வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஏப்ரல் 09, 2014

தேர்தல் கருத்து கணிப்பு


இந்த தேர்தலில் பலவிதமாக கருத்து கணிப்புகள் வந்தாலும் அனைத்தையும் புதினமாக பார்க்கவேண்டுமே தவிர உண்மை என்று நம்பினால் அது உங்கள் தவறு என்று தான் சொல்ல வேண்டும். தமிழக ஊடகங்களின் கருத்த கணிப்பு இன்னும் நகைச்சுவையானது. நக்கீரன் கருத்து கணிப்பு ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு என்று ஆளாளுக்கு முடிவு எப்படி வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ அது போல் கருத்து கணிப்பை எழுதி  தங்கள் இதழின் பக்கத்தை நிரப்புகிறார்கள். பச்சமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி பாசக கூட்டணி தான் இந்திய அளவில் வெல்லும் என்றும் தமிழகத்தில் மோடி அலை எதிர்பார்க்காத விதம் அடிப்பதாகவும் அதனால் பாசக கூட்டணி நிறைய இடங்களில் அதாவது 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றும் சொல்லுவார்கள். வேற வழி.



நம்ம பதிவுலகில் நிறைய பேர் அரசியல் சார்பு உடையவர்கள். ஆனா இத்தேர்தலில் பாசகவுக்கு பெரும் வாக்கு வங்கி உருவாகி விட்டது என்று பாசக ஆதரவாளர்கள் நம்மை நம்ப சொல்கிறார்கள். இதை இல கணேசன், வானதி சீனிவாசன், பொன் இராதாகிருட்டிணன், தமிழிசை போன்றோரே நம்ப மாட்டார்கள். ஆனா பாமகவையும் தேமுதிகவையும் தன் கூட்டணியில் சேர்த்ததை பாராட்டத்தான் வேண்டும். இதுக்கு அவங்க பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா.

அதிமுகவின் வாக்கு வங்கி 35%க்கு மேல் கிடையாது (புரட்சி தலைவர் காலத்திலேயே அதுக்கு மேல போனதில்லை என்பதுல புகழ் பெற்ற பதிவரின் கூற்று). தேமுதிக அதில் கைவைக்கும். அப்ப அது குறையும். பொதுவுடமைவாதிகளுக்கு 2~3 % வாக்கு மட்டும் இருந்தாலும் அதை இழந்தது மாபெரும் தவறு. மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு போன்றவை அதிமுகவை எந்த அளவு பாதிக்கும் என்று தெரியவில்லை. இன்னும் பெருமளவில் மின்வெட்டு உள்ளது அதன் தாக்கம் அதிமுகவிற்கு இருக்கும். தொழில் நகரங்களில் மின் வெட்டு தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும். அம்மா உணவகம், அம்மா தண்ணி (பாட்டில் குடிநீர்) போன்றவை எந்த அளவு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை. அம்மாவின் சாதனைகள் என்ற பரப்புரைக்கு இது உதவும் அதுக்கு மேல் இதற்கு பலன் இல்லை என்பதே என் கணிப்பு. அம்மா தண்ணி என்றால் அரசே சாராயம் விற்பதை குறிக்கும் என்றாலும் அதுக்கு அம்மா பேர் வைக்காமல் அம்மாவிற்கு துரோகம் விளைவித்து விட்டார்கள்.

திமுகவின் வாக்கு வங்கி மிக அதிகளவாக 26% தான் இருக்கும் என்றாலும் அழகிரியினால் குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்னும் குறைய வாய்ப்புண்டு, எவ்வளவு என்பது கேள்விக்குறி. கூட்டணி கட்சிகளால் வாக்கு 3% அதிகமாக வாய்ப்புள்ளது. இசுலாமிய கட்சிகளால் அதற்கு என்ன பயன் என்றால் அதை விட்டு சிறு அளவில் இசுலாமிய மக்கள் விலகிச்செல்லமாட்டார்கள். அதனால் இசுலாமிய கட்சிகளால் திமுகவிற்கு பெரும் பயன் இல்லை எனலாம். விடுதலைச்சிறுத்தைகளாலும் புதிய தமிழகத்தினாலும் அதற்கு தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு குறிப்பிடத்தக்க அளவு கிடைக்கும்.

அதிமுகவிற்கு சிறிதளவு இசுலாமியர்களின் வாக்கும் பெருமளவு தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கும் கிடைக்கும். எல்லாம் இரட்டை இலை செய்யும் மாயம்.

  • திமுக காங்கிரசு பாசக என்று அனைவரும் விரும்பிய தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் 8-10% வாக்கு வங்கி உண்டு. இவருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு கிடைக்கும். அதிமுகவின் வாக்கு வங்கி இவர்களால் கணிசமாக குறையும்.
  • பாமகவுக்கு வடமாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உண்டு தேமுதிக அதை இப்ப ஆட்டைய போட வாய்பில்லாததால் பாமகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படாது.
  • மதிமுகவுக்கு தமிழகம் முழுவதும் சராசரியா 5-6% வாக்கு உண்டு. அவங்க பாசகவின் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் ஆசையாக வேண்டுமானால் இருக்கலாம்.
  • அது போலவே பாசகவின் பார்ப்பனர்கள் பாசக போட்டியிடாத இடத்தில் அதிமுகவிற்கு வாக்கு செலுத்துவார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது, 50% பாசக பாப்சு இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது. பாசகவுக்கு கன்னியாகுமரியில் மட்டும் நல்ல வாக்கு வங்கி உள்ளது, 2011 சட்டமன்ற தேர்தலில் மாநில அளவில் பாசக 2.22% வாக்கு வாங்கி இருக்கு, இப்ப அதிகமாக வாங்கும் என்பது உறுதி. 
  • மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு சிறு செல்வாக்கு உண்டு. கொங்கு கட்சியில் பெரும்பாலானவர்கள் அதிமுக அனுதாபிகள். இதனாலும் அதிமுகவிற்கு சறுக்கல் தான்.
  • மோடி அலை என்பது பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிதளவு உள்ளது அதனால் இக்கூட்டணிக்கு கட்சி சாராதவர்களின் வாக்கு கணிசமாக கிடைக்கலாம்.
  • பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் ஆகாது அதனால தேமுதிககாரங்க பாமகவுக்கும் பாமககாரங்க தேமுதிகவிற்கும் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது உண்மையல்ல. சில இடங்களில் இது நடக்க வாய்ப்புண்டு. ஆனால் எல்லா (மிகப்பெரும்பாலான) இடங்களிலும் இது நடக்காது. 
  • பாசகவுக்கு கன்னியாகுமரி நம்பிக்கை தரும் தொகுதி மற்ற இடங்களில் துளியும் வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பாசகவுக்கு ஒதுக்கப்பட்ட வேலூரில்  புதிய நீதிக்கட்சியின் சண்முகம் வேட்பாளர். பாசகவின் சின்னத்தில் இவர் போட்டியிடுகிறார். இறுதி வரை இவர் களத்திலேயே இல்லை ஆனால் பாசகவின் தொகுதியை பெற்றுவிட்டார். இதுவல்லவோ அரசியல். 
  • பாசக கூட்டணியில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும், பாசக 8 இடங்களிலும், மதிமுக 7 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், பச்சமுத்துவும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இப்ப நீலகிரி போச்சு, வேலூரை சண்முகத்துக்கு கொடுத்தாச்சு இறுதியாக பாசக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எட்டு தொகுதி வேணுமுன்னு என்னா அலப்பறை.

ஆம் ஆத்மி கட்சிக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தொகுதிகளில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களால் நல்ல வாக்கு வங்கி உள்ளது (கட்சிக்கு என்பதை விட அந்த வேட்பாளர்களுக்கு என்பது பொருத்தம்) புது வாக்காளர்களில் கணிசமானவர்கள் இதற்கு வாக்கு செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். டெல்லி சட்டமன்றத்தில் பெரு வெற்றி பெற்றதும் ஊடகங்களில் அதிக அளவு பேசப்பட்டதும் இதற்கு கை கொடுக்கலாம். இவர்களால் எந்த அளவு பாதிப்பு இருக்கும் என்பது தெரியவில்லை. இவர்கள் தமிழகத்தில் வென்றால் அது கன்னியாகுமரியாக மட்டுமே இருக்கும், அதுவும் சுலபம் இல்லை.

காங்கிரசிற்கு கன்னியாகுமரி தொகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அது வெற்றி பெறும் அளவுக்கு உதவுமா என்பது ஐயமே. அங்கு முன்பணம் காப்பாற்றப்படும் என்பது உறுதி.

ஆத்தாவின் நாற்பதும் நமக்கே என்பது வெற்று கோசம் என்பது ஆத்தாவிற்கு இப்போ தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும். உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப இரணகளம் ஆக்கிட்டாங்களே.

இந்த மும்முனைப்போட்டியில் போட்டி கடுமையாக இருக்கும். குறைந்த வாக்கு வேறுபாட்டிலேயே வெற்றி இருக்கும். அதிமுக அளவிற்கு திமுக வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. பாசக கூட்டணியும் வெற்றி பெறுவார்கள் ஆனால் எத்தனை இடத்தில் என்று தெரியவில்லை. இது தொகுதியில் அவர்கள் எவ்வளவு பலமாக உள்ளார்கள் என்பதை பொறுத்தது. கூட்டணிக் கட்சிக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு.

கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே உண்மையான ஐம்முனைப்போட்டி உள்ளது.

சவுக்கு தன் இணையத்தில் ( http://savukku.in/5527 )மார்ச் 24 அன்று அதிமுக 18ம் பாசக கூட்டணி 15ம் திமுக கூட்டணி 7ம் பெறும் என்று எழுதி  இருந்தது. அது வியப்பாக தான் இருந்தது. சவுக்கு கட்சி சார்பில்லாமல் செயல் படக்கூடியது என்பதால் அது கருத்துகணிப்பை வாங்கிய மூலம் கொடுத்ததை விருப்பு வெறுப்பில்லாமல் அப்படியே போட்டுள்ளது.

அரசியலில் எப்போ எது நடக்கும் என்று சொல்லமுடியாது. தேர்தல் சமயத்தில் சொல்லவே முடியாது. அரசியலில் அதுவும் தேர்தல் சமயத்தில் ஒரு நாள் போதும் நிலைமையை தலைகீழாக மாற்ற.

இப்ப நீலகரியில் பாசக வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி. இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்கப்போகுதோ.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் வதைபடப்போவதால் இப்போ நடக்கும் கூத்தை நாம இரசிப்போம்.

தகுதியானவர்களுக்கு அவர்களின் வெற்றி வாய்ப்பை பார்க்காமல் வாக்களிப்போம். முதல் மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும். இப்படி பலர் சிந்தித்தால் அது மாற்றத்தை கொண்டு வரும்.

1 கருத்து:

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்