் வெள்ளை உடல்கள் பெரிதாக இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
* வெள்ளை உடல் அளவு கருப்பு உடல் அளவுக்கு மிக அருகில் இருந்தால் அதாவது முந்தைய நாள் தொடக்கத்துக்கு அருகில் அடுத்த நாளின் முடிவு இருந்தால் வெள்ளை உடலின் அளவு எவ்வளவாக இருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.


ஏன் போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கறாங்க?

விற்பவர்கள் அதிகம் சந்தையில் உள்ளதால் இறங்கு முக போக்கு தொடர்கிறது இதன் பின் காளை உள்நுழைந்து அடுத்த நாள் தொடக்க விலையை முந்தைய நாளின் முடிவை விட அதிகமாக வைக்கும். இதனால் குறுக்கர்கள் கவலையடைந்து நட்டத்தை குறைப்பதற்காக பங்குகளை வாங்கத்தொடங்குவர். இதனால் பங்கின் விலை அதிகரித்து அன்றைய நாளில் அதிகமாக முடியும் (வெள்ளை உடல்). இது குறு விற்பனையாளர்களுக்கு போக்கு மாறுகிறது என்பதை உணர்த்தும். குறுக்கர்கள் (short sellers) நிறைய விற்பதால் வழக்கத்தை விட பங்கின் வாங்கல் விற்றல் அதிகமாக இருக்கும். இரண்டாம்  நாள் டோஜி தோன்றினால் அது “புள்ளத்தாச்சி குறியீடு” எனப்படும். அது போக்கு மாற்றம் ஏற்படுமா என்ற ஐயத்தை ஏற்படுத்தும்.

காளை புள்ளத்தாச்சிக்கும் காளை விழுங்கிக்கும் உள்ள வேறுபாட்டை அறிக. இவை இரண்டும் இது அதுவா, அது இதுவா என குழப்பிடும்.

கார்முகில் (Black cloud)

கார்முகில்

இரட்டை உலக்கை ஒழுங்கான கார்முகில் காளை  ஒழுங்கான துளைக்கு மாற்றான கரடி ஒழுங்காகும். இது தெளிவான ஏறு முக போக்கிலேயே ஏற்படும். முதல் நாள் வெள்ளை உடலும் அடுத்த நாள் கருப்பு உடலும் ஏற்படும். முதல் நாள் முடிவை விட நன்கு இடைவெளி விட்டு மேலாக அதாவது அதிக விலையில் தொடக்கம் இருக்கும். முந்தைய நாள் வெள்ளை உடலுக்கு பாதிக்கு (50%) மேல் வந்து விலை முடியும். அதாவது முந்தைய நாளின் தொடக்கத்துக்கு அருகில் என கொள்ளலாம் ஆனால் முந்தைய நாளின் தொடக்கத்தை அடுத்த நாளின் முடிவு தொடாது.


கார்முகில் ஒழுங்கு தோன்றியதுக்கு அடுத்த நாள் கருப்பு\சிவப்பு உலக்கை தோன்றினாலே கார்முகில் ஒழுங்கு உறுதிபடுத்தப்படும் இல்லையென்றால் அது போங்கு காட்டுதுன்னு பொருள்.

மேலும் கார்முகிலின் உடம்பு  வெள்ளை\பச்சை, கருப்பு\சிவப்பாக இருக்கும், குச்சி மிகச்சிறியதாக அல்லது இல்லாமல் கூட இருக்கும். இப்படி குச்சி இல்லாமல் இரு உடம்புகளும் இருந்தால் விலை  குறைவு உறுதியானது என அறியலாம்.



சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

* முந்தைய நாள் (வெள்ளை உடல்) விட அதிக இடைவெளி விட்டு அடுத்த நாள் (கருப்பு உடல்) விலை தொடக்கம் இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
* வெள்ளை& கருப்பு  உடலின்  நீளம் மிக அதிகமாக இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
*வெள்ளை உடலின் முழு உயரத்துக்கு அருகில் கருப்பு உடலின் உடல் இருந்தால்  போக்கு மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். (வெள்ளை உடலை கருப்பு உடல் தாண்டக்கூடாது)
* கடைசி இரு நாள்களிலும் அதிக வாங்கல் விற்றல் நடந்திருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.


போக்கு   மாற்றம் நடைபெறும் என்று  நினைக்க வைக்கும் செயல் என்ன?

ஏறுமுக போக்கு என்றால் அது காளை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது அறிந்ததே. அடுத்த நாள் தொடங்கியதும் காளைகள் மேலும் முன்னேறும் அதனால் விலை கூடும் ஆனால் கரடிகள் உள்நழைந்ததும் விலை  சரிந்து அந்நாளின் விலை முடிவை ஏறுமுக போக்கில் பங்கு இருந்தாலும் குறைத்துவிடும். கரடி செல்வாக்கு  தொடர்ந்தால் அடுத்த  நாளும் விலை முடிவு குறைந்து காணப்படும் (கருப்பு\சிவப்பு உலக்கை). இது ஏறுமுக போக்கை முடித்து வைக்கும் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு என அறியலாம்.

வியாழன், ஜூலை 04, 2019

துளை (piercing)

துளை

இரட்டை உலக்கை ஒழுங்கான இது  காளை ஒழுங்காகும். இது தெளிவான இறங்கு முக போக்கிலேயே ஏற்படும். முதல் நாள் கருப்பு\சிவப்பு உடலும் அடுத்த நாள் வெள்ளை\பச்சை உடலும் ஏற்படும். ஆறு முதல் பதினைந்து நாட்கள் தொடர்ந்து கருப்பு\சிவப்பு உடல் தென்பட்டு பின் துளை ஒழுங்கு ஏற்பட்டால் சிறியளவிலான இறங்கு முக போக்கு முடிவுக்கு வருவதாக கொள்ளலாம். துளை ஒழுங்கு அதாவது வெள்ளை உடல் தோன்றுவதற்கு முந்தைய உடல் பெரிய கருப்பாக இருக்கும். கருப்பு உடலுக்கு இடைவெளி விட்டு கீழே அடுத்த நாள் விலை தொடங்கும். ஆனால் முந்தைய நாள் கருப்பு உடலுக்கு பாதிக்கு (50%) மேல் வந்து விலை முடியும் அதாவது முந்தைய நாளின் தொடக்கத்துக்கு அருகில் என கொள்ளலாம் ஆனால் முந்தைய நாளின் தொடக்கத்தை அடுத்த நாளின் முடிவு தொடாது.

இக்கட்டுரையில் கருப்பும் சிவப்பும் மாறி மாறி பயன்படுத்தப்படும் அதே போல் வெள்ளையும் பச்சையும் மாறி மாறி பயன்படுத்தப்படும்




சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

* முந்தைய நாள் (கருப்பு உடல்) விட அதிக இடைவெளி விட்டு அடுத்த நாள் (வெள்ளை உடல்) விலை தொடக்கம் இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
* கருப்பு & வெள்ளை உடலின்  நீளம் மிக அதிகமாக இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
*கருப்பு உடலின் முழு உயரத்துக்கு அருகில்  வெள்ளை உடலின் உடல் இருந்தால்  போக்கு மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
* கடைசி இரு நாள்களிலும் அதிக வாங்கல் விற்றல் நடந்திருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.



ஏன் போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கறாங்க?

முதல் நாள் விற்பவர்கள் அதிகரித்து கரடியின் செல்வாக்கு மிகுந்து காணப்படும். இதன் தொடர்ச்சி அடுத்த நாளும் தொடரும் விலை மேலும் கீழே போகும். ஆனால் நாளின் பிற்பகுதியில் வாங்குபவர்கள் அதிகரித்து காளையின் செல்வாக்கு மிகும். காளை முந்தைய நாள் கரடியின் செல்வாக்கை குறைத்து விலையை அதிகப்படுத்தும். இப்போது விற்பவர்கள் அதாவது கரடி கவலை கொள்ளும். அடுத்த நாள் வாங்குபவர்கள் அதிகரித்தால் போக்கு  மாற்றம் உறுதிபடுத்தப்படும்.


கரடி விழுங்கி (Bearish Engulfing)

கரடி விழுங்கி

இரட்டை உலக்கை ஒழுங்கான கரடி விழுங்கி ஒழுங்கில் வாங்குபவர்களை விட விற்பவர்கள் மிக அதிகரித்து காணப்படுவர். இந்த ஒழுங்கில் முதல் நாள் சிறிய வெள்ளை\பச்சை நிற உடலும் அடுத்த நாள் கருப்பு\சிவப்பு நிற உடல் அதை மறைப்பது (விழுங்குவது) போல் இருக்கும். இது ஏறுமுக போக்கிலேயே ஏற்படும். முதல் நாளின் தொடக்கத்தை விட அடுத்த நாளின் தொடக்கம் மிக அதிகமாக இருக்கும் ஆனால் முதல் நாளின் முடிவை விட அடுத்த நாளின் முடிவு மிக கீழாக இருக்கும்.

Image result for bearish engulfing


சமிக்கையை அதிகப்படுத்தும் சில காரணிகள்


  • நிறைய இடத்தில் கரடி விழுங்கி தோன்றினாலும் தெளிவான ஏறு முகத்தில் தோன்றினால் போக்கு மாற்ற வாய்ப்பு அதிகம்.
  • இரு சிறு உடல்கள் கூட கரடி விழுங்கியை உருவாக்கும் ஆனால் உடல்களின் நீளம் அதிகமிருப்பது சிறப்பு
  • இரண்டாவது தோன்றும்  கருப்பு\சிகப்பு நிற உடலின் நீளம் முன்னதை விட மிகப்பெரிதாக இருப்பது சிறப்பு.
  • கரடி விழுங்கியின் கருப்பு\சிவப்பு நிற உடல் நாளில் அதிகளவு வாங்கல் விற்றல் நடந்திருந்தால் போக்கு மாற்ற வாய்ப்பு அதிகம்.
  • பங்கு சந்தை நிலையான போக்கில் இல்லாமல் மேலும் கீழும் போவதுமாக இருந்தால் கரடி விழுங்கியை அவ்வளவாக நம்பமுடியாது.



கீழுள்ள மாதிரி மூன்று உலக்கையை வைத்தும் சிலர் கரடி விழுங்கியை சொல்கின்றனர்.  இதில் எனக்கு உடன்பாடில்லை. கரடி விழுங்கி என்பது ஈர் உலக்கை தான் மூவுலக்கை அல்ல,


ஏன்னா சிறிய பச்சை உலக்கையை அடுத்து வரும் இரு சிவப்பு உலக்கைகளும் சேர்ந்து விழுங்கி விட்டதாம்.

இறங்கு முகத்தில் தோன்றும் கரடி விழுங்கி சிறப்பானது விலை மேலும் கீழே போகும் என்பதை உணர்த்துவது.

வெறும் ஒழுங்கை மட்டும் வைத்து பங்கின் போக்கை கணிக்காமல் ஆதரவு- தடை,  ஃபிபனாச்சி மற்றும் சில காட்டிகள் உடன் பயன்படுத்தனும். இவற்றை விளக்கமா ஒழுக்குகளுக்கு  அப்புறம் சொல்கிறேன்.

எது தெரியுமா மிக சக்தி வாய்ந்த கரடி விழுங்கி ?  இறங்கு முகத்தில் விலை திருத்தம் ஏற்பட்டு விலை சிறிது ஏறுகிறது.  தடை கோட்டை தாண்டாமல் அங்கு கரடி விழுங்கி ஏற்படுவது ஆகும். அது ஆதரவு கோட்டை உடைத்து கீழே செல்லும். 10%  மட்டும் விலை ஏறினால்\குறைந்தால் அதை திருத்தம் எனலாம்.



மேலுள்ள படத்தை பார்த்தால் இறங்கு முகம் சிறிய திருத்தை சந்நித்து பின் கரடி விழுங்கி ஏற்பட்டு மீண்டும் இறங்கு முகத்தை தொடருவதை காணலாம்.

புதன், ஜூலை 03, 2019

காளை விழுங்கி (Bullish Engulfing )

விழுங்கி
போக்கு மாறுவதை காட்டும் விழுங்கி ஒழுங்கு இரு மாறுபட்ட நிற உடல்களை கொண்டிருக்கும். இது இரு உலக்கைகளால் ஆன  ஒழுங்காகும். முந்தின நாள் நிற உடலை (மேல் & கீழ் குச்சியையும் சேர்த்து) அடுத்த நாள் உடல் முழுவதுமாக மறைத்து இருக்கும்.


காளை விழுங்கி

காளை ஓட்டம் இறங்கு முக போக்கிலேயே தொடங்கும். இரட்டை உலக்கை ஒழுங்கான காளை விழுங்கியில்


  1. முதல் நாள் கருப்பு\சிவப்பு  நிற மெழுகுவர்த்தி இருக்கும் 
  2. அடுத்த நாள் பெரிய வெள்ளை\பச்சை நிற மெழுகுவர்த்தியை கொண்டிருக்கும் அது கருப்பு\சிவப்பு நிற மெழுகுவர்த்தியை விட பெரிதாகவும் அதை முழுவதும் மறைப்பது(விழுங்குவது) போல் இருக்கும். இது விற்பவர்களை விட வாங்குபவர்கள் அதிகரித்ததை காட்டுகிறது. 
  3. அடுத்த நாள் தோன்றும் பெரிய உடல் முதல் நாள் முடிவை விட தொடக்கம் குறைவாகவும் முதல் நாள் தொடக்கத்தை விட முடிவு அதிகமாகவும் இருக்கும்.

Image result for bullish engulfing

  விதிகள் –

  • முதல் நாள் உடலை விட அடுத்த நாள் உடலின் நீளம் பெரிதாக, முழுவதும் விழுங்குவது போல் இருக்கும்.
  • சில நாழிகையாவது விலை முதல் நாள் முடிவை விட குறைந்து இருக்கும்.
  • முதல் நாள் உடலின் நிறமும் அதற்கு முந்தைய நாள் உடலின் நிறமும் ஒன்றாக இருக்கும். இரண்டாம் நாள் உடலின் நிறம் அதற்கு முந்தைய இரு நாட்களின் நிறத்துக்கு மாற்றாக இருக்கும். (டோஜி மட்டுமே இதற்கு விதிவிலக்கு).


Image result for bullish engulfing

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.


  • முதல் நாள் சின்ன உடல் இருந்தால் அடுத்த நாள் மிகப்பெரிய உடல் இருக்கும். (இரு உடல்களின் நிறமும் வேறு வேறாய் இருக்கும்)
  • பெரிய உடல் தோன்றும் நாளில் வாங்கல் விற்றல் அதிகம் நடந்திருக்கும்.
  • பெரிய உடலானது சின்ன உடலையும் அதன் மேல் கீழ் குச்சிகளையும் விழுங்கி இருக்கும்.
  • முதல் நாளுக்கும் அடுத்த நாளுக்குமான இடைவெளி அதிகரித்து காணப்பட்டால் இறங்கு முகம் மாறி ஏறுமுகமாக மாற்றம் நடக்க வாய்ப்பு அதிகம்.


ஏன் போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கறாங்க?

விலை கீழே விழுவது நடந்தவுடன் விலை முந்தின நாள் முடிவைவிட குறைவாக தொடங்கும், பின் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து முந்தின நாள் தொடக்கத்தை விட விலை முடிவு அதிகரித்து காணப்படும். இவ்விடத்தில்  முதலீட்டாளர்களின் உணர்ச்சிபூர்வ உளவியல் பங்கின் போக்கை மாற்றிவிடுகிறது..


காளை விழுங்கி ஒழுங்கை சரியான பயிற்சியுடன் சரியான இடத்தில் பயன்படுத்தினால் இலாபத்தை பெறும் வாய்ப்பு அதிகம். இந்த ஒழுங்கு லாபகரமாக தங்கள் வணிகத்தை சரிசெய்து கொள்ளும் வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. முதலீட்டாளர்கள் சந்தையை படிக்கும் போது கடந்த காலங்களில் இந்த ஒழுங்கு குறிப்பிட்ட செய்திகளுக்கு எப்படி வினையாற்றியது என்று அறிவது அதிக லாபத்தை பெற வாய்ப்பளிக்கும்.



விழும் விண்மீன் ( Shooting star)


விழும் விண்மீன்

ஒற்றை உலக்கை ஒழுங்கான இது தொங்கும் மனிதனை போன்ற கரடி ஒழுங்காகும். ஏறு முக போக்கின் உச்சியில் ஏற்படும் இதன் உடல் சிறிதாக இருக்கும். இதற்கு கீழ் குச்சி இருக்காது இருந்தாலும் மிகச்சிறியதாக இருக்கும். உடலை விட குறைந்தது இரு மடங்கு கீழ் குச்சியின்  நீளம் இருக்கும். பார்க்க விண்மீன் கீழே விழுவது போல் இருக்கும். முதல் நாள் உடலை விட விழும் விண்மீனின் உடல் உயரத்தில் இருக்கும் அதாவது இரண்டுக்கும் இடைவெளி இருக்கும். விழும் விண்மீனின் நாளுக்கு அடுத்த நாள் உடல் கருப்பாக\சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விண்மீன் நாளுக்கும் அடுத்த நாளுக்கும் (இறங்கு முக போக்கு) ஆன இடைவெளி அதிகமாக இருக்கவேண்டும், முடிவும் முதல் நாளை விட குறைவாக இருக்க வேண்டும்.
Image result for shooting star trade

இதுக்கும் தலைகீழ் சுத்தியலுக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் தோற்றத்தில் ஒன்றே ஆனால் தலைகீழ் சுத்தியல் இறங்கு முகத்தில் தோன்றும் இது ஏறு முகத்தில் தோன்றும். தோன்றும் இடத்தை பொருத்து பெயர்.


சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

* மேல் குச்சியின் நீளம் அதிமாக இருக்கவேண்டும்.
* முதல் நாளுக்கும் மீன் நாளுக்குமான இடைவெளி அதிமாக இருக்க வேண்டும்.
* மீன் நாளின் முடிவை விட அடுத்த நாளின் தொடக்கம் குறைவாக இருக்கவேண்டும்.
* அதிக வாங்கல் விற்றல் மீன் நாளில் நடந்திருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.

போக்கு மாற்றம் நடைபெறுமென்று  நினைக்க காரணம்.

ஏறுமுக போக்கின் போது முந்தின நாளுக்கும் இந்நாளுக்குமான இடைவெளி அதிகரித்து பங்கின் விலை அதிகமாக தொடங்கி ஓடி புதிய உச்சத்தை தொடும். காளையின் கட்டுப்பாடில் விலை இருக்கும். ஆனால் அன்றைய நாள் முடிவதற்குள் கரடி உள்நுழைந்து விலையை வர்த்தக வீச்சின் அளவை புதிய கட்டத்துக்கு குறைத்து விடும். இது சிறிய உடலை தோற்றுவிக்கும். மேற்கத்திய குச்சி வரைபடத்தை அலசினால் காளைகள் இன்னும் கட்டுப்பாட்டில் பங்கை வைத்திருப்பதாக தோன்றும். ஆனால் நீண்ட மேல் குச்சி பங்கை விற்பவர்கள் அதிகரித்தை காட்டும். எனினும் மேல்குச்சி விற்பவர்கள் அதிகரித்ததை காட்டுகிறது. காளைகள் விலையை நாளின் முடிவில் தொடக்க விலையை விட குறையவிடாமல் பார்த்துக்கொண்டாலும் பங்கை விற்பவர்கள் அதிகமானது தெரிகிறது. அடுத்த நாள் பங்கின் தொடக்கம் குறைந்து இருந்தாலோ கருப்பு மெலுகுவர்த்தி ஏற்பட்டாலோ விற்பது அதிகரித்து உள்ளது என்பதை உறுதிபடுத்தலாம்.

Image result for shooting star trade

செவ்வாய், ஜூலை 02, 2019

தலைகீழ் சுத்தியல் (Inverted hammer)

தலைகீழ் சுத்தியல்

ஒற்றைத்தடி ஒழுங்கான தலைகீழ் சுத்தியல் இறங்கு முக போக்கிலேயே ஏற்படும். தலைகீழ் சுத்தியலில் சிறிய உடலும் மேலே நீளமான குச்சியும் இருக்கும். உடலை விட குறைந்தது இரு மடங்கு மேல் குச்சியின்  நீளம் இருக்கும். இதன் நிறம் முக்கியமில்லை என்றாலும் கருப்பு மெழுவர்த்தியை விட வெள்ளை மெழுவர்த்தி இருந்தால் காளை ஓட்டத்திற்கு அதிக வாய்ப்பு. அடுத்த நாள் வெள்ளை மெழுவர்த்தி இருப்பது சுத்தியலின் சமிக்கையை உறுதிபடுத்தும்.
Figure 1. Inverted Hammer pattern.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

* உடலின் கீழுள்ள குச்சியின் நீளம் மிக அதிகமாக இருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* முந்தின நாள் விலை முடிவை விட அதிக கீழ் இடைவெளியில் இன்றைய நாள் தொடங்கி முடிந்தால் அடுத்த நாள் போக்கு திரும்பி விலை அதிகமாக வாய்ப்புண்டு.
* அதிக வாங்கல் விற்றல் நடந்திருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* தலைகீழ் சுத்தியல் ஏற்பட்ட பின் அடுத்த நாள் தொடக்கம் முந்தின நாள் முடிவை விட அதிகமாக இருக்கவேண்டும்.
Image result for inverted hammer
ஏன் இந்த ஒழுங்கு வேலை செய்யும் என்று நினைக்கிறார்கள்?

சந்தையானது கீழ் உந்தந்தில் இருந்தால் கரடி செல்வாக்கு உள்ளதாக பொருள். அப்போது பங்கானது அதிக விலையில் (முந்தைய நாள் முடிவை விட) தொடங்கி அதிக விலையில் வர்த்தகம் நடக்கும். அதன் காரணமாக  காளைகள் உள்நுழைந்து விட்டதை அறியலாம் ஆனால் காளை தன் வலுவை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் தடுமாறும். அப்போது விற்பவர்களால் பங்கின் விலை வீழ்ந்து அதன் வீச்சின் குறை(கீழ்) விலையை எட்டுவார்கள். இதனால் கரடியின் செல்வாக்கு இன்னும் உள்ளது என்று அறியலாம். ஆனால் அடுத்த நாள் காளை நுழைந்து கரடியின் சிறு எதிர்ப்பை மீறி விலையை அதிகரிக்கும். (வெள்ளை மெழுவர்த்தி). அடுத்த நாள் விலை கீழே இறங்காமல் வலுவாக இருந்தால் தலைகீழ் சுத்தியல் சமிக்கை உறுதியானதாக பொருள்.


திங்கள், ஜூலை 01, 2019

தொங்கும் மனிதன் (Hanging man)


தொங்கும் மனிதன்

ஒற்றை உலக்கை ஒழுங்கான தொங்கும் மனிதன் ஏறுமுகமான போக்கிலேயே ஏற்படும். இது கரடி ஒழுங்காகும். சுருக்கமாக ஏறுமுக போக்கில் தோன்றும் சுத்தியலே தொங்கும் மனிதன். இதற்கு மேல் குச்சி இருக்காது இருந்தாலும் மிகச்சிறியதாக இருக்கும். இதன் உடல் சிறிதாக இருக்கும் . உடலின் நிறம் கருப்பாகவோ\சிகப்பாகவோ வெள்ளையாகவோ\பச்சையாகவோ இருக்கலாம். போக்கை மாற்றக்கூடிய தன்மையுடையது என்பதால் அடுத்த நாள் வணிகம் இதை உறுதிபடுத்த வேண்டும். முதல் நாள் தொடக்கம் & முடிவை விட அடுத்த நாள் முடிவு கீழே இருக்க வேண்டும். கீழ் குச்சியின் நீளம் குறைந்தது உடலை விட இரு மடங்கு இருக்கவேண்டும்.

இதுக்கும் சுத்தியலுக்கும் என்ன வேறுபாடுன்னா சுத்தியல் இறங்குமுகத்தில் தோன்றுவது அதே ஏறுமுகத்தில் தோன்றினால் அதை தொங்கும் மனிதன் என்பர்.

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

* உடலின் கீழுள்ள குச்சியின் நீளம் மிக அதிகமாக இருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* தொங்கும் மனிதன் அன்று அதிக வாங்கல் விற்றல் நடந்திருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* தெளிவான ஏறு முகத்தில் தோன்றினால்  மாற்றம் நடக்க வாய்ப்பு அதிகம்.

ஏன் இந்த ஒழுங்கில் போக்கு மாற்றம் நிகழும் என்று நினைக்கிறார்கள்?

ஏறுமுகத்தில் தோன்றும் தொங்கும் மனிதன் வாங்குபவர்களின் (காளை) வலிமை குறைந்ததை  காட்டுகிறது. அதே நேரம் தேவை அதிகரித்து பங்கின் விலை அதிகரிக்கும், அந்நாளில் குறிப்பிடத்தக்க அளவு விற்பதுவும்  நடக்கும். வாங்குபவர்கள் (காளை) முடிவு விலையை தொடக்க விலைக்கு அருகில் ஒரு வாராக சமாளித்து கொண்டுவருவர். முதலில் ஏற்பட்ட அதிக விற்பனை பெருமளவு முதலீட்டாளர்கள் பங்கு அதிகபட்ச விலையை தொட்டுவிட்டதாக நினைப்பதின் அறிகுறியாகும்.

வரைபடத்தை நோக்கினால் அடிக்கடி தொங்கும் மனிதன் இருப்பதை கவனிக்கலாம். அவற்றின் பங்கு வாங்கல் விற்றல் குறைவாக இருக்கும். கீழ் குச்சியின் நீளம் மிக அதிகமாக இருந்து அந்நாளில் பங்கு வாங்கல் விற்றல் மிக அதிகமாக இருந்து அடுத்த நாள் விற்பனை அதிகமாக இருந்தால் (கருப்பு\சிவப்பு நிற உடல்) மாற்றம் ஏற்பட மிக அதிக வாய்ப்புண்டு.

Image result for Hanging man


ஞாயிறு, ஜூன் 30, 2019

சுத்தியல் Hammer (பங்கு வணிகம்)



நுட்ப அலசலில் மெழுகுவர்த்தி வரைபடத்தை கொண்டு சுத்தியல் ஒழுங்கும்  மற்ற ஒழுங்குகளும் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.  ஒழுங்கை மட்டும் வைத்துக்கொண்டு கோதாவில் இறங்குவது முட்டாள்தனம். கூட சில காட்டிகளை வைத்து ஒழுங்கு சரியான பாதையில் கணிப்பின் படி போகுதான்னு பார்க்கனும். ஏகப்பட்ட காட்டிகள் இருக்கு, அவரவருக்கு உகந்த நாலு அல்லது ஐந்து காட்டிகளோடு ஒப்பிடுவது சிறப்பு. அப்படி பார்த்தாலும் வெற்றி உறுதியில்லை ஆனா வாய்ப்பு அதிகம். ஒன்றும் பார்க்காமல் பங்கை வாங்கி\விற்பதை விட பார்த்து வாங்கி\விற்பது நல்லது, பலன் அதிமிருக்கும்,

சுத்தியல் 

ஒற்றை உலக்கை ஒழுங்கான சுத்தியல்  இறங்கு முக போக்கிலேயே தோன்றும். இது பங்கு காளை ஓட்டத்தை ஓட ஆரம்பிக்கும் தொடக்கம் ஆகும். சுத்தியலின் கீழ் குச்சி உடலின் நீளத்தைப் போல்  குறைந்தது இரு மடங்காவது இருக்க வேண்டும். சுத்தியலின் மேல் குச்சி இருக்கக்கூடாது அல்லது மிகச்சிறிதாக மட்டும் இருக்கலாம். இதன் நிறம் முக்கியமில்லை என்றாலும் கருப்பு மெழுவர்த்தியை \உடலை விட வெள்ளை மெழுவர்த்தி\உடல் இருந்தால் காளை ஓட்டத்திற்கு அதிக வாய்ப்பு. அடுத்த நாள் வெள்ளை மெழுவர்த்தி\உடல் இருப்பது சுத்தியலின் சமிக்கையை உறுதிபடுத்தும்.

Related image 
கருப்பும் சிகப்பும் ஒன்று (மாறி மாறி பயன்படுத்தப்படும்) 
வெள்ளையும் பச்சையும் ஒன்று (மாறி மாறி பயன்படுத்தப்படும்) 

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.

* உடலின் கீழுள்ள குச்சியின் நீளம் மிக அதிகமாக இருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* சுத்தியல் அன்று அதிக வர்தகம் நடந்திருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* முதல் நாளின் விலை முடிவை விட அதிக கீழ்நோக்கிய இடைவெளியில் அந்நாள் பங்கின் விலை தொடக்கம் இருந்து அடுத்த நாள் பங்கின் விலை தொடக்கம் உயர்ந்து இருந்தால் விலை மாறுபாடு உறுதியாக நடப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
* தெளிவான இறங்கு முகத்தில் தோன்றினால்  மாற்றம் நடக்க வாய்ப்பு அதிகம்.







ஏன் மாற்றம் நடக்கும் என எண்ணுகிறோம்?

சந்தையானது கீழ் உந்தந்தில் இருந்தால் கரடி செல்வாக்கு உள்ளதாக பொருள். அப்போது பங்கானது அதிக விலையில் (முந்தைய நாள் முடிவை விட) தொடங்கி குறைவான விலையில் வர்த்தகம் நடக்கும். எனினும் பங்கை விற்பது நின்று பின் காளையின் செல்வாக்கு மிகுந்து அதிக விலைக்கு வாங்குவது நடக்கும். இந்த விலையானது வணிகவீச்சின் மேல் பகுதியை உருவாக்கும். இதனால் சிறிய உடலும் நீண்ட கீழ் குச்சியும் உருவாகும். இது கரடியின் கட்டுப்பாடு தளர்வதை குறிக்கிறது. நீண்ட கீழ் குச்சி கரடியின் செல்வாக்கு இன்னும் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. போக்கு மாறுவதை  குறிக்கும் உறுதிபடுத்தும் செயல் அடுத்த நாள் பங்கு அதிகவிலைக்கு தொடங்கி அதிக விலையில் முடிவதாகும். 

கலைச்சொற்கள் :-

உலக்கை Candle stick 
உந்தம் Momentum 
ஒழுங்கு Pattern 
போக்கு Trend 
குச்சி Shadow or tick
உடல் Body 
வீச்சு Range 


ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

பிணி போக்கும் தன்வந்திரி திருமந்திரம்

எல்லா பிணியும் நீங்க 108 முறை இந்த தன்வந்திரி திருமந்திரத்தை ஓதவும்.

 ஓம் பகலவனே கோவிந்தனே;
 தந்வந்திரியே மருந்து கலனை உடையவனே;
எல்லா பிணிகளையும் போக்குபவனே ;
மூவுலகின் கோவே திருமாலே போற்றி! போற்றி








மரூர்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் வரலாறு

மரூர்பட்டி பாலதண்டாயுதபாணி (பழனியாண்டவர்) கோவில் தல வரலாறு (தல புராணம்) அசித் புராணமல்ல  😉
வெள்ளக்கோவிலுள்ள வீரகுமார சாமி தன் எல்லைக்குட்பட்ட மக்கள் நலமாக உள்ளார்களா என்று அறிய திங்கள் தோறும் நாட்டில் எல்லா இடங்களுக்கும் உலா செல்வது வழக்கம். அப்படி வரும் போது ஒரு முறை நாமக்கலுக்கு அருகிலுள்ள மரூர்பட்டியில் திரளாண மக்கள் சாமியின் வருகையை எதிர்பார்த்து கூடியிருந்தனர். சாமி அவர்களிடம் எதற்காக கூடியுள்ளீர்கள் என்று வினவினார். அவர்கள் சாமி வெள்ளக்கோவில் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது அதனால் உன் ஆலயத்திற்கு மாதம் ஒரு முறை கூட வரமுடிவதில்லை. ஆகையால் இங்கு எழுந்தருள வேண்டும் என வேண்டினர். அதற்கு சாமி வீரக்குமார சாமியாக வெள்ளக்கோவிலில் எழுந்தருளுவேன் என பக்தருக்கு வாக்கு கொடுத்ததன் காரணமாக வேறு ஊர்களில் தான் எழுந்தருள முடியாது என்றும், தான் வேலவனின் இறங்குகை என்றும் அதனால் பழனியாண்டவர் ஆலயத்தை நிறுவி வழிபடச் சொன்னார். அப்போது கூட்டத்திலிருந்த குப்பண்ணக் கவுண்டர் என்ன இருந்தாலும் தங்களை தரிசிப்பது போல் ஆகுமா என்றார். இந்த இறங்குகையில் தான் பெண்களை கோவிலில் பார்ப்பதில்லை என்று வாக்கு கொடுத்திருப்பதால் அவர்கள் என் ஆலயத்தின் உள் வரமாட்டார்கள் ஆனால் அவர்களின் வேண்டுதலுக்கு இரு மடங்கு பலன் கொடுப்பேன், ஆனால் பழனியாண்டவர் கோவிலுக்கு இருபாலரும் வரலாம் என்று கூறி பழனியாண்டவரை ஏற்பாடு செய்ய கூறினார். அப்போதும் கூட்டத்திலிருந்த செல்லமுத்து கவுண்டர் என்ன இருந்தாலும் உங்களை வழிபடுவது தான் பிடித்துள்ளது என்றார். அதற்கு சாமி என் உருவத்தை வரைந்து வேல் சாட்டை பிரம்பு முதலியவற்றை வைத்து கும்பிடுங்கள் என்றார் வேல் சாட்டை முதலியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை நொய்யலில் குளிப்பாட்டி வெள்ளக்கோவிலுள்ள தன் ஆலயத்திற்கு மகா சிவராத்திரி காலத்தில் காவடியுடன் கொண்டுவரச் சொன்னார் சாமியின் உருவப்படத்தை பெண்களும் வழிபடலாம் என்பதால் சாமியின் தீர்ப்பு அனைவருக்கும் உகந்ததாக இருந்தது.

வெள்ளக்கோவிலில் உள்ள வீரக்குமார் சாமி சிலை

வெள்ளக்கோவிலில் உள்ள கோவில் முதன்மை வாயிலை தாண்டியதும்

வீரக்குமார் கோவிலில் உள்ள மண் குதிரைகள்
வீரக்குமார் கோவிலில் இருந்த மகாமுனி (தற்போது கோவிலுக்கு வெளியே உள்ளது)

வீரக்குமார் கோவில் மகா சிவராத்திரி தேர்

வீரக்குமார் சாமி உருவம் (ஓவியம்)


பழனியாண்டவர் அலங்காரத்தில்



பழனியாண்டவர்

செவ்வாய், ஜூன் 19, 2018

பேலியோ

அடிக்கடி மறந்து விடுவதால் இங்கு போட்டுள்ளேன். எழுதியது நியாண்டர் செல்வன்
இது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலொசனை இன்றி பின்பற்றவேண்டாம்.
——-
இந்த டயட்டில் தானியத்தை எந்த அளவு தவிர்க்கிறீர்களோ அந்த அளவு நல்லது. காலரி கணக்கு பார்க்கவேண்டியது இல்லை. பசி அடங்கும் வரை உண்ணலாம்.
விதிகள்:
மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே
சர்க்கரை, தேன், இனிப்புகள், கோக்/பெப்சி உணவகத்தில் சமைத்தது, பேக்கரி பொருட்கள், இனிப்பு, காரம் அனைத்தும் தவிர்க்கணும்
அசைவ டயட்:
மீல் 1:
3 முட்டை ஆம்லட். முழு முட்டை. வெள்ளைக்கரு அல்ல. மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லட் கூட உண்ணலாம். பிரச்சனை இல்லை. பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.
மீல் 2:
100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ்.நெய்யில் வணக்கி உண்ணலாம், ஊறவைத்தும் உண்ணலாம்.
OR
நட்ஸ் விலை அதிகம் என கருதுபவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்
OR
பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.)
மீல் 3:
பாயில் / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். பசி அடங்கும் அளவுக்கு. வாணலியில் வறுத்தால் சமையல் எண்னெயாக நெய் பயன்படுத்தவும்
ஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்
முட்டை சேர்த்த சைவ டயட்:
மீல் 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி.பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.
மீல் 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய் (பசி அடங்கவில்லையெனில், அவசியமானால் மட்டும் தேங்காய் சேர்க்கவும்).
மீல் 3:   4 முட்டை
ஸ்னாக்: 1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்
முட்டை சேர்க்காத பியூர்வெஜ் சைவ டயட்
Meal option 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் .பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.
Meal option 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். உடன் காய்கறி சாலட்/ காய்கறி சூப் ஏராளமாக பருகவும்.  அவகாடோவும் சேர்க்கலாம்
Meal option 3:  முழுகொழுப்பு பாலில் செய்த பனீர் டிக்கா, பனீர் மஞ்சூரியன்.பசி அடங்கும் அளவுக்கு
சமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே
தவிர்க்கவேன்டியவை
பழங்கள் (அவகாடோ, தேங்காய் தவிர்த்து)
அரிசி, கோதுமை, சிறுதானியம், ராகி, கம்பு, குதிரைவாலி, பாஸ்மதி, கைகுத்தல் அரிசி, தினை அனைத்தும்
பருப்பு, க்ரீன் பீன்ஸ், மாவு, சோயா, பேபிகார்ன், க்ரீன் பீன்ஸ், பலாக்காய், வாழைக்காய், பச்சை மாங்காய், முளைகட்டின பயறுவகைகள், கொண்டைகடலை, இன்ன பிற கடலை வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தும், அவரைக்காய், நிலகடலை, எடமாமி, டோஃபு தவிர்க்கவும்
பேக்கரியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்கவும், இனிப்பு, காரம், பேகேஜ் உணவுகள், பிஸ்கட் இன்னபிற
கொழுப்பு அகற்றிய பால், 2% பால், 1% பால் அனைத்தும் தவிர்க்கவும்,. முழுகொழுப்பு பாலே உட்கொள்ளவேண்டும்.
அளவு கட்டுபாடு இன்றி உண்ணகூடியவை
மாமிசம், மீன், முட்டை, பனீர் அல்லது சீஸ் ,காய்கறிகள்,கீரைகள் (உருளை, கேரட், கிழங்குவகைகள் தவிர்த்து)
தவிர்க்கவேண்டிய இறைச்சி:
சாஸேஜ், ஸ்பாம் முதலான புராசஸ் செய்யபட்ட இறைச்சி தவிர்க்கவேண்டும்
கொழுப்பு அகற்றப்பட்ட லீன் கட்ஸ் வகை இறைச்சி, தோல் இல்லாத கோழி
கருவாடு (மிதமான அளவுகளில் உண்னலாம். தினமும் வேண்டாம்)
முட்டையின் வெள்ளைகரு மட்டும் உண்பது தவிர்க்கபடவேண்டும். முழு முட்டை உண்னவேண்டும்
எண்ணெயில் டீஃப் ப்ரை செய்த இறைச்சி
உண்ணகூடிய காய்கறிகள்
காளிபிளவர்
பிராக்களி
முட்டைகோஸ்                                                                                                                 முள்ளங்கி
பாகற்காய்
காரட் (200 grams max. dont take daily)
பீட்ரூட் (200 grams max. dont take daily)
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ                                                                                                                           பீர்க்கங்காய்                                                                                                   புடலங்காய்  ,சுரைக்காய்
தவிர்க்கவேண்டிய காய்கறிகள்
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
உருளைகிழங்கு
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
சென்னா
சுண்டல்
பருப்புவகைகள் அனைத்தும்
பயறுவகைகள் அனைத்தும்
நிலக்கடலை
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
*சோயா எந்தவடிவிலும் ஆகாது*
அவரைக்காய்                                                                                                                     பனங்கிழங்கு
பலாக்காய்
வாழைக்காய்
பழங்கள் அனைத்தும்
சுவையான பேலியோ சைவ ரெசிபிகளை இத்தளத்தில் காணலாம்
___________________________________________________
இது முகநூலில் இயங்கும் ஆரோக்கி யம்& நல்வாழ்வு எனும் குழுமத்திற்கான டயட். இதில் மேலும் கேள்விகள் இருந்தால் இக்குழுவில் இணையவும். இக்குழுவின் பதிவுகளை முன்னோர் உணவு எனும் முகநூல் பக்கத்திலும் படிக்கலாம்.
மேலும் கேள்விகள் இருந்தால் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் இணைந்து கேட்கவும்.
https://selvan.wordpress.com/2015/03/25/paleo-diet-for-beginners/  

புதன், மே 02, 2018

ஆத்தி பட்டப் பெயர்

அத்தி என்பது பூ, அத்தி மரம் என்பது கூட உள்ளது. இதில் வேறு சிறப்புகள் இல்லை.
ஆத்தி என்பதும் பூ , ஆத்தி மரம் கூட உள்ளது. இது சிறப்பானது. ஆத்தி பூ சோழ பெரு வேந்தர்களின் குடிப்பூ. சிவபெருமானும் ஆத்தி பூ சூடியிருந்தாராம். ஆத்தி மரம்

உறுதியானது. இதை கருங்காலி என்றும் கூறுவார்கள்.

சோழனுக்கு ஆத்திப் பூ ; சேரனுக்கு பனம் பூ ; பாண்டியனுக்கு வேம்பம் பூ

நெடுங்கிள்ளியின் உறையூரை பிடிக்க இன்னொரு சோழன் நலங்கிள்ளி முயலும் போது  அடேய் வெண்ணைகளா நீங்க இருவரும் ஆத்தி பூ காரனுங்கடா, நீங்க சண்டை போடுவது பனம்பூ சூடிய சேரனோ வேம்பம் பூ சூடிய பாண்டியனோ அல்ல அவனும் ஆத்திப்பூ சூடியவனே. சண்டையில் ஒருத்தன் தான் வெற்றி பெற முடியும் உங்களில் யார் தோற்றாலும் தோற்பது ஆத்திப்பூ சூடியவனே, அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா? இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள் என்று கோவூர் கிழார் என்ற பாணபத்திர ஓணாண்டி கூறினாராம்.

பாணபத்திர ஓணாண்டி பேச்சை சண்டையில் கில்லியான கிள்ளியில் ஒருவன் கேட்கலை (ஓணாண்டி பேச்சை எவன் கேக்கறான்), காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று  நெடுங்கிள்ளி மண்டைய போட்டதும் போர் முடிவுற்றது.

என் அப்புச்சியின் பட்டப் பெயர் ஆத்தி. அப்புச்சி  அம்மாயி எல்லோரையும் தாத்தா ஆயா என்றே நான் கூப்பிடுவேன். அத்தி என்றால் பூ என்று மட்டும் தெரியும் ஆத்தி  என்று பூ, மரம் இருப்பது தெரியாது. தாத்தாவுக்கு ஆத்தி என்று ஏன் பட்டப்பெயர் வந்தது என்று ஆயாவிடம் கேட்டேன் அவருக்கும் காரணம் தெரியவில்லை. இதனால

ஆத்தின்னு சொல்றாங்களோ, அதனால ஆத்தின்னு சொல்றாங்களோ என்று நானே பல ஏரணங்களை கற்பித்துக்கொண்டேன். 25 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

வருந்துகிறோம் என்று தினமலரில் விளம்பரம் கொடுத்தோம். உள்ளூர் முகவரிடம் கொடுத்துவிட்டோம். அச்சமயம் எங்கள் ஊரில் தினமலரை நிறைய வீடுகளில் வாங்குவார்கள் தினமலரில் விளம்பரம் கொடுக்க அதுவும் ஒரு காரணம்.

தினமலரில் வேலை செய்ததால் அவருக்கு (முகவருக்கு) ஆங்கிலத்துடன் தமிழ் புலமை மிக அதிகம், அந்த அளவு தமிழ் புலமை இல்லைன்னா தினமலரில் வேலை செய்ய  முடியுமா?. விளம்பரத்தில் அவரே திருத்தம் எல்லாம் செய்து மிக சிறப்பாக வெளியிட்டார். ஆத்தி என்று தமிழில் எச்சொல்லும் இல்லை இது ஆர்த்தியாக இருந்திருக்கும், ர்  என்பது இங்கு அமைதி (ஆங்கிலத்தில் சில எழுத்துகள் silence இல்லையா அது போல்) என கருதி ஆர்த்தி கவுண்டர் மறைவு என்று போட்டுவிட்டார். ஆர்த்தி என்று  எழுத்தில் இருந்தாலும் அதை ஆத்தி என்றே சொல்லவேண்டுமாம், அமைதி அமைதி. படத்தை மாற்றாமல் (தினமலர் முகவருக்கு நன்றி) அப்படியே போட்டதால்  படித்தவர்கள் பார்த்தவுடன் ஆத்தி கவுண்டர் (எத்தனை  பேர் ர்-ஐ கவனித்தார்களோ) சிவபதவியை அடைந்து விட்டார் என புரிந்து கொண்டார்கள். தினமலரில் ஆர்த்தி என்று  வந்த பிறகே இது  தெரிந்தது, வந்த பின் ஏன்யா கொடுத்த மாதிரி வெளியிடவில்லை என கேட்கவில்லை. கேட்காமலே தினமலர் முகவர் விளக்கம் கொடுத்தார்.

நாங்களும் ஆர்த்தி தான் ர் அமைதி கொண்டு ஆர்த்தி என்பது ஆத்தி என கூறப்பட்டு வந்துள்ளது என  2017 அக்டோபர் வரை நினைத்துக் கொண்டிருந்தோம். புதிதாக கட்டிய

கட்டடத்துக்கு கூட ஆர்த்தி என்றே பெயர் வைத்துள்ளோம்.

நீதி - தினமலர் முகவரை நம்பினால்  தமிழில் புலமை பெறலாம்.

குறிப்பு - 
என் தாத்தாவின் பட்டப்பெயர் ஆத்தி என்பதால் நாங்கள் சோழ அரச மரபை சேர்ந்தவர்கள் என்பது புலனாகிறது. சோழ அரச மரபை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும்

ஆராய்ச்சியில்  யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு இத்தகவல் உதவும்.

புதன், பிப்ரவரி 21, 2018

காவிரி கடந்து வந்த பாதை

காலைக்கதிரில் பிப்பரவரி 17அன்று வந்தது.  காலைக்கதிர் தினமலரின் சண்டையால் உருானது, இது தினமலரின் நிறுவனர் குடும்பத்துக்கு உரியது அல்ல. ஆகப்பெரும் பழைய தினமலர் ஊழியர்கள் இதில் தான் பணிபுரிகின்றனர்.

1924 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு.

1956 - மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. சென்னை மாகாணம் தமிழ்நாடாகியது மைசூர் கருநாடகம் ஆகியது சென்னை மாகாணத்தின் குடகு கருநாடகத்திற்கு போனது.

1974 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு நீங்கியது.

1980 யூன் 2 - 1970இலிருந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச  நீதிமன்றம் ஆணையிட்டது

1991 யூன் 25 - தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தர நடுவர் மன்றம் இடைக்கால ஆணையிட்டது

1991 டிச 11 - நடுவர் மன்ற ஆணையை ஏற்று தமிழகத்துக்கு நீர் திறக்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை. அதனால்  கருநாடகத்தில் தமிழர்கள் மீது வன்முறை இதில் 20 தமிழர்கள் பலி.

1993 யூலை - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி அப்போதைய முதல்வர் செயா  4 நாள்கள் உண்ணாவிரதம்

1996 ஆக 1997 சன 5- உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் கருநாடக முதல்வர் சே. எச். பாட்டிலுக்கும் இடையே நடத்த 5 சுற்று பேச்சில் முடிவு  எதுவும் எட்டப்படவில்லை.

1997 யூலை 3 - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி ஒன்றிய அரசிடம் தமிழகம் கோரிக்கை.

1998 ஏப் 10- தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வாச்பாய் பணிந்து விடக்கூடாது என கருநாடக முதல்வர் பாட்டில் பேட்டி.

1998 யூன் 16 -காவிரி குடி நீர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கக்கூடாதென கருணாநிதி கூறியது தவறான முன்னுதாரணம் என முன்னாள் முதல்வர் தேவகௌடா பேட்டி.

1998 யூன் 24 - கிருட்டிணா ஆற்று திட்டத்தின்  மூலம் தமிழகத்துக்கு வழங்கப்படும் 5 டிஎம்சி  நீரும் நிறுத்தப்படும் என கருநாடகம் எச்சரிக்கை.

1998 யூலை 20 -நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்தினால் தமிழகத்துக்கும் கருநாடகத்தும் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருநாடக அனைத்து கட்சி எம்பிக்கள் பிரதமர் வாச்பாயிடம் மனு.

1998 யூலை 21 - ஆகத்து 21இக்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 205  டிஎம்சி நீரை கருநாடகா வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணை.

1998 ஆக 7 - பிரதமர் வாச்பாயி முன்னிலையில் தமிழகம் கருநாடகம் கேரளா புதுச்சேரி முதல்வர்கள்  பேச்சு.

1998 ஆக 8 - காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணாவிட்டால் வாச்பாய் அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என் செயா மிரட்டல்.

1999 மே 7 - 1991-92இல் கருநாடகத்தில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மே 15இக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை

2002 அக் - கருநாடக முதல்வர் கிருட்டிணா உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததிற்கு  நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி காவிரி நீரை  திறந்துவிட ஆணையிட்டார்.

2002 அக் 11 - தமிழக திரைப்படத்துறையினர் கருநாடகத்தை கண்டித்து சென்னையிலிருந்து நெய்வேலி வரை பேரணி.

2002 அக் 12 - கருநாடகம் காவிரியில் நீர் திறந்து விடக்கோரி நடிகர் இரசனி சென்னையில் உண்ணாவிரதம்

நவ 29 - காவிரி நடுவர் மன்றக் கூட்டம் தமிழக முதல்வர் செயா பங்கேற்க இயலாததால் ஒத்திவைப்பு.

2003 சன 13 - தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் நீரை தர கருநாடகம் ஒப்புதல்.

2005 ஆக 5 - காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுள் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.

2006 ஏப்பில் 24 - நடுவர் மன்றத்தின் இறுதி வாதம் முடிவு.

2006 ஆக 3 - காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு.

2007 பிப் 5 - காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி திறந்து விட வேண்டுமென தன் இறுதி தீர்ப்பை அறிவித்தது. கேரளத்துக்கும் புதுவைக்கும் நீரை திறக்க ஆணை. இதை தமிழகம் ஏற்றது. கருநாடகா ஏற்காமல் மேல் முறையீடு செய்தது.

2012 செப் 13 - காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து நீர் தர முடியாது என கருநாடக முதல்வர் செகதீசு செட்டர் அறிவிப்பு.

செப் 19 - காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் ஆணை.

செப் 21- ஒன்றிய அரசு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கருநாடகம் மனு.

செப் 24-தண்ணீர் திறந்து விடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் மனு.

செப் 28 - தண்ணீர் திறந்து விடாத கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் கண்டிப்பு

அக் 4 - தமிழகத்துக்கு அக்டோபர் 15 வரை தண்ணீர் தர முடியாது என உச்ச நீதி மன்றத்தில் கருநாடகம் மனு

அக் 8 -  காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென  உச்ச நீதி மன்றம் ஆணை.

அக் 8 -  பிரதமர் அக்டோபர் 20 வரை தண்ணீர் தர ஆணை, பிரதமர் & உச்ச நீதி மன்ற ஆணையை கருநாடகம் சில மணி நேரங்களிலேயே அவமதித்தது.

அக் 9 - கருநாடக அரசு மீது தமிழகம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை  தொடுத்தது.

அக் 9- கருநாடகாவை  கண்டித்து காவிரி கழிமுக மாவட்டங்களில் இரயில் மறியல்.

அக் 17- நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனுவை உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் அளித்தது.

நவ 15 - நவம்பர் 16இக்குள் 4.8  டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்து விட காவிரி நதி நீர் ஆணையம் ஆணை.

நவ 29- காவிரிப்பிரச்சனை குறித்து கருநாட முதல்வர் செகதீசு செட்டருடன் தமிழக முதல்வர் செயா பெங்களூரில் பேச்சு.

டிச 6 - தமிழகத்துக்கு உடனடியாக 10,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 7 - நீரை திறக்க முடியாதென எம்பிகளுடன் செகதீசு செட்டர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தல்.

டிச 7 - தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திறப்பு.

டிச 10 - தமிழகத்துக்கு உடனடியாக 15,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 21 -  நடுவர் மன்ற தீர்ப்பை அரசின் அழைப்பிதழில் (கெசட்டில்) வெளிடக்கோரி பிரதமருக்கு செயா இரண்டாவது முறையாக கடிதம்.

டிச 25 - அரசின் அழைப்பிதழில்  நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை வெளியிடக்கூடாதென பிரதமருக்கு செட்டர் கடிதம்.

2013 சன 4 - நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிடாதற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்

பிப் 4 - காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பிப் 20இக்குள் அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிட உச்ச நீதி மன்றம் ஆணை.

பிப் 9 - தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி நீர் திறப்பு.

பிப் 13 - குறைந்த அளவு  நீரை திறந்து விட்ட கருநாடகத்தின் மீது தமிழகம் அவமதிப்பு வழக்கு.

பிப் 20- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஒன்றிய அரசு  அரசிதழலில் வெளியிட்டது

2014 சன 6-  காவிரி நடுவர் நீதிமன்ற புதிய  தலைவராக சவுகான் அறிவிக்கப்பட்டார்


2015 மார்ச் 30 -காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்படும் என்று  கருநாடக சட்டசபையில் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.

செப் 6 - காவிரியில் 227.55 டிஎம்சி நீரை  விடச் சொல்லி ஆணையிட பிரதமருக்கு செயா கடிதம்.

நவ 15 - தமிழகத்தின் கோரிக்கைக்கு உச்ச நீதி மன்றத்தில் கருநாடகா எதிர்ப்பு.

2016 ஆக 16 - உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்  செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் செயா அறிவிப்பு.

செப் 2 - வாழ்வோம் வாழ விடுவோம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விட கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 7 - இதைத்தொடர்ந்து கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம். தமிழர்களின் வண்டிகள் தீ வைத்து எரிப்பு.

செப் 11 -  உத்தரவை மாற்றக்கோரி கருநாடகம் உச்ச நீதி மன்றத்தில் மனு.

செப் 12 - 15,000 கன அடிக்கு பதிலாக 12,000 கன அடி நீரை  திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 16 - தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தில் முழு கடையடைப்பு.

செப் 20 -  4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு.

அக் 03 - காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க தனக்கு ஆணையிட உச்ச நீதி மன்றத்துக்கு அதிகாரமில்லையென ஒன்றிய அரசு நீதி மன்றதில் தெரிவித்தது

2018 பிப் 16 - உச்ச நீதி மன்றத்தில்  தீர்ப்பு. இதில் 177.25 நீரை தமிழகத்திற்கு வழங்க உத்திரவு. தமிழகத்தின் நிலத்தடி நீர் 20 டிஎம்ச்சியாக உள்ளதால் கருநாடகம் வழங்க  வேண்டிய நீர் 192 டிஎம்சியிலிருந்து 14.25 டிஎம்சி  ஆக குறைப்பு

.
எனக்கு தெரிந்த பல செய்திகளே இதில் இல்லை. இருந்தாலும் இதை பத்திரப்படுத்துவோம். வரலாறு முக்கியம் மக்களே.