வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

EAD கிடைப்பதில் தாமதம்.

அமெரிக்காவில் EAD எனப்படும் வேலை செய்ய அனுமதி அட்டை இருந்தால் விசா இல்லாமல் வேலை செய்யமுடியும் அதாவது பச்சை அட்டை மாதிரி ஆனால் பச்சை அட்டை கிடையாது. 
பச்சை அட்டைக்கு முன் இது கொடுப்பார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமாகும் போது இதை பயன்படுத்தி வேலைக்கு செல்லலாம். இது பற்றி விளக்கினால் நிறைய சொல்லவேண்டி இருக்கும் அதனால் இந்த சுருக்கம் போதும்.

நம்ம மக்கள் நிறைய பேர் இப்ப EAD-ல் வேலை செய்கிறார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமானால் EADஐ புதுபித்துக்கொள்ள வேண்டும். முன்பு ஆண்டுக்கு ஒரு முறை என்று இருந்ததை இரு ஆண்டுகளுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள். ஆனால் இரு ஆண்டுகளுக்கு புதுபிப்பார்கள் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஒரு ஆண்டு உறுதி.

EAD காலாவதி ஆவதற்குள் அடுத்த EAD வாங்கிவிட வேண்டும். வழக்கமா EADஐ புதுபிக்க விண்ணபித்தால் விரைவில் கிடைத்துவிடும். இவ்வளவு காலமா இப்படி தான் இருந்தது.

இப்ப புதுபிக்கும் EAD கிடைக்க தாமதமாகிறது. EAD இல்லாட்டி வேலை செய்யமுடியாது. 60 நாட்களுக்கு முன் விண்ணபித்தவர்கள் பலருக்கு இன்னும் புது EAD வராததால் அவர்கள் வேலை செய்யமுடியாத நிலை.சிலருக்கு 75 நாட்கள் ஆனதாக கேள்வி.

எனவே மக்களே நீங்களோ உங்கள் நண்பரோ EADஐ புதுபிப்பதாக இருந்தால் 120 நாட்களுக்கு முன் விண்ணபித்து விடுங்கள்.

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

நீதி கதை- நாயும் கழுதையும்

ஒரு ஊர்ல இருந்த சலைவைத்தொழிலாளி ஒரு நாயையும் கழுதையையும் வளர்த்து வந்தான். நாயிக்கு சலவைத் தொழிலாளி மேல் கோபம். என்னடான்னு கேக்கறீங்களா? அது சில முறை முதலாளி மேல் தொழிலாளி படுவானே அந்த மாதிரியான கோபம்.

எந்த மாதிரி?

கதை சொல்றப்ப குறுக்க பெரியமனுசனாட்டம் பேசக்கூடாது. சொன்னா இம் போட்டு கேட்டுக்கனும்.

ஒரு நாள் சலைவைத்தொழிலாளி நல்லா தூங்கி கிட்டு இருக்கறப்ப ஊர் சனத்து துணியை துவச்சு அவன் சேர்த்து வைச்சிருக்கற காசையெல்லாம் ஆட்டைய போடலாம்ன்னு ஒரு திருடன் வந்தான்.

அவனென்ன உங்களை மாதிரியா தினம் சம்பாதிக்கிற காச வங்கியில் போட.

திருடன கண்டா அதாவது நடு நசில தெரியாதவன் வீட்டுக்கு வந்தா நாய் என்ன பண்ணனுமோ அத பண்ணல.  ஏன்னா அதுக்கு தான் முதலாளி மேல் கோபமாச்சே. அதுக்காக கடமை தவறுவதா என்று கடுப்பான கழுதை நாமாவது முதலாளியை எழுப்புவோம்னு நினைச்சி கத்துச்சு. கழுதை கத்தற சத்தம் கேட்டு முதலாளி முழுச்சிட்டாரு. பார்த்தா நாய் சும்மா இருக்கு கழுதை கத்திக்கிட்டு இருக்கு, அவருக்கு சரியான கோவம். பின்ன நடு நசில நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கழுதை சத்துத்தால தூக்கம் கெட்டா கோவம் வருமா வராதா.  பக்கத்தில் கிடந்த கட்டைய எடுத்து கழுதை மண்டைல ஒரு போடு போட்டு கத்துன பாருன்னுட்டு தூங்கப்போயிட்டார். பாவம் கழுதை நல்லது பண்ண போயி மண்டைல அடி வாங்கினது தான் மிச்சம்.


நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்ம வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சாப்போதும்.

மேலுள்ள கதை முடிவு இப்படியும் இருக்கலாம்.

கழுதை சத்தம் கேட்டு முழிச்ச முதலாளி திருடன் ஓடுவதை பார்த்தார். நல்ல வேலை கழுதை கத்தினதால திருடன் ஓடிட்டான் நம்ம பணம் தப்பிச்சுதுன்னு கழுதை மேல் பாசம் அதிகமாயிடுச்சி. கழுதைக்கு நல்ல தீனியா போட்டார். கொஞ்சம் கொஞ்சமா நாயோட வேலையெல்லாத்தையும் கழுதை மேல கட்டிட்டார். பாவம் கழுதை. நாய் நல்லா தின்னுட்டு ஒரு வேலையும் செய்யாம இருந்தது.



நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்மல பாராட்டுரேன்னுட்டு அடுத்தவன் வேலையையும் நம்ம தலையிலேயே கட்டிடுவாங்க.

புதன், ஆகஸ்ட் 04, 2010

தமிழ்மணம் நட்சத்திரத்தை படிக்க முடிகிறதா?

உங்களால் தமிழ்மணம் நட்சத்திரத்தை (புதியமாதவி) படிக்க முடிகிறதா? என்னால் முடியவில்லை. வெத்து பக்கமா வருது. :-( , அவங்க பதிவை நச்சு நிரல் ஏதாவது பாதிச்சிருச்சோ??

.

புதன், ஜூலை 14, 2010

வானூர்தி, வானூர்தி நிலையம் பற்றி சில தகவல்கள்

உலகில் எது வேகமாக செல்லும் வானூர்தி? எது பெரியது?  எது மிக மும்முரமாக இயங்கும் வானூர்தி நிலையம்? எது எங்கும் நிற்காமல் நெடுந்தொலைவு செல்லும் வானூர்தி? விடை தெரியுமா உங்களுக்கு?



(1). நெடுங்காலம் இயக்கத்தில் இருக்கும் வானூர்தி நிறுவனம்.


ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் 1920லிருந்து பயணிகளை சுமந்து செல்கிறது. டச்சு கேஎல்எம் (Koninklijke Luchtvaart Maatschappij voor Nederland en Koloniën - KLM) 1919 ம் ஆண்டிலிருந்து இயங்குகிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சிறிது காலத்துக்கு இது இயங்கவில்லை. எனவே முதல் இடம் குவாண்டாசுக்கு இரண்டாவது இடம் கேஎல்எம் -க்கு.


(2). உயரமான வான் கட்டுப்பாட்டு கோபுரம்.


பாங்காக் சுவர்ணபூமி வானூர்தி நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமே மிக உயரமானது. இது 434 அடி உயரமுடையது. இந்த நவீன கட்டுப்பாட்டு அறை மூலம் மணிக்கு 70 வானூர்திகளை கையாளலாம்.


(3). வடகோடியில் இருக்கும் பயணிகள் வானூர்தி நிலையம்.


நார்வே நாட்டினுடைய ஆர்ட்டிக் பகுதியில் இருக்கும் சுவால்பர்ட் நிலையமே வட கோடியில் இருப்பது. இது 78 பாகை வடக்கில் இருக்கிறது.


(4). தென்கோடியில் இருக்கும் பயணிகள் வானூர்தி நிலையம்.


அர்ஜண்டைனா நாட்டின் உஸ்ஆயிஅ நகரில் உள்ள உஸ்ஆயிஅ-மால்வினாஸ்  (Ushuaia-Malvinas) வானூர்தி நிலையமே அது. இதுவே தென்கோடியில் உள்ள நகரமும் ஆகும். அண்டார்டிக்கா செல்லுவோர் இந்நிலையத்தை அடிக்கடி பயன்படுத்துவர்.


(5). எங்கும் நிற்காமல் அதிக நேரம் பயணிக்கும் வானூர்தி?


நிவார்க்கில் (நியுயார்க் அருகிலுள்ளது) இருந்து சிங்கப்பூருக்கு இடையேயான 9,535 மைல் தொலைவை 19 மணி நேரம் எங்கும் நிற்காமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் பயணிக்கலாம். இதுவே அதிக நேரம் எங்கும் நிற்காமல் செல்லும் பயணம்.


(6). தொலை தூரத்தில் அமைந்திருக்கும் நிலையம்?


ஈஸ்டர் தீவே தொலை தூரத்தில் அமைந்திருக்கும் நிலப்பகுதியாகும். இத்தீவிலுள்ள மாடவேரி (Mataveri) பன்னார்ட்டு வானூர்தி நிலையமே தொலை தூரத்தில் அமைந்திருப்பது. 2336 மைல் தொலைவில் இருக்கும் சிலியின் சான்டியோகோவிற்கு செல்லும் பயணமே குறைந்த தொலைவு பயணமாகும்.


(7). அதிக தாமதத்தை ஏற்படுத்தும் நிலையம்?


பெய்ஜிங் தலைநகர பன்னாட்டு நிலையத்தில் இருந்து புறப்பாடு 38% மட்டுமே சரியான நேரத்துக்கு இருக்கும். 62% வானூர்திகள் சரியான நேரத்துக்கு புறப்பட முடிவதில்லை. புறப்படுறதுல சீனாக்காரன் பெயர் வாங்கிட்டான் என்ற போட்டியில் இந்தியா இறங்குவதில்(வருகை) பெயர் எடுத்துள்ளது.


புதுடெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு நிலையத்தில் இறங்குவது 45% சரியான நேரத்துக்கு இருக்கும். 55% வானூர்திகள் இறங்குவது தாமதம் தான். நம்ம போட்டிக்கு அளவே இல்லாம போச்சு.


(8). அகலமான இருக்கைகள் கொண்ட வானூர்தி.


கேத்தே பசிபிக் 747-700 & 777-300 ER, கல்ப் ஏர், துருக்கி ஏர்லைன்ஸ் 777-300 ER ஆகியவற்றின் முதல் வகுப்பு இருக்கை 36 அங்குலம் அகலமானது. டெல்டா ஏர்லைன்ஸ் சாப் 340 வானூர்தியின் இருக்கை அகலம் 16 அங்குலம். அதுல உட்கார்றதுக்கு நின்னுக்கிட்டே போகலாம்.


(9). நீண்ட பயணிகள் முனையம்.


ஜப்பானின் ஒசாகா நகரிலுள்ள கன்சாய் பன்னாட்டு நிலையத்தில் ஒரே ஒரு முனையமே உள்ளது. ஆனால் இது ஒரு மைல் தொலைவு உள்ளது.


(10). மும்முரமான வானூர்தி நிலையம்.


அட்லாண்டா நகரின் ஹார்ட்பீல்ட் ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு நிலையத்தில் 2009ல் 88 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளார்கள். புதிதாக கட்டப்படும் துபாய் வானூர்தி நிலையம் மும்முரமான வானூர்தி நிலையம் என்ற பெயரை சில ஆண்டுகள் கழித்து எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


(11). வேகமான வானூர்தி.


மணிக்கு 600 மைல் வேகத்தில் பறக்கும் செஸ்னா சிட்டேசன் X பயணிகள் வானூர்தியே வேகமானது. போயிங்கின் புதிய தயாரிப்பான டிரிம்லைனர் 0.85 மேக் வேகம் செல்லக்கூடியது. 0.85 மேக் என்பது மணிக்கு 647 மைல் ஆகும்.  போயிங் டிரிம்லைனர் இன்னும்  பயன்பாட்டுக்கு வரவில்லை, எனவே இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


(12).  பெரிய வானூர்தி.


எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ஏர் பஸ் A380 என்பதே அது என்பது. இதில் 555 பயணிகள் அமரலாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் பிரான்ஸ், எமிரேட்ஸ், குவாண்டாஸ், லுப்தான்சா ஆகியவற்றில் ஏர் பஸ் A380 உள்ளது.

செவ்வாய், ஜூன் 29, 2010

நண்பர் தன் குழந்தைக்கு தமிழ் பெயர் வைத்த கதை

நண்பர் கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர். இதுக்கு காரணம் அவரோட நண்பர்களில் பெரும் பகுதி கொல்டிங்க என்பதும் காரணம். கொல்டிங்க கூட அரசியல் பேசறப்ப தமிழ்நாட்டை விட்டு கொடுக்க முடியுமா? எப்ப வாய்ப்பு கிடைத்தாலும் ஆந்திராவையும் ஐதராபாத்தையும் வாருவதும் சென்னையை தூக்கிபிடிப்பதும் அவர் வேலை. அதே போல அவர்களும் தமிழ்நாட்டை பற்றி பேசி இவரை வம்பு பண்ணுவதும் வழக்கம்.

தன்னுடைய பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பதாக முடிவு செய்திருப்பதாகவும் தனக்கு நிறைய தமிழ் பெயர்கள் தெரியாததால் நல்ல பெயர் இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். சின்ன பேரா இருக்கனும் என்பது நிபந்தனை. நானும் எனக்கு தெரிந்த சில பெயர்களை சொன்னேன். சில என்றால் 5 பெயர்கள் தான். எவ்வளவு தான் யோசிச்சாலும் தமிழ் பெயர்கள் நினைவுக்கு வரலை. இணையத்தில் தேடினாலும் எல்லாம் தமிழர்கள் வைக்கும் பெயர்களாக இருக்கே தவிர தமிழ் பெயர் குறைவு. நாம நிறைய கொடுத்தா தான அவர் அதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும். நாம கொடுக்கறதே குறைச்சலா இருந்தா எப்படி? என்னடா தமிழ் பெயர் வைக்கறேன்னு ஒருத்தர் சொல்லறார் அவருக்கு உதவமுடியலையேன்னு எனக்கு விசனம். நல்ல தமிழ் பெயர் கிடைக்கலைன்னா தமிழ் பெயர் வைக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு நானும் எனக்கு தெரிந்த மக்களிடம் எல்லாம் தமிழ் பெயர் கேக்கறதே வேலையாப்போச்சு. என் முயற்சிக்கு வெற்றி கிடைக்கலை.

தமிழில்  பெயர் வைக்கனும் என்று ஆசைப்பட்டாலும் பெயர்கள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் போல் தமிழல்லாத பெயர் வைப்பவர்கள் எத்தனை பேரோ?

இந்தக்குறையை போக்குவதற்காக தமிழ் பெயர்களுக்கான இணையதளத்தை இரவிசங்கர் உருவாக்குவதாக சொன்னார்.  இன்னும் அந்த தளம் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்.

நண்பரின் பக்கத்து வீட்டுக்காரரும் தமிழ் பற்றாளர். அவரும் இவருக்காக பெயர் வேட்டையை நடத்தினார். அவர் தன் தங்கமணியிடம் சில பெயரை சொல்லுவார் அவர் அதை கேலி பேசுவார்...

பக்கத்துவீட்டுகாரரின் தங்கமணி அவர் போல் தமிழ் பற்றாளர் எல்லாம் கிடையாது. அதே போல் தமிழ் எதிரியும் கிடையாது.  இவர் தமிழ் தமிழ் என்பதை கேலி பண்ணுவதே அவர் வேலை. இவர் சில பெயர்களை சொல்ல அதை அவர் கேலி பண்ணுவதுமாக நாட்கள் போய்கிட்டிருந்தது. இதனால் அவங்க இரண்டு பேருக்கும் இடையில் சண்டையே வந்தது. பக்கத்துவீட்டுகாரர் குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதற்கு இவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை. குழந்தை பிறக்கும் முன் இவர்கள் இந்தியா செல்லவேண்டிவந்தது.

குழந்தையும் பிறந்து பெயரும் வைத்தாயிற்று. ஊர்ல வந்ததும் இவங்க கேட்ட முதல் கேள்வி குழந்தைக்கு என்ன பெயர் என்பது தான்.

சொன்னதும் அவங்க முகம் போன போக்க பார்க்கனுமே. அவருக்கு மட்டுமாபெயரை கேட்ட எனக்கும் என்னடா இதுன்னு தான் இருந்துச்சி. அந்த பெயரை வச்சி அவரை கேலி பண்ணினாலும் மனதுக்கு சங்கடமா இருந்ததென்னவோ உண்மை. என்னய்யா அந்த பெயர் அப்படின்னு கேட்கறீங்களா.



                                                                  ஸ்மித்தா

வெள்ளி, ஜூன் 11, 2010

நர்சிம் சந்தனமுல்லை சண்டையில் தெரிந்து கொண்டது.

 
  • பதிவர் நர்சிமுக்கும் சந்தன முல்லைக்கும் முன்பே ஆகாது.
  • ஆதிமூலகிருஷ்ணன் நர்சிம்மை பேட்டி கண்டு எழுதிய இடுகையை நையாண்டிசெய்து இந்த இடுகை எழுதப்பட்டதாகவும் இவ்வாறு எழுத நர்சிம்மின் அனுமதியை வாங்கியுள்ளதாகவும் கூறி இது ஒரு கும்மி இடுகை எல்லோரும் வாங்க என்று பதிவர் மயில் விஜி கூவி அழைக்கிறார்.
  • அவரது மேலான அறிவிப்பை தொடர்ந்து பலர் அங்கு கும்மியடித்தார்கள். அதில் சந்தன முல்லையும் ஒருவர். பின்னூட்டத்தில் நர்சிமை பெயர் குறிப்பிடாமல் நல்லா கும்மியிருக்காங்க. கடுமையாக கும்மியவர் சந்தன முல்லை.
  • குறிப்பிட்ட கும்மி இடுகை மற்றொரு தளத்திலிருந்து எடுத்து ஒட்டப்பட்டிருப்பதாக சில பதிவர்கள் குற்றம் சாட்டியபோது குறிப்பிட்ட இடுகை தன்னாலேயே எழுதப்பட்டதாகவும் தான் வேறு எந்த தளத்திலயும் எழுதவில்லை என்று பதிவர் மயில் விஜி கூறுகிறார். 
  • இந்த இடுகை வேறொரு தளத்தில் இருந்ததாகவும், பதிவர் மயில் விஜி தளத்தில் வெளியியான பின்பு அங்கு இல்லை என பதிவர்களால் கூறப்படுகிறது. 
  • சந்தன முல்லை தான் இந்த இடுகையை எழுதி விஜிக்கு கொடுத்து வெளியிட சொல்லியிருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர். 
  • கும்மி இடுகையால் கோபமடைந்த நர்சிம் பூக்காரி என்ற ஆபாச புனைவு எழுதுகிறார். இதில் இவர் யார் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை ஆனால் எல்லோருக்கும் தெரியும் இது யார் குறித்தென. 
  • பதிவர் மயில் விஜியிடமும், நர்சிமிடமும் இடுகையை நீக்க பதிவர்கள் கேட்ட போது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். இதனால் ஏற்படும் விளைகளை தாங்கள் பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டார்கள்.
  • வினவு தளத்தில் பூக்காரி எழுதிய நர்சிம் பொறுக்கி என இடுகை வந்து வலையுலகம் 2 வாரமாக இதே பேச்சாக இருந்தது. வாசகர் பரிந்துரையில் வந்த இடுகையெல்லாம் இது தொடர்பாக இருக்கவே தமிழ்மணம் வாசகர் பரிந்துரை என்ற பகுதியை தூக்கிவிட்டார்கள். 
  • வினவு தளத்தில் நீங்கள் தானா எழுதியது என்ற போது மறுத்த பைத்தியக்காரன்(சிவராமன்), ஆதாரம் வெளிவந்ததும் ஆமாம் என்கிறார். 
  • நர்சிமும் பைத்தியக்காரனும் நெடுநாளைய நண்பர்கள்
  • இப்போது நர்சிமும், மயில் விஜியும் குறிப்பிட்ட சண்டைக்குரிய இடுகையை நீக்கிவிட்டார்கள். (இத முன்னாடியே செஞ்சிருந்தா என்னவாம்?)

 பார்ப்பனர்கள் --- 
  1. நர்சிம்
  2. பைத்தியக்காரன் 
  3.  ஜியோவ் ராம் சுந்தர்
  4. பால பாரதி
  5. பத்ரி

 நர்சிமின் அப்பா பிராமணர்கள் சங்கமான தாம்பிரஸில் உயர் பொறுப்பில் இருப்பவர். 

சந்தன முல்லை - வன்னியர், வன்னியர் ஆர்குட் தளத்தில் சந்தன முல்லை ஓர் உறுப்பினர்.  
  • சுகுணா திவாகர் ஆனந்த விகடனில் வேலை செய்பவர்.
  • கார்க்கி ஐதராபாத்தில் வேலை செய்துவிட்டு இப்போ தனியாக ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
  • நர்சிம் பைத்தியக்காரனுக்கும் சுகுணா திவாகருக்கும் தண்ணி வாங்கி ஊத்தி இருக்கார்.
  • பைத்தியக்காரன் நர்சிமிடம் கடன் வாங்கியிருக்கார்.
  • பைத்தியக்காரன் குங்குமத்திலோ, தினகரனிலோ வேலையில் இல்லை. நாகவல்லி என்ற தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதியிருக்கார்.
  • பைத்தியக்காரன் பூணூல் அனிந்திருப்பவர் ஆனால் பார்ப்பானை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்பவர்..
  • நர்சிம் பணக்காரர்.
  • பைத்தியக்காரன் பார்வையில் லதானந், அபிஅப்பா, மங்களூர் சிவா ஆகியோர் வழியல் ஆசாமிகள்.
  • நான் வழியல் ஆசாமி என்பதற்கு ஆதாரம் கொடு என்று மங்களூர் சிவா கேட்டதற்கு பைத்தியக்காரன் சில பொண்ணுங்க அத்தகவலை இவரிடம் சொன்னதாகவும் அந்த பொண்ணுங்க சொன்னாதான் ஆதாரம் வெளியிடுவேன் என்று மறுத்துவிட்டார். 
  • குசும்பன் மேல் உள் கோபம் கொண்டிருந்த காரணத்தால் இச்சண்டையை பயன்படுத்தி பைத்தியக்காரன் அவருக்கு கோமாளி என்ற பட்டம் கொடுக்கிறார்.

 இன்னும் எழுதலாம் தான் தான்  தான்  தான் ......

 

வியாழன், ஜூன் 03, 2010

எண்ணெய் கசிவும் அமெரிக்காவும்

மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டிசு பெட்ரோலியத்துக்கு உரிய ஆழ்கடல் எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தளம் வெடித்து 45 நாட்கள் ஆகிறது.  எண்ணெய் கிணறை அடைக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இது வரை 50 மில்லியனுக்கு மேலான காலன் கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளது. உண்மையா எவ்வளவு எண்ணெய் வெளியேறி உள்ளது என்று யாருக்கும் தெரியாது. 

இந்த எண்ணெய் வெளியேற்றத்தால் மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களின் மீன் பிடிப்பு மற்றும் கடற்கரையை சார்ந்த சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் இப்ப தான் புளோரிடா பக்கம் வர தொடங்கியிருக்கு.

மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவான குடியரசு கட்சி செல்வாக்கு உடையது.

இது அப்பகுதியின் புயல் காலம். கண்டிப்பா புயல் உண்டு. அது எண்ணெய் பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும். இவங்க எண்ணெய் வெளியேற்றத்தை இப்ப நிறுத்தப்போறதில்லை (முடிஞ்சா தான).

மக்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் கிடைக்குதுன்னு பார்க்கலாம்.

குறிப்பு -- என் வலைப்பதிவு இன்னும் முழுமையாக சரியாகவில்லை.

புதன், ஜூன் 02, 2010

YOU TUBE VIDEO - TEST

செவ்வாய், மே 25, 2010

என் வலைப்பதிவு நச்சுநிரலால் பாதிக்கப்பட்டுள்ளது.

என் வலைப்பதிவு நச்சுநிரலால் பாதிக்கப்பட்டுள்ளது.   இதை சரி செய்ய முயன்று வருகிறேன்.  எப்படியும் அடுத்த மாதத்துக்குள் சிக்கலுக்கான காரணத்தை கண்டுபிடிச்சுடுவேன்னு நினைக்கிறேன்.

சரிசெய்துவிட்டேன் என்று நினைத்த  tamilers.com சிக்கல் மீண்டும் வந்துவிட்டது.

திங்கள், மே 24, 2010

Tamilersஆல் ஏற்பட்ட தொல்லை நீங்கியது

இரண்டு மூன்று நாளா என்னோட வலைப்பதிவுக்கு வந்தா 10 வினாடி கழித்து tamilers.com தளத்துக்கு போயிடும், இதுவும் உருப்படியான தளம் இல்லை, இது விற்பனைக்கு உள்ளது வேண்டுமா? என்ற தகவலும் சில விளம்பர தகவல்களும் தான் அதில் உள்ளவை. நான் புகழ்பெற்ற பதிவர் கிடையாது, என் இடுகைகளை படிப்பவர்களும் குறைவு (ஒழுங்கா எழுதுனா தான நிறைய பேர் படிப்பாங்கன்னு நீங்க சொல்வது என் காதில் கேட்கிறது).  ஏன் என் வலைப்பதிவுக்கு இந்த நிலைமை? ஒன்னும் புரியலை.

என்னோட பதிவில் ஏகப்பட்ட Gadget களும் இல்லை இருப்பதும் சிலவே, அவையும் நம்பகமானவை... என் வார்ப்புருவும் கூகுள் கொடுத்தது தான், மற்றவர்களிடம் இருந்து தரவிறக்கம் பண்ணியது இல்லை. அப்படி இருக்கும் போது ஏன்? என்ன காரணத்தால் இப்படி ஆகுதுன்னு மண்டைய பிச்சுக்கிட்டேன்.

blogspotக்கு  மயில் அனுப்பலாம்ன்னா மயில் முகவரி தெரியலை... நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சேன்னு கவலையாயிடுச்சு.

நம்ம சிக்கலை சொல்லி தேடுனா சில பேரு தரவிருக்கம் செய்யப்பட்ட வார்ப்புருவில் மாற்றம் செய்தா அல்லது மூன்றாவது ஆளோட Gadget ஐ நீக்கிட்டா சிக்கல் தீர்ந்திடும்ன்னு சொல்லியிருந்தாங்க. சில பேர் அந்த மாதிரி செய்து சிக்கல் தீர்ந்துன்னு சொல்லியிருந்தாங்க. 

நானும் உருப்படியா இருந்த சில Gadget களை நீக்கிபார்த்தேன். புண்ணியம் இல்லை. வார்ப்புரு கூகுள் கொடுத்த எளிமையான ஒன்று, அதனால அதில் சிக்கல் இருக்க வாய்ப்பில்லை...

வேற வழியில்லை\தோன்றவில்லை என்பதால் வார்ப்புருவ சோதனை பண்ணிபார்ப்போம்ன்னு முடிவு எடுத்தேன். வார்ப்புருவ நோட்பேட்ல வெட்டி ஒட்டி Tamilers இருக்கான்னு பார்த்தா,அட, அந்த கருமம் அங்க இருந்துச்சு. அது tamilish கொடுத்த ஜாவா சிகிரிப்டுக்கு மேல இருந்துச்சு. உடனே Tamilers இருந்த ஜாவா சிகிரிப்டை வார்ப்புருவில் இருந்து நீக்கிட்டு சேமித்ததும் நம்ம வலைப்பதிவு ஒழுங்கா வேலை செய்யுதுங்க.

எப்படி  Tamilers ஜாவா சிகிரிப்டு என் வார்ப்புருவில் வந்ததுன்னு தான் தெரியலை.
.

வெள்ளி, மே 14, 2010

பியான்சேவின் பாட்டுக்கு குழந்தைகளின் அபார நடனம்.

குழந்தைகளின் அபார நடனம்.



பியான்சேவின் மூல நடனம் இங்கே.



குழந்தைங்க உடை மற்றும் நடனம் இங்கே விவாதத்துக்குரியதாக மாறியிருக்கு. நாம அந்த மாதிரி எல்லாம் விவாதம் பண்ண வேண்டாம். இரண்டையும் பாருங்க. 

.
.

திங்கள், மே 03, 2010

ஆதவனின் கொதிப்பு - அசையும் அசையா படங்கள்

கதிரவனை ஆராய 850 மில்லியன் செலவில் நாசா சூரிய இயக்க வானாய்வகம் (Solar Dynamics Observatory) என்ற வான்ஆய்வகத்தை பிப்ரவரி 11 அன்று வானில் செலுத்தியது. அதிலிருந்து பெறப்பட்ட கதிரவனின் படங்களை இப்போது நாசா வெளியிட்டுள்ளது. இவை இது வரை காணக்கிடைக்காத படங்கள். இன்னும் இது முறையாக செயல்பட தொடங்கவில்லை சோதனை ஓட்டம் நிலைநிறுத்தும் பணி நடந்துக்கிட்டு இருக்கு, இன்னும் ஒரு மாதத்தில் பணி முழுமையடைந்து முழு செயல்பாட்டுக்கு இவ்வாய்வகம் வந்துடும். இப்பவே இந்த மாதிரியான அற்புதமான காணகிடைக்காத படங்கள் கிடைக்க ஆரம்பிச்சாச்சு. முழுமையாக செயல்பட தொடங்கினதும் சூரியனைப்பற்றிய பல தகவல்கள் புரிதல்கள் நமக்கு கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.

கதிரவனின் இப்படங்கள் நாசாவினால் தற்போது வெளியிடப்பட்டன.


ஆதவனின் அளவுடன் ஒப்பீடு. ஆதவனிலிருந்து வரும் தீ கனலின் அளவுக்கு கூட பூமி இல்லையேப்பா... நம்ம பூமி இவ்ளோ சிறுசா?


புற ஊதா கதிர்கள் வெளியிடும் கதிரவனின் தோற்றம். வண்ணங்கள் நமக்காக தீட்டப்பட்டவை. சிவப்பு ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பமுடையது (தோராயமாக 60,000 கெல்வின் அல்லது 107,540 டிகிரி பாரன்கீட்), நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் சிவப்பை வண்ண இடத்தை விட சூடானவை. (மில்லியன் கெல்வின் அல்லது 1,799,540 டிகிரி பாரன்கீட்டைவிட அதிகம்)





கொதிக்கும் கதிரவன் கனல் வெளிவரும் படம்.  


மிகச்சிறந்த முறையில் படம் பிடிக்கப்பட்ட கதிரவன் கனல். அனல் கக்கும் ஆதவன் -

நீல நிறத்தில் ஆதவன் - கதிரவனின் பல கனல்களும் அதனுடன் தொடர்புடைய அலைகளும்.

நிழற்படம் மட்டும் இல்லாமல் அசையும் படங்களையும் நாசாக்காரங்க வெளியிட்டிருக்காங்க. அதையும் பாருங்க.




.
.

ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

நன்றி நன்றி - எரிமலை வெடித்தது.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்த இந்த ஒரு வார காலத்தில் என் பதிவை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. படித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு இரட்டை நன்றி.

நான் நட்சத்திரமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும் அதுவரை உறங்கிக்கிடந்த எரிமலை வெடித்து தன் கோபத்தை காட்டியுள்ளது. அதன் கோபத்தால் ஐரோப்பில் உள்ள வான் வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்.

ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை வெடித்து கற்குழம்புகளை வெளித்தள்ளிக்கொண்டுள்ளது. அதனால் பெரும் புகை  உருவாகியுள்ளது அதில் நிறைய சாம்பல் உள்ளது. இது ஐரோப்பாவை நோக்கி நகர்வதால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான் வழியை மூடிவிட்டன.

இந்த சுட்டியில் 18  நிழற்படங்கள் உள்ளன. எல்லாமே அருமையாக உள்ளன, சுட்டு போட்டால் 18ஐயும் போடனும் அதனால் இணைப்பை கொடுத்துவிட்டேன், பார்க்கவும்.

எரிமலை வெடித்து சிதறும் காட்சி.




எரிமலை வெடிச்சா புகை வரத்தான் செய்யும், அதில் சாம்பல் இருக்கத்தான் செய்யும். செருமனியின் அதிபர் தன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து வான் வழியே தன் நாட்டுக்கு செல்ல முடியவில்லை. இத்தாலிக்கு போய் அங்கிருந்து தரை வழி பயணமாக தான் தன் நாட்டுக்கு சென்றார்.

போலந்து அதிபரின் இறுதி ஊர்வலத்துக்கு இதனால் அமெரிக்க அதிபர், பிரெஞ் அதிபர், செருமன் அதிபர், சுவிடன் மன்னர், எசுப்பானிய மன்னர், வேல்ஸ் இளவரசர், துருக்கி அதிபர், பின்லாந்து அதிபர், கனடா பிரதமர், தென் கொரிய பிரதமர் மற்றும் ஐஸ்லாந்து அதிபர். இதிலிருந்து இந்த எரிமலை சாம்பல் புகையின் பாதிப்பை அறியலாம்.

எல்லா எரிமலை வெடிப்பும் சாம்பல் புகையை வெளியிடும் அவை அனைத்தும் வான் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல. ஏனென்றால் அந்த சாம்பல் 20000-55000 அடி உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். வணிக நோக்கில் பறக்கும் வான் ஊர்திகள் இந்த உயரத்தில் தான் பறக்கும். மேலும் இந்த எரிமலை சாம்பல் மிக நுண்ணியது இரவிலும் மேகமூட்டத்திலும் கண்ணுக்கு புலப்படாது. ரேடார்களும் இவற்றை சரியாக கணிக்காது. இந்த துகள்கள் வானூர்தியின் அனைத்து பகுதிகளையும் எளிதாக அரித்துவிடும் தன்மை கொண்டது. வானூர்தியின் வெளிப்புறமுள்ள பல கருவிகளும் இதனால் பாதிக்கப்படும் இதனால் வானூர்தி பறக்கும் உயரம், காற்றின் வேகம், வெப்பநிலை போன்ற பல அவசியமான கருவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வானூர்தியின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும்.

1980ல் இந்தோனிசியாவின் ஜாவா தீவிலுள்ள எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சாம்பல் புகையினால் போயிங் 747 வானூர்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அது பிரிட்டிஸ் ஏர்வேசுக்கு சொந்தமானது. அதன் 4 இயந்திரங்களும் செயல் இழந்துவிட்டன, அதன் வானோடிகள் முயன்றதில் வானூர்தி குறைந்த உயரத்தில் இருக்கும் போது இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் எரிமலை சாம்பலின் பாதிப்பும் தெரியவந்தது.

இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு அதிகமாக இருக்க காரணம் இது அதிக அளவிலான வான் போக்குவரத்து உள்ள பகுதியில் ஏற்பட்டதே.

பசிபிக் எரிமலை வளையம் எனப்படும் பகுதியில் தான் அதிகளவில் வெடிப்பு ஏற்படும் அது வான் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதி.

நன்றி.

சனி, ஏப்ரல் 17, 2010

மதம் நம்மை ஒன்றுபடுத்துகிறதா?

இந்து

யார் இந்து? இதுக்கு தெளிவான பதில் உண்டா? இல்லை என்பதே பதில். ஏன்னா இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்து என்ற பதம் ஈரான் நாட்டை சார்ந்த மக்களால் சிந்து ஆற்றுக்கு அப்பால் இருந்த மக்களை குறிக்க பயன்பட்டது.

இப்ப இந்து மதம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவர்கள் பல்வகையான நம்பிக்கைகளை உடையவர்கள். வைணவத்துக்கும் சைவத்துக்கும் நடந்த சண்டை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டதிலும் இந்து மதம் என்பதைப்பற்றி வரையறை இல்லை. என் நண்பன் ஒருவன் சிவ பக்தன், தவறியும் பெருமாள் கோயிலுக்கு போகமாட்டான். சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மடம் திருமலை கோயிலில் சில மாற்றம் சொல்ல ஜீயர் மடத்துக்காரங்க அதெல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலை எதுவோ அதை ஒழுங்கா பாருன்னு சத்தம் போட்டாங்கில்லையா... எல்லாம் இந்த சண்டையால தான்.

இசுலாம்

இசுலாம் தோன்றிய சிறிது காலத்திலேயே யார் உண்மையான தலைமை என்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் சன்னி, சியா என இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இஃப்படி (Ibadi) அப்படிங்கிற பிரிவு மற்ற இசுலாமிய பிரிவினரை நம்பிக்கையற்றவர்கள் (கபீர்கள்) என்று கருதுகிறது. அகமதியா என்பவர்களை முசுலிம்களாகவே பெரும்பான்மை பிரிவை சார்ந்த முசுலிம்கள் நினைப்பதில்லை. ஒவ்வொரு பிரிவுளிலும் உட்பிரிவு உண்டு.குரானை மட்டுமே நம்பும் பிரிவு உண்டு அவங்க கதீசு கிதீசு அப்படிங்கிற எதையும் ஒத்துக்கமாட்டாங்க. குரான்ல இல்லாததா கதீசுல இருக்கு? அப்படிங்கிறது அவங்க வாதம்.

கிருத்துவம்

உரோமை தலைமையிடமாக கொண்டு ரோமன் கத்தோலிகர்கள் உள்ளார்கள். அவர்களின் செயல்பாடு பிடிக்காதவர்கள் பிரிந்து சென்று அமைத்தது புரட்ஸ்தாந்து. மரபு வழாத (பழமைக்கோட்பாடு சார்ந்த) கிருத்துவர்கள். சிரியன் கிருத்துவர்கள், மாரோனைட் கிருத்துவர்கள், ஆர்மினியன் அபோஷ்டோலிக் கிருத்துவர்கள், காப்டிக் மரபு வழாத கிருத்துவர்கள் ... இவங்க எல்லாம் புரட்ஸ்தாந்து அல்ல. ரோமன் கத்தோலிகர்களுக்கு முன்னாடியே உருவான பிரிவுகள்.

ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களை குறிக்க புரட்ஸ்தாந்து என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலிக்கன், அட்வண்டிஸ்ட், பாப்டிஸ்ட், லுதரேன, பின்னாளைய துறவி கிருத்துவர்கள் (மோர்மன்), மெத்தோடசிம் கிருத்துவர்கள், ஆமிஸ் கிருத்துவர்கள், ஜகோவா கிருத்துவர்கள்....  ....

இன்னும் ஏகப்பட்டது இருக்கு.


பௌத்தம்

ஈனயாணம், மகாயாணம், வச்ரயாணம் என்று  பிரிந்து உள்ளது. இலங்கை, பர்மா, தாய்லாந்தில் கடைபிடிக்கப்படும் தேரவாதம் மகாயாணத்தை சார்ந்தது.
அசோகர் காலத்தை சார்ந்தது ஈனயாணம். 

தேரவாதத்துக்கும் தமிழர்களுக்கும் ஆகாது. பர்மா, ஈழம் மறந்து போச்சா? கடைசி கட்ட ஈழ போரில் தாய்லாந்து இலங்கைக்கு போர் விமானம் எல்லாம் கொடுத்து உதவுச்சாம். 

நாத்திகம்

நாத்திகம் என்பதால் நமக்கு தெரிந்த திராவிட கழகத்தை எடுத்துக்கொள்வோம்.

திராவிட கழக வீரமணியின் செயல்பாடு பிடிக்காமல் பலர் பிரிந்து சென்று வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். தொல்லை கொடுப்பவர்கள்\எதிர்ப்பவர்கள் பிரிந்து போனதும் அவரும் தான் பெத்த ராசாவை அடுத்த திக தலைவராக தயார்படுத்தி வருகிறார். இப்ப அந்த இயக்கத்திலிருப்பவர்களும் ஆமாம் சாமி நீங்க சொல்றது தான் சரி என்று தலையாட்டிக்கொண்டுள்ளார்கள்.





எந்த மதமும் மக்களை ஒன்றிணைக்கவில்லை. அதிலுள்ள பிரிவுகளே இதற்கு சாட்சி. மதமெல்லாம் மக்களை சுரண்ட வந்த  பம்மாத்து என கூறிய நாத்திக இயக்கங்களும் மதங்கள் போன்றே உள்ளன. இந்த பிரிவுகளுக்கு காரணம் அதிகாரம் தனக்கு மட்டுமே வேண்டும் என நினைப்பதே. அதிகாரம் கிடைக்காது என்று தெரிந்தால் அதிகாரம் வேண்டுபவர் தன் ஆதரவாளர்களுடன் தனியாக பிரிந்து வந்திடுவார் இல்லையென்றால் அதிகாரத்துக்கு போட்டியாக உள்ளவர்கள் அதிகாரத்திலுள்ளவர்களால் பிரிக்கப்படுவார்கள்\ஓரங்கட்டப்படுவார்கள்\ஒழிக்கப்படுவார்கள்.


தவறாக இருந்தாலும் மக்களுக்கு ஏதாவது ஒன்று தேவையாக உள்ளது. இந்த தேவை தான் மதத்துக்காரர்களின் முதலீடு. மதச்சண்டை எல்லாம் வருவது இதனால் தான். யாரும் சண்டை போடலைன்னா அவங்க எப்படி பொழப்ப ஓட்டறது?

நமக்கு ஏதோவொரு நம்பிக்கை வேண்டும். தவறில்லை ஆனால் நம்ம நம்பிக்கைக்கு எதற்கு அடுத்தவர்கள் தரகு வேலை பார்க்கனும்? தரகுகாரர்கள் அவர்கள் சுயநலத்துக்காக நம்மை அல்லவா பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  
இல்ல எனக்கு தரகர் வேண்டும் என்பவர்கள் தரகர் தங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஊருல நிலத்தின் விலை அநியாயத்துக்கு ஏறியதுக்கு யார் காரணம் எல்லாம் தரகரின் சுயநலம் தான். சமூகத்தில் தரகரின் பங்கு பற்றி விலாவரியாக இன்னொரு இடுகை தான் போடனும், இந்த இடுகைக்கு இது போதும் என்று எண்ணுகிறேன்.

நம் நம்பிக்கையை மற்றவர்கள் முதலீடாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்



.
.

வெள்ளி, ஏப்ரல் 16, 2010

சமூக சேவை அமைப்புகள்

நம்ம நாட்டுல உண்மையா சேவை புரியும் பல சேவை அமைப்புகள் இருக்குது.
நான் இருக்குற இரண்டு அமைப்புகளை பற்றி உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கேன். இவை இரண்டும் இங்குள்ள தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது.

எயிம்ஸ் இந்தியா - aimsindia.net 

வாசிங்டன் பகுதியில் வசித்த சில நண்பர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. உருவாக்கிய பலர் அமெரிக்க வாழ்க்கை போதும் என்று  இப்ப இந்தியாவில்  வசிக்கிறாங்க.

மக்களை ஒன்று சேர்ப்போம் (மொழி பெயர்ப்பு சரியா?) (Bringing People Together) என்பது இந்த அமைப்பின் சூளுரை. இவங்க தனியாகவும் மற்ற அமைப்புகளுடன் இணைந்தும் செயலாற்றுகிறார்கள். பலதரப்பட்ட பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள். பள்ளிகளுக்கு உதவுதல் (கழிப்பறை கட்டுவது, சுற்றுச்சுவர் கட்டுவது, பற்றாக்குறையாக உள்ள ஆசியரை நியமிப்பது (சம்பளமும் இவங்கதான்), மேசைகள் தருவது போன்றவை), கிராமபுறத்தில் மருத்துவமனை கட்டுவது, ஏரியை தூர் எடுப்பது, கிராமபுற பெண்களுக்கு வருமானம் வருவதற்கு உதவுவது, சுனாமி விழிப்புணர்வு மற்றும் நலம் பற்றி மாணவர்களுக்கும் கிராம மக்களுக்கும் சொல்வது, கிராமபுற மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பது என்பது சில. இதுவல்லாமல் இவர்கள் பல சேவைகளை செய்து வருகிறார்கள். எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் வலைதளத்தில் விரிவாக அவற்றை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வாசிங்டன் பகுதியில் நிருவாக குழு கூடி அன்றைய மாதம் நடந்த திட்டங்களையும், நிதி நிலை அறிக்கையையும் அதை பொருத்து அடுத்து எந்த திட்டத்தை ஏற்பது என்பது பற்றியும் முடிவெடுக்கிறார்கள்.

ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடுவது, நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடத்துவது என்று நிதி சேகரித்தார்கள். அதில் வேலை அதிகம், தன்னார்வலர்கள் அதிகம் ஆனால் நிதி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

மாரத்தான் ஓட்டத்திற்கு மாறினார்கள். இதுவே இவர்களின் தற்போதய முதன்மையான நிதி வருமானம் ஆகும். அதாவது நீங்கள் இந்த அமைப்பு சார்பாக ஓடுகின்றீர்கள் என்றால் இவ்வளவு பணம் புரட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அதற்கு அவர்களும் உதவுவார்கள். காசு கொண்டாற வேண்டியது உன் பொறுப்பு என்று விட்டுவிட மாட்டார்கள். மாரத்தான் ஓட ஆசை, அதே சமயம் சமூக அமைப்புக்கும் பணம் கொடுக்க விருப்பம் அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு அல்லவா? மாரத்தான் ஓட பயிற்சியும் கொடுக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட இடத்தில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி நடைபெறும்.மே மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை இந்த பயிற்சி இருக்கும். அக்டோபர் மாத கடைசியில் வாசிங்டன் பகுதியில் பெரிய அளவில் நடைபெறும் மெரைன் கார்ப் மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். முழு மாரத்தான் ஓட முடியாதவங்க பால்டிமோர் பகுதியில் நடைபெறும் அரை மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். ஓடறது தான தேவை.

எந்த திட்டத்துக்கும் இவர்கள் முழு பணமும் தருவதில்லை. குறைந்தது 30% உள்ளூர் மக்களின் பணம், பற்றாக்குறைக்கு இவங்க உதவுவாங்க. இலவசம் என்றால் அதற்கு மதிப்பில்லை பாருங்க. நீங்க சமூக சேவை செய்துகொண்டிருந்தால் பணம் போதவில்லை என்றால் இந்த அமைப்பை அணுகலாம். 

இந்த அமைப்பு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வரிவிலக்கு பெற்றது. எனவே இந்த அமைப்புக்கு நன்கொடை அளித்தால் அதற்கு வரி விலக்கு பெற முடியும்.



 இந்தியா டீம் - indiateam.org 


இந்த அமைப்பு கலிபோர்னியா மாநிலத்தில் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு உதவுவது தான் இவர்களின் குறிக்கோள். பல குழுக்கள் உள்ளன. மாதம் பத்து டாலர் போடனும், மாதாமாதம் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 500 டாலர் கொடுக்கப்படும் அந்த பணத்தை கொண்டு அவர் தான் தேர்ந்தெடுக்கும் பள்ளிக்கு அதை செலவு செய்யலாம். இது அவர் பணம். முதல் மாதமே அவருக்கு பணம் கிடைத்தாலும் $490ஐயும் அவர் கொடுத்தாக வேண்டும். மாதம் $10 கொடுப்பதால் அவர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்பதே தெரியாது. 

நான் வேலை செய்யும் நிறுவனம் சமூக சேவைக்கு பணம் கொடுக்குது, பல நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் $1 போட்டா $1ஐ அவர்கள் கொடுப்பார்கள் , நான் கொஞ்சம் பணத்தை போட்டு செலவழிக்கலாம் (சமூக சேவைக்கு தான்) என்று இருக்கிறேன் அதற்கு ஏதாவது வழி உண்டா? அதற்காக FSA என்ற கணக்கு இருக்கிறது. இதில் நீங்கள் விருப்பப்படும் தொகையை போடலாம். அது உங்க கணக்கு, வேற யாரும் உங்க பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாது. நீங்கள் விருப்பப்பட்டால் அடுத்தவருக்கு பணம் கொடுக்கலாம். முதலில் நீங்க உங்க கை காச போட்டு செலவழிக்கனும் பின் எல்லா ரசீதுகளையும் கொடுத்து பணத்தை திரும்பபெறலாம்.  அமெரிக்க மக்களே உங்க கை காச போட்டு பள்ளிகளுக்கு செலவு செய்யனும் என்று நினைத்தால் டீமில் FSA கணக்கு தொடங்கி செலவழிக்கலாம். உங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.

இது அமெரிக்காவில் வரிவிலக்கு பெற்ற அமைப்பு.